"குரு வழி காட்டுவார். ஆனால் ஊட்டமாட்டார் என்பதை எப்பொழுதுமே புரிந்துகொள். நாங்கள் ஊட்டினாலும் துப்புகின்ற குழந்தைகளாக இருந்தால், குதப்புகின்ற குழந்தைகளாக இருந்தால், எப்படியப்பா பாவ வினை தீரும்? எனவே, நாங்கள் கூறுகின்ற விஷயத்தை ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் தொடர்ந்து எம் வழியில் வந்தால் கட்டாயம் ஞானக் கதவு திறக்குமப்பா!" அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Tuesday, 31 May 2016
Monday, 30 May 2016
சித்தன் அருள் - 337 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா! புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொருத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா! என்பதை தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்பணித்து, அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால், அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால், அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Friday, 27 May 2016
சித்தன் அருள் - 336 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"ஒரு மனிதன் தனக்குள் இருக்ககூடிய இறையையும், தனக்குள் உள்ள பாவங்களையும் வென்று, எண்ணங்களில் எல்லாவிதமான நல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால், கட்டாயம் இறையருள், அது எந்த நிலையாக இருந்தாலும், அவன் எந்த வடிவை வணங்கினாலும், அவன் விரும்பும் வடிவில், அவன் விரும்பும் நிலையில், அவனுக்கு இறைவனால் காட்சி தரப்படும், அருளப்படும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Thursday, 26 May 2016
சித்தன் அருள் - 335 - "பெருமாளும் அடியேனும்" - 53 - அஞ்சனையின் எதிர்கால விளக்கம்!
அன்றைக்கு நடுவழியில் வழி மறைத்த கலிபுருஷன் மறுபடியும் இங்கு வந்து இவர் மனத்தைக் கெடுத்து விட்டானா? வேங்கடவனுக்கு இது தெரியுமா? தெரிந்துதான் மௌனமாக இருக்கிறாரா? இதென்ன சோதனை? என்று வெறுத்து விட்டாள்.
அப்பொழுது அஞ்சனையின் காதில் மட்டும் கேட்கும்படியாக ஓர் அசரீரி எழுந்தது.
"அஞ்சனை! எதையும் நினைத்துக் கவலைப் படாதே. உன் ஆசை நிறைவேறும். உனக்கு பிறக்கும் மகன் சாதாரண மகனல்லன். அகில உலகமும் போற்றும் தெய்வ அவதாரமாக இருப்பான். உன் கணவனுக்கு இல்லறத்தில் நாட்டமில்லை. இறைவன் திருநாமத்திலும் இப்பொழுது நாட்டமில்லாமல் போனதற்கும் காரணம் உண்டு. பின்னொருநாள் இதை விளக்குகிறேன்.
அன்றைக்கு ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்தாயே ஞாபகமிருக்கிறதா? அது உண்மையில் நடக்ககூடியதுதான். உனக்கும் கேசரிக்கும் பிறக்கும் மைந்தனை உன் கணவனான கேசரியே வாயுபகவானுக்கு தத்து கொடுக்கப் போகிறான். இது விதி. இதை மாற்ற யாராலும் முடியாது.
கேசரியின் மைந்தன் என்றால், அவனால் எந்தவிதமான அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்ய முடியாது. வானத்தில் பறந்து பறந்துதான் பின்னால் பல்வேறு சாகசங்களைச் செய்யவேண்டும். இதற்கு வாயுபகவான் உதவி உனக்கு பிறக்கப் போகும் மைந்தனுக்கு கிடைக்கும். அவன் "அஞ்சனையின் மைந்தன்" என்று மூவுலகிலும் பெயர் பெற்று கீர்த்தியோடு உலா வருவான்.
கேசரியை விட்டுவிடு. அவன் உனக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுத்துவிட்டு இமய மலையை நோக்கித் தவம் புரியச் சென்று விடுவான். பின்னாளில் கேசரி சித்தராக இந்த பூமியில் வலம் வருவான். அதே சமயம் உனக்கு பிறக்கும் மைந்தன் கடைசிவரை உன்னை வைத்துக் காப்பாற்றுவான்" என்று ஒலித்தது.
இதைக் கேட்டு அஞ்சனைக்கு ஒன்றுமே புரியவில்லை. தனக்கு அருமையான ஓர் ஆண் வாரிசு இந்தத் திருவேங்கடவன் மலையிலே பிறக்கப் போவதை எண்ணி சந்தோஷப்படுவதா? வாரிசை வாயுதேவனுக்கு தத்தாகக் கொடுத்துவிட்டு இமயமலை நோக்கித் தவம் செய்யப் போகும் தன் கணவன் கேசரியுடன் தானும் செல்வதா?" என்று குழம்பிப் போனாள்.
