​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 17 September 2025

சித்தன் அருள் - 1935 - திரு ஹனுமந்த தாசனின் கஞ்சமலை வாக்கு - 1!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒரு அகத்தியர் அடியவர் தன்னிடமிருந்த அகத்தியப்பெருமானின் அருள் வாக்கை சித்தன் அருளில் வெளியிட வேண்டிக் கொண்டு அனுப்பித்தந்தார்.  இது அகத்தியப்பெருமானின் அன்பு மைந்தன் என அழைக்கப்பட்ட திரு ஹனுமந்த தாசன் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மகத்துவங்கள் நிறைந்த "கஞ்ச மலையில்" புனிதமான ஒரு நன்னாளில் வாசித்த அருள் வாக்கு இது. அருமையான, எவருக்கும் புரிகிற எளிய தமிழ், யாரையும் திட்டாத அகத்தியப் பெருமானின் வாக்குகள், போன்றவை வாசிக்கும்பொழுது  அடியேனை முன் காலத்துக்கே அழைத்து சென்றதால், மனம் இதமாகிப் போனது. நீங்களும் அந்த உணர்வை பெற, இந்த வாக்கை ஒரு தொடராக தரலாம் என்ற எண்ணம். வாசித்து மகிழ்க, அருள் இருந்தால் அகத்தியப் பெருமான் வாசித்த அந்த நிமிடத்திற்கு சென்று அமர்க, கஞ்சமலை அதிசயங்களை உணர்க! இனி அருள் வாக்கினுள் செல்வோம்!

ஓம் கணபதயே நமஹ !! ஓம் முருகா !! ஓம் குரு வாழ்க குருவே துணை !!

ஒளிமறை அஸ்வினி உதித்திட்ட வேளையிலே, அகத்தியன் யான் கேட்டு கொண்டதற்கு இணங்கவே, அன்பர்கள் அனைவரும் இங்கு ஒன்றாக கூடி, என் அருமை சிஷ்யன் காலாங்கிநாதன் வேண்டுகோளின்படி, இங்கு கூடியதற்கு அகத்தியன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேனடா !!

இங்கு வரும் போதே சொன்னார் பலர் மேஷத்திரு மனிதன் என்று தான் உணரும் ஒருவர் ரிஷப ராசிக்காரன் சொன்னதையும் அகத்தியன் யான் காது கொடுத்து கேட்டேன். மேஷ நட்சத்திரம், மேஷ ராசி இல்லாமல் வேறெங்கு உரைப்பேன். ஞானத்துக்கு எல்லாம் அதிபதியாம் அஸ்வினி!

கேதுவின் முழு உரிமை பெற்றவன்! ஞானம் கிடப்பது அவ்வளவு எளிதல்ல, அந்த ஞானத்தை கொடுக்கின்ற நல்ல நாள் தான் இந்த அஸ்வினி நட்சத்திரம்! இந்த அஸ்வினி நட்சத்திரத்தில்தான் இந்த ஞானத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற அத்தனை பேருக்கும், அகத்தியன் உள்பட பதினேழு சித்தர்களும் இங்கு குழுமியிருக்கிறோம்.

