​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 1 November 2015

சித்தன் அருள் - 249 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் - அகத்தியப் பெருமான் நடத்திய பெருமாளின் திருவிழா - IV

[ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! அகத்தியரின் சித்தன் அருள் வலைப்பூ, அவர் அருளாலும், உங்களைப் போன்ற அகத்தியர் அடியவர்களின் ஊக்குவிப்பினாலும், இன்றைய தினம் 10 லட்சம் பக்கப் பார்வைகளை பெற்றது! மிக்க நன்றியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்! கோடகநல்லூர்  திருவிழா தொடர்கிறது!]

அதெப்படி? நாமோ சாதாரண மனிதர்கள்! நமது எளிய வேண்டுதல்களுக்கு கூட சித்தர்களும், இறைவனும் இத்தனை கருணை புரிவார்கள்? அடடா! ஏதோ தெரிந்தவரையில் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறோம், அதையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு, வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார்களே! ஹ்ம்ம்! இன்று கோடகநல்லூரில் வந்து சேர்பவர்கள் அனைவரும் மிகுந்த பாக்கியசாலிகள். ஏதேனும் திருப்புமுனை அவர்களுக்கு, வாழ்க்கையில் அமையலாம்.  எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கட்டும் அகத்தியப் பெருமானே!" என்றெல்லாம் எண்ணங்கள் மனதுள் ஓடிக்கொண்டிருக்க, திடீரென "ஓம் நம சிவாய" என மனதுள் ஜபம் வந்தது. உடனே ஞாபகம் வந்து, வெளியே எட்டிப்பார்க்க, தூரத்திலிருந்து, லிங்க ரூபத்தில் அமர்ந்திருக்கும் "மொட்டை பொத்தை" என்கிற மலை (வள்ளியூர்) வந்து கொண்டிருந்தது.


எப்போது இந்த மலையை பார்க்கும் பொழுதும், சிவபெருமானே அங்கு விரும்பி வந்து அமர்ந்ததாக தோன்றும். எனக்கு தெரிந்த வரையில், அந்த மலை மீது யாரும் ஏறியது கிடையாது. ஏன் என்றால், அத்தனை செங்குத்தாக, வழி எதுவும் இன்றி நிற்கும் மலை.  சற்று நேரம் இந்த மலையை பார்த்தபடி ஜெபித்து, மேலும் பயணத்தை தொடர்ந்தோம்.

இதற்கிடையில், திருநெல்வேலியில் பூ மாலை வாங்க சென்ற நண்பர் தொடர்பு கொண்டு, மாலை கிடைப்பதில் உள்ள ஒரு சில பிரச்சினையை கூற, திட நம்பிக்கையுடன், நேரத்துக்கு கிடைத்துவிடும். வாங்கி வந்து சேருங்கள் என்று கூறிவிட்டு, கோடகநல்லூர் வந்து சேரும் பொழுது மணி காலை 8 ஆகிவிட்டது.

முதல் நாள் தான் பிரம்மோத்சவம் நிறைவு பெற்று இருந்ததால், தூரத்திலிருந்து பார்த்த பொழுது அதிக கூட்டம் இல்லை. இரவில் மழை பெய்து, கோவில் முன்புறத்தை நன்றாக சுத்தப்படுத்தி இருந்தது.

கோவில் கொடி மரத்தின் முன் நின்று நமஸ்காரம் செய்து வேண்டிக் கொண்டேன்.


"பெருமாளே! உங்கள் அருளால் வந்து சேர்ந்துவிட்டோம். எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக செய்திட அருள வேண்டும்! அனைவரையும் நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்!"


அர்ச்சகர் வெளியே வந்தார்.


"நமஸ்காரம்!" என்றேன்.


"நமஸ்காரம்! வந்துவிட்டீர்களா! உங்களைத்தான் பார்த்து பேச வேண்டும் என்று இருந்தேன்!" என்றார்.


"என்ன விஷயம்?"


"9 மணிக்கே பூசை, அபிஷேகம் தொடங்கி, 10 மணிக்கு நிறுத்தி வைத்துவிட்டு, பின்னர் அந்த கல்யாணத்தை நடத்தி மணமக்களை அனுப்பிவிட்டு, மறுபடியும் தொடரலாமே! எனக்கும் சற்று எளிதாக இருக்கும்!" என்றார்.


எதுவுமே யோசிக்காமல், "வேண்டாம்! முன்னரே தீர்மானித்தபடி 11 மணிக்கு பூசை அபிஷேகம் தொடங்கினால் போதும்! என் நண்பர்கள் வட்டத்தில் அனைவரிடமும் 11 மணி என்று கூறிவிட்டேன். அதனால் அனைவரும் திருநெல்வேலியில் பூசை அபிஷேகத்துக்கான சாமான்களை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் சித்தன் அருளில் 11 மணி என்று போட்டாகிவிட்டது. ஆதலால், நிறைய அடியவர்கள் 10 மணிக்குத்தான் வந்து சேருவார்கள். எல்லோருக்கும் பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கிறதை பார்க்கிற பாக்கியம் கிடைக்க வேண்டும். ஆதலால், 11 மணிக்கு தொடங்கி பின்னர் எத்தனை மணிக்கு நிறைவு பெற்றாலும் பரவாய் இல்லை. நாங்கள் காத்திருக்கிறோம்" என்று கூறினேன்.