அப்போது.......
வேங்கடவனே அஞ்சனையின் முன் வந்தார். திருமாலின் தரிசனத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போன அஞ்சனை, வேங்கடவனின் பொற்பாதத்தில் விழுந்தாள்.
"என்ன வேண்டும் அஞ்சனை?"
"கேட்டதை எல்லாம் தரும் வேங்கடவா! எனக்கு வாரிசும் வேண்டும். என்னைவிட்டு என் கணவன் அகலாமலும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் தாங்கள் கருணை கூர்ந்து தந்தருள வேண்டும்."
"பிறகு?"
"தங்கள் திருநாமத்தை சொல்லிக் கொண்டே இந்த மலையில் கடைசிவரை நிம்மதியாக உயிர்வாழ்ந்து தங்கள் திருவடிகளில் சரண் அடையவேண்டும்."
"பிறகு?"
"தங்கள் பொற்பாதத்தை அனுதினமும் என் கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்டே இருக்கும் பாக்கியத்தையும் எனக்கு தாங்கள் அருளவேண்டும்."
"அதெல்லாம் இருக்கட்டும். எங்கே உன் கணவன்?"
"இங்கு தானே இருந்தார்? தங்களுக்குத் தெரியாததா? தாங்களே கண்டுபிடித்துத் தருவது தானே? என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?"
"அஞ்சனை! அதோ பார். சற்று முன் முயல் வேட்டை ஆடினான். இப்போது தவம் செய்து கொண்டிருக்கிறான்."
"தவம் செய்வது நல்ல காரியம் தானே? செய்து விட்டு போகட்டும்."
"இல்லை அஞ்சனை! சில நாழிகைகளுக்கு முன்பு நாத்திகம் பேசினான்."
"ஆமாம்!"
"குழந்தை பெறுவது உன் தலையெழுத்து என்றான்."
"ஆமாம்!"
"நான் இங்கு வந்து தவம் செய்யச் சொன்னேன். ஆனால் செய்யவில்லை."
"உண்மை."
"இதையெல்லாம் பார்க்கும் பொழுது உனக்கு என்ன தோன்றுகிறது?"
"சித்தப்ரம்மை கொண்டவர் போல் தோன்றுகிறது."
"சரியாகச் சொன்னாய் அஞ்சனை! உன் கணவர் கேசரி இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, முன் ஜென்மத்திலும் இதே சித்தப்ரம்மை பிடித்தவனாகத்தான் இருந்தான்."
"வேங்கடவா! அப்படியென்றால் அவர் தன்னந்தனியனாக இருந்து யானையை ஒரே வேலால் துணிந்து கொன்றாரே! அது வீரம் இல்லையா? அந்த வீரத்தைக் கண்டு மெச்சித்தானே என் தந்தை இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்?"
"அதுவும் உண்மை."
"அப்படியென்றால் என் எதிர்கால வாழ்க்கை?"
"கவலைப்படாதே. உன்னையும் உன் மைந்தனையும் நான் பார்த்துக் கொள்கிறேன். கேசரி, வாரிசைக் கொடுத்துவிட்டு இமயம் நோக்கிச் செல்வான். சிலகாலம் கழித்து நீயும் உன் கணவனைப் பின் தொடர்ந்து இமயம் ஏகுவாய்."
"என் மைந்தன் கதி?"
"அவனை வாயு பொறுப்போடு தத்துப் பிள்ளையாக எடுத்துப் பார்த்து வளர்த்து வருவார். நானும் அவனைக் கண்காணித்துக் கொண்டே வருவேன். போதுமா?" என்றார் வேங்கடவன்.
"பெருமாளே! அப்படியெனில் நான் தங்களிடம் கேட்ட வரங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே." என்று அஞ்சனை திருமலை வாசனிடம் கேட்டதற்கு......
"காலம் இதற்கு விடை சொல்லும்" என்றார் வேங்கடவன்.
அஞ்சனைக்கு மயக்கமே வந்துவிட்டது.
சித்தன் அருள்.............. தொடரும்!
