அகத்தியப்பெருமானின் அந்தநாள் இந்த வருட 2018 பூஜை (கோடகநல்லூர்) தொடர் நிறைவு பெற்றபின் ஒரு சில ஆன்மீக அனுபவங்களை, உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணம் வரவே, இந்த வாரத் தொகுப்பு.
ஓதியப்பர் மீது அபரிதமான நம்பிக்கையும், அன்பும் இயல்பாகவே அடியேனுள் அமைந்தது, ஒரு விதத்தில் நல்ல அனுபவங்களை வழங்கியுள்ளது. இறைவனாக, குருவாக, நண்பனாக, வழிகாட்டியாக, வேலைக்காரனாக இப்படி எத்தனையோ எண்ணக்கலப்பில், அவருடன் மனம் விட்டு எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, வரும் உத்தரவுகளை, சிரம் மேற்கொண்டு செய்து முடிப்பதில், ஒரு அலாதி இன்பம். நாள் செல்லச் செல்ல, அவரை தரிசித்து, அருள் பெற நிறையவே அலய வேண்டி வந்தது. பல முறை உடல் ஒத்துழைக்காத பொழுது, "உனக்கு வேணும்னா, இங்க வீட்டில் வந்து பாரு!" என்கிற நிலைக்கு வார்த்தைகள் பகிந்து கொண்ட பொழுது, சட்டென உரைத்து, நாக்கை கடித்துக் கொண்டேன். "அகங்காரத்தில் கூறவில்லை. எதுவுமே என்னுடையதில்லை. இது உன் இடம். எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம். என் உடலோ யாத்திரைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. இங்கு வாயேன்!" என்று மாற்றி விளம்பினேன். அதன் பின்னர் ஒரு சுகமான உறவு முறை அவருடன் வளர்ந்தது, என்பதுதான் உண்மை.
நிறைய அலைந்து, தரிசித்து, வந்த பின், ஒரு யோசனை வந்தது. அடியேன் அமர்ந்திருக்கும் அறையிலேயே, கம்பீரமாக அவர் நின்று கொண்டிருக்கிற ஒரு உருவச்சிலை கிடைத்தால், நேரம் காலம், சூழ்நிலை பார்க்காமல், அவரிடம், நம் மனஎண்ணங்களை சமர்பிக்கலாமே, என்ற யோசனை தோன்றியது. அதுவும் ஒரு ஆறு மாதத்துக்குள், 2 1/2 அடி உயர சிலையாகா வந்து அமர்ந்தது. (இது வந்த கதை, அதுவும் சுவாரசியமானது. அது பின்னர் உரைக்கிறேன்).
அப்படிப்பட்ட ஓதியப்பர் முன் அமர்ந்து, மனதில் தோன்றியதை எல்லாம் கூறிவிட்டு, இரவு உறங்கும் முன் பிரார்த்தனை செய்து, எல்லாம் உனக்கே சமர்ப்பணம், நல்லதே நடக்கட்டும், இங்கே இருந்து பார்த்துக்கொள், என கூறுவது, நித்தம் ஆனது. சும்மா சொல்லக்கூடாது, அவரும் விடிய விடிய, கண் இமைக்காமல் காத்து அருளுவார்.
ஒரு நாள், அடியேனுக்கு, ருத்ராக்க்ஷ மாலையில், ஸ்படிகத்தில் சிவலிங்கம் வைத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. வேண்டிக்கொண்ட பொழுது, 108 ருத்ராக்ஷத்தை திருச்செந்தூரிலிருந்து கொடுத்துவிட்டு, ஒரு ஸ்படிக லிங்கத்தை, காசியிலிருந்து கொடுத்து விட்டார். இரண்டும் வந்து சேர்ந்ததும், அசந்து போனேன். சும்மா ஒரு ஆசைக்காக கேட்டது, இத்தனை வேகத்தில் நடக்குமா? இவரிடம் மிக கவனமாக இருக்க வேண்டுமே. கூடவே, ஏதேனும் ஒரு "ஆப்பை" வைத்து விடுவாரோ என்று எண்ணினேன். இருப்பினும், வந்து சேர்ந்த சந்தோஷத்தில், உடனேயே மாலைகட்டி சிவலிங்கத்தை மாட்டி, சிவபெருமான் சன்னதியில் [ஒரு கோவிலில்] அவர் கழுத்தில் அணிவித்து, வீட்டுக்கு பத்திரமாக கொண்டுவந்தேன்.
