இறையை சார்ந்திருக்கும் தேசம் நிச்சயம் வளர்ச்சியுறும் என்பதறிந்த நவகிரகங்கள், கெட்ட சக்திகள் வழி தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த முயற்சிக்கும், வளர விடாமல் தடுக்கும், என்பதே கலியுக விதி.
கலியுக தொடக்கத்தில், நவகிரகங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதி கொடுத்து, அவர்கள் ஆட்சி எல்லை மீறி செல்லவே, அனைத்து ஜீவராசிகளுக்கும் ஊரு விளைவிக்கவே, சித்தர் இடைக்காடரை வைத்து, நவகிரகங்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க விடாமல் செய்து, பூமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு அனுபவமே, இறைவனை பல தீர்மானங்களை எடுக்க வைத்தது என்பர். நவகிரகங்களின் ஆட்சி உச்சகட்டத்துக்கு சென்று விடாமல் தடுக்கவே, கோவில்களில் அவர்களுக்கு சன்னதி அமைத்துப் பூசை நடக்கிறது. இறைவன் சார்பாக நடக்க வேண்டுமென்பதே தாத்பர்யம்.
மனிதனுக்கான அறிவுரையில், "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என மூத்தோர்கள் சொல்லிப்போனதின் உள் அர்த்தமே, மனிதன், நவகிரகங்களால் அதிகமாக பாதிக்கப்படாமல், தன் உண்மை நிலையை உணர்ந்து, இறைவனில் லயித்து வாழ வேண்டும் என்கிற அர்தத்தில் தான்.
ஒரு சாளிகிராமம் வீட்டில் இருந்தால், அதற்கு நித்ய பூசை செய்ய வேண்டும். அது கண்டகி நதியில் விளைவது. நாராயண ஸ்வரூபம். நாராயணரின் பல ரூபங்கள் அவைகளுக்குள் இருக்கும். அப்படிப்பட்ட சாளிக்ராமத்தை நித்ய பூசை செய்யாவிடில், அந்த வீட்டில் குடியிருக்கும் அத்தனை குடும்பத்தையும் பாடாய் படுத்திவிடும்.
இப்படிப்பட்ட 12000 சாளிக்ராமங்களை தருவித்த அகத்தியர், 10008 சாளிக்ராமங்களை வைத்து பத்மனாபாரின் திருமேனியை உருவாக்கியுள்ளார். மீதியை வைத்து மஹாலக்ஷ்மி தாயாரையும், பிரம்மாவையும், ஆதிசேஷனையும் உருவமைத்து, 9000 மூலிகைகளை கொண்டு "கட்டு சக்கர யோகம்" என்கிற மூலிகை மருந்தினால் பத்மநாபரின் திருமேனிக்கு மூலிகை பூச்சை உருவாக்கினார். ஆதலினால், பத்மநாபர் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது. மூலவருக்கு அர்ச்சிக்கப்படும் பூக்களை, மயிலிறகினால் அகற்றுவார்கள்.
அத்தனை சாளிக்ராமங்களும் ஒரே இடத்தில் இருந்து, மிக பலமான ஆளுமைசக்தியை உருவாக்கியது. பாரத கண்டத்துக்கு மிக உயர்ந்த அரண் உருவாகியது. யாரும் பத்மநாபாருக்கு அருகில் செல்லவே முடியாமல் போயிற்று. அவரை தரிசனம் செய்து, பூசை செய்ய விரும்பிய திவாகர முனிவரின் வேண்டுதலுக்கிணங்கி இறைவன் தற்போதுள்ள திருமேனியின் உருவத்துக்கு தன்னை சுருக்கிக் கொண்டார். அப்படி சுருக்கிக் கொண்டும், இறைவனின் தேஜஸ் தாங்கமுடியாத அளவுக்கு இருந்ததால், திவாகர முனிவரே மறுபடியும் வேண்டிக் கொள்ள, இறைவன், நான்கு வேதங்களை அழைத்து தன்முன்னே சுவராக நிற்கச்செய்து, மூன்று வாசல்களை உருவாக்கி, அவரை மூன்று வாசல் வழி, சிரம்-கரம், நாபி, பாதம் என தன்னை தரிசனம் செய்தால் போதும் என அருள் செய்தார். பத்மநாபரை முழுமையாக தரிசிக்கும் சக்தியை முனிவர்களே பெறவில்லை என்பதே உண்மை.