Wednesday, 25 May 2016
சித்தன் அருள் - 334 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"இல்லமும் ஒரு பணிபுரியும் இடம். கர்மவினையால் இந்த பணிபுரியும் இடத்திற்கு வந்திருக்கிறோம். வினைக்கு ஏற்ப உறவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே செய்ய வேண்டிய பணிகளை செய்ய வேண்டும். ஆனால் தீவிர பற்றையோ, பாசத்தையோ வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற அளவிலே மனதிலே எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதனை முறையாக, ஒரு பயிற்சியாக வித விதமாக ஒரு மனிதன் கையாண்டு பார்க்க வேண்டும். பல விதமான ஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை செய்து கொண்டே வர, மெல்ல மெல்ல அதீத பற்றும், பாசமும் குறைய, கட்டாயம் புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும், மெல்ல, மெல்ல வெல்லக் கூடிய நிலைமை வரும். பற்றையெல்லாம் விடு, பாசத்தையெல்லாம் விடு என்றால், கட்டிய கணவன் எங்காவது சென்று விடுவானோ? என்று மனைவியும், அல்லது தாரம் தன்னைவிட்டு எங்காவது சென்றுவிடுவாளோ? என்று கணவனும், அல்லது தாயும், தந்தையும் இப்படி ஆன்மிகம் பார்த்துக் கொண்டு தங்களை எல்லாம் விட்டுவிடுவார்களோ? என்று சேய்களும் எண்ணலாம். நாங்கள் அதனை கூறவரவில்லை. எல்லாம் செய்ய வேண்டும்; அதே சமயம் எதற்குள்ளும் ஆழ்ந்து விடக்கூடாது." அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
Tuesday, 24 May 2016
சித்தன் அருள் - 333 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"பாவங்கள் குறைந்தாலும், அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும் கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக் கொண்டேதான் இருக்கும். இருந்தாலும், பாவம் கூடுமானவரை குறைந்திருகின்றது, மிக மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால், தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். "நான் யார்?, நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன்? என் வலிமை என்ன? என்னுடைய செல்வம் என்ன? என் பதவி என்ன? என் செல்வாக்கு என்ன? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான்?" என்பது போன்ற எண்ணங்களெல்லாம், மெல்ல மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும். கூடுமானவரை தனிமை விரும்பும். புரிதல் இல்லாத மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டு போகட்டும். அவன் விதி, அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம், என்ற ரீதியில் தான் மனித மனம் இருக்கும். இவன் எதிரி, இவன் நண்பன் என்கிற நிலை எல்லாம் கடந்து போகுமப்பா. எனவே, பாவங்கள் குறைய, அதை அனுபவத்திலே மனம் உணரும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Monday, 23 May 2016
Sunday, 22 May 2016
சித்தன் அருள் - 331 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"ஒரு மனிதன், தேவையற்ற விஷயங்களில் உறுதி கொள்கிறான். பகையிலே திண்ணியம் கொள்கிறான். பொறாமையிலே திண்ணியம் கொள்கிறான். பிறரை வெறுப்பதில் திண்ணியம் கொள்கிறான். தேவையற்ற விவாதத்தில் திண்ணியம் கொள்கிறான். இப்படி மன உளைச்சலில், கவலையில் திண்ணியம் கொள்வதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல எண்ணங்களிலே அந்தக் உறுதியை வளர்த்துக் கொண்டால் என்றென்றும் மனித வாழ்வு சுகமாகும். எனவே, அந்த எண்ணிய எண்ணம் அது நல் எண்ணமாக, நோக்கமாக இருந்து, அந்த எண்ணம் உறுதி, உறுதி. உறுதி, உறுதியோ உறுதி என்று இருந்தால் கர்மா இடம் தரவில்லை என்றாலும் கட்டாயம் நடக்கும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Saturday, 21 May 2016
சித்தன் அருள் - 330 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"சில விஷயங்கள் இந்த லோகாயத்தில் தேவை என்றால், அஹுதொப்ப வழிமுறையில் வருகின்ற மனிதனுக்கு, அதாவது சுத்த எண்ணங்களோடு, சத்திய எண்ணங்களோடு, தர்ம செயலோடு, பரிபூரண சரணாகதி பக்தியோடு வருகின்ற மனிதனுக்கு கட்டாயம், கட்டாயம் அவன் விரும்பாமலும், அவன் கேட்காமலும் அவனுக்கு எக்காலத்தில் எது தேவையோ, அதனை இறை தன்னால் அருளிக்கொண்டே செல்லும் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Friday, 20 May 2016
Wednesday, 18 May 2016
