​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 July 2016

சித்தன் அருள் - 383 - "பெருமாளும் அடியேனும்" - 59 - ஆஞ்சநேயர்!


பெற்றோரிடமிருந்து குழந்தையை பிரிப்பது தவறு என்றாலும் அந்தக் குழந்தை தெய்வக் குழந்தையாக மாறிய பிறகு தானம் செய்வது தவறில்லை. எனவே இவன்தான் சிவபெருமானின் மறு அவதாரம்.

சிவபெருமானே ஆசைப்பட்டு அமர்ந்த இடம் திருமலை. பிற்காலத்தில் அயோத்தியபுரி அரசனான ஸ்ரீராமனுக்கு இந்தக் குழந்தைதான் மிகப்பெரிய பாதுகாப்பைத் தரப்போகிறான். அது மட்டுமன்றி பிரம்மச்சாரியாக வாழ்ந்து இந்த பூலோக மக்களுக்கு நிறையக் கைங்கரியமும் செய்யப்போகிறான்.

கிருஷ்ணாவதாரத்திற்குப் பின் இராமாவதாரம் நடக்கப்போகிறது. இராமாவதாரத்தில் இந்த ஹனுமானின் புகழ் எட்டுத்திக்கிலும் மிக நன்றாகப் பரவப்போகிறது.

இதற்கிடையில் கலிபுருஷன் இந்த பூலோக மக்களைப் பெரிதும் துன்புறுத்துவான். அவனிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற ‘வேங்கட’ அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது? என்று ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாமல் வேங்கடவன் எதை எதையோ பேசுவதைக் கேட்டு கேசரிக்கு ஒன்றும் புரியவில்லை.

எப்படியோ தான் பெற்றெடுத்த குழந்தையை பொதுவாழ்க்கைக்குத் தத்து கொடுத்தாயிற்று. மீண்டும் இன்னொரு குழந்தை தனக்குப் பிறக்கப் போவதில்லை. ஏனெனில் தன் இறுதிமூச்சு இருக்கும் வரை வேங்கடவனுக்குச் சேவை செய்வதாக அஞ்சனை திருமலையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாள். எனவே கூறாமல், தானும் சந்நியாசம் வாங்கிக் கொண்டு, இப்படியே நாட்டைவிட்டுக் கிளம்பிவிட வேண்டியதுதான், என்று கேசரி தீர்க்கமாக முடிவெடுத்தான்.

திருமலைவாசன் கேசரியின் முடிவைக் கேட்டுக் கலங்கிவிடவில்லை. ‘விதி’ எப்படி செயல்படுகிறதோ அதன்படியே செயல்படட்டும் என்று மௌனமாக இருந்தார்.

தன் கணவனிடம் நேரிடையாக அஞ்சனை “எதற்காக இந்த சந்நியாச முடிவு?” என்று கேட்டாள்.

“உனக்கே தெரிந்திருக்கும். பின் எதற்கு என்னைக் கேட்கிறாய்?” என்றான் கேசரி.

“நாம் பெற்ற குழந்தையை உலகத்திற்கு தத்து கொடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய புண்ணியம்தானே?”

“எது புண்ணியம்? நாலைந்து குழந்தைகள் நமக்கு இருந்தால் அதில் ஒன்றிரண்டை மற்றவர்களுக்குத் தத்து கொடுக்கலாம். நமக்குப் பிறந்ததோ ஒன்றே ஒன்று. அதையும் தானம் கொடுத்து விட்டோம்.”

“நல்ல விஷயத்திற்குத் தானே செய்தோம்.?”

“சரி, நம் சந்ததிக்கு வேறு வாரிசே இல்லை. எனக்குப்பின் என் நாட்டை ஆள வாரிசு இல்லையே.”

“ஏன் இல்லை?”

“நீயோ திருமலையில், வேங்கடவனுக்குப் பணிவிடை செய்ய நிரந்தரமாகத் தங்கிவிட்டாய். என்னால், உன்னைப் போல் இங்கிருக்க முடியாது.”

“ஏன்?”

“இந்த இடம் மலை. வேங்கடவன், வாயுபகவான் ஆகிய யாரையுமே எனக்குப் பிடிக்கவில்லை. மாறாக எரிச்சலும், கோபமும் ஆத்திரமும்தான் அதிகமாகிறது”

“கேசரி மஹாராஜா! மனத்தை அடக்கிக் கொள்ளப் பழக வேண்டாமா?”

“தேவையில்லாத உபதேசம்.”

“என்னை ஆன்மிகப் பணிக்குத் தானம் கொடுத்துவிட்டேன். எனக்கு அதில்தான் நிம்மதி. ஆனால் தங்களுக்கோ உலக சுகத்தில் ஆசை இருக்கிறது. அதை நான் குற்றமாகச்  சொல்லவில்லை. வேண்டுமானால் தாங்கள், தங்களுக்குப் பிடித்தமான வேறொரு பெண்ணை மணந்து அழகான பிள்ளையையும் பெற்றெடுத்துக் கொண்டு, ராஜ்ஜிய பரிபாலனத்தையும் செய்து கொள்ளலாமே!” என்றாள் அஞ்சனை மிக நிதானமாக.