பொதுவாக அகத்தியன் மட்டும் தான் வருவதாக இருந்தது, காலாங்கிநாதன் என் அருமை நண்பன் மட்டுமல்ல, என்னை விட இருபத்தேழு ஆண்டுகள் வயதில் மூத்தவன். முன்னொரு சமயம் பிரளயம் ஏற்பட்ட பொழுதெல்லாம், முக்கண்ணர்களும், முத்தேவர்களும் அகத்தியனிடம்  ஒப்படைத்து பிரளயம் முடிந்து முடிந்து வரும் பொழுது ஆங்குறு எடுக்கும் வரை, வையகத்தை காக்கும் பொறுப்பை எல்லாம் அகத்தியனிடமும், என் அருமை நண்பர் கலங்கிநாதனிடமே விட்டு சென்றார்கள். பிரளயம் ஏற்பட்டது, உலகம் அழிந்தது. பிறகு புதியதோர் உலகம் ஆரம்பித்தது. அந்த நல்ல நாள் இந்த நாள்! அதனால் தான் காலங்கிநாதரை இங்கு வரச்சொன்னேன்! சதுரகிரி மலையிலே அன்றொருநாள், உலகமெல்லாம் ஜலத்தால் மூழ்கிகொண்டு உருண்டோடிக் கொண்டிருக்கும் பொழுது, காக்கை வடிவத்திலே உட்கார்ந்து, அமர்ந்து கொண்டு, இவ்வுலகத்தை காத்து ரட்சித்தவன் என் அருமை நண்பன் காலாங்கிநாதன்! அந்த காலாங்கிநாதன் மறுபடியும் அவதாரம் எடுத்து பிரளயத்தை மாற்றிவிட்ட புனிதமான நாளும் இந்த நாள் தான்! அதுவும் மேஷ ராசியாம் அஸ்வினி நட்சத்திரத்தில நடந்தது ஒரு செய்கையடா! இப்பொழுது கூட பதினேழு சித்தர்களும் இங்கு தான் வந்திருக்கிறோம்! அகத்தியன் உட்பட பதினெட்டு சித்தர்கள் !  

இதுபோக 82497 சித்தர்கள் பாரத தேசத்திலே உலா வந்து கொண்டிருக்கிறார்கள்! அத்தனை பேரும் மனிதர்களாக  இருந்து சித்தர்களாக மாறினார்கள்! அத்தனை சித்தர்களிடமும் பூலோகத்தை காக்கின்ற பொறுப்பை அகத்தியன் வழங்கியிருக்கிறேன். முக்கண்ணனும், இந்த மூவுலக தேவர்களும் சரி, அதே பொறுப்பை அவர்களுக்கும் கொடுத்திருப்பதால் அவர்கள் அங்கங்கே, தங்கள் கடமையை செய்கிறார்கள்! அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இன்றைய தினம் இங்கு முருகன் சன்னதியிலே, அகத்தியன் தான் அங்கு வாய் திறந்து, அருள்வாக்கு சொல்வதற்கும் காரணம் உண்டடா. 

காலாங்கிநாதர் கோயிலுக்கு தானே செல்லவேண்டும், அங்கு தானே இப்பொழுது வாக்குரைப்பட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டதெல்லாம் உண்மை! அனால் காலாங்கிநாதனே என்னப்பன் முருகன் சன்னதியில் இப்பொழுது கருவறையில் அமர்ந்து கொண்டிருக்கிறான் !அன்னவனே சொன்னான், நான் தான் இவர்களையெல்லாம் வரச்சொன்னேன் இவர்களை எல்லாம். அவர்களுக்கு எல்லாம் நல்லதொரு தெய்வ வாக்கையும், தெய்வ ரகசியங்களையும் சொல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டுத்தான் வரச்சொன்னேன்!

அதை என் அப்பன் முருகனும் கேட்கட்டுமே என்றுதான் அகத்தியன் உட்பட அனைவரும், இப்பொழுது முருகன் சந்நதியில் தான் கருவறையில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறோம் ! எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நீங்கள் எல்லாம் அகத்தியன் கட்டளைக்கு, காலாங்கிநாதர் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கு வந்ததற்காகவே, நாங்களும் எங்கள் வேலைகளை விட்டு இந்த புனிதமான நல்ல நாளில் இங்கு வந்திருக்கிறோம்.பிரளயம் ஏற்பட்டு, மறுபிரளயம் ஏற்பட்டதல்லவா? கலியுகம் தோன்றியதல்லவா? அந்த கலியுகம் தோன்றிய நன்னாள் இந்நாள்!  கலியுகத்தை நன்னாள் என்று எப்படி உரைப்பேன் என்று கேட்காதே? கலியுகத்தில் தான் திருமணம் கூட சுப காரியங்கள் நடக்கும். தெய்வத்தை இகழ்கின்ற சிறு காரியங்களும் நடக்கும். 

