அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Saturday, 30 July 2016
Friday, 29 July 2016
Thursday, 28 July 2016
சித்தன் அருள் - 390 - "பெருமாளும் அடியேனும்" - 60 - வாலி!
திருமலையில் அனுமன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒருநாள், கிஷ்கிந்தா புரியின் அரசனான வாலி நேராக திருமலைக்கு வந்தான்.
வேங்கடவனின் தரிசனம் கிட்ட வேண்டும் என்பதற்காக நீண்டகாலத் தவத்திற்கு ஏற்பாடும் செய்தான். பல ஆண்டுகள் திருமலைக் காட்டில் தவம் செய்ததால், வாலியின் தவத்திற்கு வேங்கடவனும் மனம் இரங்கி, அவனுக்குக் காட்சி தந்தார்.
“என்ன நோக்கத்திற்காக தவம் செய்கிறாய் வாலி?”
“தங்களைத் தரிசித்து ஓர் உதவி கேட்பதற்காக கிஷ்கிந்தாபுரியிலிருந்து வந்திருக்கிறேன் ஐயனே!”
“என்ன வேண்டும்?”
“சிறிது காலத்திற்கு முன்பு, தங்கள் மலையிலிருந்து வானத்தை நோக்கிப் பறந்த ஒரு வானரச் சிறுவனைக் கண்டேன். அவனைப் பற்றி நிறையச் செய்திகளைச் சேகரித்தேன். அந்த வானரச் சிறுவன் தற்சமயம் தங்கள் பாதுகாப்பில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன்.”
“ஓ, அனுமனைப் பற்றிச் சொல்கிறாயா? அவன் என் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்வது தவறு. அவனுக்குப் பெற்றோர் இருக்கிறார்கள்.”
“எல்லாருக்கும் தாயாக-தந்தையாக இருப்பவர் சாட்சாத் தாங்கள்தானே? அதனால்தான் தங்களைத் தரிசனம் செய்யத் தவம் செய்தேன்.”
“அதுதான் தரிசனம் கிடைத்தாயிற்றே! வேறு என்ன வேண்டும் வாலி?”
“எனக்கு அனுமனைப் பார்க்க வேண்டும்.”
“பார்த்த பிறகு?”
“தங்கள் அனுக்கிரகத்தால் அவனையும் அவன் பெற்றோரையும் கிஷ்கிந்தாபுரிக்கு அழைத்துச் சென்று அவனைப் பேணிக் காக்க விரும்புகிறேன்.”
“இதை அனுமனின் பெற்றோரிடம் போய்க் கேள். என்னை ஏன் கேட்கிறாய்?”
“ஐயனே! தாங்கள் அவ்வாறு சொல்லக் கூடாது. தாங்கள் உத்தரவு கொடுத்தால்தான் அனுமன் என்னோடு வருவான்.”
“அனுமனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை வாலி! நீ நேராக அஞ்சனை-கேசரி தம்பதியிடம் சென்று கேள். உன் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டால் எனக்கும் மகிழ்ச்சி. ஆமாம். எல்லாரையும் விட்டுவிட்டு எதற்காக அனுமனை மட்டும் விரும்புகிறாய்?”
“ஐயனே! தாங்கள் அறியாததா? அனுமன் கிஷ்கிந்தா புரியில்தான் கடைசிவரை இருப்பான் என்று வசிஷ்டர் முதலான மகாரிஷிகளும், சித்தர்களின் ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டிருக்கிறதே.”
“ஓ. அதை வைத்துக் கேட்கிறாயா? சரி. அப்படித்தான் அனுமன் அங்கு செல்ல வேண்டும் என்றால் நான் ஏன் குறுக்கே நிற்கிறேன்? தாராளமாக நீயே கேசரி தம்பதியிடம் போய் நேரில் கேள்.” என்று வாலிக்கு ஆசிர்வாதம் வழங்கினார் திருமலைவாசன்.
கிஷ்கிந்தையின் பேரரசனான வாலி தன் பர்ணசாலைக்குள் நுழைவதைக் கண்டு அஞ்சனைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஏகப்பட்ட வானர வீரர்கள் புடைசூழ வந்திருந்ததால் கேசரிக்கு, வாலியின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மிகப்பெரும் வானர வேந்தன் எதற்காக தன் இருப்பிடம் நோக்கி வரவேண்டும் என்று யோசித்தான். நிச்சயம் இவன் அனுமனைப் பார்க்கத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
தானும் ஓர் அரசன். வாலியும் ஓர் அரசன் என்பதால் சம்பிரதாய விதிப்படி வாலிக்கு இராஜமரியாதை கொடுத்தான் கேசரி.
“அனுமன் எங்கே?” என்று கேட்டான் வாலி.
பர்ணசாலைக்குப் பின்னால் தன்னையத்த சிறுவர்களோடு மரத்தில் தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்த அனுமனை வரவழைத்த கேசரி, வாலிக்கு அறிமுகப் படுத்தினான்.
வாலிக்கு அறிமுகப்படுத்திய கேசரி, அனுமனை வாலியின் காலில் விழுந்து வணங்கச் சொன்னான். ஆனால் என்ன காரணத்தினாலோ அனுமன், வாலியின் காலில் விழுந்து வணங்கவில்லை.
ஓரிடத்தில் நிற்காமல் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தானே தவிர, தந்தை கேசரியின் சொல்லுக்குப் பணியவில்லை. தான் சொல்லியும் அனுமன், வாலியின் காலில் விழுந்து வணங்காதது கேசரிக்கு மிகப் பெரும் மனவருத்தம்.
ஒரு பேரரசனை தன்மகன் அனுமன் அவமானப்படுத்தி விட்டதாகவே கேசரிக்கு கோபமும் வந்தது. மிரட்டிப் பார்த்தான். அப்போதும் கூட அனுமன் சிரித்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தானே தவிர தந்தை சொல்லை மதிக்கவில்லை.
“அனுமனை விட்டுவிடுங்கள். அவன் சிறுகுழந்தை. அப்படித்தான் இருப்பான். நாளாக நாளாக எல்லாம் சரியாகப் போய்விடும்.” என்று கேசரியை, வாலி சமாதானப்படுத்தினான்.
“என்ன விஷயமாக தாங்கள் இந்த எளிய பர்ணசாலைக்குள் வந்திருக்கிறீர்கள் என்பதை அடியேன் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேசரி கேட்டான்.
“தங்கள் மைந்தன் அனுமனின் தெய்விக சக்தியை சில நாள்களுக்கு முன்பு வானில் கண்டேன். அனுமன் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது. தாங்கள் அனுமதி கொடுத்தால் அல்லது தாங்களும் விரும்பினால் கிஷ்கிந்தாபுரிக்கு அனுமனை அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணம். அதற்காகத்தான் நானே நேரில் வந்தேன்.”
இதைக் கேட்டதும் அஞ்சனைக்கு அதிர்ச்சி!
சித்தன் அருள்................... தொடரும்!
Wednesday, 27 July 2016
சித்தன் அருள் - 389 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"இஹுதொப்ப நிலையிலே, எவன் ஒருவன், ஒரு பிறவியிலே அதிக அன்னசேவை செய்திருக்கிறானோ, அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானோ, "உயிர் கொலை புரியமாட்டேன்" என்று இருந்திருக்கிறானோ, அவர்களுக்கெல்லாம், சித்தர்களின் கருணையும், கடாக்ஷமும், இறை அருளாலோ, அல்லது யாம் விரும்பியோ செய்திடுவோம்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Tuesday, 26 July 2016
சித்தன் அருள் - 388 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"அருமையான அற்புதமான "சாலை" அல்ல எமது "சித்தர்கள் சாலை". கற்களும், முற்களும், ஆணித்துண்டங்களும் நிறைந்தது, எமது "சாலை". பாதத்தில் ரணம் ஏற்படும், குருதி வழியும், வலிக்கும். அதோடுதான் வர வேண்டும். ஏன் என்றால், எளிய மார்க்கம் என்றால், அனைத்து மூர்க்கர்களும், இது வழி வருவார்கள். ஆகவே, சகலவித ஆதரவோடு, மெய்யான, மெய் ஞானத்தை நோக்கி வர முடியாது." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு.
Monday, 25 July 2016
சித்தன் அருள் - 387 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"தொடர்ந்து இறைக்கு பூசை செய்ய முடியவில்லையே என்று வருந்தாதே! அந்த ஏக்கமே ஒரு வித பூசைதான். எந்த இடத்திலே அமைதி கிடைக்கிறதோ, அங்கு அமர்ந்து பூசை செய்யலாம். அங்குதான், இங்குதான், அதிகாலைதான், உச்சிப்பொழுதுதான் என்பதில்லை. இறையை வணங்க, காலம், நாழிகை, சூழல் ஏதும் தேவை இல்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும். இதனை எண்ணி அமைதியாக வாழ். இறை அருள் கிட்டும்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Sunday, 24 July 2016
Saturday, 23 July 2016
சித்தன் அருள் - 385 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அடியவர் வினா:-
"அய்யா! சுற்றி உள்ளோர் எல்லோரும், நண்பர்கள், உறவினர், குடும்பத்தார் எல்லோரும் - இப்படி பணத்தை இறைத்துக் கொண்டு கோவிலை சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை வாழ்கிறாயே என்று கேலி செய்கிறார்கள் அய்யா!"
அகத்தியர் விடை:-
"மிகவும் நல்ல விஷயமப்பா! உன் கடனை தானே முன்வந்து அவன் அடைக்க ஒப்புக் கொண்டு, உண்மையில் உனக்கு உதவுகிறானப்பா!"
அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Friday, 22 July 2016
சித்தன் அருள் - 384 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"எல்லாம் விதிதான் என்று மனிதன் ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டால் போதுமா? பிறகு எதற்கு ஆலயங்கள், வழிபாடுகள்? ஆம். எல்லாம் விதிதான். விதியை மழையாக எடுத்துக்கொள். மழையை தடுக்க உன்னால் முடியாது. ஆனால் மழையிலிருந்து உன்னை காப்பாற்றிக்கொள்ள ஒரு குடையை எடுத்துச் செல்லலாம் அல்லவா? அந்த குடைபோல்தான் நாங்கள் காட்டும் வழிபாடுகள், வழிமுறைகள்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Thursday, 21 July 2016
சித்தன் அருள் - 383 - "பெருமாளும் அடியேனும்" - 59 - ஆஞ்சநேயர்!
“பெற்றோரிடமிருந்து குழந்தையை பிரிப்பது தவறு என்றாலும் அந்தக் குழந்தை தெய்வக் குழந்தையாக மாறிய பிறகு தானம் செய்வது தவறில்லை. எனவே இவன்தான் சிவபெருமானின் மறு அவதாரம்.
சிவபெருமானே ஆசைப்பட்டு அமர்ந்த இடம் திருமலை. பிற்காலத்தில் அயோத்தியபுரி அரசனான ஸ்ரீராமனுக்கு இந்தக் குழந்தைதான் மிகப்பெரிய பாதுகாப்பைத் தரப்போகிறான். அது மட்டுமன்றி பிரம்மச்சாரியாக வாழ்ந்து இந்த பூலோக மக்களுக்கு நிறையக் கைங்கரியமும் செய்யப்போகிறான்.
கிருஷ்ணாவதாரத்திற்குப் பின் இராமாவதாரம் நடக்கப்போகிறது. இராமாவதாரத்தில் இந்த ஹனுமானின் புகழ் எட்டுத்திக்கிலும் மிக நன்றாகப் பரவப்போகிறது.
இதற்கிடையில் கலிபுருஷன் இந்த பூலோக மக்களைப் பெரிதும் துன்புறுத்துவான். அவனிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற ‘வேங்கட’ அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது? என்று ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாமல் வேங்கடவன் எதை எதையோ பேசுவதைக் கேட்டு கேசரிக்கு ஒன்றும் புரியவில்லை.
எப்படியோ தான் பெற்றெடுத்த குழந்தையை பொதுவாழ்க்கைக்குத் தத்து கொடுத்தாயிற்று. மீண்டும் இன்னொரு குழந்தை தனக்குப் பிறக்கப் போவதில்லை. ஏனெனில் தன் இறுதிமூச்சு இருக்கும் வரை வேங்கடவனுக்குச் சேவை செய்வதாக அஞ்சனை திருமலையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாள். எனவே கூறாமல், தானும் சந்நியாசம் வாங்கிக் கொண்டு, இப்படியே நாட்டைவிட்டுக் கிளம்பிவிட வேண்டியதுதான், என்று கேசரி தீர்க்கமாக முடிவெடுத்தான்.
திருமலைவாசன் கேசரியின் முடிவைக் கேட்டுக் கலங்கிவிடவில்லை. ‘விதி’ எப்படி செயல்படுகிறதோ அதன்படியே செயல்படட்டும் என்று மௌனமாக இருந்தார்.
தன் கணவனிடம் நேரிடையாக அஞ்சனை “எதற்காக இந்த சந்நியாச முடிவு?” என்று கேட்டாள்.
“உனக்கே தெரிந்திருக்கும். பின் எதற்கு என்னைக் கேட்கிறாய்?” என்றான் கேசரி.
“நாம் பெற்ற குழந்தையை உலகத்திற்கு தத்து கொடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய புண்ணியம்தானே?”
