​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 26 May 2016

சித்தன் அருள் - 335 - "பெருமாளும் அடியேனும்" - 53 - அஞ்சனையின் எதிர்கால விளக்கம்!


அன்றைக்கு நடுவழியில் வழி மறைத்த கலிபுருஷன் மறுபடியும் இங்கு வந்து இவர் மனத்தைக் கெடுத்து விட்டானா? வேங்கடவனுக்கு இது தெரியுமா? தெரிந்துதான் மௌனமாக இருக்கிறாரா? இதென்ன சோதனை? என்று வெறுத்து விட்டாள்.

அப்பொழுது அஞ்சனையின் காதில் மட்டும் கேட்கும்படியாக ஓர் அசரீரி எழுந்தது.

"அஞ்சனை! எதையும் நினைத்துக் கவலைப் படாதே. உன் ஆசை நிறைவேறும். உனக்கு பிறக்கும் மகன் சாதாரண மகனல்லன். அகில உலகமும் போற்றும் தெய்வ அவதாரமாக இருப்பான். உன் கணவனுக்கு இல்லறத்தில் நாட்டமில்லை. இறைவன் திருநாமத்திலும் இப்பொழுது நாட்டமில்லாமல் போனதற்கும் காரணம் உண்டு. பின்னொருநாள் இதை விளக்குகிறேன்.

அன்றைக்கு ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்தாயே ஞாபகமிருக்கிறதா? அது உண்மையில் நடக்ககூடியதுதான். உனக்கும் கேசரிக்கும் பிறக்கும் மைந்தனை உன் கணவனான கேசரியே வாயுபகவானுக்கு தத்து கொடுக்கப் போகிறான். இது விதி. இதை மாற்ற யாராலும் முடியாது.

கேசரியின் மைந்தன் என்றால், அவனால் எந்தவிதமான அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்ய முடியாது. வானத்தில் பறந்து பறந்துதான் பின்னால் பல்வேறு சாகசங்களைச் செய்யவேண்டும். இதற்கு வாயுபகவான் உதவி உனக்கு பிறக்கப் போகும் மைந்தனுக்கு கிடைக்கும். அவன் "அஞ்சனையின் மைந்தன்" என்று மூவுலகிலும் பெயர் பெற்று கீர்த்தியோடு உலா வருவான்.

கேசரியை விட்டுவிடு. அவன் உனக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுத்துவிட்டு இமய மலையை நோக்கித் தவம் புரியச் சென்று விடுவான். பின்னாளில் கேசரி சித்தராக இந்த பூமியில் வலம் வருவான். அதே சமயம் உனக்கு பிறக்கும் மைந்தன் கடைசிவரை உன்னை வைத்துக் காப்பாற்றுவான்" என்று ஒலித்தது.

இதைக் கேட்டு அஞ்சனைக்கு ஒன்றுமே புரியவில்லை. தனக்கு அருமையான ஓர் ஆண் வாரிசு இந்தத் திருவேங்கடவன் மலையிலே பிறக்கப் போவதை எண்ணி சந்தோஷப்படுவதா? வாரிசை வாயுதேவனுக்கு தத்தாகக் கொடுத்துவிட்டு இமயமலை நோக்கித் தவம் செய்யப் போகும் தன் கணவன் கேசரியுடன் தானும் செல்வதா?" என்று குழம்பிப் போனாள்.

அப்போது.......

வேங்கடவனே அஞ்சனையின் முன் வந்தார். திருமாலின் தரிசனத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போன அஞ்சனை, வேங்கடவனின் பொற்பாதத்தில் விழுந்தாள்.

"என்ன வேண்டும் அஞ்சனை?"

"கேட்டதை எல்லாம் தரும் வேங்கடவா! எனக்கு வாரிசும் வேண்டும். என்னைவிட்டு என் கணவன் அகலாமலும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் தாங்கள் கருணை கூர்ந்து தந்தருள வேண்டும்."

"பிறகு?"

"தங்கள் திருநாமத்தை சொல்லிக் கொண்டே இந்த மலையில் கடைசிவரை நிம்மதியாக உயிர்வாழ்ந்து தங்கள் திருவடிகளில் சரண் அடையவேண்டும்."

"பிறகு?"

"தங்கள் பொற்பாதத்தை அனுதினமும் என் கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்டே இருக்கும் பாக்கியத்தையும் எனக்கு தாங்கள் அருளவேண்டும்."

"அதெல்லாம் இருக்கட்டும். எங்கே உன் கணவன்?"

"இங்கு தானே இருந்தார்? தங்களுக்குத் தெரியாததா? தாங்களே கண்டுபிடித்துத் தருவது தானே? என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?"

"அஞ்சனை! அதோ பார். சற்று முன் முயல் வேட்டை ஆடினான். இப்போது தவம் செய்து கொண்டிருக்கிறான்."

"தவம் செய்வது நல்ல காரியம் தானே? செய்து விட்டு போகட்டும்."

"இல்லை அஞ்சனை! சில நாழிகைகளுக்கு முன்பு நாத்திகம் பேசினான்."

"ஆமாம்!"

"குழந்தை பெறுவது உன் தலையெழுத்து என்றான்."

"ஆமாம்!"

"நான் இங்கு வந்து தவம் செய்யச் சொன்னேன். ஆனால் செய்யவில்லை."

"உண்மை."

"இதையெல்லாம் பார்க்கும் பொழுது உனக்கு என்ன தோன்றுகிறது?"

"சித்தப்ரம்மை கொண்டவர் போல் தோன்றுகிறது."

"சரியாகச் சொன்னாய் அஞ்சனை! உன் கணவர் கேசரி இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, முன் ஜென்மத்திலும் இதே சித்தப்ரம்மை பிடித்தவனாகத்தான் இருந்தான்."

"வேங்கடவா! அப்படியென்றால் அவர் தன்னந்தனியனாக இருந்து யானையை ஒரே வேலால் துணிந்து கொன்றாரே! அது வீரம் இல்லையா? அந்த வீரத்தைக் கண்டு மெச்சித்தானே என் தந்தை இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்?"

"அதுவும் உண்மை."

"அப்படியென்றால் என் எதிர்கால வாழ்க்கை?"

"கவலைப்படாதே. உன்னையும் உன் மைந்தனையும் நான் பார்த்துக் கொள்கிறேன். கேசரி, வாரிசைக் கொடுத்துவிட்டு இமயம் நோக்கிச் செல்வான். சிலகாலம் கழித்து நீயும் உன் கணவனைப் பின் தொடர்ந்து இமயம் ஏகுவாய்."

"என் மைந்தன் கதி?"

"அவனை வாயு பொறுப்போடு தத்துப் பிள்ளையாக எடுத்துப் பார்த்து வளர்த்து வருவார். நானும் அவனைக் கண்காணித்துக் கொண்டே வருவேன். போதுமா?" என்றார் வேங்கடவன்.

"பெருமாளே! அப்படியெனில் நான் தங்களிடம் கேட்ட வரங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே." என்று அஞ்சனை திருமலை வாசனிடம் கேட்டதற்கு......

"காலம் இதற்கு விடை சொல்லும்" என்றார் வேங்கடவன்.

அஞ்சனைக்கு மயக்கமே வந்துவிட்டது.

சித்தன் அருள்.............. தொடரும்!

No comments:

Post a Comment