​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 3 November 2015

சித்தன் அருள் - 250 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - V

​இதற்கிடையில், இரண்டாவதாக திருநெல்வேலியில் இருந்து வந்து சேர்ந்த ​நண்பர்கள், தாமிரபரணியில் நீராட விரும்பினார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு நதிக்கரையில் அமர்ந்து, சங்கமா முனிவரின் ஸ்லோகத்தை சொல்லிக் கொடுக்க, அவர்களில் இருவர் தாம்பூலம் வைத்திருந்தனர். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் துண்டு, பூ, ஒரு ரவிக்கை துண்டு போன்றவற்றை ஒரு தட்டில் வைத்து, நதியின் நடுவரை சென்று கிழக்கு நோக்கி நின்று தாமிரபரணி தாய்க்கு த்யானம் செய்து கொடுத்தனர். அதை நதியில் விட, அது மெதுவாக அசைந்து செல்வது காண கண் கொள்ளக் காட்சியாக இருந்தது.
மறுபடியும் கோவிலுக்கு வந்து பார்க்க, கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மொத்தம் ஒரு 250 பேர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அனைவரும் அமைதியாக நின்று கொண்டு அல்லது அமர்ந்து கொண்டிருந்தனர். உற்சவ மூர்த்தியை தூக்கி வந்து மண்டபத்தில் உள்ள பீடத்தில் வைத்து, அபிஷேகம் தொடங்கினார்கள்.

முதலில் நறுமண எண்ணெய்களால் சுவாமிக்கு எண்ணை காப்பு போட்டு, அதிலிருந்து அபிஷேகம் செய்த எண்ணையை எடுத்து அங்கு அமர்ந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் உடலில் பூசிக் கொள்ள ஒவ்வொரு சொட்டு கொடுக்கப்பட்டது. சுத்தமான தாமிரபரணி நீர், பல விதமான நறுமண திரவியங்கள், 128 மூலிகைகள், அரிசி மாவு, பன்னீர், சந்தானம், பால் போன்றவைகளால் அபிஷேகம் நடந்தது.

பெருமாளுக்கு வலது பக்கமாக மண்டபத்துக்கு அருகில் நின்று அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அகத்தியப் பெருமான் ஒவ்வொரு அடியவர்களுக்கும் ஒரு வேலை கொடுத்திருந்தார். இல்லை! வேலை வாங்கிக் கொண்டிருந்தார். ஒருவர் பூசை சாமான்களை எடுத்துக் கொடுப்பதும், இருவர் மணி அடிப்பதும், ஒருவர் அபிஷேகத்துக்கான பாத்திரத்தில் நீரை நிறைப்பதும், ஒரு சிலர் பூக்களை ஆய்ந்து, துளசியை சீராக அமைத்து, இப்படி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், ஒரு நண்பர் வந்து எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்களேன் என்று அருகில் நின்றார்.

"பொறுத்திருங்கள்" என்று கூறி, பெருமாள் அபிஷேகத்துக்கு அண்டாவில் நீர் நிறைக்கும் வேலையில் அவரை சேர்த்துவிட்டேன். 

புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் போன்றவை சொல்லி ஒவ்வொரு அபிஷேகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது, எனக்குள் எதோ ஒரு எண்ணம் உதித்தது! நிற்க!

அதே நேரத்தில் வந்திருந்தவர்களில், ஒரு நண்பரை காணவில்லை. தேடிப்பார்த்து இல்லை என்று உணர்ந்து அமைதியானேன். உண்மையில், எல்லோரும் மண்டபத்துக்கு பக்கத்தில் நின்று பெருமாளின் அபிஷேகத்தை பார்த்த அந்த நேரத்தில், அவர் பிரதக்ஷிண வழியில், சன்னதிக்கு பின் புறமாக அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தாராம். திடீரென்று, யாரோ தாமிரபரணி ஓடுகிற வழியிலிருந்து மேல் ஏறி வந்து (அரூபமாகத்தான்) சன்னதியை நோக்கி செல்வது போல் உணர்ந்தாராம். ஆம்! ஒரு மிகப் பெரிய காற்று நாம் அமர்ந்திருக்க நம்மை தழுவி நடந்து சென்றால், சென்றதும் காற்றே இன்றி இருக்கும் நிலையையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் தான் என்னுள் அந்த எண்ணம் உதித்தது.