பெருமாளின் வலது கரமாக விளங்குபவர், நம் குருநாதர் அகத்தியப்பெருமான் என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட அகத்தியப்பெருமானுக்கு, இறைவனுக்கு திருமேனியை செய்து சன்னதியை அமைத்து, தன் சித்த சமாதியை உருவாக்குகிற பாக்கியத்தை இறைவன் கொடுத்தார் என்றால், ராமபக்த ஆஞ்சநேயர் மேலும் ஒரு பெருமையை கொடுத்தார்.
கிழக்கு வாசல் வழி பத்மனாபாரை தரிசனம் செய்ய வந்தால் கொடிமரத்துக்கு அருகில் ஆஞ்சநேயர் சன்னதி இருப்பதை காணலாம். அவர் வெண்ணை சார்த்தப்பட்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பார். அனைவரும் தரிசிக்கலாம், ஆயின் அனுமனின் பாதத்தை காண முடியாது. ஏன் எனில், அனுமனின் பாதங்கள் இருப்பது, அகத்தியப்பெருமானின் தோள்களில்.
தவக்கோலத்தில் இருந்த ஆஞ்சநேயர், அனைத்து தேவர்களும், முனிவர்களும், இறைமூர்த்தங்களும், சித்தர்களும், நாரயணரின் பத்மநாபர் அவதாரத்தை கண்டு மகிழ்வதாக கேள்வியுற்று, தானும் அனந்தன் காட்டிற்கு எழுந்தருளினாராம். வெகு தூரத்தில் நிற்பதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை நிலவியது அனந்தன் காட்டில். அத்தனை உயர் ஆத்மாக்களும் சூழ்ந்து நின்று பத்மனாபரின் அருளை பெற்றுக் கொண்டிருந்ததினால், ஆஞ்சநேயருக்கு பத்மநாபரின் திருப்பாத தரிசனம் கூட கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தமுற்ற ஆஞ்சநேயரின் மனநிலையறிந்த பெருமாள், அகத்தியரை நோக்கி கண் அசைக்க, அவரும் அனுமனை கண்டார்.
"வாருங்கள் ராமதூதனே! நாங்கள் அனைவரும் பத்மனாபரின் திருமேனியை கண்டு மனம் மகிழ்ந்துள்ளோம்! தாங்களும் வந்து இறையருளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.
"நன்றி! அகத்தியரே! இருப்பினும் இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால், அடியேனுக்கு அவர் தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. பத்மநாபரின் திருப்பாத தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும். ஆனால், அத்தனை பேரும் அவர் முன் நின்று மறைப்பதால் ஒன்றுமே தெரியவில்லை!" என்றார் ஆஞ்சநேயர்.
"அடடா! தாங்களுக்கு பத்மநாபரின் தரிசனம் தானே வேண்டும்! இதோ, அடியேன் தோள்களில், தங்கள் திருப்பாதம் பதித்து ஏறி நின்று, அவரின் தரிசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி அவர் முன் நின்றார்.
அனுமனும் பத்மநாபரை, அகத்தியப்பெருமானின் தோள்களில் ஏறி நின்று தரிசித்துவிட்டு, மன நிறைவுடன், அகத்தியப்பெருமானை, அவரின் சேவைக்கு பாராட்டி ஆசிர்வதித்து சென்றார் என்பதை சுட்டும் விதமாக, அந்த ஆஞ்சநேயர் திருப்பாதத்தில் அகத்தியர் தோள்கள் இருப்பதாக வடிவமைத்துள்ளனர். ஆனால், அனுமன் திருப்பாதத்தை காண்பதே மிக அரிது என்கிற நிலையில் தான் இன்றைய சூழ்நிலை. அப்படியிருக்க, அகத்தியரை எங்கு பார்க்க!
சித்தன் அருள்.................. தொடரும்!