“எது புண்ணியம்? நாலைந்து குழந்தைகள் நமக்கு இருந்தால் அதில் ஒன்றிரண்டை மற்றவர்களுக்குத் தத்து கொடுக்கலாம். நமக்குப் பிறந்ததோ ஒன்றே ஒன்று. அதையும் தானம் கொடுத்து விட்டோம்.”
“நல்ல விஷயத்திற்குத் தானே செய்தோம்.?”
“சரி, நம் சந்ததிக்கு வேறு வாரிசே இல்லை. எனக்குப்பின் என் நாட்டை ஆள வாரிசு இல்லையே.”
“ஏன் இல்லை?”
“நீயோ திருமலையில், வேங்கடவனுக்குப் பணிவிடை செய்ய நிரந்தரமாகத் தங்கிவிட்டாய். என்னால், உன்னைப் போல் இங்கிருக்க முடியாது.”
“ஏன்?”
“இந்த இடம் மலை. வேங்கடவன், வாயுபகவான் ஆகிய யாரையுமே எனக்குப் பிடிக்கவில்லை. மாறாக எரிச்சலும், கோபமும் ஆத்திரமும்தான் அதிகமாகிறது”
“கேசரி மஹாராஜா! மனத்தை அடக்கிக் கொள்ளப் பழக வேண்டாமா?”
“தேவையில்லாத உபதேசம்.”
“என்னை ஆன்மிகப் பணிக்குத் தானம் கொடுத்துவிட்டேன். எனக்கு அதில்தான் நிம்மதி. ஆனால் தங்களுக்கோ உலக சுகத்தில் ஆசை இருக்கிறது. அதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. வேண்டுமானால் தாங்கள், தங்களுக்குப் பிடித்தமான வேறொரு பெண்ணை மணந்து அழகான பிள்ளையையும் பெற்றெடுத்துக் கொண்டு, ராஜ்ஜிய பரிபாலனத்தையும் செய்து கொள்ளலாமே!” என்றாள் அஞ்சனை மிக நிதானமாக.
இந்த வார்த்தையை கேசரி எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்தான்.
“அஞ்சனையா இப்படிப் பேசுவது?”
“ஆமாம்”
“எனக்கு இன்னொரு மறுமணம்! அதுவும் அஞ்சனையின் சம்மதத்தோடு. சபாஷ் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.”
“இதிலென்ன வேடிக்கை? அரச குலத்திற்குரிய வழக்கம்தானே! அதைத்தான் சொன்னேன்.”
“அஞ்சனை! எப்படி மாறிவிட்டாய் நீ! வேறொரு பெண்ணைக் கண்ணெடுத்தும் பாராமல் இருந்தேன். அஞ்சனையும் ஈன்றெடுத்த அனுமனும் எனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள் என்று கோடானு கோடி ஆசையோடு தவம் கிடந்தேன். ஆனால் நான் இப்போது அஞ்சனையையும் இழந்தேன். அருமை மைந்தன் அனுமனையும் பறிகொடுத்தேன். வேறொரு பெண்ணோடு நான் இல்லற வாழ்க்கை வாழக்கூடாது என்பதற்காகத்தான் ‘சந்நியாசி’ கோலம் கொள்வதாக முடிவெடுத்தேன். அஞ்சனை! நீ கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?” என்று நெகிழ்ந்து பேசினான் கேசரி.
“எதற்குக் கருணை காட்ட வேண்டும்?”
“நீ, திருமலையை விட்டுவிட்டு என்னோடு இராணியாக மாறவேண்டும். ராஜ்ஜிய சபையில் மகாராணியாக உலாவரவேண்டும்.”
“நடக்காத காரியம் மகாராஜ்!.”
“அஞ்சனை! நீ நினைவோடுதான் பேசுகிறாயா?” என்று கோபமாகக் கேட்டான்.
“ஹனுமான் சத்தியமாகச் சொல்கிறேன். எனக்கு ஒரு குழந்தை போதும். இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து பல குழந்தைகளைப் பெற்று, பாசத்தோடும் அஞ்ஞானத்தோடும் பயந்து பயந்து வாழ்வதைவிட இந்த ஒரே அனுமானோடு கடைசிகாலம் வரை இதே திருமலையில் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்.”
“இதுதான் உன் முடிவா?”
“ஆமாம்.”
“அப்படியெனில் நான் இனிமேல் ஒரு க்ஷண நேரம்கூட இந்தத் திருமலையில் இருக்க மாட்டேன். இப்போதே நான் கிளம்புகிறேன்.” என்று விருட்டென்று கோபம் கொப்பளிக்க விருட்டென்று கிளம்பினான் கேசரி.
இத்தனை ஆண்டுகாலம் அன்போடும் பாசத்தோடும் பழகிய தன் கணவன் இப்படி முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதைக் கண்டு அஞ்சனைக்கு மனம் பொறுக்கவில்லை.
‘திருமலைவாசா! நடப்பதும் நடந்து முடிந்ததற்கும் இனி நடக்கப்போவதற்கும் நீதான் மூலகாரணம். எனக்கு அருள் புரிந்தாய். என் கணவனுக்கும் வாழ்க்கையைக் கொடு.’ என்று மனத்தால் மன்றாடினாள்.
அஞ்சனையின் வேண்டுகோளைக் கேட்டார் திருமலைவாசன். என்னதான் இருந்தாலும் பெண்களின் கற்புத்தன்மை இன்னும் போகவில்லை என்று சிரித்துக் கொண்டார்.
பின்பு அஞ்சனையின் முன்பு தோன்றிய வேங்கடவன். “அஞ்சனை! நீ எதற்காக கண்கலங்க வேண்டும்? நான் இருக்கிறேன். பயப்படாதே. எவ்வளவு வேகமாக உன் கணவன் கேசரி இந்த மலையை விட்டுச் செல்கிறானோ அதே வேகத்தில் இந்தத் திருமலைக்கே வருவான். உன்னோடு சேர்ந்து இந்த அஞ்சனாத்திரி மலையிலே உலா வருவான். நீயும் துறவற வாழ்க்கையை விட்டுவிட்டு அவனோடு இல்லற வாழ்க்கை வாழ்வாய். நீ எனக்குத் தொண்டு செய்தது போதும்.” என்று வாக்குறுதி கொடுத்தார்.
“வேங்கடவன் சொன்னதே வேத வாக்கு என்று நம்பி இருக்கிற நான், தாங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன் ஸ்வாமி!”
“சந்தோஷம், அஞ்சனை! உன் பிள்ளை அனுமானை இன்னும் சிறிது காலம் உன் பொறுப்பில் வைத்துக் கொண்டே வளர்த்துக் கொண்டுவா. ஆனால் அளவுக்கு அதிகமாக பாசத்தை மட்டும் காட்டி வளர்க்காதே.” என்று மறைமுகமாக எடுத்துரைக்கவும் செய்தார் வேங்கடவன்.
அனுமன் சேஷ்டைகள் அக்கம் பக்கத்தவர்களுக்குப் பெரும் பாரமாக இருந்தது. அவனுக்குள் தெய்விக சக்தி இருப்பதால் எல்லாருமே பொதுவாக ரசித்தார்கள். அனுமனும் மெது மெதுவாக வளர்ந்து கொண்டு வந்தான்.
அஞ்சனையுடன் கோபித்துக் கொண்டு திருமலையிலிருந்து வெளியேறிய கேசரிக்கு தனிமை சுகம் பிடிக்கவில்லை. திருமலைக்குத் தூது அனுப்பி அடிக்கடி அஞ்சனையிடமும், அனுமனுடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள்-
கேசரி, அரண்மனையில் பூஜை செய்து கொண்டிருக்கும்பொழுது சட்டென்று வானம் இருண்டதைக் கண்டான்.
மேகத்தில் சூரியன் மறையும் பொழுதும், சூரிய கிரகணத்தின் பொழுதும் வானம் இருண்டு போகும். ஒரு வேளை மழை காலமாக இருந்தாலும் வானத்தில் சூரியனைக் காண இயலாது.
ஆனால்-
அன்றைக்கோ சித்திரை மாதம். கொளுத்தும் வெயிலில் சட்டென்று வானம் இருட்டாயிற்று என்பதால் சந்தேகப்பட்டு தன் அறையை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தான் கேசரி.
ஒரு சிறுபையன் வானத்தில் நீந்துவது அந்த மெல்லிய வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. எதற்காக இந்த வெயிலில் ஒரு சிறுவன் சூரியனை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறான் என்று விவரம் தெரியாமல் போயிற்று.
அதற்குள்-
சூரியனைக் கவ்விப் பிடிக்க முயன்ற அந்தச் சிறுவனை, முகத்தில் அறைந்த சூரியன் அப்படியே மயக்க நிலையில் சென்று கொண்டிருந்த அனுமனைத் தன் கைத்தாங்கலாக, திருமலையிலுள்ள அஞ்சனாத்திரியின் இல்லத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு வெளியேறினான்.
“என்னை விளையாட்டுப் பந்து என்றெண்ணி வாயில் கவ்வப் பார்த்தான். என்னைக் கவ்வினால் இந்த பூலோகம் அனைத்தும் இருட்டில் மறைந்து விடும். அனுமன் உலகத்திற்கு ஒளியாகத் தோன்றக் கூடியவன். அவனால் உலகம் இருண்டுவிடக் கூடாது என்பதற்காக நான் பால அனுமானைக் கன்னத்தில் அடித்தேன். இது செல்ல அடி தான். இருந்தாலும் அவன் முகம், மனித இயல்பிலிருந்து வானரமுகம் போல் ஆயிற்று. முகம் மட்டும் வானரம் போல் இருந்தால் போதுமா? அங்கமும் அப்படி மாற வேண்டுமே என்பதற்காக அனுமனுக்கு வால் முளைக்கவும் செய்தேன். இந்த சின்னக் குழந்தை எப்படி வானில் பறந்தான்? அவனுக்கு எப்படி இப்படி ஓர் அமானுஷ்ய சக்தி வந்தது என்றால் இதற்கு வாயுபகவான்தான் காரணம்” என்று சூரியன், திருமலையிலுள்ள அனைத்துத் தேவர் மற்றும் ரிஷிகளிடம் சொல்லிக் கொண்டிந்தான்.
செய்தி அஞ்சனைக்குப் போயிற்று. வேங்கடவன் சந்நிதியில் தவம் புரிந்து கொண்டிருந்ததால் உடனடியாக தன்னுடைய பர்ணசாலைக்குத் திரும்பினாள்.
வானத்தில் நடந்த இந்த அதிசயத்தை தன் உப்பரிகை மாளிகையில் கண்ட கேசரி, ‘இது என் மகன் அனுமன்தான்’ என்று நினைத்து அனுமனைப் பார்க்கத் திருமலைக்கு வந்தான்.
பின்பு கடைசிவரை தன் வாழ்க்கையைத் துறவாக மாற்றிக்கொண்டு வேங்கடவனுக்கு சேவை செய்து அஞ்சனாத்திரி பகுதி மலையில் உலாவிக் கொண்டிருந்தான்.
கேசரியுடன் திருமலையில் அனுமானும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்ததைக் கண்டு வேங்கடவனும் மனம் மகிழ்ந்தான்.
சித்தன் அருள்.................... தொடரும்!
Wednesday, 20 July 2016
Tuesday, 19 July 2016
சித்தன் அருள் - 381 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Monday, 18 July 2016
சித்தன் அருள் - 380 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஒரு வீட்டை வாங்கும்போது இருக்கின்ற மகிழ்ச்சி, அதை விற்கும் பொழுதும் இருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது இருக்கும் மனநிலை, அது இறக்கும் பொழுதும் இருக்க வேண்டும். தனம் வரும் பொழுது இருக்கும் மனநிலை, அது கையை விட்டு போகும் பொழுது இருக்க வேண்டும். இப்படி மனம் பக்குவமடைய வேண்டும். இது கடினம்தான் என்று எமக்கு தெரியும். என்றாலும், முயற்சியும், பயிற்சியும் செய்தால் அது சாத்தியப்படும். அந்த பக்குவத்தை பெற நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் தாங்க வேண்டும். இதுவே பற்றை அறுக்கும் வழி." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Sunday, 17 July 2016
சித்தன் அருள் - 379 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"மனிதர்கள்தான் தங்கள் கர்மா கழிவதற்கு பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால், சித்தர்கள், இறையிடம் வேண்டி, மனித குலத்திற்கு சேவை செய்ய பிறப்பெடுப்பார்கள். ஒரு சிறை சாலையில் கைதிக்கும், காவல் அதிகாரிக்கும் உள்ள தொடர்புபோல், ஒரு மருத்துவனுக்கும், நோயாளிக்கும் உள்ள தொடர்புபோல்தான் இதுவும். மனித குலத்திற்கு சேவை செய்யத்தான் பல்வேறு கட்டங்களில், பல்வேறு பிறப்பெடுக்கிறார்கள்." -அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Saturday, 16 July 2016
Friday, 15 July 2016
சித்தன் அருள் - 377 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"இன்பம் என்ற ஒன்றை எவன் ஒருவன் உணர்கிறானோ, அவனால்தான் துன்பத்தை உணரமுடியும். எவன் எதிலேயும் இன்பத்தை பார்க்கவில்லையோ, அவனுக்கு எதனாலும், எவற்றாலும் துன்பமில்லை. அது இறை ஒருவருக்குத்தான் சாத்தியம். அதனால்தான் "இன்பமும், துன்பமும் இல்லானே, உள்ளானே" எனக் கூறப்படுகிறது. அண்ட சராசரங்களை படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஏதுமில்லை, தன் உள்ளத்தை தவிர." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Thursday, 14 July 2016
சித்தன் அருள் - 376 - "பெருமாளும் அடியேனும்" - 58 - பெருமாளின் விளையாட்டு!
[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த வார சித்தன் அருளை தொடரும் முன், ஒரு சிறிய விஷயம் கூறலாம் என்று ஒரு அவா. திரு.சரவணன் பழனிச்சாமி, இந்தவாரப் படத்துடன், அவரது 100வது படத்தை, சித்தன் அருளுக்காக வரைந்து, அகத்தியருக்கு சேவை செய்துள்ளார். அவரின் இந்த சிறந்த பணி, மேலும் மேலும் தழைத்தோங்கி, அகத்திய பெருமானிடம் எல்லா அருளும் பெற்று, அவரும் அவர் குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அகத்தியர் அடியவர்களாகிய நீங்களும், உங்கள் வாழ்த்துக்களை , இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.
இனி சித்தன் அருளுக்கு செல்வோம்!]
“எதிர்க் கரைக்குத்தானே போகவேண்டும்? இதோ என் பரிசல் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஏறுங்கள். பத்திரமாகக் கொண்டு சேர்க்கிறேன்” என்று சொன்னார் ஒரு வயோதிக பரிசல்காரர்.
“எப்பொழுது பரிசல் வரும்? கண்ணுக் கெட்டிய தூரம் வரை எந்தப் பரிசலும் காணவில்லையே”
“தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ வந்துவிடும்.” என்று பவ்வியமாகப் பேசினான் அந்தப் பரிசல்காரன்.
சிறிது நேரம் கழிந்தது.
தலையில் ஒரு பரிசலைத் தூக்கிக் கொண்டு நான்குபேர் கேசரியின் பக்கம் வந்தார்கள்.
“சிறு துளை விழுந்து விட்டது. ஒரே நாழிகையில் அந்தத் துளையை அடைத்து விடுகிறேன். பிறகு பரிசலில் போகலாம்.” என்று பரிசலைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களில் ஒருவன் பதற்றத்துடன் கூறினான்.
கேசரிக்கு பேச்சே வரவில்லை.
எவ்வளவு சீக்கிரம் இந்தக் கோனேரிக் கரையைக் கடக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாமும் தப்புவோம். அனுமனும் தப்புவான். அஞ்சனையைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் கேசரி எண்ணினானே தவிர மற்ற எதைப் பற்றியும் கவலைப் படவில்லை.
இன்னும் சொன்னால் அனுமனுக்குப் பசித்தால் என்ன கொடுப்பது என்பதைக் கூட சிந்திக்கவில்லை.
பரிசல் தயாரானதும் கேசரி கேட்டான்.
“நான் மட்டும் பரிசலில் ஏறலாமா? அல்லது என்னுடன் வந்திருக்கும் குதிரையையும் பரிசலில் ஏற்றலாமா?”
“இரண்டு பேருமே பரிசலில் ஏறலாம்.”
“பயம் ஒன்றும் இல்லையா?.”
“இல்லை.”
“கோனேரிக் கரையில் வெள்ளம் வெகுவாக ஓடிக்கொண்டிருக்கிறதே! அந்தப் பரிசல் ஏதோ துளை ஒன்றைச் சரி செய்வதாகச் சொன்னீர்களே, அதனால்தான் பயம் ஏற்பட்டது.”
“தாங்களோ குறுநில மன்னர். தங்களுக்கு வேண்டிய படைபலமும் மனப்பலமும் இருக்கிறது. தன்னம்பிக்கையும் இருக்கிறது. அப்படியிருந்தும் தாங்களே இந்தப் பரிசிலில் செல்லப் பயந்தால் எப்படி?” என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்டான் அந்த பரிசல்காரக் கிழவன்.
இந்தப் பேச்சு கேசரிக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. இருந்தாலும் கரையைக் கடந் தாக வேண்டுமே என்பதற்காகப் பொறுத்துக் கொண்டான்.
சில விநாடிகளில் அந்தப் பெரிய பரிசலில் குதிரை ஏறிக்கொண்டது. அனுமனைக் கொண்ட அந்தப் பெட்டியை மிகவும் ஜாக்கிரதையாகத் தன் கையில் எடுத்துக் கொண்ட கேசரி பரிசலில் அமர்ந்தான்.
பாதி தூரம் பரிசல் சென்றிருக்கும். கேசரியின் பாதத்தில் ஜல்லென்று ஏதோ ஒன்று தொட்டது. குனிந்து பார்த்தான். பரிசலில் சிறு ஓட்டை லேசாகத் தெரிய அதன் வழியாக மெல்ல தண்ணீர் புகுந்து கொண்டிருந்தது. பதறிப் போனான் கேசரி.
ஒருவேளை பரிசலுக்குள் தண்ணீர் புகுந்து குதிரையோடு தானும் தன் மகன் அனுமனும் தண்ணீரில் விழுந்துவிட்டால் அனுமனை எப்படிக் காப்பாற்றுவது? என்ற பயம் விநாடிக்கு விநாடி அதிகமாயிற்று.
கேசரிக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.
“பரிசலை உடனே கரைக்குத் திருப்பு” என்று ஆணையிட்டான் கேசரி.
“நடுவில் இருக்கிறோம். இங்கும் போக முடியாது. அங்கும் போகமுடியாது. மேலும் காற்றும் அதிகமாக வீசுகிறது. வானத்திலும் மேகம் கடுமையாகச் சூழ்ந்திருக்கிறது. கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். இன்னும் ஒரு விநாடியில் அக்கரையை அடைந்து விடலாம்.” என்று கேசரியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் முழுமுயற்சியோடு பரிசலை அக்கரைக்குச் செலுத்திக் கொண்டிருந்தான் அந்தப் பரிசல்காரன்.
“ஐயா! பரிசலில் துளை விழுந்து விட்டது”
“பயப்படாதீர்கள். எப்படியும் கரையில் சேர்த்து விடுகிறேன். சற்று இந்தப் பக்கம் சாய்ந்து உட்காருங்கள். குதிரை மிரள்கிறது. அதனை வார்த்தையால் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்”
தான் தர்மசங்கடமான நிலையில் மாட்டிக் கொண்டு விட்டதாக எண்ணிய கேசரி, எப்படி இக்கட்டிலிருந்து மீண்டு அனுமனைக் காப்பாற்றி அக்கரைக்குச் செல்லப் போகிறோமோ என்ற கவலை ஏற்பட்டது.
இவன் என்ன சொன்னாலும் காது கேட்காத பரிசல்காரன். இவனால் இனி எதுவும் செய்ய முடியாது. ஈசன் விட்டவழி என்று சோர்ந்து போனான்.
இத்தனை நாழிகையும் பொறுமையாக பெட்டியிலுள்ள பட்டு மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த பால ஹனுமானுக்கு சட்டென்று பசி ஏற்படவே ஏற்கெனவே வாங்கி வைத் திருந்த பசும்பாலை எடுத்து அனுமனுக்குக் கொடுக்க முற்பட்டான் கேசரி.
ஆனால்-
பால ஹனுமானோ பால் குடிக்க விரும் பாமல் தாய் அஞ்சனையை நினைத்தே அழ ஆரம்பித்தான். குழந்தையைத் தட்டிக்கொடுத் துப் பார்த்தான். ஏதேதோ விளையாட்டுகளைக் காட்டிப் பார்த்தான். குதிரையைக் காட்டி ஏதேதோ சொல்லி குழந்தை பால ஹனு மானைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றான் கேசரி.
நேரம்தான் வீணாகிக் கொண்டிருந்ததே தவிர பால ஹனுமான் அழுகை தான் நதியின் வேகத்தைவிட அதிகமாகிக் கொண்டிருந்தது.
இதைக்கண்டு தன் அத்தனைத் திட்டங் களும் பொடிப்பொடியாகி விட்டதாகவே எண்ணி நொந்துபோனான் கேசரி.
இதற்குள்-
பரிசலின் ஓட்டை அதிகமாகிவிடவே, பரிசலுக்குள் தண்ணீர் புகுந்து விடவே பரிசல் படிப்படியாக கோனேரி வெள்ளத்தில் பரிசல் மூழ்க ஆரம்பித்தது.
கேசரி திணறிப் போனான்.
பரிசலில் இருந்த கேசரியின் குதிரையும் திணற ஆரம்பித்தது. கையில் இருந்த பால ஹனுமானும் அழுகையை நிறுத்தவில்லை. நிலைமை கட்டுக்கு மீறிப்போகவே, “வேங்கடவா! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று முழுச் சரணாகதி அடைந்தான் கேசரி.
எப்போது முழுச்சரணாகதி அடைந்து விட்டானோ அப்போதே திருமலைவாசன் கேசரிக்கு அடைக்கலம் தர முன்வந்தார்.
யாரும் எதிர்பாராத வகையில் அந்த அதிசயமும் நடந்தது.
யாரோ ஒருவர் கேசரியின் கையிலிருந்து பாலஅனுமானை சட்டென்று தூக்கிக் கொண்டார்.
பரிசலில் இருந்த ஓட்டை அடைந்தது. பரிசலுக்குள் இருந்த நீர் சட்டென்று காணாமல் போயிற்று. கேசரியின் குதிரையைத் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்வதும் தெரிந்தது.
அதைவிட ஆச்சரியம் என்னவெனில் கோனேரி நதிக்கரையில் வந்த வெள்ளம் சட்டென்று மறைந்தது. படகு போன்று பரிசல் நிதானமாகச் சென்று கொண்டிருக்க பிரிசல்காரனைக் காணவில்லை.
அதைக் கண்டு கேசரி திகைத்துப் போனான்.
ஒருவேளை பரிசல்காரன் கோனேரி வெள்ளத்தில் விழுந்து மூழ்கியிருப்பானோ? வயதான கிழவன் ஆயிற்றே! என்று கவலைப்பட்டான். அப்போது-
ஓர் அசரீரிக் குரல் வடகிழக்கிலிருந்து கேட்டது.
“கேசரி! திகைக்காதே. உன் அருமைக் குழந்தை இப்போது என் கையில் பத்திரமாக இருக்கிறது. பரிசல் ஓட்டை அடைந்ததும் பரிசல்காரனாக வந்ததும் யாம்தான்.
உன் தவறான நடவடிக்கைக்கு ஒரு சிறு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவே யாம் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். உன்னால் அழும் குழந்தை யைச் சமாதானம் செய்ய முடியவில்லை. சில மணி நேரம் கூட உன்னால் காப்பாற்ற முடியாத உன் குழந்தையை திருமலையிலிருந்து தூக்கிக் கொண்டு போனது எவ்வளவு பெரிய தவறு? இந்தக் குழந்தையை எப்படி உன்னால் வளர்க்க முடியும்? யோசித்துப்பார்.” என்றார் திருமலை வாசன்.
ஐந்து விநாடி அமைதியானான் கேசரி.
“என்னை மன்னித்துவிடுங்கள். நானும் பாலஹனுமானும் மறுபடியும் திருமலைக்கே வந்து விடுகிறோம்” என்றார் திருமலை வாசனை நினைத்து. அடுத்த நாழிகையில் கேசரியின் கையில் பால ஹனுமான் சிரித்துக் கொண்டிருந்தான்.
சித்தன் அருள்.................. தொடரும்!
Wednesday, 13 July 2016
சித்தன் அருள் - 375 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய முடியாது. அகுதொப்ப, விதி, மதி, என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கே வந்துவிடு. அது உன்னை கால காலம், காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள் இறையை பார்த்து பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக, அனுபவங்கள், மனோபலத்தை அதிகரிக்கும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. சோதனைகளை தாங்கி நடந்து செல்ல, இறையருளால், கடைசியில் நலமே நடக்கும்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Tuesday, 12 July 2016
சித்தன் அருள் - 374 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"நீங்கள் அனைவருமே, முன் ஜென்மங்களில் சித்தர்களிடம் உரையாடியவர்கள்தான், உறவாடியவர்கள்தான். அப்போது நீங்கள் எல்லாம் யாது கேட்டீர்கள்? என்றால், "எத்தனை பிறவிகள் எடுத்தாலும், உங்களை மறக்கக்கூடாது" என்று கேட்டீர்கள். எனவே, நீங்கள் மறந்தாலும், நாங்கள் யாரையும் மறக்க மாட்டோம். மறந்தும் கை விடமாட்டோம், என்பதால் (நீங்கள் அனைவரும்) சித்த வழி தொண்டு செய்ய வேண்டும். அந்த வழியிலே இறையை காணவேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Monday, 11 July 2016
சித்தன் அருள் - 373 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Sunday, 10 July 2016
சித்தன் அருள் - 372 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"எம் வழியே வருகின்ற மனிதர்கள், திடம் கொண்டு, வைராக்கியம் கொண்டு, தர்ம வழியிலும், சத்திய வழியிலும், இறை பக்தி வழியிலும், மிக நன்றாக செல்லச் செல்ல, நாங்களே ஒன்றை கூறி அதனை தேவையான தருணத்தில் நடத்தாமல் மாற்றுவோம். யாம் ஒன்றை கூறாமல் நடவாதப்பா என்று கூறி நடத்தியும் காட்டுவோம். இந்த இரண்டிற்கும் பல்வேறு விதமான கர்மவினை சூட்சும நுணுக்கங்கள் உண்டு. அதை ஒருவிதமாக நுணுக்கமாக ஆய்ந்து பார்த்தால்தான் புரியும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Saturday, 9 July 2016
சித்தன் அருள் - 371 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஆண்டாண்டுகாலம் மந்திரங்களை ஜபித்தாலும், மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொண்டால், ஓட்டைப் பாத்திரத்தில் நீரை வைத்ததுபோல் ஆகிவிடும். முதலில் பூசை, தர்மம், தொண்டு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்கு, பிறர் மனதை புண் படுத்தாமல், நாகரீகமாக வார்த்தைகளை பயன்படுத்துவதும் முக்கியம். அந்த பயிற்சியை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும். நலம் எண்ணி, நலம் உரைத்து நலமே செய்ய, நலமே நடக்கும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Friday, 8 July 2016
சித்தன் அருள் - 370 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"சத்தியமும், அறமும், இறை பக்தியும் விடாது தொடர, வினைப்பயன்கள் படிப்படியாய் குறைந்துவிடும். வினைகள் குறைய, மனப்பாரம் குறையும், நலமும், சாந்தியும் சேரும். எகுதொப்ப, எவன் விளம்பினாலும் அது குறித்து விசனங்கள் உனக்கு வேண்டாமப்பா. எதிர்ப்புகள், ஏளனங்கள் கண்டாலும், நலம் செய்வதை நிறுத்த வேண்டாம். புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்" என்று யாங்கள் விட்டுவிடுவோம். அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை விடாமல் தொடர்ந்து வருவோர்க்கு, யாம் "உன் அருகில் இருப்போம்". - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Thursday, 7 July 2016
சித்தன் அருள் - 369 - "பெருமாளும் அடியேனும்" - 57 - கேசரிக்கு வந்த சோதனை!
