வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!
கண் பார்வை தந்த கண் கண்ட தெய்வம் - நம்பிக்கை!!! முழு நம்பிக்கை !!நீயே கதி!!!
நீதான் எல்லாம் என்று அன்பும் பக்தியும் காட்டினால்.... அகத்தியர் ஓடோடி வந்து கருணை செய்வார் என்பதற்கு மற்றுமொரு உதாரண சம்பவம்.
உண்மையான பக்தியும் அன்பும் தான தர்மங்களும் புண்ணியங்களும் செய்துகொண்டிருந்தால் அவர்கள் இறைவனை தேடி எங்களைத் தேடி வர அவசியமில்லை யாங்களே அவர்களைத் தேடிச் செல்வோம்.
இவ்வாக்கு குருநாதர் அகத்தியர் உரைத்த வாக்கு சத்தியமான வாக்கு கருணை தெய்வத்தின் வாக்கு.
சமீபத்தில், பாலமுருகன் என்கிற ஒரு அகத்தியர் அடியவர் தன்னுடைய தாயின் உடல் நலத்திற்காக அகத்தியரிடம் ஜீவநாடி வாக்கு உபதேசம் கேட்பதற்கு தொடர்பு கொண்டார்.
அவருடைய தாய்க்கு கண்ணில் பார்வைக் கோளாறு. ஒரு கண்ணில் பார்வை சுத்தமாக இல்லை. ஒரு கண் சற்று மங்கலாக தான் தெரியும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்த பிரச்சனை இருக்கின்றது பிரபல கண் மருத்துவமனையில் காட்டிய பொழுது கண்களின் நரம்புகள் சுருண்டு இருக்கின்றன. அறுவை சிகிச்சை செய்தால் மற்றொரு கண்ணின் பார்வையும் பறிபோகும் .அதனால் அறுவை சிகிச்சை செய்ய சாத்தியமில்லை. அப்படிச் செய்தாலும் லட்சக் கணக்கில் செலவாகும். அறுவைச் சிகிச்சையின் முடிவில் கண் பார்வை திரும்ப வருமா?? என்று எந்த உறுதியும் கூற முடியாது இருக்கும் மற்றொரு கண்ணின் பார்வையும் இழக்க நேரிடும் அதனால் அறுவை சிகிச்சை செய்வது வீண். என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். நாங்களும் செய்யாத வைத்தியங்கள் இல்லை. பார்க்காத மருத்துவர்கள் இல்லை.
இப்போது தான் குருநாதர் அகத்தியர் ஜீவநாடியில் வாக்கு உரைக்கின்றார் என்று கேள்விப்பட்டு தொடர்பு கொள்ளுகிறேன்.
என் தாய் பார்வையில்லாமல் படும்பாடு என்னால் தாங்க முடியவில்லை குருவே அகத்தீசா நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என்று கவலையோடு குருவிடம் வாக்கு கேட்டார்.
அப்பனே எதற்கும் கவலைப்பட அவசியமில்லை.
யான் இருக்கின்றேன் தைரியமாக இரு.
என்னை நம்பியவர்களை யான் ஒருபோதும் கைவிட்டதாக சரித்திரம் இல்லை.
உன் தாயவள் என் மீது காட்டும் பக்தியை யான் அறிவேன்.
பல புண்ணியங்களையும் தான தர்மங்களையும் செய்தவள் உன் தாய்.
என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை அபரிதமானது.
என்னால் உன் தாயவள் குணமாக வேண்டும் என்பது அவள்தன் விதியிலேயே இருக்கின்றது.
முன்செய்த புண்ணியங்களும் மிகுந்து காணப்படுகின்றது.
என் மீது அன்பு காட்டினால் அதை யான் பன் மடங்காக திரும்ப காட்டுவேன்.
நல் விதமான ஒழுக்கமும் பக்தியும் இறைவன் அருளும் என் அருளும் பெற்றவள் உன் தாய்.