கலியுகத்தில் கலிபுருஷன் அக்கிரமங்களும் அளவுக்கு மீறி போகும். அளவுக்கு மீறி போகும் பொழுது தான் அங்கு பிறகு பிரம்மாவோ, விஷ்ணுவோ  அல்லது மற்ற தெய்வங்களோ ஒன்றுகூடி முடிவெடுத்து பிரளயத்தை உண்டு பண்ணுவார்கள். இந்த பிரளயத்தை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிற வேளையில், அதை ப்ரளயத்தையே ஒரு தடவை ஏற்படுத்தி, மறுபடியும் பூலோகத்தில் ஸ்ருஷ்டி செய்து, உயிர்களை பிறப்பித்த நல்லநாள் இந்த நாள்!  

இதே நேரம்! இந்த காலாங்கிநாதர் இப்பொழுது வருகிறார்! அன்னவர் வேண்டுகோளுக்கு இணங்கித்தான் அகத்தியன் அவருக்கு வழிவிட்டு, என் பக்கத்தில் அமரவைத்து அவர் திருவாய் மொழிந்து, எதுக்காக வரச்சொன்னேன் என்று அகத்தியன் கூட உங்கள் சார்பாக நான் கேட்கிறேன். ஒரு வினாடி பொறுத்திரு, அன்னவனே வாய்திறப்பான்.  

அருமை நண்பன் காலாங்கிநாதன் வாய்திறந்து சொன்னதை எல்லாம், அகத்தியன் என்வாய் மூலமே கொடுக்கச் சொன்னதால், அகத்தியனே கலங்கிநாதனின் ஒலிபெருக்கி போல, நானே அவனுக்காக அருள்வாக்கு தருகிறேனடா. இந்த அருமையான இடத்தை பற்றி நிறைய பேருக்கு நிறைய செய்திகள் தெரியாது. இது ஒரு காலத்தில் இதைவிட பன்மடங்கு உயர்ந்த மலையாக இருந்தது. இதைசுற்றி பார்த்தால் காத தூரத்துக்கு நந்தவனமும்,  தோட்டங்களும்,  துறவுகளும், நீர்வீழ்ச்சிகளும் அற்புதமான கட்சியாக இருந்த காலமது. எல்லா சித்தர்களும் இங்கு வந்து ஒன்றாக கூடி, அடிக்கடி அவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுகின்ற நல்ல நாளாக இந்த இடம் இருந்தது. இதே வடகிழக்கு திசை நோக்கித்தான் அகத்தியன் உள்பட எல்லோருமே அமர்ந்திருதோம். அந்த காலத்தில்தான் இந்த உலகத்தை எப்படி ஸ்ருஷ்டிசெய்வது, என்பதை பற்றியெல்லாம் யோசித்து, எந்த வகையில் எல்லாம் நீர்வீழ்ச்சிகளை உண்டு பண்ணுவது, எந்தெந்த மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்ட மந்திர ஆலோசனைக் கூட்டம் நடந்த இடம்தான், இதே இடம் இதே நாள்! அப்பொழுது இதேபோல் வெட்ட வெளியாக இல்லை,  கல்தரைகள் இல்லை, கோபுரங்கள் இல்லை, தெய்வமே அங்கோர் வில்வமரம் போல் விஸ்வரூபமாக, அங்கு சிவபெருமான் அமர்ந்திருக்க, மற்ற மரங்கள் எல்லாம் பிற தெய்வங்கள்  அங்கங்கே அமர்ந்திருக்க, ஒரு அமைதியான சூழ்நிலை தான் இங்கு இருந்தது. முருகன் என்னப்பன் முருகன், எனக்கு தெய்வமானவன், எனக்கு  குருவானவன்! அவனும் அமர்ந்திருந்ததால், அப்பொழுது சிறு குழந்தை போல! இதை எல்லாம் எதற்கு அகத்தியன் ஞாபப்படுத்திருக்கிறேன் எனில்? அந்த புனிதமான நாள் தான் இந்தநாள்!

