கருடனுக்குத் திருமால் பின்வருமாறு கூறினார்.
யமதூதர்களால் பாசக் கயிறால் கட்டுண்டும் அவர்களிடம் உதையுண்டும் செல்லும் ஜீவன், தன் மனைவி மக்களோடு பூமியில் வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து நினைத்துத் துன்பமடைந்து, பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று, இளைத்து மிகவும் ஈன ஸ்வரத்தோடு "ஐயகோ! நம்மோடு வாழ்ந்திருந்த மனைவி மக்கள் எங்கே? நம் பெற்றோரும் உற்றோரும் மற்றோரும் எங்கே? உறவினர்கள் எங்கே? நண்பர்கள் எங்கே? ஏவலாளர் எங்கே? எல்லோரும் நம்மைத் தன்னந் தனியாக இந்த யம படர்களிடம் சித்திரவதை படும்படி விட்டு விட்டார்களே! பொய் ஓலை எழுதுதல் முதலிய தீய தொழில்களைப் புரிந்து, மாற்றார் பொருள்களை மதி நுட்பத்தால் கவர்ந்தோமே; அப்பொருள்களாவது இப்போது என்னிடம் இருக்கிறதா? ஊரையடித்து உலையில் போட்டோமே! உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி, உற்றாரையெல்லாம் சுகிக்க வைத்தோமே! பிறரை நயமாக வஞ்சித்து, அவர்களது பொருளைக் கவர்ந்து நம் குடும்பம் வாழ வேண்டும் என்று மனசாட்சிக்கு மாறாக நடந்து பொருள் சேர்த்து சுகத்தைக் கொடுத்தோமே! அப்போது சுகத்தை அனுபவிக்க நம்மோடு கூடிக் குலவியவர்களாகிய நம் மனைவி, மக்கள், சுற்றத்தார் இவர்களில் யாரவது ஒருவர், இப்போது என்னோடு வந்தார்களா? என்னைத் தனியே போக விட்டு, இந்த எம படர்களால் அழைத்துச் செல்லப்படும் இத்தகைய கொடிய பாதைகளில் அவதிப்படும்படி என்னை விடுத்து, அவர்கள் மட்டும் நம் வீட்டிலிருந்து சுகம் அனுபவிக்க நாம் ஏன் பிறர் பொருளை வேண்டினோம். நாம் செய்த வஞ்சனையைச் சிறிதும் அறியாமல், நம்மை நல்லவன் என்றோ, பிறர் உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் உயர்ந்தவன் என்றோ நம்பிச் சீவாதாரமாகிய பொருளை நம்மிடம் இழந்தோர்களுடைய வயிறு எவ்வாறு எரிந்ததோ, அதுபோல இப்போது நம் வயிறு பற்றியெரிகிறதே? இனிமேல் என்ன செய்வோம்? ஏது செய்வோம்? என்று அலறித் துடிப்பான் .
அப்போது அவனை இழுத்துச் செல்லும் யமதூதர்கள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து "அட மூடா! இப்போதுதான் உனக்கு புத்தி வந்ததோ? உனக்குத்தான் உலகம்! உனக்குத்தான் மனைவி மக்கள்? உனக்குத்தான் உற்றார் உறவினர், உன் வாழ்க்கைத் தான் உலகில் வாழத்தக்கவன் வாழ வேண்டிய வாழ்க்கை! உன் மனைவி மக்களே உனக்கு நித்யம் என்று அறன் செய்யாமல் அதர்மம் செய்து ஆடம்பரமாகப் பூவுலகில் வாழ்ந்தாயே? அத்தகையவர்கள் உனக்கு இப்போது செய்யும் உதவியாதடா? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பத்தையும் துன்பத்தையும் தர வல்லன! பூமியில் நீ வாழ்ந்த காலத்தில் தேய்த்தலிலும், துருத்துதலிலும் உன் உடலுக்கு மகிழ்ச்சியும் உன் உள்ளத்திற்கு இன்பத்தையும் தந்ததாக யார் யாரையோ போற்றி அவர்களுக்குப் பொருள் கொடுத்து, உழைத்தவன் தனக்குரிய ஊதியத்தை உன்னை கெஞ்சிக் கேட்டாலும் "மனிதாபிமான உணர்ச்சியோடு வர்த்தகம், தொழில் முதலானவற்றையெல்லாம் இணைக்கக் கூடாது" என்று ஏதேதோ உனக்குத்தான் சாதுர்யமாகப் பேசத் தெரியும் என்று பேசி அவனை அனுப்பி, இச்சைக்குரியவள் எந்த நேரத்திலும் இவ்வுடலுக்கு இன்பந் தருபவள் என்றெல்லாம் விலைமகளை உன்னுடையவளாகவே நினைத்துப் போற்றிப் புகழ்ந்த உன் மனிதாபிமானம் மங்கையபிமானம் ஆயிற்றே. அதனை இணைத்துத் தொழில் புரிந்தாயே! அத்தகையவர்கள் இப்போது எங்களிடம் நீ படுகின்ற அடியின் தழும்புப் புண்களைத் தடவியாவது கொடுக்க முன் வந்தார்களா? பிறர் பொருளை அபகரித்தல் முதலிய அதர்மங்களைச் செய்யாமல் தர்மம் செய்தவனாயின் உனக்கேன் இப்போது இந்தக் கேடு வருகிறது? எங்கள் கைகளில் அகப்பட்டு நீயேன் விழிக்க வேண்டும்? நீ ஏன் இப்போது தவித்துத் துடித்துக் கதற வேண்டும்? இப்போது ஏன் எங்களை விழித்துப் பார்க்கிறாய்?" என்று பேரொலியுடன் கண்டித்து, மீண்டும் பாசத்தால் நையப் புடைத்து முசலத்தால் புடை புடையென்று புடைப்பார்கள்!
"கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்! பிறகு அந்தச் சேதனன் சிறிது தூரம் காற்றில் வழியிலும் சிறிது தூரம் புலிகள் நிறைந்த வழியிலும் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில், பூமியிலுள்ள தன் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய ஸ்ரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை சேர்வான். அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டங் கூட்டமாகக் குடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. சிறிதளவு நேர சிரம பரிகாரத்தை முன்னிட்டு, யமகிங்கரர்களின் உத்தரவுக்குப் பயந்து அவ்யாமியம் என்ற 'நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து விட்டு இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி, இரவிலும் பகலிலும் யமகிங்கரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று, வழி நடக்கும் வேதனையோடு ஓவென்று ஓலமிட்டு அழுது, தூதர்கள் செய்யும் கொடுமையால் மிகவும் வருந்தித் துன்பமுறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து, அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்கமுடியாத குளிரினால் மிகவும் வருந்துவான். அங்கு எமகிங்கரர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து, வருந்துகின்ற அந்த ஜீவனின் மீது கற்களை எறிவார்கள். அந்தக் கல்மழையினால் வருத்தம் அடைத்து குரூரன் என்ற வேந்தனின் ஆளுகையிலிருக்கும் குருரபுரம் என்ற பட்டினத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டதையுண்டு, அப்பால் நடந்து கிரௌஞ்சம் என்ற ஊரையடைந்து அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அரை முகூர்த்தகாலம் வரை அங்கே தங்கியிருந்து, சிரமபரிகாரம் செய்து கொண்டு பிறகு யாவரும் பயப்படும்படியான பயங்கர வழியிலே செல்வான். அந்த வழியிலே போகும்போது முன்பு பூமியில் தான் வாழ்ந்ததெல்லாம் நினைத்து நினைத்து வாய் விட்டுப் புலம்புவான். அப்போது யமபடர்கள் சினம் கொண்டு அவ்வாயிலேயே புடைப்பார்கள். அடுத்தடுத்து அந்த ஜீவன் யமகிங்கரர்களால் துன்பப்பட்டு வருந்திச் செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடி வந்து, தீப்பொறி பறக்க விழித்து "ஏ, ஜீவனே! உன்னை குறித்து எப்போதாவது வைதரணி கோதானம் என்ற தானத்தை செய்திருந்தாயானால், இனி நீ கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை நீ இனிதாகக் கடக்க, நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லாவிட்டால் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுத்துவோம். ஓ ஜீவனே! அந்த வைதரணி நதி, நூறுயோஜனை நீளமுடையது. நதியென்றால் நீர் பாயும் என்று நினைத்துவிடாதே! அந்த நதியிலே தண்ணீரே இராது! இரத்தமும் சீழும், சிறுநீரும், மலங்களுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கொடிய ஜந்துக்கள் வாழும் இடமாக இருக்கிறது. நாற்றம் அறியும் நாசியில்லாத பிராணியும் அந்த நதியின் துர்நாற்றத்தைப் பொறுப்பது அரிது! ஜீவனே! நீ பூவுலகில் உடலோடு வாழ்ந்த காலத்தில் உன் கையால் கோதானம் செய்திருந்தாயேயானால், ஒரு பசுவானது இங்கு வந்த உன்னை இந்த நதிக்கப்புறம் சேர்த்து விடும்படிச் செய்யவேண்டும் என்பதற்கு அடையாளமாக எங்களருகே வந்து நிற்கும். அத்தகைய தானத்தை நீ செய்திராவிட்டால் அந்த அடையாளப் பசுவும் வரமாட்டாது. நீ அந்த வைதரணி நதியிலே விழுந்து கிடந்து, நீண்ட நெடுங்காலம் முழ்கி தவிக்கவேண்டும்.!" என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள்.
"ஓ, வைனதேயனே! அத்தகைய வைதரணி நதியை, பூவுலகில் வாழ்ந்து வாழ்நாள் முடிந்து இறந்து எமலோகம் செல்லும் வழியில் கடக்கவேண்டிய நிலை ஒவ்வொரு ஜீவனுக்கும் இருப்பதால், பாரத வருஷத்தில் பிறந்து வாழ்கின்ற ஜீவன்கள் அந்த நதியைக் கடக்கும் பொருட்டு, அந்த வைதரணி கோதானம் என்ற தானத்தைச் செய்ய வேண்டும். அந்த ஜீவன், பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்யாமற்போனாலும் அவனிறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன் மகனாவது அவனைக் குறித்துச் செய்யவேண்டும். அப்படிப்பட்ட வைதரணி கோதானத்தைச் செய்திருந்தால், அந்த ஜீவன், அந்த நதியைக் கடந்து நமனுக்கு இளையோனாகிய விசித்ரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து, ஊனஷானி மாசிகப்பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்படும் போது ஏழாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும் போது சில பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த ஜீவனைப்பார்த்து, "அட மூடனே! நீ பூவுலகில் வாழ்ந்திருந்த போது உன்னைப் பெரிய மனிதன் என்று நம்பி வந்து, உன்னை யாசித்தவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதற்கில்லை என்று உன் வாய்க்குவந்தபடி இழித்தும் பழித்தும் பேசி அனுப்பினாய் அல்லவா? இப்போது உன் பசிக்கென்று, உனக்காக மாதந்தவறாமல் மாசிக ஸ்ரார்தத்தைச் செய்து, உன் கைக்குக் கிடைத்து, நீ ஆவலோடும் பசியோடும் புசிக்கத் துடிக்கும் இந்த அன்னம் நீ உண்பதற்கு உரியதல்ல, அதை எங்களிடம் கொடுத்துவிடு!" என்று பலவந்தமாகப் பிடுங்கிப் பறித்துக் கொண்டு சென்று விடும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..............தொடரும்!
நம்பி மலை ஸ்வாமி உம்மை நோக்கி வந்தவர்கள் எல்லாம் இந்த கடினமான பாதையை சுலபமாக கடக்க தயை புரியுங்கள் வடிவு அழகிய நம்பி நாராயணரே
ReplyDeletehttps://siththanarul.blogspot.com/2022/01/1067.html
Deleteஓம் ஐயா மனிதன் வாழும் காலத்தில் நல் முறையில் வாழ்ந்து இறைவன் திருவடி சரணம் அடைதல் காண வழிமுறைகளை கூறுங்கள் ஐயா
ReplyDeletehttps://siththanarul.blogspot.com/2022/01/1067.html
Delete