"அய்யன் அகத்தியப் பெருமானை அழைத்திருந்தோமே! வந்துவிட்டாரா! அபிஷேகம் வேறு தொடங்கியாகிவிட்டதே!" என்று யோசித்து பெருமாளின் விக்ரகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.  அர்ச்சகர் செய்த அபிஷேகத்தை பார்ப்பது ஆனந்தமாக இருந்தது. பால் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டே, ஆனந்தத்தில் விழி இமை மூட..............

பெருமாள் முன், அங்கே, அர்ச்சகருக்கு பதிலாக, அகத்தியப் பெருமான் நின்று அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனேன். கண் திறந்து பார்க்க, அர்ச்சகர் தீர்க்கமான பார்வையுடன் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். மறுபடியும் கண்ணை மூட, அகத்தியப் பெருமான்தான் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். அடடா! சித்தன் அருளில் வந்த நம்பிமலை, கோடகநல்லூர் புனித நாட்கள் போன்றவற்றில் அகத்தியரே பெருமாளுக்கு அபிஷேகம் செய்த காட்சியை நாடியில் விவரித்த பொழுது, நமக்கும் அகத்தியப் பெருமான், பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதை பார்க்கிற பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கியதுண்டு. அந்த ஆசையை இன்று குருநாதர் நிறைவேற்றி வைத்தார் என்று என் மனம் ஆனந்தக் கூத்தாடியது.


அபிஷேகம் நிறைவு பெற்ற பின், "எல்லோரும் வாருங்கள் உள்ளே. இனி மூலவருக்கு பூசைகள் செய்த பின், வெளியே வந்து உற்சவருக்கு பூசை" என்று கூறி உள்ளே சென்றார். வந்திருந்து, மிக அமைதியாக இருந்த அகத்தியர் அடியவர்கள், ஒவ்வொருவராக உள்ளே சன்னதி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர். சிறிது நேரத்தில் அந்த ஹால் முழுவதும் நிரம்பிவிட்டது. அடியவர்கள், படி மீது ஏறி நின்று பூசை பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளே செல்ல இடம் கிடைக்கவில்ல. நான் த்வஜ ஸ்தம்பத்தின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே பூசை நடந்து அனைவரும் வெளியே வந்தனர். மூலவரை, மாலையில் சென்று பார்த்துக் கொள்ளலாம், கை நிறைய வேலை இருக்கிறது என்று தீர்மானித்து, உற்சவருக்கு நடந்த பூசையை கவனிக்கலானேன். தீபாராதனை நடந்த பொழுது, உற்சவரை பார்க்கவே முடியவில்லை. மிகப் பிரமாதமாக நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"என்ன பெருமாளே! உங்கள் முகத்தை கூட பார்க்க முடியாதா எனக்கு!" என்று கேள்வி கேட்ட மறு நிமிடம், ஒரு பக்தர் விலகினார், தீபாராதனை, பெருமாள் முகத்தருகே காண்பிக்கப்பட, ஒரு நிமிட தரிசனம்.


"அது போதும் பெருமாளே! மிக்க நன்றி!" எனக்கூறிவிட்டு காத்திருந்தேன்.

பெருமாளுக்கு நிவேதனம் செய்து, வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சடாரி வைத்து, பெருமாளின் துளசி பிரசாதம் கொடுக்க, நிவேதன பிரசாதம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வலது பக்க மண்டபத்தில் வைத்து ஒருவர் தட்டுகொடுக்க, மற்றவர்கள் பிரசாத விநியோகத்தை தொடங்கினர். மிக மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால் வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அமைதியாக இருந்து, அபிஷேகத்தை பார்த்து, நீண்ட வரிசையில் நிதானமாக நின்று பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு, பின்னர் சாப்பிட்ட தட்டை கோவிலுக்கு வெளியே அதன் இடத்தில் வைத்துவிட்டு போனதுதான். பிரசாத விநியோகத்தின் கடைசியில் நின்று, வந்திருந்த அனைவருக்கும் "786" எண் பதித்த ரூபாய் நோட்டை - "பெருமாளின் பரிசு" என்று கூறி கொடுக்கிற வாய்ப்பை இறைவனும், அகத்தியப் பெருமானும் அடியேனுக்கு கொடுத்தார்கள். மேலும் சொல்லப்போனால்,
 1. இந்த வருட கோடகநல்லூர் திருவிழாவை, அகத்தியப் பெருமானே நேரில் நின்று நடத்தப் போகிறார் என்று முன்னரே தெளிவாக தெரிந்தும், அடியேனை பொறுமையாக அமைதி காக்க வைத்தார். ஒவ்வொரு எற்பாட்டையும் அவரே செய்து தந்தார்.
 2. அதில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் பங்கு பெற்றார்கள் என்பது சந்தோஷமான ஒரு விஷயம்.
 3. அகமதாபாத், சென்னை, பெங்களூர், மேலும் பல இடங்களிலிருந்தும் அகத்தியர் அடியவர்களை கிளப்பி விட்டு பங்கு பெற செய்தார் என்பது இன்னொரு விஷயம். அவர்களும் சின்ன சின்ன வேலைகளை செய்து தங்கள் சேவையை பூர்த்தி செய்தனர்.
 4. மேட்டுபாளயத்தில் வசிக்கும் ஒரு அகத்தியர் அடியவர் (நாடி வாசிப்பவர்) வந்திருந்து, முதல் நாள் தனக்கு அகத்தியர் நாடியில் வந்து உத்தரவிட்டதாகவும் "உடனே, நீ கிளம்பி செல் கோடகநல்லுருக்கு" என்று கூற, அந்த ஊர் எங்கிருக்கிறது என தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்தார். அவர் சார்பாக எல்லோருக்கும் "அகத்தியர், லோபாமுத்திரை" படம் ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார் என்பதிலிருந்து, அனைவருக்கும் அகத்தியப் பெருமான் ஒரு பரிசை வழங்கினார் என்று தான் கூறவேண்டும்.
 5. சென்னை மைலாப்பூரில் அகஸ்தியர் ஜோதிடம் பார்க்கும் ஒருவரை கிளப்பிவிட, அவர் தன் சிஷ்யர்களுடன் வந்து இறை தரிசனம் பெற்று சென்றார். அவரது நண்பர்கள், மிகுந்த அளவுக்கு பூசை பூக்களை சுத்தப்படுத்தி வைப்பதில் உதவி புரிந்தனர் என்பதை இங்கு கூறத்தான் வேண்டும்.
 6. வந்திருந்த ஒரு இளைஞர் (அகத்தியர் அடியவர்) வந்து தரிசிக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என "லட்டு" வாங்கி வந்து, இதையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்று வேண்டினார். அதற்கென்ன கொடுங்கள் என்று கூறி பிரசாத விநியோகத்தின் கூடவே அனைவருக்கும் வழங்கப்பட்டது.
உண்மையாக கூறப் போனால், ஒவ்வொரு அகத்தியர் அடியவரும், அவரவர்களுக்கு தெரிந்த வரையில், முடிந்தவரையில் அன்றைய பூசையில் கலந்துகொண்டனர் என்பதே உண்மை. அகத்தியரே வந்து அபிஷேகத்தை நடத்திக் கொடுத்து பூசையை நிறைவு செய்து கொடுக்க, இதை விட மிகப் பெரிய பாக்கியம் என்ன வேண்டும் நமக்கு என்று தோன்றிவிட்டது என்னவோ "உண்மை".

பூசை முடிந்து, பிரசாதம் வாங்கி அனைவரும் கிளம்ப, இறைவனை நோக்கி நன்றி சொல்லி ஒன்றை வேண்டிக் கொண்டேன்.