எப்பொழுதுமே அகத்தியன் ஒரு இடத்திற்கு வரச் சொன்னாலும், அல்லது கலங்கிநாதரோ, மற்ற சித்தர்களோ, இங்கு வரச் சொன்னால் அதற்கு காரணம் இருக்கும். ஏன்னென்றால் இந்தச் செய்திகளெல்லாம் நீங்கள் அறியமுடியாத செய்திகள், பார்க்கக்கூடாத காட்சிகள். மூன்று ஜென்மத்துக்கு முன் எப்படி இருந்தது என்றுகூட உங்களால் நினைவு படுத்தமுடியாத காலமிது. மூன்று ஜென்ம் என்ன, முப்பது ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று கூட உங்களால் நினைவுக்கு கொண்டு வரமுடியாது. ஆனால் உங்களுக்கு ஏறத்தாழ 1847 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில நந்தவனம் இருந்தது, பூஞ்சோலைகள் இருந்தது, சித்தர்கள் தரிசனம் இங்கு கிடைத்தது, முனிவர்களும், முனிபுங்கவர்களும், இங்கு வந்து அமர்ந்து ஆனந்த  பட்டுக் கொண்டிருந்தார்கள்! ஏறத்தாழ அங்கு தினமும் ஒரு யாகம் நடந்து கொண்டிருந்தது. தேவர்கள் உள்பட இந்திரன் உள்பட அத்தனை பேரும் இங்குவந்து அவ்வப்போது அமர்ந்து த்யானம் செய்து, இறைவனையெல்லாம்  தரிசனம் செய்துவிட்ட புனிதமான நாள், இடமும் இதுதான் ! நாளும் இதுதான் ! அந்த புனிதமான இடத்தில் அமர்ந்து கொண்டுதான், அகத்தியன் இன்னும் சில விஷயங்களை உங்களுக்கு சொல்லப்போகிறேன். வாழ்கை என்பது நம் கையில் இல்லை, எல்லாருக்கும் எல்லா எல்லா பாக்கியங்களும் எளிதில் கிடைத்து விடுவதல்ல. எத்தனையோ வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் பலர். சீலர்கள் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கிக் கொண்டே வாழ்க்கையில் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆக வாழ்கை என்பது பிறப்பு முதல் இறக்கும் வரை பிரச்சனை தான். அந்த பிரச்சனைகள் எல்லாம் ஒதுக்கிவிட்டு, அகத்தியன் சொல்படியும், காலாங்கிநாதன் சொல்படியும் அவர்கள் எல்லா வேலையையும் விட்டு விட்டு ஓடிவந்து அமர்த்திருக்கிறார்களே, இவர்கள் அத்தனைபேரும் மிகவும் புனிதமானவர்கள்! ஆகவே இவர்களுக்கு ஏதேனும் நினைவு பரிசு குடுக்க வேண்டும் என்று அகத்தியன் உடனே எண்ணுவது உண்டு. என் அருமை நண்பன் காலாங்கிநாதனிடம் உரிமை கேட்டு, அவன் பிறந்தநாள் இந்நாள்! அதுஒரு முக்கியமான செய்தியடா !

அவன் காலாங்கிநாதன் இந்தப்பூமியிலே அவதரித்து, எத்தனையோ சித்த தன்மைகளை பெற்று, இறைவனையே கதிகலங்கவைத்த பன்மை அவனுக்குண்டு. காலாங்கிநாதன் என்றால் சாதாரணமானவன் அல்ல! நானே பலமுறை காலாங்கிநாதனை கண்டு வியந்திருக்கிறேன்! பாராட்டியிருக்கிறேன்! போற்றி மகிழ்திருக்கிறேன்! சிலசமயங்களில் அவன் செய்கின்ற வித்தையெல்லாம் கண்கூட ஆச்சரியமாக இருக்கும்! அபூர்வமாக இருக்கும்! இறைவன் மூன்று தெய்வங்களுமே அவனை கண்டு வியந்து பாராட்டியிருக்கிறது! அந்தப் புனிதமான இடத்தில அமர்ந்து கொண்டுதான், காலாங்கிநாதர் இதுவரை எனக்கு தெரிந்தவரையில் 4144 ஆண்டுகளாக அகத்தியன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டுகள் இதுவரை காலாங்கிநாதர் இப்படி ஒரு மனித தேவர்களையோ, மனித சித்தர்களையோ, இங்கு வரவழைத்து பேசியது இதுதான் முதல்தடவை !

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
    Replies
    1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

      Delete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete