​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 10 January 2019

சித்தன் அருள் - 788 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 8


வணக்கம்!

அகத்தியப் பெருமானின் அந்தநாள் ~ இந்தவருட பூஜை, அகத்தியர் அடியவர்களின் உதவியுடன் தொடங்கியது. ஒரு நொடியில், அகத்தியப்பெருமான் வந்திருக்க வேண்டுமே, பூந்தோட்டத்தை சுற்றி ஒரு நடை நடந்துவிட்டு வரலாம் என்று தோன்ற, வெளியே வந்தேன்.

பூந்தோட்டம் பக்கம் அமைதியாக இருந்தது. ஒரு மரத்தின்  நிழலில் நின்று கோபுரத்தை நோக்கி சிந்தித்தேன். "வந்துவிட்டிர்களா " என்று  அடியேன் மனதுள் கேட்டது அவருக்கு கேட்டுவிட்டது போலும்.

மிக மெலிதாக தென்றல் வீச, அதனுள் துளசி, சந்தானம், ஜவ்வாது என அடியேனுக்கு பரிச்சயமான மணம் தவழ்ந்து வந்தது.

"சரி! மிக்க நன்றி! என பிரார்த்தித்துவிட்டு கோவில் வாசல் முன் புறமாக நடந்து வர, ஒரு அகத்தியர் அடியவர் ஓடி வந்து "உங்களை அர்ச்சகர் கூப்பிடுகிறார்" என்றிட, உள்ளே சென்றேன்.

அடியேனை கண்டதும், அர்ச்சகர்,

"சங்கல்ப்பம் பண்ணனும்! பெயர், நட்சத்திரம், காரணம் கூறுங்கள்" என்றார்.

"உங்களுக்குத் தெரியாதா!, இது அகத்தியப்பெருமான் நடத்துகிற பூஜை, ஆதலால் அவர் பெயர், ஆயில்ய நட்சத்திரம்" என்று கூறி நிறுத்தினேன்.

"காரணம்!" என்றார்.

"முதலில் லோகஷேமம்! இரண்டாவது அ கத்தியர் அடியவர்களும் அவர்கள் குடும்பம், சுற்றம்" என விவரித்தேன்.

சிரித்துக்கொண்டே, "ஸ்ரீ அகஸ்தியர் நாமதேயஸ்ய, அஸ்லேஷ நக்ஷத்ரே, கடக்க ராஸிதௌ......" என சங்கல்பத்தை தொடங்கி பெருமாள் பாதத்தில் பூவை வைத்தார்.

"என்ன பெருமாளே! உங்கள் வலதுகரமாக விளங்கும் எங்கள் குருநாதர் நடத்துகிற பூசையை, சிறப்பாக நடத்திக்கொடுங்கள்" என வேண்டிக்கொண்டேன்.

முதலில் எண்ணை காப்பு பெருமாளுக்கு போட்டுவிட்டு அதை பிரசாதமாக அனைவருக்கும் ஒரு சொட்டு தேகத்தில் புரட்டிக்கொள்ள கொடுத்தார், அர்ச்சகர். ஒரு அகத்தியர் அடியவர், அதை வாங்கி அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினார்.

பின்னர்  மந்திரங்கள், சூக்தங்கள் முழங்க, அபிஷேக ஆராதனை தொடங்கியது.

பெருமாளுக்கு வலது புறத்திலிருந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் அமைதி, அகத்தியர் அடியவர்கள் அமர்ந்திருந்தனர்.

பெருமாளுக்கும், தாயாருக்கும், பால்,  பஞ்சாமிர்தம், நெய், தேன், தயிர், 128 மூலிகைப்பொடி, வாசனாதி திரவியங்கள், மஞ்சள் பொடி, சந்தானம், பன்னீர் என தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.

முதல் நாள், பெருமாளுக்கு இளநீர் அபிஷேகம் செய்விக்கவேண்டும் என தோன்றி எத்தனையோ இடங்களில் தேடியும் கிடைக்கவே இல்லை. அடியேனின் நண்பர், திரு.ஸ்வாமிநாதனிடம், கிடைத்தால் வாங்கி வாருங்களேன் என வேண்டியிருந்தேன். அவர் எங்கேயெல்லாமோ தேடி ஒரு வழியாக ஐந்து இளநீர் கொண்டு வந்து தந்தார். அதை எடுத்துக் கொடுக்கவேண்டும் என்ற அவா வரவே, திரும்பி பார்த்தால், இருபதுக்கு மேற்பட்ட இளநீர் அங்கிருந்து. ஐந்து எப்படி இருப்பதாயிற்று என்று யோசித்தபடி நண்பரை வினவ, வந்திருந்த ஒரு சில அகத்தியர் அடியவர்கள்  கொண்டுவந்தார்கள் என பதில் வந்தது.