"உன் குழந்தைகள் அனைவரும் பத்திரமாக ஊர் போய் சேரவேண்டும். இன்று நீ அருளியது இனி அவர்கள் வாழ்க்கையில் என்றும் உயர்வுக்கு வழி வகுப்பதாக இருக்கவேண்டும்!"

அனைவரும் செல்ல, கோவில் அமைதியானது. பூசாரி கோவிலை சார்த்திவிட்டு கிளம்பினார். நானும் நண்பர்களும், மாலையில் வந்து சேர்வோம் என்று கூறிய பக்தர்களுக்காக காத்திருந்து, மறுபடியும் தாமிரபரணியில் குளித்துவிட்டு, அன்றைய தினம் பிரதோஷம் ஆனதால், கோடகநல்லூர் கைலாச நாதரை தரிசனம் செய்துவிட்டு (செவ்வாய் பரிகார ஸ்தலம்), கோவிலுக்கு திரும்பி வந்தோம்.

பெருமாள் ஆஜானுபாகுவாக சிரித்தபடி நின்றிருந்தார். 25 அகத்தியர் அடியவர்கள் இருந்தனர். பெருமாளுக்கு இரவு பூசை நடந்து, நிவேதனம் (கடலை சுண்டல்) கொடுத்தனர். தேவாமிர்தமாக இருந்தது. பிறகு பள்ளியறை பூசை (பெருமாள் கோவிலில் இங்கு மட்டும் தான்) நடந்தது. எல்லோருக்கும் பள்ளியறை பால் பிரசாதமாக வழங்கினார்கள்.

அனைத்திற்கும் பெருமாளுக்கும், அகத்தியப் பெருமானுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியை கூறிவிட்டு, ஊர் நோக்கி வந்து சேர்ந்தோம்.

அனைத்தும் அகத்தியர் அருளால் நடந்தது. அதனால் தான் இந்த தொகுப்பிற்கு "அகத்தியர் நடத்திய திருவிழா" என்று பெயர் கொடுத்தேன்.

அனைவரும் அவர் அருள் பெற்று விட்டீர்கள். அது கூடவே இருந்து உங்களை வழி நடத்தட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில், இதை சமர்ப்பிக்கிறேன்!

கோடகநல்லூர் சித்தன் அருள் நிறைவு பெற்றது!சித்தன் அருள்................ தொடரும் !

5 comments:

 1. thanks a lot sir.i can feel here the pooja by ur wonderful lines.agasthiyar called me only for oothimalai.i am happy with ur lines.may god bless all.

  ReplyDelete
 2. கோடகநல்லூரில் மாலை பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. வழக்கம் போல தங்கள் தொகுப்பு மிக நன்றாக இருந்தது.ஓம் அகத்தீசாய நமஹ! குருவே சரணம் சரணம்! உந்தன் திருவடியே சரணம் சரணம்!

  ReplyDelete
 3. thanks a lot.we are all blessed to be on that day at kodaganallur.om agatheesaya namha

  ReplyDelete
 4. அற்புதம் அய்யா அற்புதம்! மிக்க நன்றி! தங்கள் எழுத்துகளால் எங்களுக்கும் தரிசனம் கிடைக்க செய்தமைக்கு!

  ReplyDelete
 5. அய்யா,
  கோடங்கநல்லூர் பெருமானை நேரில் சென்று தரிசிக்க முடியாவிட்டாலும் சித்தன் அருளில் ஏற்றப்பட்ட பதிவுகளை படிக்கும் போதே நேரில் சென்று பெருமானை தரிசிசித்தது போல் உள்ளது. தங்களுக்கு மிக்க நன்றி அடியவர்கள் அனைவரையும் நம் குருநாதர் அகத்திய எம்பெருமான் ஆசீர்வாதிக்குமாறு பிராத்தனை
  செய்கிறேன்.

  ஓம் அகத்திசாய நம

  ReplyDelete