நான் இப்படி கூறுவேன் என்று அவர் எதிர் பார்க்கவில்லை போலும்.


"சரி! உங்கள் விருப்பம்" என்று முடித்துக் கொண்டார்.


நான் உள்ளே சென்று பெருமாள் தாயார்களை கண்டு வணங்கினேன்.  சித்தன் அருளில் பங்கு பெரும், ஒரு அகத்தியர் அடியவர் வேண்டுகோளுக்கு இணங்க, வாங்கி சென்ற துளசி மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாளுக்கு சார்த்தச் சொன்னேன். உணமையிலே, அதன் பின் பெருமாள் சற்று புன்னகையுடன் காட்சி கொடுத்தார் என்பதே உண்மை.


"அனைத்து விக்கிரகங்களுக்கும் வஸ்த்திரம் கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும். அதையும் சார்த்திட தயாராக இருங்கள்!" என அர்ச்சகரிடம் கூறிவிட்டு, வெளியே வந்து சமையல்காரர் வந்துவிட்டாரா! என்று தேடினேன்.


அவர் முன்னரே வந்து அமர்ந்திருக்க, "என்ன விஷயம்? யாருக்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் வேலையை தொடங்க வேண்டியது தானே! கிளம்புங்கள்" என்று சொல்லி அனுப்பிவிட்டு, நதியில் குளித்துவிட்டு வரலாம் என்று தயாரானேன்.


இதற்குள் கல்யாணத்துக்கு வந்தவர்கள் கூட்டம். அகத்தியர் அடியவர்கள் என்று ஒரு பெரிய திருவிழா நடப்பது போல் கோவில் வாசல் மாறிவிட்டது.


நண்பர்களை அழைத்துக் கொண்டு, தாமிரபரணி கரையை அடைந்ததும், ஆச்சரியப்பட்டுப்போனேன். ஒரு 50 பக்தர்கள் பெரியவர்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே நதிக்கரை அமைதியாக இருக்கும். ஆனால் அப்போது ஒரே சப்தம். யார் இவர்கள் என்று விசாரித்த பொழுது, காக புசுண்டர் நாடியில் அன்றைய தினத்தை பற்றி வந்த வாக்கை கேட்டு தாமிரபரணியை வழிபட்டு, பெருமாளை கண்டு ஆசிர்வாதம் பெற்று செல்ல வந்தவர்கள் என்று தெரிய வந்தது.




நான் கரையில் அமர்ந்து கொண்டேன். நண்பர்கள் மெதுவாக தாமிர பரணி நதியில் இறங்க முயன்றார்கள். அப்போது நான் கூறினேன்.

"நதியில் இறங்கி கிழக்கு பார்த்தோ, வடக்கு பார்த்தோ கை கூப்பி நில்லுங்கள். சங்கமா முனிவர் கூறிய மந்திரத்தை நான் கரையில் அமர்ந்து கூறுகிறேன். நீங்களும் கூறிவிட்டு பின்னர், கிழக்கு நோக்கி நின்று முங்கிக் குளியுங்கள். ஒன்றை முயன்று பாருங்கள். 36 முறை முங்கி எழ வேண்டும். அது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒவ்வொருமுறையும், தாமிரபரணி ஓடுகிற இந்த பூமியில் நீருக்கு அடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள். நீருக்கடியில் நமஸ்காரம் செய்யும் பொழுது கண் திறந்து பார்த்தால் என்ன காண்கிறீர்கள் என உங்களுக்கு அப்போது தெரியும்" என்றேன்.


அவர்கள் வடக்கு நோக்கி கை கூப்பி நிற்க, கரையில் அமர்ந்து அந்த ஸ்லோகத்தை சொல்லிக் கொடுத்தேன். கூறிவிட்டு அவர்கள், நதியின் நடுவை நோக்கி குளிப்பதற்கு நடந்து சென்றார்கள்.


நான் நதியில் இறங்காமல் அமர்ந்திருந்தேன். ஒருவர் தன் குடும்பத்துடன் குளிக்க வந்தார். நான் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுத்ததை கண்டவர், எனக்கும் சொல்லி கொடுங்களேன்! என்றார். அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் சொல்லிக் கொடுக்க, அடுத்து ஒரு கூட்டம். இப்படி ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க திடீரென்று ஒரு யோசனை.


"ஆமாம்! எனக்கு யார் சொல்லித்தருவா!"


யோசித்து பார்த்த பொழுது யாரும் இல்லை. "சரி இவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததே, நான் சொன்னதாக ஏற்றுக்கொள் தாயே" என்று கூறிவிட்டு, நானும் நதியில் நீராட இறங்கினேன்.