வரும் வழியில், ஒரே யோசனை. என்னவோ சரியில்லையே. இது நமக்கென ஓதியப்பர் கொடுத்ததுதானா? மிக மிகச் சூடாக இருக்கிறதே. இதை அணிந்து கொண்டால், நம் உடல் மிக சூடாகிவிடுமே, என்றெல்லாம் தோன்றியது.
சரி! ஓதியப்பர் இருக்கிறார். அவரிடமே சில நாட்களுக்கு இருக்கட்டும், பின்னர் ஒரு முடிவெடுப்போம் எனத் தோன்றவே, அந்த மாலையை, ஓதியப்பர் கழுத்திலேயே மாட்டி விட்டேன். மிக மிக அழகாக இருந்தது.
"இது சரி, ஓதியப்பா! கொஞ்ச நாட்களுக்கு உன்னிடமே இருக்கட்டும்" எனக் கூறி மறந்துவிட்டேன். வியாழக்கிழமை, அகத்தியர் கோவிலில் உள்ள கிருஷ்ணர், அவர் பூ மாலையை தருவார். அதை கொண்டு வந்து, ஓதியப்பருக்கு சார்த்திவிடுவேன். கூடவே :இந்த மாலை உன் மாமன் கொடுத்துவிட்டார்! உனக்கு அணிவித்துவிட்டேன். இனி அடுத்த வாரம்தான் புது மாலை வரும். அதுவரை, இதைத்தான் நீ அணிந்து கொள்ளவேண்டும்" எனக் கூறிவிடுவேன்.
ருத்ராட்ச மாலை, இந்த மாலைக்கு அடியில் அவர் கழுத்தில் கிடக்கும். ஆனால், நினைவுக்கு வராது, வெளியேயும் தெரியாது. சில நாட்களில், ஓதியப்பரின் கழுத்தில் ருத்ராட்ச மாலை இருக்கிறது என்ற எண்ணம் அடியேனுள் இல்லாமல் போனது.
ஒரு முறை, வியாழக்கிழமை, பழைய மாலையை கழட்டிவிட்டு, புது மாலையை போடப் போன பொழுது, ருத்ராட்சமாலை சற்று வெளியே முகம் காட்டியது.
அதை எடுக்காமல் "எதுக்கு இப்ப இத ஞாபகப்படுத்துகிறாய்! அது உன்கிட்டேயே இருக்கட்டும். நேரம் வரும் பொழுது பார்க்கலாம்" என்று புது மாலையை போட்டுவிட்டேன்.
"அந்த மாலையில் இருக்கும் சிவலிங்கம் உன் பாதத்தை தொட்டபடி இருக்கிறது. அது சரியா இல்லையானு தெரியலை. இருந்தாலும், உனக்கு எல்லாமே சம்மதம்தான் என புரிகிறது. அது உன் கழுத்திலேயே இருக்கட்டுமே! நீ என்ன நினைக்கிறாய் என புரியவில்லை. நீயே தெளிவாக காட்டிவிடு!" என உரைத்தபின், அமைதியாகிவிட்டேன்.
அவர் என்ன காட்டினார், என்பது, அடியேனுக்கும் அவருக்கும் மட்டும்தான் தெரியும். வேறு யாரும் அருகில் இல்லை, யாரிடமும் இதை பற்றி கூறவில்லை.
போன வாரம், இரு வாரமாக அகத்தியரை தரிசிக்க முடியவில்லை என்ற மனக்குறையுடன், அகத்தியப் பெருமானை தரிசிக்க பாலராமபுரம் கோவிலுக்கு சென்றேன். கூடவே, மனதுள், பொதிகையில் இப்போதைய நிலை வருத்தமாக அமர்ந்திருந்தது. குருவை கண்டதும், வணக்கம் கூறிவிட்டு, நேராக "ஆதித்ய ஹ்ருதயம்" கூறி தக்ஷிணையாக அவருக்கு வாசியோக முறைப்படி கொடுத்தபின், மனதில் இருந்த பொதிகை வேதனைகளை, அவர் பாதங்களில் சமர்ப்பித்தேன்.
