​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 13 February 2015

முருகர் அருளிய அமுது!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஆன்மிகம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே, நம் ஆன்மாவை ஆண்டவனின் அருகில் கொண்டு செல்வது, என்று பெரியவர்கள் சொல்வார்கள். நம் வாழ்க்கையில் நடக்கின்ற விஷயங்களை அமைதியாக உற்றுப்பார்க்கத் தொடங்கினால், நம்மால், நிறையவே விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

எல்லோருக்கும், இறைவனை காணவேண்டும், இறைவனை உணரவேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்பு. இத்தனை வருட வாழ்க்கையில், நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பாதிப்பால் உருவான கேள்விகளை, நம்முள்ளே புதைத்து வைத்து, என்றேனும் இறைவனை கண்டால், அவற்றை கேட்டுவிடவேண்டும், என்று ஒதுக்கி வைத்திருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், இறைவனை கண்டு, உணருகிற நிலையில் இருக்கும் சூழ்நிலையில், அத்தனை கேள்விகளும் தேவை இல்லாதது என்று உணர்ந்துவிடுவோம், அல்லது வெளியே வார்த்தைகளாக வராது. நடக்கிற எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குள், "ஏன்? எதற்கு நான்? எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்விகளுக்கு பதிலே இருக்காது, ஆனால் நம் மனம் நிறைந்து மகிழ்வுறுகிற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடக்கும். அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆன்மீகத்தில் புகுந்த பின், அனுபவங்களை தேடி, எவ்வளவு தூரம், உயரம் வேண்டுமானாலும் ஓடிப் போகிற மனம் கொண்டவன் நான். ஏதோ ஒரு கேள்வியுடன், திடமான நம்பிக்கையுடன், அடிக்கடி திருசெந்தூர் சென்று, சுப்ரமண்யரை தரிசனம் செய்து வந்தேன். குறிப்பாக சொல்வதென்றால், 15 நாட்களுக்கு ஒருமுறை எப்படியாவது தரிசனம் செய்துவிடுவேன்.

ஒருமுறை, அப்படிப் போய்விட்டு வந்து வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது, என்னவோ யோசனை வர "முருகா! நான் கேட்ட கேள்வி உனக்கு புரிந்ததா? புரிந்தும் பதில் சொல்லவோ, காட்டி கொடுக்கவோ மாட்டேன் என்கிறாயே? அதை அருள்வாய் என்று காத்திருப்பது எத்தனை காலம்? என் வேண்டுதல் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டதா? என்றேனும் புரியவையேன்!" என்று கேட்டேன்.

மறுநாளே, சென்னையில் வசிக்கும் ஒரு நண்பர் ஒரு சில தகவல்களுக்காக என்னை தொடர்பு கொண்டார். உண்மையில், அவரது சொந்த பிரச்சினைக்கு ஒரு இடத்தில் அகத்தியர் ஜீவநாடி வாசிக்க, அதில் பல பரிகாரங்கள் கூறப்பட்டிருந்தது. அதில் ஒன்று, "சுப்பிரமணியர் சக்கரத்தை பிரதிஷ்டை செய்திருக்கும் கோவிலில் ஒரு மண்டலம் பூசை செய்து, பின்னர், திருசெந்தூர் போய், முருகனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்" என்று கூறினார் அகத்தியப் பெருமான்.

தான் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஒரு முருகர் கோவிலில் ஒரு மண்டலம் பூசை செய்து வந்தவர் அதன் முடிவில், திருச்செந்தூர் போய், அபிஷேகமும் செய்துவிட்டு வந்துவிடலாம் என்று என்னை தொடர்பு கொண்டார்.

"திருசெந்தூரில் அபிஷேகமும், தரிசனமும் பண்ணவேண்டும். அங்கே கோவிலில் வேலை பார்க்கும் ஒருவர் வழி ஏற்பாடு செய்துவிட்டேன். அதுவும் ஒரு ஞாயிற்றுகிழமைதான். நீங்களும் வர முடியுமா?" என்று கேட்டார்.

"நான்தான் 15 நாட்களுக்கு ஒருமுறை போய்வருகிறேனே! நீங்கள் நிம்மதியாக போய் தரிசனம் பெற்று வாருங்களேன்" என்று கழட்டிக் கொள்ள முயற்சி செய்தேன்.

"ஒரு துணைக்காக வேண்டுகிறேன். உங்களையும் பார்த்து ரொம்ப நாளாச்சே. கண்டிப்பாக வாருங்கள்" என்றார்.

"சரி!" என்று கூறி தீர்மானித்து, இன்னொரு நண்பரிடம் கூட வருகிறாரா என்று விசாரித்தேன். அவரும் வருகிறேன் என்றார்.

எல்லாம் நல்லபடியாக அமைகிறது என்றால், இதில் முருகர் ஏதோ விளையாட்டு நடத்த தீர்மானித்திருக்கிறார் என்று அர்த்தம், என்று என் மனது சொல்லியது.

"சரி! அது நடக்கும் பொழுது அனுபவிப்போம். இப்பொழுதே அதை குறித்து விசனப்பட வேண்டாம்" என்று தீர்மானித்து அமைதியானேன்.

மாலை என்னை வந்து சந்தித்த நண்பர் "என்ன விஷயம்! திடீர்னு திருச்செந்தூர் பயணம்? போய் வந்து ஒருவாரம் கூட ஆகவில்லையே! நான் தெரிந்து கொள்ளலாமா?" என்றார்.

என் சென்னை நண்பர் அபிஷேக, தரிசன, பரிகாரம் ஏற்பாடு செய்திருப்பதை கூறிய உடன் "அட! பெரும் பாக்கியம் ஆயிற்றே! நாம் செல்வோம்!" என்று கூறினார்.