தைரியமாக நீ அறுவை சிகிச்சை செய்யலாம் யானே வந்து சிகிச்சை செய்கின்றேன். உடன் இருந்து அனைத்தும் செய்து தருகின்றேன் கவலைப்பட ஒன்றும் அவசியமில்லை.
நீ தைரியமாக மருத்துவமனைக்கு உன் அன்னையை கொண்டு செல். மீதியை யான் பார்த்துக் கொள்கின்றேன், என்று குருநாதர் வாக்குரைத்திருந்தார்.
அந்த அடியவரும் தன் தாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் காண்பித்தார்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு எந்த மருத்துவரிடம் காட்டி எந்த மருத்துவரால் தற்போது அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று கூறினாரோ அதே மருத்துவரிடம் திரும்பவும் காண்பித்தபோது அவரும் சில பரிசோதனைகளை செய்து விட்டு சுருண்டிருந்த கண் நரம்புகள் எல்லாம் இப்பொழுது சரியாகி உள்ளது. இது போல் யாருக்கும் நடந்தது இல்லை. கண் நரம்புகள் தானே நேராகியுள்ளது.
அதனால் தற்போது அறுவை சிகிச்சை செய்தால் கண் பார்வை கிட்டுமென்று திடமாக கூறினார்.
அந்த அடியவரும் அறுவைச் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு குரு அகத்தியரை மனதார வேண்டிக்கொண்டு ஒரு அகத்தியர் புகைப்படம் ஒன்றையும் தன் தாயின் கைகளில் கொடுத்து. அம்மா குரு அகத்தியர் நம் கூடவே இருக்கின்றார் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை அவரே வந்து உங்களுக்கு சிகிச்சை செய்யப் போகின்றார் அதனால் பயப்படாமல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழையுங்கள் என்று தாய்க்கு தைரியம் கூறி அறுவைச் சிகிச்சை அரங்கத்திற்கு அனுப்பி வைத்தார்.
அறுவைச் சிகிச்சை அரங்கத்திற்கு உள்ளே சென்ற வரைக்கும்தான் அந்த அம்மைக்கு நினைவு இருந்தது.
யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள்? என்று எதுவுமே அந்த அம்மைக்கு நினைவுகள் இல்லை.
அறுவைச் சிகிச்சையும் நல்லபடியாக முடிந்தது கண்ணில் கட்டுடன் மூன்று நாள் இருக்க வேண்டும் மூன்று நாள் கழித்து கட்டு பிரிக்கலாம் என்று மருத்துவர் கூறிச் சென்றார்.
இதனிடையே மருத்துவமனையில் அந்த தாயை பார்க்க வந்த அவரது உறவினர் ஒருவர் ஒரு அகத்தியர் படத்தை கொடுத்து இதை தலைமாட்டில் வைத்துக் கொள் என்று தலையணைக்கு அடியில் வைத்து விட்டு சென்றார்.
கண்ணில் கட்டுடன் இருந்த அந்த அம்மைக்கு வந்த உறவினர் எந்த புகைப்படத்தை கொடுத்துச் சென்றார் என்பது தெரியாது.
அறுவைச்சிகிச்சை முடிந்து கண் கட்டுபிரிக்கும் வரை அந்த மூன்று நாட்களும் வெள்ளை வேஷ்டி உடுத்தி காவி துண்டு போர்த்தி ஜடாமுடியுடன் திருநீறு பூசி ஒருவர் அந்தப் படுக்கையின் தலைப் பகுதியிலும் கால் பகுதியிலும் ஒருவர் மூன்று நபர்களாக மூன்று இடங்களிலும் இருப்பது போன்ற உணர்வு.
மூன்றாவது நாள் அதிகாலை கண் கட்டு சிறிது தளர்ந்து அந்த அம்மையார் கண்கட்டுக்களை உயர்த்தி கண் திறந்து பார்த்த பொழுது அந்த நினைவில் தோன்றிய அதே மனிதர் எதிரில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார் ஒரு நிமிடம் அந்த அம்மைக்கு எதுவுமே புரியவில்லை...என்னவென்று உணர்வதற்குள் திடீரென்று மறைந்து போய் விட்டார் அந்த மனிதர்.
அந்த அம்மையார் எதேச்சையாக தலையணைக்கடியில் இருக்கும் அகத்தியர் படத்தை பார்த்து உறைந்து போய்விட்டார்.
ஏனென்றால் சாட்சாத் அவருடைய நினைவிலும் நேரிலும் கண்ட அதே உருவம் அதே வெள்ளை வேஷ்டி காவி துண்டு ஜடாமுடி. அந்த படத்தில் எப்படி இருந்தாரே அப்படியே அதே ரூபத்தில் மனித உருவில் வந்தது குருநாதர் அகத்தியப் பெருமானே என்று உணர்ந்து நெக்குருகி மகனிடம்.
சொன்ன வாக்கின் சொன்னபடியே என் தெய்வம் வந்து என்னை காப்பாற்றி விட்டது எனக்கு கண் தந்து விட்டது அகத்தியா அகத்தியா என்று அழுது கரைந்து உருகிப் போய் விட்டார்.
அதன் பின்னே நடந்தது பேரதிசயம்.
எந்த மருத்துவரால் லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்று கூறினாரோ அவருடைய மருத்துவ துறைத் தலைவரே தன்னுடைய கையெழுத்தைப் போட்டு தந்து நீங்கள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தார்.
பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பம்.
15 வருடங்களாக ஒரு கண்ணில் பார்வை வைத்துக்கொண்டு ஒரு கண்ணில் வலியும் வேதனையும் தாங்கிக் கொண்டு இருந்தாலும் அகத்தியா நீயே கதி!! நீதான் எங்களுக்கு. என்ற நம்பிக்கைதான் தன் தாயின் கண் பார்வையை மீட்டுக் கொடுத்தது.
மருத்துவராக வந்து அகத்தியரே சிகிச்சை செய்தது. கட்டணமே இல்லாமல் அந்த மருத்துவமனை நிர்வாக துறை தலைவர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தது.
இன்று என் தாய் கண்களில் வலியும் வேதனையும் இல்லாமல் இரு கண்களில் பார்வை சக்தியைப் பெற்று சந்தோஷத்துடன் இருப்பது.
இவற்றிற்கெல்லாம் கருணாமூர்த்தி கண்கண்ட தெய்வம் அகத்தியர் தான் காரணம் என்று உணர்ந்த அந்த அடியவருக்கு ஆனந்தக் கண்ணீருடன் குருவிற்கு நன்றி எப்படி சொல்வது என்றே தெரியவில்லை என்று பேச வார்த்தையில்லாமல் பேசியிருந்தார்.
அந்த தாய்க்கும் எனக்காக அகத்தியர் வந்தார். !என் கண்களுக்கு அவர் கைகளால் சிகிச்சை செய்து என் கண் பார்வையை திரும்ப பெறச்செய்தார் என் கூடவே இருந்தார் என்று நொடிப்பொழுதும் அந்த பிரமிப்பு விலகாமல் மகிழ்ச்சியுடன் குரு அகத்தியரையே நினைத்து கொண்டு இருந்து வருகிறார்.
குருநாதர் அகத்தியரின் கருணையே கருணை.
அன்பைச் செலுத்துங்கள் !பிற உயிரையும் தன் உயிராக பாருங்கள்! தானம் தர்மங்கள் செய்யுங்கள். புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இறைவனை நீயே கதி என்று இருந்தாலும் அந்த இறைவனே இறங்கி வருவான். என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் இது. குருநாதர் அகத்தியரின் கருணை சம்பவம்.
உண்மையான பக்தியும் நேர்மையும் அன்பும் தானதர்மங்கள் செய்யும் பண்பும் ஒருவனிடம் இருந்தால் அவந்தனக்கு ஓடோடி வந்து யாம் உதவுவோம்!!! கரையேற்றி வைப்போம்!! உயர்ந்த இடத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்வோம்!!!.....""இவ் வாக்குகள் சாதாரண வாக்குகள் அல்ல.
குருநாதர் அகத்தியர் தன் திருவாய் மலர்ந்து அருளிய எவ் யுகத்திற்கும் பொருந்தும் புனித வாக்கினை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டு அதன்படியே நடந்து "கருணை தெய்வம்!! அகத்தியரின் அருட்கருணையை பெறுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............ தொடரும்!
APPA SHARANAM
ReplyDeleteஅகத்தியர் கருணையே கருணை அய்யா.
ReplyDeleteஅகத்தியன் பொற்பாதங்களை வணங்கி துதிக்கின்றேன். ஓம் அகத்தீசாய நம! என்று.
ReplyDeleteஎன் அகத்தினுள் புகுந்து கடை நாள் வரை அகத்தியன் வாக்கின் படி நடக்கவும் செயல்படவும் ஆசி வழங்குவாயாக!
குருவருள் இருந்தால் அனைத்தும் நடக்கும். மலையை கூட கைகளால் தூக்கமுடியும் குருவருள் இருந்தால்.
ReplyDeleteஅனைத்து ஜீவராசிகளுக்கும் துன்பமும் நீங்கும் கருணைக்கடலே அகத்திய பெருமானே
ReplyDeleteதிருவடிகள் போற்றி, சர்வம் சிவார்ப்பணம்
நன்றி ஐயா நன்றி அகத்தியர் திருப்பாதம் போற்றி
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteநல்ல பதிவு. அகஸ்தியர் திருவடி சரணம்
ReplyDeleteOm Agatheesaya namaha!!! Ayya ennakum ithey pondra anubhavam pona varam nadanthathu.. Ellam antha Kanthan Arullum, Agathiar arullum than karanam!!
ReplyDeleteமெளனகுரு ரெட்டி அய்யா ஜீவ சமாதி சென்று வந்தேன்.மனதிற்கு ரொம்ப இதமாக அமைதியாக உணர முடிந்தது. ஆனி மாதம் 15 ம் தேதி அய்யா குருபூஜை. அகத்தியர் அடியவர்கள் இந்த நாளை பயன்படுத்தி கொள்ளவும். அகத்தியர் மகரிஷிக்கு இணை யாரும் இல்லை. அவர் பக்தர்களுக்காக எதையும் செய்வார்.ஜீவ சமாதியில் சென்ற உடன் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று கேட்டனர் .நாங்கள் சித்தன்அருள் பற்றி சொன்னோம். மிகவும் சந்தோஷமாக எங்களை வரவேற்றார்கள். தீபம் ஏற்றலாம் என்று கேட்டேன்.உங்கள் விருப்பம் எங்கே வேண்டும் என்றாலும் ஏற்றி கொள்ளுங்கள் என்று கூறியதை கேட்டு அகத்தியர் மகரிஷிக்கு நன்றி சொல்லிவிட்டு ஜீவ சமாதி சுற்றி நூற்றுக்கு மேற்பட்டு தீபம் ஏற்றினேன்.பின் தியானம் .சரியாக 8 மணிக்கு பல்லி சத்தம் போட்டு அய்யா தியானத்தில் இருந்து கண்திறந்து விட்டார் என்பதை எனக்கு உணர்த்தியது. சந்தோஷமாக புறப்பட தயாராக வெளியே வந்தால் இன்று பூஜை நாங்கள் செய்தோம் நீங்கள் தீபம் ஏற்கொண்டு இருந்தீர்கள் உங்களுக்கு தொந்தரவு தர கூடாது என்று பிரசாதம் தனியாக எடுத்து முன்பே வைத்து விட்டேன் என்று வயிறு நிறைய கொடுத்தனர்.ஜீவசமாதியில் படைக்கப்பட்டு பிரசாதம் தனியாக கொடுத்து உபசரித்தார்.மனமும் வயிறும் போதும் என்ற அளவிற்கு இருந்தது.அகத்தியர் மகரிஷிக்கு நன்றி. இந்த ஜீவ சமாதி பற்றி வெளியிட்ட சித்தன்அருள் அய்யா விற்கு நன்றி ...
ReplyDelete