​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 27 December 2021

சித்தன் அருள் - 1061 - பாலராமபுரம் அகத்தியர் லோபாமுத்திரா கோவிலில் அபிஷேக பூஜை!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

டிசம்பர் மாதம் 23ம் தேதி, இவ்வருடத்தின் இரண்டாவது "உலக சித்தர்கள் தினம்" உலகெங்கும், அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாய்க்கு அபிஷேக பூஜை, அன்னதானத்துடன், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது! ஆம் அன்றைய தினம் நம் குருநாதரின் திரு நட்சத்திரம் என மனதுள் வரித்து பல இடங்களிலும் ஹோமம், கும்ப அபிஷேகத்துடன் நடைபெற்றது. பல அடியவர்களும் பகிர்ந்து கொண்ட படங்களை தொகுப்பு 1059இல் காணலாம். அனைவருக்கும் அடியேனின் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொள்கிற வாய்ப்பை அடியேனுக்கு அருளினார், நம் குருநாதர். நடந்த விஷயங்களை சுருக்கமாக உரைக்கிறேன்.

குருநாதரின் திருநட்சத்திர விழாவில் கலந்து கொண்டு, அல்லது பங்குபெற விருப்பமுள்ள அகத்தியர் அடியவர்களுக்காக சித்தன் அருள் தொகுப்பு 1053இல் வழிகாட்டப் பட்டிருந்தது. நிறைய அகத்தியர் அடியவர்கள், கோவில் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தினர். ஒரு சில அகத்தியர் அடியவர்கள் வந்திருந்து உழவாரப்பணி செய்து பூஜையை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

மாலை 5 மணிக்குத்தான் பூஜை என்றாலும், காலை முதலே பம்பரமாக சுழன்று, அகத்தியர் அடியவர்கள் ஒவ்வொரு பணியையும், சிறப்பாக செய்தனர். 

அனைத்தும் அமைந்து அபிஷேகம் தொடங்க 5.45 நிமிடமாகிவிட்டது. முதலில் எண்ணெய் காப்பு இருவருக்கும் செய்து, அகத்தியர் உத்தரவால், அவரது வலது கரத்திலிருந்து வழிந்த அந்த எண்ணையை, வந்திருந்த அனைத்து அடியவர்களுக்கும், நெற்றிக்கு இட்டுக்கொள்ள கொடுக்கப்பட்டது.

பின்னர் பலவிதமான அபிஷேகங்கள்: அவரை குளிரவைக்க வெட்டிவேர் தீர்த்தம், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி, அரிசி மாவு, மூலிகை பொடி, குங்கும தீர்த்தம், பன்னீர், வாசனாதி திரவியங்கள், காவேரி தீர்த்தம், விபூதி, கடைசியில் பச்சை கற்பூர அபிஷேகத்துடன் நிறைவு பெற்றது. அகத்தியர் அடியவர்களுக்கு ஏதேனும் ஒரு அபிஷேக பொருளை தங்கள் கரங்களால் பூஜாரியிடம் எடுத்துக் கொடுக்கிற பாக்கியமும் கிடைத்தது.

இவை அனைத்தும், அவரே தருவித்துக் கொண்ட, அவர் திருநட்சத்திரத்தன்று மட்டும் வெளியில் எடுத்து அபிஷேக பூஜை செய்கிற மரகதலிங்கத்துக்கும் செய்யப்பட்டது.

அபிஷேகம் நிறைவு பெற்ற உடனேயே, அகத்தியப்பெருமானின் உத்தரவால், அவருக்கு நிவேதனம் அளிக்கப்பட்டது.

அதன் பின் புஷ்பஅபிஷேகம் (பூக்களால் அபிஷேகம்) தொடங்கியது. இதில் அகத்தியர் அடியவர்களுக்கு தங்கள் கைகளால் பூவை எடுத்து தட்டில் வைத்து பிரார்த்தனையுடன், கொடுப்பதற்கான ஒரு பாக்கியம் உருவானது. வித விதமான பூக்கள் உபயோகப் படுத்தப்பட்டது.