இந்த வார்த்தையை கேசரி எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்தான்.

“அஞ்சனையா இப்படிப் பேசுவது?”

“ஆமாம்”

“எனக்கு இன்னொரு மறுமணம்! அதுவும் அஞ்சனையின் சம்மதத்தோடு. சபாஷ் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.”

“இதிலென்ன வேடிக்கை? அரச குலத்திற்குரிய வழக்கம்தானே! அதைத்தான் சொன்னேன்.”

“அஞ்சனை! எப்படி மாறிவிட்டாய் நீ! வேறொரு பெண்ணைக் கண்ணெடுத்தும் பாராமல் இருந்தேன். அஞ்சனையும் ஈன்றெடுத்த அனுமனும் எனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள் என்று கோடானு கோடி ஆசையோடு தவம் கிடந்தேன். ஆனால் நான் இப்போது அஞ்சனையையும் இழந்தேன். அருமை மைந்தன் அனுமனையும் பறிகொடுத்தேன். வேறொரு பெண்ணோடு நான் இல்லற வாழ்க்கை வாழக்கூடாது என்பதற்காகத்தான் ‘சந்நியாசி’ கோலம் கொள்வதாக முடிவெடுத்தேன். அஞ்சனை! நீ கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?” என்று நெகிழ்ந்து பேசினான் கேசரி.

“எதற்குக் கருணை காட்ட வேண்டும்?”

“நீ, திருமலையை விட்டுவிட்டு என்னோடு இராணியாக மாறவேண்டும். ராஜ்ஜிய சபையில் மகாராணியாக உலாவரவேண்டும்.”

“நடக்காத காரியம் மகாராஜ்!.”

“அஞ்சனை! நீ நினைவோடுதான் பேசுகிறாயா?” என்று கோபமாகக் கேட்டான்.

“ஹனுமான் சத்தியமாகச் சொல்கிறேன். எனக்கு ஒரு குழந்தை போதும். இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து பல குழந்தைகளைப் பெற்று, பாசத்தோடும் அஞ்ஞானத்தோடும் பயந்து பயந்து வாழ்வதைவிட இந்த ஒரே அனுமானோடு கடைசிகாலம் வரை இதே திருமலையில் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்.”

“இதுதான் உன் முடிவா?”

“ஆமாம்.”

“அப்படியெனில் நான் இனிமேல் ஒரு க்ஷண நேரம்கூட இந்தத் திருமலையில் இருக்க மாட்டேன். இப்போதே நான் கிளம்புகிறேன்.” என்று விருட்டென்று கோபம் கொப்பளிக்க விருட்டென்று கிளம்பினான் கேசரி.

இத்தனை ஆண்டுகாலம் அன்போடும் பாசத்தோடும் பழகிய தன் கணவன் இப்படி முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதைக் கண்டு அஞ்சனைக்கு மனம் பொறுக்கவில்லை.

‘திருமலைவாசா! நடப்பதும் நடந்து முடிந்ததற்கும் இனி நடக்கப்போவதற்கும் நீதான் மூலகாரணம். எனக்கு அருள் புரிந்தாய். என் கணவனுக்கும் வாழ்க்கையைக் கொடு.’ என்று மனத்தால் மன்றாடினாள்.

அஞ்சனையின் வேண்டுகோளைக் கேட்டார் திருமலைவாசன். என்னதான் இருந்தாலும் பெண்களின் கற்புத்தன்மை இன்னும் போகவில்லை என்று சிரித்துக் கொண்டார்.

பின்பு அஞ்சனையின் முன்பு தோன்றிய வேங்கடவன். “அஞ்சனை! நீ எதற்காக கண்கலங்க வேண்டும்? நான் இருக்கிறேன். பயப்படாதே. எவ்வளவு வேகமாக உன் கணவன் கேசரி இந்த மலையை விட்டுச் செல்கிறானோ அதே வேகத்தில் இந்தத் திருமலைக்கே வருவான். உன்னோடு சேர்ந்து இந்த அஞ்சனாத்திரி மலையிலே உலா வருவான். நீயும் துறவற வாழ்க்கையை விட்டுவிட்டு அவனோடு இல்லற வாழ்க்கை வாழ்வாய். நீ எனக்குத் தொண்டு செய்தது போதும்.” என்று வாக்குறுதி கொடுத்தார்.

“வேங்கடவன் சொன்னதே வேத வாக்கு என்று நம்பி இருக்கிற நான், தாங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன் ஸ்வாமி!”

“சந்தோஷம், அஞ்சனை! உன் பிள்ளை அனுமானை இன்னும் சிறிது காலம் உன் பொறுப்பில் வைத்துக் கொண்டே வளர்த்துக் கொண்டுவா. ஆனால் அளவுக்கு அதிகமாக பாசத்தை மட்டும் காட்டி வளர்க்காதே.” என்று மறைமுகமாக எடுத்துரைக்கவும் செய்தார் வேங்கடவன்.