சித்தன் அருள் - 328 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"தீபம் ஏற்றுவதும், தூப தீபங்கள் காட்டுவதும், மலர் ஆரங்கள் சாற்றுவது மட்டும் பூசை என்று எண்ணிவிடாதே. புற சுத்தியும், இது போன்ற தூப தீபங்களும் முக்கியம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த சூழல் மனித மனதிற்கு, அமைதியையும், நெகிழ்ச்சியையும் தரலாம். ஆனால் இவைகள் மட்டுமே பூஜைக்குரிய விஷயமல்ல. மனம் பக்குவப்பட்டு (ஒரு கலையை ரசிக்கும் பொழுது, எப்படி அங்கே ஐம்புலன்களும் ஒடுங்குகிறதோ), இறைவன் மீது ஒடுங்க மனதிற்கு பயிற்சி தந்து கொண்டே இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம், சிந்தனை புலன்கள் எல்லாம், வேறு எதனையும் நோக்கியும் சென்றிடாமல், இறை நாமத்தில், இறைவனின் திருவடியில், தனக்கு தெரிந்த இறை உருவத்தை எண்ணி பிறகு, அந்த உருவமும் மறைந்து போய், நீக்கமற நிறைந்துள்ள அந்த பரம்பொருளின், திவ்ய தரிசனத்தை ஒளியாக, ஒலியாக, எஹ்தும் அற்ற நிலையாக, அது வேறு, தான் வேறு அல்லாத நிலைக்கு ஒன்றிவிடவேண்டும். செய்கின்ற வேலையிலே, தன்னை மறந்து ஒரு மனிதன் எப்படி விருப்பமுடன் ஈடுபடுகிறானோ, அதைப்போன்று, செய்கின்ற வழிபாடும், பூசையும்தான் உயர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே இது வராது என்றாலும், மெல்ல, மெல்ல முயற்சி செய்து மேலேற வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Tuesday, 17 May 2016
சித்தன் அருள் - 327 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"ஒரு குழந்தை நன்றாக வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு, முன்மாதிரியாக இருக்கவேண்டும். குழந்தைக்கு முன்னால் சதா சர்வகாலமும் நல்ல அறச்சொற்களைப் பேசிக் கொண்டே இருந்தால், குழந்தையும் அதை இயல்பாக கற்றுக்கொள்ளும். குழந்தைக்கு முன்னால் சதா சர்வகாலமும் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தால், இறைவனின் ஸ்மரணங்களைக் கூறிக் கொண்டே இருந்தால் குழந்தையும் அதனை இயல்பாக கற்றுக் கொள்ளும். குழந்தையை வைத்துக் கொண்டு "பொய்" கூறுவது பெற்றோர்களே. எனவே அதனைக் (பொய்யை) கூறலாம் என்று அங்கீகாரம் கொடுப்பதே பெற்றோர்கள்தான். எத்தனைதான் இடர் வந்தாலும் "உண்மையை" கூறு என்பது போல் பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும். அடுத்ததாக, ஒருவேளை, குடும்பத்தை விட்டு கல்வி கற்க வெளியே சென்றால், அங்கே சூழல் ஏற்புடையது இல்லை என்றால் என்ன செய்வது? அப்படி செல்வதற்கு முன்னரே பலமான அடித்தளத்தை குழந்தை மனதிலே ஏற்படுத்தி விடவேண்டும். அந்த அளவிற்கு ஒரு குழந்தையின் தாயும், தந்தையும், ஒரு கடுமையான தவம் போல் குழந்தை வளர்ப்பை கவனிக்க வேண்டும். அஹுதொப்ப குழந்தையை வைத்துக்கொண்டு நிறைய தர்ம காரியங்களை செய்யும் பொழுது, அதனை இயல்பாக குழந்தை கற்றுக் கொள்ளும். இது ஒரு எளிமையான வழியாகும். இதோடு நல்விதமாய் இறை ஸ்லோகங்களை அன்றாடம் சொல்லி, சொல்லி பழக்குவதும், ஆலயம் செல்லப் பழக்குவதும், நல்ல நீதி நூல்களை வாசிக்க கற்றுக் கொடுப்பதுமாக இருந்தால், கட்டாயம் அந்தக் குழந்தை வழி தவறுவதற்கான விதி அதன் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும், இந்த அடிப்படை விஷயங்கள் அதன் வாழ்க்கையில் கவசம் போல் காத்து நிற்கும். ஆனால் இவைகள் மட்டும் போதாது. கடுமையான பித்ரு தோஷங்களும், கடுமையான முன் ஜென்ம பாவங்களும்தான், பருவ காலத்தில் ஒரு பருவ தடுமாற்றம் குழந்தைகள் வாழ்விலே ஏற்பட்டு அதனால் கல்வி தடைபடுவதற்குண்டான வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு வழக்கம் போல் திலயாகம், வழிபாடு போன்றவற்றை செய்வதோடு கூடுமானவரை, குறைந்தபட்ச தேவைகளோடு ஒரு குடும்பம் வாழ்ந்து, எஞ்சியவற்றையெல்லாம் தக்க ஏழைகளுக்கு தர்மமாக கொடுத்துவிட்டால், கூடுமானவரை குழந்தைகள் குறித்த கவலைகள் இல்லாமல் வாழலாம்." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Monday, 16 May 2016
சித்தன் அருள் - 326 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"இறை ஞானத் தெளிவு வராதவரையில் மனிதனுக்குள் எல்லா விதமான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும், செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும், அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற, தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற, முறையான யோகப் பயிற்சியினாலும், அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும், கட்டாயம் பாவ வினைகளை குறைக்கின்ற வழி முறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக் காட்டப்படலாம். அதனை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மேலேறுவது மாந்தர்களின் கடமையாகும்." - அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு!
Sunday, 15 May 2016
சித்தன் அருள் - 325 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"நாங்கள் கூறுகின்ற சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை. ஒரு மனிதன் தன் தேவை மறந்துவிட்டு பிறருக்கு சேவையையும், பொது நலத் தொண்டையும் செய்யத் துவங்கும் பொழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் துவங்கிவிடுவார் என்பதே சூட்ச்சுமம்." - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
[அகத்தியர் அடியவர்களே! மேற்கூறிய கருத்தையும், "வாருங்கள்! அகத்தியர் ப்ரஜெக்டில் பங்கு பெறுங்கள்" என அழைத்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த உண்மை உங்களுக்கு புரியும். அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவேண்டும் என அகத்தியப் பெருமானின் உத்தரவு. அதை நீங்கள் நிறைவேற்றினீர்கள்! வாழ்க! அவர் துணையுடன், அருளுடன்!]
Saturday, 14 May 2016
சித்தன் அருள் - 324 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"மனிதனுக்கு மையம் எது? புருவ மத்தி. அந்த புருவ மத்தியை நோக்கி ஒரு மனிதன் சிந்தனை செய்தால், சர்வகாலமும் புருவ மத்தியை கவனித்துக் கொண்டே வந்தால், அவனுடைய சிந்தனை ஒழுங்குபடும், நேர்படும், நிரல்படும், உறுதிப்படும். எனவே மனிதனுக்கு மையம் புருவ மத்தி. அங்கே தண்டு மையம். அந்த மையத்தை நோக்கி இவன் சென்றால் இவன் மையம் சரியாகும் என்பதன் பொருள்தான் தண்டாயுதமாகும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Friday, 13 May 2016
சித்தன் அருள் - 323 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"விதியே ஒருவனை தவறு செய்யத் தூண்டினாலும், பிரார்த்தனையின் பலத்தால், ஸ்தலயாத்திரையின் பலத்தால், புண்ணிய நதியில் நீராடுகின்ற பலத்தால், தர்ம செயலை செய்கின்ற பலத்தால், ஒரு மனிதன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, சினமோ வேறு தகாத எண்ணங்களோ எழும் போதெல்லாம், இறை நாமத்தை ஜபித்து, ஜபித்துத்தான் அதிலிருந்து வெளியே வரவேண்டும். இல்லையில்லை, விதிதான் என்னை இவ்வாறு தூண்டுகிறது, என்று பலகீனமாக இருந்துவிட்டால், அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்!" - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Tuesday, 10 May 2016
சித்தன் அருள் - 322 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
Monday, 9 May 2016
சித்தன் அருள் - 321 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"இறைவன் அருளைக் கொண்டு கூறும்பொழுது, இஹுதொப்ப மனிதர்கள் செய்கின்ற செயல்கள் அனைத்திற்கும் எந்த உடல் எடுத்து எந்த காலகட்டத்தில் மனிதன் அதனை செய்கிறானோ, அவன் தான் பொறுப்பு. இருந்தாலும், நற்செயலை செய்யும் பொழுது "இது சிவார்ப்பணம்" என்றும், "தேவார்ப்பணம்" என்றும், "அசுரார்ப்பணம்" என்றும், "சித்தார்ப்பணம்" என்றும் செய்வது ஒரு காலத்தில், வழக்கமாக இருந்தது." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Sunday, 8 May 2016
சித்தன் அருள் - 320 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"எங்கே சத்தியம் நிரந்தரமாக தங்குகிறதோ, எங்கே தர்மம் நிரந்தரமாக தங்குகிறதோ, எங்கே கருணை நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறதோ, எங்கே பெருந்தன்மை நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறதோ, எங்கே விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திருக்கிறதோ, அங்கே இறையருள் இருந்து கொண்டே இருக்கும் என்பதில், இறையருளை தக்க வைத்துக் கொள்ள என்ன வழி? என்று பார்த்து, அந்த வழியிலே ஒருவன் சென்றால், ஏனைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல அவனை விட்டு சென்றுவிடும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Saturday, 7 May 2016
சித்தன் அருள் - 319 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"நாங்கள் கூறுகின்ற சூட்ச்சுமத்தை யாரும் புரிந்துகொள்ளவே இல்லை. ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு, பிறருக்கு சேவையையும், பொதுநலத் தொண்டையும் செய்யத் துவங்கும்போழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் தொடங்கிவிடுவார் என்பதே சூட்ச்சுமம். எனவே, தன்னைத்தான், தனக்குத்தான், தன் குடும்பத்தைத்தான், பார்ப்பதை விட்டுவிட்டு, தான் , தான், தான், தான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இறைவனைத்தான், இறைவனின் கருணையைத்தான், இறையின் அன்பைத்தான், இறையின் பெருமையைத்தான், இறையின் அருளைத்தான், இறையின் பெரும்தன்மையைத்தான் புரிந்துகொண்டால், இந்தத் "தான்" ஓடிவிடும், இந்தத் "தான்" ஓடிவிட்டால், அந்தத் "தான்" தன்னால் வந்துவிடும். அந்தத் "தான்" வந்துவிட்டால், எந்தத்"தானும்" மனிதனுக்குத் தேவை இல்லை. அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
Friday, 6 May 2016
சித்தன் அருள் - 318 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் என்று எந்த கவசமாக இருந்தாலும் அதை ஒரு மனிதன் தன் சொந்த கவசம் என்று எண்ணி பாராயணம் செய்யாமல், பிறர் கஷ்டம் நீங்க பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஏன் என்றால், இது போன்ற பாசுரங்களை இறை வழிபாட்டுப் பாடல்களைப் பாடியவர்கள் யாரும் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால்தான் ஆதிசங்கரர் பிக்ஷை எடுத்தார். தனக்காக அன்னை மஹாலக்ஷ்மியை அவர் வேண்டவில்லை. பிறர் வறுமை நீங்கத்தான் வேண்டினார். எனவே இது போன்ற விஷயங்களை பிறர் துன்பம் நீங்க ஒரு மனிதன் பயன்படுத்தினால் பலிதமாகும். அதிலேயே பிறர் நலத்தைப் பார்ப்பதால் அவன் பாபங்கள் குறைந்து அவனுக்கும் இறைவனருளால் நலம் கிட்டும். இவை எல்லாம் ஒன்றுதான்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Thursday, 5 May 2016
சித்தன் அருள் - 317 - "பெருமாளும் அடியேனும்" - 52 - அஞ்சனையின் தவம்!
அழகான குழந்தை தனக்கு பிறக்கவேண்டும் என்று வேண்டி தன் கணவனுடன் திருமலைக்கு வந்து கொண்டிருந்த அஞ்சனை, நடுவழியில் தன் கணவனைக் காணாதது கண்டு துடிதுடித்துப் போனாலும், அருகிலுள்ள நீரோடைக்கருகில் சென்று பார்க்கும்படி வேங்கடவனின் வாக்குப்படிச் சென்றாள்.
அங்கு - தன் கணவன் ஒரு குழந்தையை வாயுபகவானுக்குத் தத்து கொடுப்பது போல் கண்ட காட்ச்சியைக் கண்டு "இதென்ன அதிசயம்? தனக்கே குழந்தை இல்லை. அப்படியிருக்க, தன் கணவன் ஒரு குழந்தையை வாயுபகவானுக்கு, எல்லார் முன்னிலையிலும் தத்து கொடுக்கிறாரே?" என்று பதறிப் போனாள். தான் இன்னும் கருவுறவே இல்லை.அதற்குள் எப்படி தன் கணவன் ஒரு குழந்தையைத் தத்து கொடுக்கிறார்? என்ற நினைப்பில் மதிமயங்கிக் கீழே சாய்ந்தாள்.
கண் திறந்து பார்த்தபோது தான் கண்டது எல்லாம் ஒரு கனவுதான். நினைவில் நடந்த நிகழ்ச்சி அல்ல என்று அஞ்சனைக்குத் தோன்றியது. ஆனால் யாரிடமும் இதுபற்றிச் சொல்லவே இல்லை.
வெகுதூரம் நடந்து வந்த களைப்பால் அஞ்சனை மயங்கி விழுந்திருக்கிறாள் என்றுதான் அவள் கணவன் எண்ணி, அஞ்சனையை தேற்றினார். பிறகு அவர்கள் இருவரும் திருமலை வேங்கடவனை நோக்கிப் பயணம் செய்தனர். கருடப் பெருமானுக்குச் சிறப்பு செய்யும் வகையில் "கருடாத்ரி" என்று பெயரிட்ட குன்றுக்கு மேல் அடர்ந்த காட்டில் பர்ணசாலை ஒன்றை அமைத்த அஞ்சனை தம்பதி சுற்றிலும் உள்ள இயற்கைச் செழிப்பைக் கண்டு வியந்து போனார்கள்.
இப்படிப்பட்ட சொர்க்க பூமியை இதுவரை அஞ்சனை தம்பதி கண்டதில்லை, மெல்லிய தென்றல் காற்று, வாசனைகளை அள்ளித்தரும் நான்கு புறங்களிலும் உள்ள மலர்த்தோட்டங்கள். வேங்கடவனுக்கு அன்றாடம் அலங்கரிக்கவே பிறந்திருந்த கருந்துளசிச் செடிகள் நந்தவனத்தில் குவியல் குவியலாக இருக்கும் அற்புதம், பின்புறம் மலையிலிருந்து வெள்ளிக் கோடுபோல் ஆடாமல் அசையாமல் விழுந்து கொண்டிருக்கும் அருவிகள்.
பட்சிகளின் ஆனந்தமான சப்தங்களைத் தாங்கிக் கொண்டு வெயிலுக்கு குடை பிடிப்பது போன்று நெருங்கிய கிளைகளோடு பூமியை இருட்டாக்கி கொண்டு இருக்கும் தேவதாரு, அரச, ஆலமரத்து கிளைகள், வண்டுகளின் ரீங்காரம். அருகிலுள்ள வனத்தில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் புள்ளிமான்கள், வெள்ளை மயில்கள், முயல்கள்.
பூமியெங்கும் செழிப்பாக வளர்ந்திருக்கும் புல்பூண்டுகள். அவற்றின் மீது அள்ளித் தெளித்தார் போல் பனித்துளிகள். ஆகாயத்தில் மட்டுமே தெரியும் கருமேகங்கள். இப்பொழுது திருப்பதி மலைமீது இறங்கி தன்னையும் தொட்டுச் செல்லுகின்ற ஆனந்தமான உணர்ச்சிகளைத் தரும் நிகழ்வுகள்.
இதையெல்லாம் எண்ணி எண்ணி வியந்தும், மகிழ்ந்தும் போன அஞ்சனை தம்பதி "தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆயுள் முழுவதும் இங்கேயே தங்கிவிட்டால் ஏன்ன? மலைமீது வேங்கடவன் தரிசனம். அவன் திருப்பாத பூமியில் தங்களுடைய பர்ணசாலை. இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?" என்று இருவரும் ஒருமித்த கருத்தோடு நினைத்தனர்.
தன்னை நோக்கி தவமிருக்க, தான் இட்ட ஆணைகேற்ப தன் மலைக்கு, தவமிருக்க வந்த அஞ்சனை தம்பதிக்கு வேங்கடவன் மனப்பூர்வமாக ஆசிர்வாதம் கொடுத்தார்.
ஒன்றரை ஆண்டு காலம் கடுமையாகத் தவம் புரிய வேண்டும். அன்றாடம் தான் தரும் ஒரு கனியை மட்டுமே இருவரும் புசிக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுக்கு பின்தான் அஞ்சனை கர்ப்பம் பெறுவாள் என்று பல்வேறு கட்டுப்பாடுகளைச் சொல்ல அத்தனையும் அஞ்சனை தம்பதி ஏற்றுக் கொண்டனர்.
"தடையில்லாமல் தவம் நடக்க வேண்டும்" என்று தங்களைச் சுற்றி அஞ்சனை தம்பதி காப்பு கட்டிக் கொண்டனர். ஒரு வளர் பிறை சதுர்த்தி அன்று, அஸ்வினி நட்சத்திரத்தில் சுப ஹோரையில், குரு பகவான் வாழ்த்துக்களோடு அவர்கள் இருவரம், குழந்தை பேற்றிற்காக வேங்கடவனை நோக்கித் தவமிருக்கலானார்கள். அவர்கள் இருவருக்கும் தவம் செய்யும் முன்பு வேங்கடவன் தன் கையாலேயே ஓர் அழகிய மாதுளம் கனியைக் கொடுத்தார். திருமாலே, தன் திருக்கையால் மாதுளம்கனியைக் கொடுத்ததைவிட வேறு சிறந்த பாக்கியம் ஏதுமில்லை என்றெண்ணி ஆனந்தப்பட்டனர், அஞ்சனை தம்பதியர்.