புஷ்ப அபிஷேகம் நிறைவு பெற்றதும் உள்ளே எட்டிப் பார்த்தவுடன் அடியேன் அசந்து போனேன். அவர் பூக்களுக்குள் மூழ்கி எழுந்து மிக ஆனந்தமாக இருந்த நிலை. இருவர் முகத்திலும் புன்னகை. பூவிலிருந்து வெளியே தோன்றிய வலதுகரம், அருளை பொழிந்தது. இது போதும் என அடியேனின் மனம் உரைத்தது. ஆம் குருநாதர் மகிழ்ந்துவிட்டால், இவ்வுலகில் எது வேண்டும். அனைத்தும் அனைவருக்கும் அவர் அருளிடுவார். அதுவே அன்று நடந்தது.

அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. தீபாராதனைக்காக நடை சார்த்தப்பட்டது.

தீபாராதனைக்காக சந்நிதான நடை திறக்கப்பட்டதும், அப்படி ஒரு மணமும் தேஜஸும் அனைவரையும் தாக்கியது. மிக அற்புதமான தரிசனம். தன்னையே, மெய் மறந்த அடியவர்கள், அனைவர் மனதிலும், ஓர் அமைதி, ஆனந்தம் என வித விதமான அருளை வாரி வழங்கி குருநாதரும், தாயும் நின்றிருந்தனர்.

ஒரு அகத்தியர் அடியவர் தன் கையினால் வரைந்த அகத்தியப்பெருமானின் ஓவியத்தை அன்றைய தினம் கோவிலுக்கு சமர்ப்பித்தார்.

அகத்தியப்பெருமான் அருளுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்று அங்கு வந்திருந்த அவரின் அடியவர்கள் அனைவருக்கும், பூசையில் அவர் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் காணும் விஷயங்கள் அருளப்பட்டது.

  • அகத்தியப் பெருமானின் படம் பதித்த ஒரு ரூபாய் நாணயம்.
  • ஒரு பத்து ரூபாய் (786/108/354) குருநாதரின் பரிசாக வழங்கப்பட்டது.
  • அகத்தியப்பெருமான் லோபாமுத்திரையுடன் அருளும் ஒரு படம்.
  • அபிஷேக பிரசாதம்.
  • மிக சிறந்த முறையில், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அன்னம், அனைவருக்கும்.
இனி இப்படி ஒரு விழாவை குருநாதருக்கு செய்ய, ஒரு வருடத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த பொழுது, மனம் ஏனோ அமைதியாகிவிட்டது. (09/01/2023). சரி! குருநாதரின் உத்தரவுக்காக காத்திருப்போம், என தோன்றியது.

பின்னர் அன்றைய தினம் உலகெங்கும் நடந்த பூஜையை பற்றி நாடியில் வந்து அருள் வாக்கு உரைத்த குருநாதர், "மிகுந்த அன்புடன் எம் சேய்கள் செய்த அபிஷேக, பூஜை, யாகங்களை யாம் ஏற்றுக்கொண்டோம். அன்று பூஜைக்கு வந்தவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும், வர வேண்டும் என நினைத்தவர்களுக்கும் யாம் ஆசிர்வதித்துள்ளோம்" என உரைத்தார்.

அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் அடியேனின் வணக்கங்கள். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

சித்தன் அருள்........ தொடரும்!

9 comments:

  1. நன்றீங்க அய்யா🙏🙏🙏 ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. என்னால் பங்கு பெற முடியவில்லை அடுத்த வருடமாவது கலந்து கொள்ள நினைக்கிறேன் .மிக்க நன்றி அய்யா
    ஓம் அகதிசாய நம

    ReplyDelete
  3. அகத்தீசாய நம

    ReplyDelete
  4. Om agatheesaya namah
    Om agatheesaya namah
    Om agatheesaya namah

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் பெருமான் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய நமஹ
    பல இடங்களில் வாக்கு உறைப்பது எல்லாம் ஜீவநாடி வாசிக்கும் ஒருவருக்கேதானா அல்லது
    பல பல இடங்களில் பலரும் வாசிக்கிறார்களா. தாங்கள் எப்படி அனைத்தையும் பெற்று
    இங்கு அளிக்கிறீர்கள். எப்படி சாத்தியமாகிறது......

    ReplyDelete
    Replies
    1. பல இடங்களில் நாடி வாசிப்பது ஒருவர்தான். அனுப்பித்தருவார், வெளியிடப் படுகிறது.

      Delete
  7. நச்சுனு ஒரு பேச்சு!
    ~~~~~~~~~~~~~
    கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது?” என்று கேட்டாராம். “நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம். “நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம். “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த் தபஸ் பண்ண ஆரம்பித்தார்.
    முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. ‘இந்தச் சரீரந்தான் உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டிலும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகந்தான்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய், “இந்தச் சரீரம்தான் உயர்ந்த, நிறைந்த வஸ்து”என்று சொன்னாராம். அப்பா திரும்பவும்,“இன்னும் கொஞ்சம் தபஸ் பண்ணு” என்று சொல்லிவிட்டாராம்.
    இப்படியே கொஞ்சம் ‘தபஸ்’ பண்ணுவது, உடனே தமக்குக் தோன்றியதைப் போய்ச் சொல்வது, என்று ஐந்து தடவைகள் பிருகு செய்தாராம்.
    -முதலில் உடம்பு நிறைந்த வஸ்துவாகத் தோன்றிற்று. இந்த உடம்பு ஒருநாள் பிரேதமாகிப் போவதுதானேயென்று யோசித்தபின், உடம்பு நிறைந்த வஸ்து இல்லை என்றும்,
    -பிராணன்தான் நிறைந்த வஸ்துவாகவும் தோன்றிற்று.
    -அதன்பின் மனமே நிறைந்த வஸ்து என்று தோன்றியது.
    -பிற்பாடு அறிவே நிறைந்த வஸ்துவாகத் தோன்றியது.
    -ஐந்தாம் முறை போனபோது ஆனந்தாநுபவம்தான் நிறைவாகத் தோன்றியது.
    ....“நீங்கள் சொன்னபடி நான் இத்தனை நாட்களாகத் தபஸ் பண்ணினேன். இப்போதெல்லாம் நடுநடுவே ஏதோ ஒரு விதமான ஆனந்தம் ஸ்புரிக்கிறதே" என்று தந்தையைக் கேட்டாராம் பிருகு.
    “உனக்கு ஒவ்வொரு சமயத்தில் கொஞ்சம் ஸ்புரிக்கிறது என்று சொல்கிறாயே அந்த ஆனந்தம்தான் வஸ்து. இது உனக்குத் துளித்துளி உண்டாகிறது. அந்தப் பேரானந்த சமுத்திரத்தின் ஏதோ ஒரு திவலை தான் நமக்கு எப்போதாவது உண்டாகிறது. கிளைகள், இலைகள் எல்லாம் அடர்ந்து இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தால் கீழே கொஞ்சம்கூட வெயில் படாமல் நிழல் இருக்கிறது. காற்று அடிக்கும்போது, இலைகள், கிளைகள் நகர்ந்து விலகுகிற சமயத்தில் சூரியனுடைய வெயில் கீழே அந்த இடைவெளி அளவுக்கு விழுகிறது. அப்புறம் மறுபடியும் கிளைகள் மூடி, அது மறைந்து விடுகிறது. அந்த மாதிரியாகத் தான் நமக்கு ஆனந்தம் அவ்வப்போது வந்து வந்து மறைந்து போகிறது. இதுவே நிறைந்து விட்டதானால் அதைத்தான் பேரானந்தம் என்கிறோம். அந்தப் பேரானந்தம் எப்போதும் குறைவு இல்லாமல் காலத்தாலும், தேகத்தாலும், நிறைந்து இருக்கும்படியான ஒரே வஸ்து. சரீரம், பிராணன், மனசு, அறிவு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, இவை எல்லாவற்றையும் கடந்து இருக்கிறது. இதுவே ஆத்மா. ஆனந்த ஆத்மா. அது தன்னைத்தானே அறிந்து அநுபவிப்பதில்தான் இந்த ஆனந்தம் உண்டாகிறது” என்று பிதா சொன்னாராம். இப்படி தைத்ரீய உபநிஷத் சொல்கிறது.
    இந்த வருடத்தை நாம் இந்த உபநிஷத் விஷயங்களை நன்றாக உள்வாங்கி அதனையே இனி வரப்போகும் புதுவருடத்தின் குறிக்கோளாக வைத்து, இனிதே நிறைவு செய்வோம்.
    கோவிந்த கோவிந்த! கோபால கோபால! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே - kanchi maha periyava

    ReplyDelete
    Replies
    1. மிக சிறந்த விளக்கம்! நன்றி!

      Delete