அந்த வார சனிக்கிழமை இரவு. இந்தியா கிரிகெட் விளையாட்டில் இறுதி சுற்று விளையாடிக் கொண்டிருந்தது. நான் நண்பரிடம் இரவு 12 மணிக்கு வண்டியை கொண்டு வரச் சொல்லியிருந்தேன். விளையாட்டு முடிந்து, இந்தியா வெற்றி பெறுவதை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அமர்ந்திருந்தேன். 11 மணிக்கே வந்து அமர்ந்த நண்பரிடம் "என்ன! வண்டியை தயார் பண்ணிவிட்டீர்களா? போகலாமா?" என்று கேட்டபடி புறப்பட தயாரானோம்.

நண்பரிடம் அமர்ந்திருக்க சொல்லிவிட்டு, நான் போய், குளித்துவிட்டு வந்தேன். நாடு நிசி ஆயினும், குளித்துவிட்டு சென்றுவிட்டால் விடியற்காலையில் அங்கு போய் சேரும் பொழுது, குளிப்பதை பற்றி யோசிக்க வேண்டாமே! என்பது என் எண்ணம்.

12 மணிக்கு புறப்பட்டோம். வாகன நெரிசல் இல்லாத நேரம் ஆனதால், 4 மணிக்கு திருச்செந்தூர் போய் சேர்ந்து, விடிவதற்காக காத்திருந்தோம்.

திடீரென்று "கொடிமர நமஸ்கார பூசை" ஞாபகத்துக்கு வர, முன்னரே அங்கு வந்து தங்கியிருந்த நண்பரை அலைபேசியில் அழைத்து உடனே தயாராகி வரச்சொன்னேன்.

அவரும் அவரது குடும்பமும் வந்தவுடன், நேராக அந்த பூசை நடக்கும் இடத்திற்கு சென்ற பொழுது, ஏற்கனவே அந்த பூசை தொடங்கிவிட்டிருந்தார்கள். எல்லோரும், திருச்செந்தூர் செல்லும் பொழுது ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய பூசை அது. முதலில் கொடிமர பூசை நடத்தி முடிந்தவுடன்தான் முருகரின் சன்னதியில் நிர்மால்ய தரிசனமும், தீப ஆராதனையும்.

கொடிமர பூசை முடிந்து, தீபாரதனையை பெற்றுக் கொண்டபின், என் நண்பர், அவருக்கு அபிஷேக பூசைக்கு ஏற்ப்பாடு செய்திருந்தவரை தொடர்பு கொண்டார். சற்று நேரத்தில் வருவதாக சொன்னவர், அரை மணி நேரத்தில், வந்து சேர்ந்தார்.

"எத்தனை பேர் இருக்கீங்க?" என்று வந்தவரிடம் எங்களையும் சேர்த்து நான்கு பேர்கள் என்றார், என் நண்பர்.

"சரி, வாருங்கள், நேரடியாக சென்று விடலாம்" என்று கூறி பக்கத்து வாசல் வழி அழைத்துச் சென்றவர், நேரடியாக முருகர் சன்னதி முன் கொண்டு நிறுத்தி "நன்றாக தரிசனம் செய்து கொள்ளுங்கள், நான் உள்ளே அபிஷேக பொருட்களை கொண்டு பூசாரியிடம் கொடுத்து, அபிஷேகம் செய்து வருகிறேன்" என்று உள்ளே போனார்.

எப்போதுமே, கூட்டமும் அதனுடன் அதிக சத்தமாக இருக்கும் முருகர் சன்னதி, அன்று பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அமைதியாக இருந்தது.

சற்று தூரத்தில் நின்றுகொண்டிருக்கும் முருகரை பார்த்தேன். அப்படி ஒரு கனிவு.

"ஏதோ ஒன்று உந்தியது. உன்னை தேடி இன்று வந்துவிட்டேன். எப்பொழுதும் வந்து பார்க்கும் பக்தனாயிடினும், இன்று நீயே தூண்டில் போட்டு இழுத்திருக்கிறாய். உனக்கு என்னவிதத்தில் அருள வேண்டும் என தோன்றுகிறதோ, அப்படியே ஆகட்டும். உனதருள், உன்னை தேடி வருகிற அனைவருக்கும் கிடைக்கட்டும்" என்று வேண்டிக் கொண்டு, நடந்த அபிஷேகத்தை பார்த்தேன். அருமையான தரிசனம். அபிஷேக முடிவில், அவர் தலையில் விபூதியை வைத்து தீபாராதனை காட்டினார் பூசாரி.

"உன் உச்சி விபூதி கிடைத்தால், சந்தோஷப்படுவேனே! அருள்வாயா?" என்று மனதுள் கேட்டுவிட்டேன்.

தீபாராதனை காட்டி வெளியே வந்த பூசாரி "இலையில்" கொஞ்சம் உச்சி விபூதியை வைத்து "இந்தாருங்கள் பிரசாதம்" என்று தந்தார். நான் ஆச்சரியமாக முருகரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இதற்குத்தான் அழைத்தாயோ? மிக்க நன்றி அய்யனே!" என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

"இன்னும் இருக்கிறது" என்கிறபடி நிகழ்ச்சிகள் உடனே அரங்கேறின!

........... இன்னும் இருக்கிறது!

3 comments:

  1. Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!

    ReplyDelete
  2. Really amazing experience ayya...even I'm also waiting for His answer...don't know when will have praaptham...

    ReplyDelete
  3. To Shri Karthikeyan
    Sir
    I wish to meet you for Jeeva naadi Reading for my daughter child health matters.
    Please provide contact info.
    My email id rcadityaa@gmail.com
    Mob. 9962969777
    Pls provide.
    Thanks
    A. Ravichandran

    ReplyDelete