​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 19 November 2015

சித்தன் அருள் - 259 - "பெருமாளும் அடியேனும்" - 29 - கருடாழ்வார் மனைவியை விட்டு விலகல்!


கருடாழ்வாருக்கும், அவர் மனைவிக்கும் சண்டை நடக்கும். இருவரும் அந்த வேங்கடவனிடம் சென்று முறையிடுவார்கள். தன்னிடம் பணிபுரியும் ​கருடாழ்வார் தவறு செய்ததால் பெருமாள் கருடாழ்வாரை நீக்கிவிடுவார். இதனால் கருடாழ்வார் வேங்கடவனுக்கு உதவி செய்ய முன் வரமாட்டார். வேங்கடவனும் கருடாழ்வார் விலகியதால் தனியே துன்புறுவர். வேறு யாரும் "கருடன்" இருக்கும் அந்தப் பதவிக்கு முன்வர மாட்டார்கள். வேங்கடவன் பாடு படு திண்டாட்டமாக இருக்கும் என்று பலவிதமாக கற்பனையில் மூழ்கியிருந்தான் கலிபுருஷன்.

விஷம் எங்கு பாய்ந்தாலும் அதன் பாதிப்பு ஓரளவு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். இதில் கருடாழ்வாரும் தப்பவில்லை. மாட்டிக் கொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வந்ததும் வராததுமாக வாசலில் வழிமறித்து நின்றாள் கருடாழ்வாரின் மனைவி. இதை சற்றும் எதிர்பாராத கருடாழ்வார் அதிர்ச்சி அடைந்தார்.

"உண்மையைச் சொல்லுங்கள். இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கோபத்துடன் கேட்டாள்.

"ஏன்? இந்திரலோகத்திலிருந்து" என்று நிதானமாகச் சொன்னார் கருடாழ்வார்.

"இல்லை. இந்திரலோகத்து அந்தப்புரத்திலிருந்து என்று சொல்லுங்கள்" என்றாள் அவர் மனைவி.

"ஆமாம்!" என்றார்.

"உங்களுக்கு அங்கு என்ன வேலை?" என்றாள்.

"இதென்ன கேள்வி? வழக்கம்போல் பெருமாளைத் தரிசனம் செய்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அந்தப்புரத்திற்கு அனுப்பி விட்டு வருகிறேன். இன்று அவருக்குப் பிறந்தநாள். எனவே அவருக்கு அலங்காரம் செய்யச் சிறிது நாழிகை ஆகிவிட்டது. அதுதான் வீட்டிற்கு வரத்தாமதம்" என்றார் கருடாழ்வார்.

"உடம்பெல்லாம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு "ஜவ்வாது" வாசனை மணக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?" என்றாள் அவர் மனைவி.

"உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி கேள்வி கேட்கிறாய்? அந்த வைகுண்டபதியின் பிறந்த நாள் அல்லவா இன்று? அவருக்கு வாசனை திரவியங்களை அங்கமெல்லாம் தடவி ஆனந்தப் படுத்தியவர்களில் நானும் ஒருவன். அந்த ஜவ்வாது அத்தர் என்மீதும் பட்டிருக்கிறது. அதில் என்ன ஆச்சரியப் படவேண்டியிருக்கிறது?" என்று அலட்சியமாக பதில் வந்தது கருடாழ்வாரிடமிருந்து.

"என்னிடமே பொய் சொல்கிறீர்கள். இது நியாயமா? தர்மமா? இந்திரலோகத்து அந்தபுரத்தில், யுவராணியோடு பொழுதை ஆனந்தமாகக் கழித்துவிட்டு அவள் தடவிய ஜவ்வாது வாசனையில் மெய்மறந்து போனீர்களா இல்லையா?" என்று கருடாழ்வாரின் மனைவி குற்றம் சாட்டினாள்.

இதுவரை அன்போடும் மரியாதையோடும் பெண்களுக்கே இலக்கணமாகத் திகழ்ந்த தன் மனைவி, இப்படியொரு குற்றத்தைத் தம் மீது சுமத்தியதை கண்டு கருடாழ்வார் பெரிதும் அதிர்சியடைந்தார்.