அதுவரை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அடியேன், சட்டென்று அடுத்த அபிஷேகமாக "இளநீரை" வாங்கி அர்ச்சகரிடம் கொடுக்க, அதை  கொடுத்த பொழுது, அவர் கை  விரலில் அடியேனின் விரல் பட்டது. "சுரீர்" என மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு அடியேனுக்கு ஏற்பட்டது. சட்டென்று, அவரை நிமிர்ந்து பார்க்க, அவர் "ஏதோ ஒரு சக்தி ஆட்கொண்டதுபோல" தோன்றினார். மந்திர ஜெபமும், அபிஷேகமும் எனக்கு முக்கியம் என்பது போல நடந்து கொண்டார். அவர், அவராக இல்லை, இங்கு எதுவோ நடக்கிறது என அவரை உற்று பார்த்துக்கொண்டே, ஒவ்வொரு இளநீராக எடுத்துக் கொடுக்க, ஒரு முறை கண்மூடி திறந்து பார்க்க, அங்கு அர்ச்சகரின் உருவம் தெரியவில்லை. ஒரு நிழல் அபிஷேக பூசை செய்வது போல் கண்டேன் என்பது உண்மை. அது கூட, அகத்தியர் குருநாதரின் அரூப ரூபமாகத் தோன்றியது.

அடடா! இப்படி ஒரு விஷயம் இங்கு நடக்கிறதா, என்று யோசித்தபடி, அதன் பின்னர் வாங்கிக்கொடுத்த "இளநீர்களை" விரல் படாமல் மிக கவனமாக கொடுத்தேன்.

சட்டென்று திரும்பி பார்த்த அர்ச்சகர், "என்ன! இளநீர் நிறைய இருக்கிறதே! பெருமாள் ரொம்ப குளிர்ந்து போய்விடுவாரே" என்றார், சற்று அர்த்த புஷ்டியுடன்.

அபிஷேகம் முடிந்த பின் திரை போடப்பட்டது. ஒரு அகலமான பாத்திரத்தில் நீர் எடுத்து, பிறர் அறியாமல், பச்சைக்கற்பூரம் கரைத்து, பெருமாளுக்கு அபிஷேகம் செய்யக் கொடுத்தேன்.

அர்ச்சகர் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, இதுவும் தேவைதான், என்றபடி எல்லா விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்தார்.

பின்னர் அலங்காரம் தொடங்கியது.

"உள்சன்னதியில், முதலில் தீபாராதனை, நிவேதனம். பின்னர் இங்கு உற்சவ மூர்த்திக்கு" என்றபடி மூலஸ்தானத்தை நோக்கி நடந்தார்.

கூட்டத்தின் ஒரு பகுதி, வேகமாக உள்ளே சென்றது.

"உள்ளே போய் தீபாராதனை பார்த்துவிட்டு வரலாமே!" என நண்பர் வினவ, "நாம் தான் விரும்பிய போதெல்லாம், இரவு பள்ளியறை பால் வாங்கி சாப்பிடும் வரை தரிசனம் செய்கிறோமே.  தீபாராதனையை எவ்வளவு அகத்தியர் அடியவர்களுக்கு தரிசிக்க முடியுமோ, அவர்கள் செய்யட்டுமே. விட்டுக்கொடுப்போம்! வெளியே உற்சவ மூர்த்திக்கு தீபாராதனை நடக்கும் பொழுது பார்த்து திருப்தி அடைவோம்" என்று கூறி வெளியே நின்றுவிட்டேன், நண்பர்களுடன்.

தீபாராதனை முடிந்து வெளியே வந்த அர்ச்சகர், உள்ளே சென்ற அனைவரும் வெளியே வந்து சேரக்காத்திருந்தார்.

கோவில் மணி முழங்க, மந்திர கோஷங்களுடன், பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது. அது ஒரு கண் கொள்ளாக்காட்சி என்பதுபோல், மனதுள் பதிந்தது.

"அப்பாடா ! ஒரு வழியாக, இந்த வருட அகத்தியர் பூஜையை மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்துவிட்டீர் பெருமாளே! உங்களுக்கும், அகத்தியப் பெருமானுக்கும், மிக்க நன்றி. இதுபோல், எல்லா வருடமும், இந்த நாளில், அனைத்து அகத்தியர் அடியவர்களும் வந்து கண்டு களிப்புற  ஆசிர்வாதம் செய்யுங்கள். உங்கள் சேய்கள் ஒவ்வொருவரும், தங்கள் வேண்டுதல்களை  கூறியிருப்பார்கள். அத்தனை பேர்களின், பிரார்த்தனைகளையும், நிறைவேற்றி கொடுங்கள்" என பெருமாளிடம் வேண்டிக்கொண்டேன்.

ஓரளவுக்கு அகத்தியர் அடியவர்கள் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொண்டதும், பூ பிரசாதம் அனைவருக்கும், சடாரியுடன் அளிக்கப்பட்டது. ஒருவர் தீர்த்தம் அளித்தார்.

மெதுவாக அர்ச்சகர் பக்கத்தில் நின்று "வேறு யாரிடமாவது இந்த வேலையை கொடுத்துவிட்டு வாருங்கள்! நாம் இருவரும் மூலஸ்தானம் வரை போகவேண்டும்!", எனக்கூறினேன்.

