சென்னையில் வசிக்கும் அந்த வயதான பெண்மணி அகத்தியப் பெருமானின் சிறந்த பக்தை. நாடி வாசித்தவரிடம் சிஷ்யையாக இருந்து அகத்தியர் அருளை பெற்று வந்தவர். அகத்தியப் பெருமான் உத்தரவால் எங்கு புண்ணிய விஷயங்கள் நடந்தாலும், தவறாமல் பங்கு பெற்று, அவர் மீது அத்தனை திட நம்பிக்கை வைத்திருப்பவர்.
மூப்பு எய்திய காலத்திலும், தன் வீட்டில் பூசை அறையில் அகத்தியப் பெருமானுக்கு தினமும் பூசை செய்து வருபவர். கூடவே த்யானத்தில் அமர்ந்து, அகத்தியப் பெருமானிடம் தன் பிரார்த்தனைகளை சமர்ப்பிப்பார்.
சமீபத்தில் அவர் குடும்பத்தில், பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் (வருட/மாத திதி) வந்தது. மாளயபட்சத்தின் போது தினமும் தர்ப்பணம் செய்து பித்ருக்களுக்கு திதி கொடுப்பது இந்து மதத்தின் வாழ்க்கை முறையில் ஒன்று. அதன் படி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து திதி கொடுத்து வந்தார்.
சமீபத்தில் நவராத்திரியின் போது வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை இருந்தது. இவரிடம் கையில் இருந்த பணம் தீர்ந்துவிட, சரி வங்கி எ.டி.எம். இல் போய் பணம் எடுக்க பார்த்த பொழுது, எல்லா எ.டி.எம்மிலும் பணம் காலியாக இருந்ததால், இவரால் பணம் எடுக்க முடியவில்லை.
பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து "தெரிந்த புரோஹிதர் தானே வரப்போகிறார். இரண்டு நாட்களில் வங்கி திறந்ததும் எடுத்து தந்துவிடலாம் என வாக்கு கொடுத்து, திதி கொடுப்பதை நிறுத்தாமல், தொடர்ந்து செய்துவிடலாம்" என தீர்மானித்தார்.
புரோஹிதரை கூப்பிட்டு பேசிய பொழுதுதான், அவரின் உண்மை சொரூபம் வெளிவந்தது.
புரோஹிதர் அந்த அம்மாவிடம் "நீங்க வேணும்னா பண்ணுங்க, இல்லைனா பண்ணாதீங்க. ஆனா எனக்கு பணம்தான் முக்கியம். பணம் கொடுத்தால்தான் செய்து கொடுப்பேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதை கேட்டு அந்த அம்மா அதிர்ந்து போக, வேறு என்ன வழி, அந்த புரோஹிதர் கேட்ட பணம், மற்ற செலவுகளுக்கு என்று 15000 ரூபாய் வேண்டிவரும். யாரிடம் கேட்பது? இந்த வயதான காலத்தில் வங்கியில் பணம் இருக்கிறது, இன்னும் இரண்டு நாட்களில் எடுத்துக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினாலும், யார் தருவார்கள்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, எப்போதும் புண்ணிய யாத்திரை செல்லும் முன், அந்த அம்மாவை வந்து பார்க்கும் ஒரு அகத்தியர் அடியவர், தான் 25/10/2015 அன்று கோடகநல்லுர் சென்று பெருமாளுக்கு திருவாராதனம் (அபிஷேகம்) நடக்கப் போகிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த அன்பர் சொன்னதை கேட்டாலும், அந்த அம்மாவின் மனதில் அவர் பிரச்சினைதான் முன் நின்றது.
அவரிடம், "15000 ரூபாய் கடன் தர முடியுமா? இன்னும் ஒரு நான்கு நாட்களில் திருப்பி தந்துவிடுகிறேன்" என்றார்.
அவரோ, "தாராளமாக தருகிறேனே! ஆனால் இத்தனை பணம் உங்களுக்கு எதற்கு?" என்று வினவினார்.
அந்த அம்மையார் நடந்ததை அனைத்தையும் விவரித்தார்.
"ஹ்ம்ம்! இன்று புரோகிதம் இப்படித்தான் இருக்கிறது. அந்த இறைவன்தான் இவர்களை எல்லாம் திருத்தவேண்டும். சரி நான் போய் பணம் எடுத்து வருகிறேன்" என்று கூறி சென்றார்.
எங்கோ தள்ளியிருக்கும் எ.டி.எம்மில் போய் நின்று, தன் முறை வருவதற்காக காத்திருக்கும் பொழுது, அந்த அம்மாவிடம் இருந்து இவர் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
"பணம் வேண்டாம்! நீங்கள் உடனே எங்கள் வீட்டுக்கு வாருங்கள். இங்கு வந்ததும் என்னவென்று கூறுகிறேன்" என்றார் அந்த அம்மா.
என்ன நடக்கிறது என்று தெரியாமலே, இவர் அந்த அம்மாவின் வீடு போய் சேர்ந்தார்.
"என்ன நடந்தது? ஏன் பணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க?" என்று வினவ
நடந்ததை விவரித்தார் அந்த அம்மா!
அவரை அனுப்பிவிட்டு, மிகுந்த மன வேதனையுடன் அந்த அம்மா, பூசை அறையில் அமர்ந்து அகத்தியப் பெருமானிடம் தன் நிலையை, வேண்டுதல் வழியாக சமர்பித்து, தன்னை வழி நடத்த கூறியிருக்கிறார். பின்னர் அகத்தியப் பெருமானை நினைத்து த்யானத்தில் அமர்ந்துவிட்டார்.