“தங்களுக்கா ஸ்வாமி சந்தேகம்? கேளுங்கள் பெருமாளே!”
“உன் பெயரில் ‘அஞ்சனாத்திரி’ என்று இந்த மலையின் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டுவதில் உன் கணவருக்கு ஏதேனும் ஆட்சேபணை இருக்குமா? கொஞ்சம் கேசரியிடம் கேட்டுச் சொல்லேன்.”
“பெருமாளே! இதென்ன விளையாட்டு? தாங்கள் சொல்லி என் கணவர் கேட்காமலா இருக்கப் போகிறார்? நிச்சயம் ஏற்பார் வேங்கடவா!”
“இல்லை அஞ்சனை! தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறுதானே?”
“ஆமாம்”
“அப்படியெனில் கேசரியும் அஞ்சனையும் வேறு வேறுதான்”
“தங்கள் சொல்படி....”
“வாயுபகவானுக்கு தத்து கொடுக்க நீ முன்வந்தாய்”
“ஆமாம்”
“உன் கணவன் முன்வரவில்லை.”
“ஆமாம்”
“அதற்கே ஒத்துக் கொள்ளாதவன் இப்போது அவனை விட்டு விட்டு உன் பெயரில் இந்த ‘மலை’ எந்நாளும் விளங்கும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வான்?”
“இல்லை வேங்கடவா! அவர் இதுவரை என் சொல்லை மீறி எதையும் செய்ததில்லை.”
“இப்பொழுது ‘ஹனுமான்’ விஷயத்தில் மாறியிருக்கிறதே”
“திருமலை அரசே! தாங்கள்தான் பிள்ளையையும் கிள்ளி விடுகிறீர்கள். பின்னர் தொட்டிலையும் ஆட்டுகிறீர்கள். தங்களுக்கு இது தெரிந்திருந்தும் என்னையும், கேசரியையும் பிரிக்கலாமா?” என கைகூப்பி, கண்ணீர் மல்கக் கேட்டாள்.
திருமால், அஞ்சனையையே கண் மூடாமல் கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன அஞ்சனை? நானா உங்கள் இருவரையும் பிரித்தேன்? உன் கணவன் தான் இப்போது பிரிந்து செல்கிறான்”
“இல்லை வேங்கடவா! இல்லை. அவர் மனம் பிள்ளைப் பாசத்தால் நேற்றிரவு முழுவதும் சஞ்சலப்பட்டது உண்மைதான். அவரை நான் சமாதானப் படுத்தியதும் உண்மைதான். ஆனால் தங்கள் உத்தரவை கேசரி ஒரு போதும் மீறமாட்டார். என்னை விட்டு அகலவும் மாட்டார். இது சத்தியம்.” என்றாள் அஞ்சனை.
“அஞ்சனாத்திரி மலைக்குச் சொந்தக்காரியாக மாறிவிட்ட அஞ்சனை! உன் கணவர் இப்பொழுது உன்னிடம், உன் ஆசிரமத்தில் இருக்கிறானா என்று பார். இருந்தால் அவனை என்னிடம் அழைத்து வா. நீ வரும்வரை நான் காத்திருக்கிறேன்.” என்று வேங்கடவன் சொன்னபோது, ‘ஏதோ ஒரு சூட்சுமம் நடந்திருக்கிறது. இல்லையெனில் திருமலைவாசன் இப்படியரு சொல்லைத் தன்னிடம் சொல்லியிருக்க மாட்டார், என்ற எண்ணத்தோடு, தான் பரண் அமைத்துத் தங்கியிருந்த ஆசிரமத்திற்குச் சென்றாள்.
அங்கு கேசரியையும் காணவில்லை. ஹனுமனையும் காணவில்லை. பல்வேறு இடங்குளுக்கும் சென்று பார்த்தாள். சேவகர்களும் நான்கு திக்குகளிலும் தேடிப் பார்த்தனர்.
நான்கு நாழிகைகள் ஆயிற்று.
எங்கு தேடியும் கேசரியையும் ஹனுமனையும் காணவில்லை.
‘என்ன ஆயிற்று’ என்று தெரியாமல் அஞ்சனைக்கு அழுகை வந்துவிட்டது. நேராக வேங்கடவனையே நேரில் சந்தித்து இதுபற்றிக் கேட்டுவிடலாம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடினாள்.
திருமால் புன்னகையுடன் காணப்பட்டார்.
“என்ன அஞ்சனை! உன் கணவன் கேசரி என்ன சொன்னான்? உன் பேரில் இந்த மலை இருக்கச் சம்மதம் கொடுத்தானா?” என்று நிதானமாகக் கேட்டார்.