விஷயத்தை புரிந்து கொண்டவர், உடனேயே, வேறொருவரிடம், தீபாராதனை தட்டை கொடுத்துவிட்டு, உள்ளே சென்றார்.

சுற்றி இருந்த அகத்தியர் அடியவர்கள், என் நண்பர்களிடம், "மடப்பள்ளியிலிருந்து, பிரசாதத்தை எடுத்து, மேடைக்கு அருகில் வரிசையாக வைத்துக்கொண்டு, தயாராக இருங்கள். அடியேன் உள்ளே போய் பிரசாதத்தை வாங்கி வருகிறேன். வந்த பின், அகத்தியர் அடியவர்களுக்கு பிரசாத விநியோகத்தை தொடங்கலாம்" என்று கூறி உள்ளே சென்றேன்.

பெருமாளையும், அர்ச்சகரையும் பார்க்க முடியவில்லை. அத்தனை கூட்டம் உள்ளிருந்தது.

பெருமாள் பாதம், மார்பு, கரங்கள், தாயாரின் பாதத்தில் சார்த்தப்பட்ட "மஞ்சள் பொடி" பிரசாதத்தை உள்ளிருந்து பாத்திரத்தில் கொண்டு வந்து, ஒரு துணிப்பையுடன், அடியேனிடம் சேர்ப்பித்தார்.

"மிகுந்த நன்றியை" பெருமாளுக்கும், அர்ச்சகருக்கும் கூறிவிட்டு, பிரசாத விநியோகம் செய்கிற இடத்தை நோக்கி வந்தேன்.

அகத்தியர் அடியவர்கள், மிக அமைதியாக, வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

பிரசாத விநியோகத்துக்காக உதவிக்கு நின்று கொண்டிருந்த அகத்தியர் அடியவர்கள் வரிசையில், கடைசியாக சிறு திண்ணையில் அமர்ந்தேன்.

வானத்தை உற்று நோக்கினேன். நீர் விட்டு கழுவி சுத்தமாக்கப் போட்டதுபோல், மேகமின்றி, நீல வானமாக இருந்தது.

ஒரு சிறு குறுகுறுப்பு உடலில் ஓட, "என்ன பெருமாளே! உங்கள் குழந்தைகள், உங்களுக்கு இன்றைய தினம் செய்த பூசையை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களா! என்பதை ஏதேனும் ஒரு நிகழ்ச்சி வழி, காட்டிக்கொடுக்கக்கூடாதா?' என வேண்டிக்கொண்டேன்.

நிமிர்ந்து மறுபடியும் பார்க்க, கருடன் கோபுரத்தை வட்டமிடுவதை காண முடிந்தது.

ஒன்றுமில்லாத தெளிந்த ஆகாயத்திலிருந்து, மிக லேசாக, சத்தமின்றி, மழை பெய்தது.

இது போதும்! என நன்றியை கூறிய பின் பிரசாத விநியோகம் தொடங்கியது.

சித்தன் அருள்.................... தொடரும்!

7 comments:

 1. ஓம் ஶ்ரீ அம் அகத்தீசாய நமா ஓம்! எல்லாம் அகத்து ஈசனின் கருணை. இந்த விழாவில் என்னையும் பெருமான் கலந்து கொள்ள செய்ததும் அவன் அருள்தான்.

  அய்யனே!, சித்த மார்க்கத்தின் எளிய உரை பாதியில் இருக்கே, மீண்டும் மீன்டு வருமா?

  குருவடி சரணம்

  ReplyDelete
  Replies
  1. சற்று பொறுத்துக்கொள்க! கோடகநல்லூர் தொடர் நிறைவு பெற்றபின் அகத்தியர் அருளால், முயற்சிக்கிறேன்!

   Delete
 2. Dear Sir, This kind of detailing of each actions and reason clarify lot of doubts and messages given by our guru. I am considering Sithan arul as the message of our Guru. Very very kind of you sir. Describe the activities in same way so that person like me who are first step will understand the messages given by our Guru. Existence of our Guru. How to Go to Agastiyar Koodam if possible please share the website so that if Guru permits wil try next year.

  ReplyDelete
 3. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 4. குரு பாதங்கள் சரணம்...‌‌‌‌‌பேசுவதே ஒரு ‌‌‌‌கலை..‌‌‌‌இறையுடன் ‌‌‌‌பேசுவதென்பது ஒரு ‌‌‌‌வரம்.‌தங்கள் மூலமாக நாங்கள் அந்தவரத்தை அனுபவித்துக்கொண்ருக்கறோம்... நன்றி

  ReplyDelete
 5. naan enna pantrathu puriyala enakku agathiyar enna solluvar

  ReplyDelete
 6. ஐயா,வணக்கம் அடியார்கள் கூட்டத்தில் இந்த சிறியோன் சிறு வேண்டுகோள் திருவண்ணாமலை கீரிவலம் பற்றியும் அதன் வரலாறு மற்றும் உண்மைகள் பற்றியும் கூறுங்கள் ஐயா வணக்கம்

  ReplyDelete