நதியில் நீர் மட்டம் குறைவாகவே இருந்தது. அதனால் இழுவை அதிகம் இல்லை. கைகூப்பி கிழக்கு நோக்கி நின்று அகத்தியரையும், லோபாமுத்திரை தாயையும், கோடகநல்லூர் பெருமாள், தாயார் இவர்களை த்யானித்துவிட்டு தாமிர பரணியில் மூழ்கினேன்.


கிழக்கு நோக்கிய முதல் நமஸ்காரம் எளிதாக வந்தது. நேரம் நன்றாக இருக்கும் பொழுதே நல்லதை செய்து விட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதனால், 36 நமஸ்காரங்களை நோக்கி செயல் பட்டேன். 18 வது நமஸ்காரம் செய்து முடித்தவுடன் நீருக்கு அடியிலேயே இருந்து கண் திறந்து பார்க்க, அங்கே நான்கு பாதங்கள் தென்பட்டது. அகத்தியப் பெருமான், லோபா முத்திரையின் பாதங்கள்தான் அவை. தாமிர பரணித் தாய் கனிவுடன் கை தூக்கி ஆசிர்வதிக்கிற நிலையில் கண்டு,


"இது போதும் எனக்கு பெற்றோர்களே! இது போல் எல்லோருக்கும், அவர்கள் அறிந்தோ, அறியாமலோ அருளவேண்டும்!" என வேண்டிக் கொண்டேன்.


19வது நமஸ்காரமாக "ஒரு வாசி யோகி இறைவனுக்கு செய்கிற நமஸ்காரத்தை" செய்துவிட்டு, 36 எண்ணிக்கைவரை சென்று பின் ஸ்நானத்தை முடித்து கரை ஏறினேன். யாரிடமும் எதுவும் பேச தோன்றவில்லை. கரையிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்து, நதி நீரை எடுத்து, விபூதி குங்குமம் பூசிக் கொண்டு கோவிலை பார்த்து நடந்தேன்.


திரும்பி நதியை பார்த்த பொழுது, அந்த 50 பேர் கூட்டமும், கையில் தாம்பூலத் தட்டுடன், தாமிரபரணி தாய்க்கு பூசை செய்ய நதி நடுவை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து நின்று, அவர்களில் பெரியவர் ஒருவர் மந்திரம் சொல்லிக் கொடுக்க, அதை அவர்கள் திருப்பி சொல்ல, ஒரு 15 நிமிடம் பூசை நடந்தது. தாமிரபரணி தாய்க்கு இப்படி ஒரு பூசையா! என்று சந்தோஷமாக பார்த்தபடி நின்றேன்.




கல்யாணம் முடிந்து, கல்யாணக் கூட்டம் விலகியது. அகத்தியர் அடியவர்கள் ஒரு 100 பேர்கள் இருந்தனர். இன்னும் வருவார்கள் என்று தோன்றியது.

"இந்தத் திருவிழா அகத்தியரால் நடத்தப் படுகிறது. நாமெல்லாம் ஒரு கருவி. யார் யாரெல்லாம் வரவேண்டும் என அவர் தீர்மானிக்கின்றாரோ அவர்கள் நிச்சயம் வந்து சேர்வார்கள்", என்று மனதுள் ஒலிக்க, சரி! அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபடி கோவிலுக்குள் சென்றேன்.

ஒரு நண்பர் வந்து "அர்ச்சகரிடம், உற்சவ மூர்த்தியின் அபிஷேகத்தை வெளியே மண்டபத்தில் வைத்து நடத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் சரி என்று ஒத்துக் கொண்டுவிட்டார். அதனால், உற்சவ மூர்த்தியின் பெரிய பீடத்தை வெளியே தூக்கி வைக்க ஆட்கள் தேவை" என்றார்.


அதுவும் நல்லதுதான் என்று யோசித்து, நண்பர்களுடன் உள்ளே சென்று பீடத்தை வெளியே தூக்கி வைத்தோம். இதற்கிடையில், பெங்களூர், கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்த இரு அகத்தியர் அடியவர்கள் மேலே தூக்கி கட்டியிருந்த திரைகளை கழற்றி தொங்க விட்டனர்.


இதற்கிடையில், திருநெல்வேலியில் இருந்து நண்பர்கள் குழு வந்து சேர்ந்தது. வஸ்த்திரம், பூ மாலை, உதிரிப் பூ, தாமரை மொட்டுக்கள், துளசி என வந்து சேர, ஒவ்வொரு அகத்தியர் அடியவர்களும், தாங்களாகவே முன் வந்து அவற்றை எடுத்து, மண்டபத்தில் வைத்து, அங்கேயே அமர்ந்து, பிரித்து சுத்தப்படுத்தி வைக்க ஆரம்பித்தனர்.


கோடகநல்லூர் சித்தன் அருள்................. தொடரும்!

No comments:

Post a Comment