அஞ்சனையின் தவத்தில் மிகுந்த உறுதி இருந்தது. ஆனால் அஞ்சனையின் கணவனான கேசரிக்கு தவமிருக்கும் பொழுது மன உறுதி இல்லாமல் போயிற்று. எத்தனை முறை வாய்ப்பு கொடுத்தாலும் அதை கேசரி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒன்றரை ஆண்டுகாலம் எப்படியோ கழிந்துவிட்டது. அஞ்சனை தன் விரதத்தை நல்ல படியாக முடித்துக் கொண்டு, தன் கணவன் கேசரியின் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
தவத்தை அடியோடு விட்டுவிட்டு, காட்டிலுள்ள முயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த கேசரியைக் கண்டு மனம் நொறுங்கிப் போனாள், அஞ்சனை.
"வேங்கடவன் ஆணையை மீறிவிட்டீர்களே, இது என்ன நியாயம்?" என்று கடிந்து கொண்டாள் அஞ்சனை.
"விரதமும், தவமும் பெண்களுக்கு உரியவை. ஆண்களுக்கு அதுவும் யானையைத் தன்னந் தனியாக நின்று கொன்ற என் போன்ற வீரர்களுக்கு இது தேவையில்லை" என சப்தம் போட்டுச் சொன்னான், கேசரி.
"என்ன ஆயிற்று உங்களுக்கு? நேற்றுவரை அமைதியாகவும், ஆறுதலாகவும், பேசியும் செயல்பட்டு வந்தீர்கள். இன்றைக்கு திருமாலின் கோபத்திற்கு ஆளாகிவிடீர்களே? நமக்கு குழந்தை பிறக்க வேண்டாமா? அதற்காகத்தானே நாம் இங்கு வந்தோம்" என்று அஞ்சியபடியே கெஞ்சினாள் அஞ்சனை.
"போடி பைத்தியம்! குழந்தை பெறப்போகிறவள் நீ, தவமிருப்பதில் நியாயமிருக்கிறது. நான் ஏன் அதற்கு கஷ்டப்படவேண்டும்?" என்று அலட்சியமாக சொன்னான், அஞ்சனையின் கணவன், கேசரி.
இதைக் கேட்டதும் அஞ்சனைக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் மனதிற்குள் ஒரு ஜீவ மரணப் போராட்டம் நடந்தது.
[இருவார இடைவேளைக்குப் பின் "பெருமாளும் அடியேனும்" தொடரும்!]
சித்தன் அருள்............................. தொடரும்!
Wednesday, 4 May 2016
சித்தன் அருள் - 316 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
"உலகியல் ரீதியான வெற்றி ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அத்தனை எளிதாக விட்டுவிடுகிறானா? போராடிப் போராடி, அது வேண்டுமென்று அதன் பின்னால் செல்வது போல, நல்ல காரியங்களை, நல்ல அறச்செயல்களை, நல்ல தர்மங்களை தொடர்ந்து செய்ய, விதியே, ஒரு மனிதனுக்கு தவறாக எழுதப்பட்டிருந்தாலும், (அதாவது, அவன் இந்தப் பிறவியில் தவறே செய்து வாழவேண்டும் என்று இருந்தாலும்) கூட, அந்த விதி மெல்ல மெல்ல மாறத்துவங்கும். இஹுதொப்ப, ஒருவன் பருக வேண்டிய மோரிலே சிறிதளவு உப்பை சேர்க்கலாம். தவறுதலாக அதிக அளவு உப்பை சேர்த்துவிட்டால், "இல்லை இல்லை! இதை குடிக்க முடியவில்லை. உப்பின் சுவைதான் தூக்கலாக இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை! எனவே இதில் உள்ள உப்பை மட்டும் பிரித்துத் தா! என்றால், அது கடினம். அதற்க்கு பதிலாக என்ன செய்யலாம். இன்னும் சிறிதளவு மோரை ஊற்றி, உப்பின் அளவை அதன் மூலம் குறைக்கலாம். எனவே, ஏற்கனவே செய்த பாபங்களின் அளவை ஒரு மனிதன் பிறப்பிலிருந்து பிரிப்பது கடினம். ஆனால் மேலும், மேலும் புண்ணியத்தை சேர்க்க, பாவங்களின் அளவு குறையும், என்பதை புரிந்து கொண்டிட வேண்டும். அதற்குத்தான் ஜீவ அருள் ஓலையிலே புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம் என்று ஒவ்வொரு மனிதனையும் அறச் செயல் செய்ய நாங்கள் தூண்டிக் கொண்டே இருக்கிறோம். ஏன் என்றால், இந்த புண்ணியத்தின் அளவு அதிகமாக, அதிகமாக, கரிக்கின்ற உப்பைப் போன்ற பாபங்களின் அளவு சரி விகிதமாகிவிடும் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."
அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Tuesday, 3 May 2016
Monday, 2 May 2016
Sunday, 1 May 2016
Subscribe to:
Posts (Atom)