“வேங்கடவா என்னை ஏன் இன்னும் சோதிக்கிறீர்கள்? வேண்டாம். உங்கள் நாடகத்தை நிறுத்தி விடுங்கள். என் கணவனையும் நான் பெற்ற என் பிள்ளையையும் என்னிடம் ஒன்றாகச் சேர்த்து விடுங்கள்.” என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அஞ்சனையை சமாதானப் படுத்திய திருமலைவாசன், “நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கும்பொழுது என்மீது கோபப்பட்ட உன் கணவன், குழந்தை அனுமனைத் தூக்கிக் கொண்டு மலை மீதிலிருந்து குதிரையில் சேவகர்களோடு சென்று விட்டான். மலைக்குக் கீழேயுள்ள கோனேரிக்கரை அருகே அவன் சென்று கொண்டிருக்கிறான். இப்பொழுது சொல். நானா உன் கணவனைப் பிரித்தேன்?” என்று நயமாகப் பேசினார் வேங்கடவன்.
என்னதான் தெய்வ பக்தி இருந்தாலும் தனக்குப் பிறந்த குழந்தையை மற்றவர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்க யாருக்கும் மனம் வராது.
இந்த நிலையில்தான் அன்றைக்கு கேசரியும் இருந்தான். தன் மனைவி அஞ்சனை கூட, தன் சொல்லை மீறி வேங்கடவன் பின் சென்றது கேசரிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
இரவு முழுவதும் தூங்காமல் பரிதவித்த கேசரி, பொழுது விடிந்ததும் அஞ்சனைக்குத் தெரி யாமல் தன் குழந்தை அனுமனைத் தூக்கிக் கொண்டு தன் தேசத்திற்கே சென்றுவிடுவது என்று முடிவெடுத்தான்.
மறுநாள்-
அஞ்சனை திருமலைவாசனைத் தரிசிக்கச் சென்ற சமயத்தில் கேசரி அனுமனை மிக ஜாக்கிரதையாக யாருக்கும் தெரியாமல் ஒரு சிறு பெட்டியில் பட்டுத்துணியால் மூடி குதிரையில் ஏறினான்.
குதிரையிலிருந்து குழந்தை விழுந்து விடாமல் இருக்க நாலாபக்கத்திலும் நன்றாகச் சோதனை செய்து கொண்டு யாரிடமும் எதையும் சொல்லாமல் வெகுவேகமாக மலையிலிருந்து இறங்கினான்.
கோனேரி நதிக்கரைக்கு வந்த பின்புதான் கேசரிக்கு சோதனை ஏற்பட்டது. அன்றைக்குப் பார்த்து கோனேரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எப்படியிருந்தாலும் கேசரி அக்கரைக்குச் சென்று தான் தன்நாட்டை அடைய வேண்டும். இங்கும் அங்கும் குதிரையில் உலா வந்து கொண்டானே தவிர, கேசரி அக்கரைக்குச் செல்ல முடியாதவாறு வெள்ளத்தின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது.
பரிசலில் சென்று அக்கரையை அடையலா மெனில் கேசரியின் கண்ணில் ஒரு பரிசல் கூடத் தென்படவில்லை. குதிரையோடு ஆற்றைக் கடக்கவும் முடியாது. துணிந்து கடந்துவிடலா மென்றால் கையோடு கொண்டுவந்த குழந்தை அனுமனை எப்படி பத்திரமாகக் கரை சேர்ப்பது என்ற கவலையும் ஏற்பட்டது.
மீண்டும் வேங்கடமலைக்கே ஏறிச் சென்று விடலாம் என்றாலும் மனம் கேட்கவில்லை. கோனேரிக் கரையில் வெள்ளம் வடிவதாகவும் தெரியவில்லை. வெள்ளம் எப்போது வடியும் என்று எத்தனை நாள்கள் தான் கரையில் காத்திருக்க முடியும் என்றும் பலவாறு தனக்குத் தானே கற்பனை செய்து கொண்டு இரண்டுங் கெட்டான் நிலையில் கேசரி பரிதவித்துக் கொண்டிருந்தான்.
அப்போது...............
சித்தன் அருள்............. தொடரும்!
Wednesday, 6 July 2016
சித்தன் அருள் - 368 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால், இறைவனே தவறு செய்யத் தூண்டினாலும், விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும், போராடிப் போராடி, ஒரு மனிதன் இறைவழியில் வந்து, தன்னுடைய மனதை வலுவாக்கி, உள்ளத்தை உறுதியாக்கி, தவறான பழக்கங்களுக்கு எதிராகவே, தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Tuesday, 5 July 2016
சித்தன் அருள் - 367 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஒவ்வொரு மனிதன் பின்னால், எத்தனையோ பாவவினைகள் மறைந்து நின்று செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப்போட வேண்டுமென்றால், பகவானின் திருவடியை, சதா சர்வகாலம் எண்ணுவதோடு, எந்த வித குழப்பம் இல்லாமலும், சந்தேகமில்லாமலும் அள்ளி அள்ளி தந்துகொண்டே போகிற "தர்மம்" ஒன்றுதான், எளிய வழி. இந்நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்சநிலையிலே "இனி என்னுடையது என்று ஏதும் இல்லை! எல்லாம் இறைவன் தந்து, என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ, பிற உயிர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ, என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவியை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த பிரார்த்தனையை செய்கிறேன். யான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன், என்று உடல், பொருள், ஆவி அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்துவிட்டால், இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்க தொடங்கும். இகுதொப்ப நிலையிலே, பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே, அவனுடைய பிரச்சினைகளை தீர்க்க இறைவன் முன் வந்துவிடுவான்." - அகத்திய பெருமான் அருள் வாக்கு!
Monday, 4 July 2016
சித்தன் அருள் - 366 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஒவ்வொரு மனிதனின் விதியானது மிக மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். மனிதன் எண்ணிவிடலாம்; உடலில் வலுவிருந்து, கையில் தனமிருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்று. அகுதொப்ப ஸ்தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவ கிரகத்தினாலும், ஒன்பதாம் இடத்து அதிபதியினாலும், கர்ம பாவத்தினாலும், அதையும் தாண்டி இறைவனின் கருணையினாலும், கடாக்ஷத்தினாலும்தான் நடக்கும். ஆலய தரிசனமோ, ஸ்தல யாத்திரையோ "சரியானபடி திட்டமிட்டாலே", என்று மனிதன் எண்ணிவிடக்கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும், இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
Sunday, 3 July 2016
Saturday, 2 July 2016
Friday, 1 July 2016
சித்தன் அருள் - 363 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"(தர்மத்தை) கொடுத்துக் கொண்டே போ. நல்லவை, தீயவை, நன்மை, தீயவைகளை ஆராயவேண்டாம். இந்த தர்ம உபதேசத்தை எவன் கடைப் பிடிக்கிறானோ, அவன் தினம் தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பதுதான் மனிதனின் எண்ணம். ஆனால், யாங்களோ, அடுத்த பிறவிக்கு சேர்க்கச் சொல்கிறோம்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Subscribe to:
Posts (Atom)