திருமலையில் அனுமன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒருநாள், கிஷ்கிந்தா புரியின் அரசனான வாலி நேராக திருமலைக்கு வந்தான்.
வேங்கடவனின் தரிசனம் கிட்ட வேண்டும் என்பதற்காக நீண்டகாலத் தவத்திற்கு ஏற்பாடும் செய்தான். பல ஆண்டுகள் திருமலைக் காட்டில் தவம் செய்ததால், வாலியின் தவத்திற்கு வேங்கடவனும் மனம் இரங்கி, அவனுக்குக் காட்சி தந்தார்.
“என்ன நோக்கத்திற்காக தவம் செய்கிறாய் வாலி?”
“தங்களைத் தரிசித்து ஓர் உதவி கேட்பதற்காக கிஷ்கிந்தாபுரியிலிருந்து வந்திருக்கிறேன் ஐயனே!”
“என்ன வேண்டும்?”
“சிறிது காலத்திற்கு முன்பு, தங்கள் மலையிலிருந்து வானத்தை நோக்கிப் பறந்த ஒரு வானரச் சிறுவனைக் கண்டேன். அவனைப் பற்றி நிறையச் செய்திகளைச் சேகரித்தேன். அந்த வானரச் சிறுவன் தற்சமயம் தங்கள் பாதுகாப்பில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன்.”
“ஓ, அனுமனைப் பற்றிச் சொல்கிறாயா? அவன் என் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்வது தவறு. அவனுக்குப் பெற்றோர் இருக்கிறார்கள்.”
“எல்லாருக்கும் தாயாக-தந்தையாக இருப்பவர் சாட்சாத் தாங்கள்தானே? அதனால்தான் தங்களைத் தரிசனம் செய்யத் தவம் செய்தேன்.”
“அதுதான் தரிசனம் கிடைத்தாயிற்றே! வேறு என்ன வேண்டும் வாலி?”
“எனக்கு அனுமனைப் பார்க்க வேண்டும்.”
“பார்த்த பிறகு?”
“தங்கள் அனுக்கிரகத்தால் அவனையும் அவன் பெற்றோரையும் கிஷ்கிந்தாபுரிக்கு அழைத்துச் சென்று அவனைப் பேணிக் காக்க விரும்புகிறேன்.”
“இதை அனுமனின் பெற்றோரிடம் போய்க் கேள். என்னை ஏன் கேட்கிறாய்?”
“ஐயனே! தாங்கள் அவ்வாறு சொல்லக் கூடாது. தாங்கள் உத்தரவு கொடுத்தால்தான் அனுமன் என்னோடு வருவான்.”
“அனுமனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை வாலி! நீ நேராக அஞ்சனை-கேசரி தம்பதியிடம் சென்று கேள். உன் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டால் எனக்கும் மகிழ்ச்சி. ஆமாம். எல்லாரையும் விட்டுவிட்டு எதற்காக அனுமனை மட்டும் விரும்புகிறாய்?”
“ஐயனே! தாங்கள் அறியாததா? அனுமன் கிஷ்கிந்தா புரியில்தான் கடைசிவரை இருப்பான் என்று வசிஷ்டர் முதலான மகாரிஷிகளும், சித்தர்களின் ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டிருக்கிறதே.”
“ஓ. அதை வைத்துக் கேட்கிறாயா? சரி. அப்படித்தான் அனுமன் அங்கு செல்ல வேண்டும் என்றால் நான் ஏன் குறுக்கே நிற்கிறேன்? தாராளமாக நீயே கேசரி தம்பதியிடம் போய் நேரில் கேள்.” என்று வாலிக்கு ஆசிர்வாதம் வழங்கினார் திருமலைவாசன்.
கிஷ்கிந்தையின் பேரரசனான வாலி தன் பர்ணசாலைக்குள் நுழைவதைக் கண்டு அஞ்சனைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஏகப்பட்ட வானர வீரர்கள் புடைசூழ வந்திருந்ததால் கேசரிக்கு, வாலியின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மிகப்பெரும் வானர வேந்தன் எதற்காக தன் இருப்பிடம் நோக்கி வரவேண்டும் என்று யோசித்தான். நிச்சயம் இவன் அனுமனைப் பார்க்கத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
தானும் ஓர் அரசன். வாலியும் ஓர் அரசன் என்பதால் சம்பிரதாய விதிப்படி வாலிக்கு இராஜமரியாதை கொடுத்தான் கேசரி.
“அனுமன் எங்கே?” என்று கேட்டான் வாலி.
பர்ணசாலைக்குப் பின்னால் தன்னையத்த சிறுவர்களோடு மரத்தில் தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்த அனுமனை வரவழைத்த கேசரி, வாலிக்கு அறிமுகப் படுத்தினான்.
வாலிக்கு அறிமுகப்படுத்திய கேசரி, அனுமனை வாலியின் காலில் விழுந்து வணங்கச் சொன்னான். ஆனால் என்ன காரணத்தினாலோ அனுமன், வாலியின் காலில் விழுந்து வணங்கவில்லை.
ஓரிடத்தில் நிற்காமல் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தானே தவிர, தந்தை கேசரியின் சொல்லுக்குப் பணியவில்லை. தான் சொல்லியும் அனுமன், வாலியின் காலில் விழுந்து வணங்காதது கேசரிக்கு மிகப் பெரும் மனவருத்தம்.
ஒரு பேரரசனை தன்மகன் அனுமன் அவமானப்படுத்தி விட்டதாகவே கேசரிக்கு கோபமும் வந்தது. மிரட்டிப் பார்த்தான். அப்போதும் கூட அனுமன் சிரித்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தானே தவிர தந்தை சொல்லை மதிக்கவில்லை.
“அனுமனை விட்டுவிடுங்கள். அவன் சிறுகுழந்தை. அப்படித்தான் இருப்பான். நாளாக நாளாக எல்லாம் சரியாகப் போய்விடும்.” என்று கேசரியை, வாலி சமாதானப்படுத்தினான்.
“என்ன விஷயமாக தாங்கள் இந்த எளிய பர்ணசாலைக்குள் வந்திருக்கிறீர்கள் என்பதை அடியேன் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேசரி கேட்டான்.
“தங்கள் மைந்தன் அனுமனின் தெய்விக சக்தியை சில நாள்களுக்கு முன்பு வானில் கண்டேன். அனுமன் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது. தாங்கள் அனுமதி கொடுத்தால் அல்லது தாங்களும் விரும்பினால் கிஷ்கிந்தாபுரிக்கு அனுமனை அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணம். அதற்காகத்தான் நானே நேரில் வந்தேன்.”
இதைக் கேட்டதும் அஞ்சனைக்கு அதிர்ச்சி!
சித்தன் அருள்................... தொடரும்!
"சித்தர்களின் ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டிருக்கிறதே.” -- even in those days, nadi suvadi by Siddhars was there!!
ReplyDelete