வழக்கம் போல், பூசாரி பிரசாதம் தந்தார். அதை வாங்கி பையில் வைத்துக்கொள்ள, பை இருக்கும் இடம் நோக்கி நடந்தேன். மனதுள் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பைக்குள் பிரசாதத்தை வைத்தபின், விடை பெற வேண்டி அகத்தியப் பெருமானை நிமிர்ந்து பார்த்தேன். ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியர் சன்னதியில் இருந்த பூஜாரி ஓடி வெளியே வந்து, அடியேனை நோக்கி,
"சாமி! இங்க வாங்க!" என்றழைத்தார்.
இளம் வயது பூஜாரி, மிகுந்த அகத்தியர் பக்தர், அடியேனுக்கும் அவரிடம் அபரிதமான அன்பு உண்டு.
அவர் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து, அகத்தியர் சன்னதியின் முன் போய் நின்ற அடியேனிடம்,
"ஒரு விஷயம் உங்களிடம் கேட்கட்டுமா!" என்றார்.
"சொல்லுங்க!" என்றேன், அமைதியாக.
"என்றேனும், என்றேனும் ஒருநாள், கோவிலுக்கு வரும் பொழுது, குருநாதருக்கு 108 ருத்ராக்ஷம் பதித்த மாலையில், ஒரு ஸ்படிக லிங்கம் கட்டி, கொண்டு தாருங்களேன். அவர் எனக்கு போட்டுக்க வேண்டும், என உங்களிடம் கேட்கச் சொன்னார்" என்றார்.
ஒரு வினாடி அசந்து போனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அவ்வளவுதானா! இல்லை வேறு ஏதேனும் கூறினாரா?" என்றேன்.
"நீங்க வீட்டுக்கு போக இறங்கிட்டீங்க. நான் உள்ளே அமர்ந்திருந்தேன். "பிடிடா அவனை. விட்டா ஓடிப்போயிடுவான். அப்புறம் பிடிக்க முடியாது. நான் கூறியதாகச்சொல்! எனக்கூறி ருத்ராக்க்ஷ மாலையை கேட்டார்" என்றார்.
இரு கைகளால், முகம் பொத்தி, நெற்றியை தாங்கிக்கொண்டு, கண் மூடி அகத்தியரிடம் மானசீகமாக விண்ணப்பித்தேன். "எங்க ஓடிப் போய்விடப் போகிறேன்! உங்களை விட்டு. அடியேனும், ஓதியப்பரும் பேசியதை ஒட்டுக் கேட்டீர்களா? சரி, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எதோ ஒரு நாடகத்தை நடத்துகிறீர்கள். ஓதியப்பர் உங்களுக்கு அந்த மாலையை கொடுக்க சொல்கிறார் என நம்புகிறேன்!" என்றேன்.
பின்னர் பூசாரியை பார்த்து, "சரி!" என ஒரு வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு, சில தீர்மானங்களை எடுத்தேன்.
"நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து மிகப் பெரிய பாக்கியத்தை அடியேனுக்கு கொடுக்க விரும்புகிறீர்கள். உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். அந்த சமர்ப்பணம் "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" சார்பாகவும், அனைத்து வாசகர்கள் சார்பாகவும், அனைத்து அகத்தியர் அடியவர்கள் சார்பாகவும், உங்கள் கழுத்தில் பரிமளிக்க வேண்டும்! இதுவே அடியேனின் வேண்டுதல்" என அவரை வணங்கி விடைபெற்றேன்.
அகத்தியர் அடியவர்களே, அகத்தியப்பெருமானின் கழுத்தில், ஓதியப்பர் அணிந்த அந்த ருத்ராக்க்ஷ மாலை அலங்கரிக்கப்போகிற, அந்த வியாழக்கிழமை, இன்று தான்- [31/01/2019].
எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன், கூடவே, நீங்களும், பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
சித்தன் அருள்......................... தொடரும்!