அனுமன் சேஷ்டைகள் அக்கம் பக்கத்தவர்களுக்குப் பெரும் பாரமாக இருந்தது. அவனுக்குள் தெய்விக சக்தி இருப்பதால் எல்லாருமே பொதுவாக ரசித்தார்கள். அனுமனும் மெது மெதுவாக வளர்ந்து கொண்டு வந்தான்.

அஞ்சனையுடன் கோபித்துக் கொண்டு திருமலையிலிருந்து வெளியேறிய கேசரிக்கு தனிமை சுகம் பிடிக்கவில்லை. திருமலைக்குத் தூது அனுப்பி அடிக்கடி அஞ்சனையிடமும், அனுமனுடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள்-

கேசரி, அரண்மனையில் பூஜை செய்து கொண்டிருக்கும்பொழுது சட்டென்று வானம் இருண்டதைக் கண்டான்.

மேகத்தில் சூரியன் மறையும் பொழுதும், சூரிய கிரகணத்தின் பொழுதும் வானம் இருண்டு போகும். ஒரு வேளை மழை காலமாக இருந்தாலும் வானத்தில் சூரியனைக் காண இயலாது.

ஆனால்-

அன்றைக்கோ சித்திரை மாதம். கொளுத்தும் வெயிலில் சட்டென்று வானம் இருட்டாயிற்று என்பதால் சந்தேகப்பட்டு தன் அறையை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தான் கேசரி.

ஒரு சிறுபையன் வானத்தில் நீந்துவது அந்த மெல்லிய வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. எதற்காக இந்த வெயிலில் ஒரு சிறுவன் சூரியனை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறான் என்று விவரம் தெரியாமல் போயிற்று.

அதற்குள்-

சூரியனைக் கவ்விப் பிடிக்க முயன்ற அந்தச் சிறுவனை, முகத்தில் அறைந்த சூரியன் அப்படியே மயக்க நிலையில் சென்று கொண்டிருந்த அனுமனைத் தன் கைத்தாங்கலாக, திருமலையிலுள்ள அஞ்சனாத்திரியின் இல்லத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு வெளியேறினான்.

“என்னை விளையாட்டுப் பந்து என்றெண்ணி வாயில் கவ்வப் பார்த்தான். என்னைக் கவ்வினால் இந்த பூலோகம் அனைத்தும் இருட்டில் மறைந்து விடும். அனுமன் உலகத்திற்கு ஒளியாகத் தோன்றக் கூடியவன். அவனால் உலகம் இருண்டுவிடக் கூடாது என்பதற்காக நான் பால அனுமானைக் கன்னத்தில் அடித்தேன். இது செல்ல அடி தான். இருந்தாலும் அவன் முகம், மனித இயல்பிலிருந்து வானரமுகம் போல் ஆயிற்று. முகம் மட்டும் வானரம் போல் இருந்தால் போதுமா? அங்கமும் அப்படி மாற வேண்டுமே என்பதற்காக அனுமனுக்கு வால் முளைக்கவும் செய்தேன். இந்த சின்னக் குழந்தை எப்படி வானில் பறந்தான்? அவனுக்கு எப்படி இப்படி ஓர் அமானுஷ்ய சக்தி வந்தது என்றால் இதற்கு வாயுபகவான்தான் காரணம்” என்று சூரியன், திருமலையிலுள்ள அனைத்துத் தேவர் மற்றும் ரிஷிகளிடம் சொல்லிக் கொண்டிந்தான்.

செய்தி அஞ்சனைக்குப் போயிற்று. வேங்கடவன் சந்நிதியில் தவம் புரிந்து கொண்டிருந்ததால் உடனடியாக தன்னுடைய பர்ணசாலைக்குத் திரும்பினாள்.

வானத்தில் நடந்த இந்த அதிசயத்தை தன் உப்பரிகை மாளிகையில் கண்ட கேசரி, ‘இது என் மகன் அனுமன்தான்’ என்று நினைத்து அனுமனைப் பார்க்கத் திருமலைக்கு வந்தான்.

பின்பு கடைசிவரை தன் வாழ்க்கையைத் துறவாக மாற்றிக்கொண்டு வேங்கடவனுக்கு சேவை செய்து அஞ்சனாத்திரி பகுதி மலையில் உலாவிக் கொண்டிருந்தான்.

கேசரியுடன் திருமலையில் அனுமானும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்ததைக் கண்டு வேங்கடவனும் மனம் மகிழ்ந்தான்.



சித்தன் அருள்.................... தொடரும்!

4 comments:

  1. Sir, thank you for this post.

    One sentence is not clear: "கிருஷ்ணாவதாரத்திற்குப் பின் இராமாவதாரம் நடக்கப்போகிறது".

    ReplyDelete
  2. Ramaavatharathu piraku thane krishnaavatharam nikalthathu...

    ReplyDelete
  3. Ramaavatharathu piraku thane krishnaavatharam nikalthathu...

    ReplyDelete
  4. See this sentence. Even perumal was talking here and there on the subject which do not have any sense. ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாமல் வேங்கடவன் எதை எதையோ பேசுவதைக் கேட்டு கேசரிக்கு ஒன்றும் புரியவில்லை. We can take it as perumal talked something which was not having any connection to what we know.

    ReplyDelete