எங்கும் ஒரே அமைதி. சற்று நேரத்தில் சூட்சுமத்தில் (த்யானத்தில் ஒன்றி இருக்கும் நிலையில் பேசுவது) வந்துவிட்டார் அகத்தியப் பெருமான்.
"என் மகளே! ஏன் இந்த கலக்கம். நடந்ததை எல்லாம் நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். நீ, நான் சொல்வதுபோல் செய். என் பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோடகநல்லுரில் அந்த புனிதநாளில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்னம் பாலிக்கப் போகிறார்கள். நீ உன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய். அதுவே உன் பித்ருக்களுக்கு நீ செய்யும் திதியாக ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின் ஒரு போதும், நீ இங்கு உன் பித்ருக்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க வேண்டாம். அப்படி உனக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றினால், அதே கோவிலில், ஒரு நேரம் நிவேதனத்துக்கு உன்னால் முடிந்ததை அனுப்பி வை. மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
அந்த அம்மா உடனேயே இவரை திருப்பி அழைத்து, தன்னிடம் இருந்த ஒரு சிறு தொகையை கொடுத்து அனுப்பி, அன்று அங்கு நடந்த பிரசாத விநியோகத்தில் பங்கு பெற்றார்.
சரி! இதில் எங்களுக்கு என்ன பரிசு அகத்தியர் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
"என் பிள்ளைகள்" எனக் கூறியதை கவனியுங்கள். அன்றைய தினம் அங்கு இருந்த அனைவரும், அகத்தியரால் "என் பிள்ளைகள்" என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். அதற்காக, வர முடியாமல் போனதால், எங்கள் யாருக்கும் அது கிடைக்கவில்லையே, என்று மற்றவர்கள் நினைக்க வேண்டாம். அன்றைய தினம் கோடகநல்லூர் நம் நினைவில் ஒரு முறை வந்திருந்தாலே, அங்கிருந்து அனைத்திலும் பங்கு பெற்ற தகுதி அனைவருக்கும் இருக்கிறது, என்று மற்றுமோர் செய்தி கூட உண்டு.
இறைவனிடமும், அகத்தியரிடமும் வேண்டிக் கொண்டு அனைத்தையும் செய்தாலும், நாம் என்ன செய்கிறோம் என்பதை அகத்தியர் பார்த்துக் கொண்டிருப்பார் என ஒரு பொழுதும் எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்டதும், "அடடா! எப்படி கருணையுள்ள ஒரு தகப்பனாக நம் அனைவரையும் அவர் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்" என்று யோசித்துதான் ஆனந்தத்தில் அமர்ந்துவிட்டேன்.
உடனேயே ஒரு எண்ணம் உதித்தது. "அவரையே, அங்கு அழைத்து, அனைத்தையும் நடத்திக் கொடுங்கள் என்று வேண்டிக் கொண்டால்? அவர் வந்து தான் ஆக வேண்டும்! அகத்தியப் பெருமானை அன்பினால் கட்டிவிடலாம்! அவர் வந்தால் அனைவரையும் ஆசிர்வதிப்பாரே!"
உடனேயே பூசை அறையில் இருக்கும் அவர் படத்தின் முன் போய் நின்றேன்.
"அய்யனே! அகத்தியப் பெருமானே! மனிதர்களாகிய நாங்கள் ஆசைப்படத்தான் முடியும். ஆனால் நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து, நிறைவு செய்வது இறை, உங்கள் அருள் தான். உங்களிடம் ஒரு வேண்டுதல். நாளை கோடகநல்லூர் வந்து எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்திக் கொடுத்து, எல்லோரையும் ஆசிர்வதித்து, அவரவர் வேண்டுதல்கள் நிறைவேற நீங்கள்தான் வழி செய்ய வேண்டும். மேலும் கோடகநல்லூர் வந்து இறைவனை, தொழுபவர்கள், பத்திரமாக யாத்திரை செய்து, திரும்பி அவரவர் இல்லம் சென்று சேரும் வரை, தாங்கள் கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்" என வேண்டிக் கொண்டேன்.
25/10/2015, ஞாயிற்று கிழமை காலை 4 மணிக்கு இரு நண்பர்களுடன் காரில் புறப்பட்டேன்.
அதுவரை சும்மா இருந்த வானம், புயல் மழை போல் கொட்டி ஊற்றியது. வண்டியில் அமர்ந்து பார்த்தாலே, பாதை எங்கும் வெள்ளம். ஒன்றுமே தெரியவில்லை.
"அவசரம் தேவை இல்லை. மெதுவாக செல்! என் கோவில் தாண்டியதும் மழையின் வேகம் குறைந்து விடும்!" என வந்தது அகத்தியரின் உத்தரவு, அந்த அதிகாலை நேரத்தில்.
ஆஹா! இவர் எங்கும் இருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் போல்! என நினைத்தேன்.
"சரி அய்யா! தங்கள் உத்தரவு" என்று அவர் இருக்கும் திசை நோக்கி கை எடுத்து கும்பிட்டு, நண்பரிடம், "என்ன நடந்தாலும் சரி! மெதுவாக போனால் போதும்! அவசரம் தேவை இல்லை" என்று அகத்தியரின் உத்தரவை பகிர்ந்து கொண்டேன்.
பெரியவர் சொன்னது போலவே, அவர் கோவில் தாண்டியதும், மழையின் வேகம் சிறு சாரலாக மாறியது!
உடனேயே அகத்தியருக்கு மனதார நன்றியை சமர்ப்பித்துவிட்டு, திருநெல்வேலியை நோக்கி பயணமானோம்.
கோடகநல்லூர் சித்தன் அருள்............................... தொடரும்!