இனி என்ன சொன்னாலும் நம்பப்போவதில்லை என்று முடிவெடுத்தவர் மேற்கொண்டு பதில் சொன்னால் விபரீதமாகிவிடும் என்பதால் மௌனமாக இருந்தார். அதோடு இவள் ஏன் இப்படி மாறினாள்? இவளது மனதை கெடுத்தவர் யார் என்று தீவிரமாக யோசிக்கவும் ஆரம்பித்தார்.

"என்ன பதிலே வரவில்லை? உண்மை சுடுகிறது போலிருக்கிறது?" என்று கிண்டல் செய்த கருடாழ்வாரின் மனைவி "இனிமேல் நீங்கள் இந்திர லோகத்திற்குச் செல்லக் கூடாது" என்று உத்தரவு போட்டாள்.

"நிதானத்தோடுதான் பேசுகிறாயா?" என்றார் கருடாழ்வார்.

"ஆமாம்! தெள்ளத் தெளிவாகப் பேசுகிறேன். இனிமேல் நீங்கள் அங்கு செல்லக் கூடாது" என்றாள்.

"அப்படியென்றால் வைகுண்டவாசனின் கதி?"

"அவர் பற்றி எனக்கு கவலை இல்லை! அவர் எப்படியும் தன்னைப் பார்த்துக் கொள்வார். அவருக்கு நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வருவார். ஆனால் நீங்கள் இனிமேல் இந்தக் குடிலைவிட்டு அங்கு செல்லக் கூடாது" என்றாள் மறுபடியும்.

ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது. இல்லையென்றால் இப்படி இவள் பேசவே மாட்டாள். அதிலும், அந்த வேங்கடவன் மீது அளவு கடந்த மரியாதையும் பக்தியும், பாசமும் கொண்டிருக்கும் இவள் இப்படிப் பேசுவது விந்தையாக இருக்கறது. யார் இப்படி ஒரு குழப்பத்தை கிளப்பி இவள் மனதை மாற்றியிருப்பார்? என்று பெரிதும் குழம்பிப் போன கருடாழ்வார் "இது பற்றி வேங்கடவனிடம் நேரிடையாகச் சென்று முறையிடுவோம். அவரது பேச்சைக் கேட்டால் தன் மனைவி சமாதானமாகி விடுவாள்" என்று முடிவெடுத்தார்.

வாசல் தாண்டி உள்ளே நுழையும் முன்பே இப்படியொரு பீடிகையைப் போட்டதால் அப்படியே வேங்கடவனை தரிசனம் செய்து விஷயத்தைச் சொல்லி வரலாம் என்று திரும்பினார்.

"எங்கே போகிறீர்கள்?" என்று சட்டென்று குறுக்கே வந்து அவரை வெளியே செல்ல முடியாதவாறு வழியை மறித்தாள்.

"நன்றாக இருந்த நீ திடீரென்று மாறிவிட்டாய். என் மனம் சரியாக இல்லை. வேங்கடனாதனைச் சந்திக்கத் திருமலைக்குச் செல்கிறேன். வழியை விடு" என்றார் கோபத்தோடு, கருடாழ்வார்.

"அங்கேயும் போகக்கூடாது, இந்த இடத்தை விட்டு அசையவும் கூடாது" என்று உறுதியாகச் சொன்னாள்.

"என்னது? பெருமாளைத் தரிசனம் செய்யப் போகக் கூடாதா? எனக்கு அதை விட வேறு கைங்கர்யம் எதுவும் இல்லை. என்னை அங்கு செல்லாமல் தடுக்கும் உரிமையும் உனக்கில்லை. இன்னும் சொல்லப்போனால் இனி நீயும் எனக்குத் தேவை இல்லை" என்று கடுமையாகப் பேசிய கருடாழ்வார் அங்கிருந்து வெளியேறினார்.

இதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கலிபுருஷன் "தன் திட்டம் பலித்துவிட்டது!" என்று ஆனந்தப் பட்டுக் கொண்டு, "இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்" என்று காத்திருந்தான்.

சித்தன் அருள்................ தொடரும்!

1 comment: