​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 1 January 2019

சித்தன் அருள் - 786 - அகத்தியர் திருநட்சத்திர பூஜை - ஒரு அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு ஜெயராமன், அகத்தியர் அடியவர், பெங்களூரிலிருந்து, அகத்தியர் திரு நட்சத்திர பூசையின் பொழுது, தனக்கேற்பட்ட அனுபவத்தை, அடியேனிடம் பகிர்ந்து கொண்டார். அவர் அனுமதியுடன், உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

"786"வது தொகுப்பை, அடியேன் எழுதுவதற்காக மாற்றி வைத்திருந்தேன். "நீ என்ன தீர்மானம் பண்ணுவது? அடுத்தவருக்கு அந்த வாய்ப்பை கொடு" என்ற எண்ணம் வரவே, மெயில் பார்த்தால், திரு ஜெயராமன், தனது அனுமதியை தந்திருந்தார். நல்லது செய்ய வேண்டும் என்றால், உடனேயே செய்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தில், இப்பொழுதே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இனி, திரு ஜெயராமன் அவர்கள் கூறியதை அவர் பக்கம் நின்று பாருங்கள்.

"ஓம் அகத்தீசாய நமக......ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி......."

இந்த வாரம் பாண்டிச்சேரியில் திரு. சுவாமிநாதன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய பூசை மற்றும் அகத்தியர் லோபமுத்ரா தாயார் திருமணம், லக்ஷ்மி நரசிம்மர் தேவி திருமண விழாவில் கலந்து கொண்டேன். அந்த அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

விழா தொடங்குவதற்கு (ஆம் மிக சிறப்பான ஒரு விழாவாக நடந்தது)  10 நாட்களுக்கு முன்பே எனக்கு திரு.சுவாமிநாதன் மற்றும் அவருடைய மனைவி திருமதி. சித்ரா சுவாமிநாதன் அவர்களிடமிருந்து விழாவில் கலந்து கொள்ள, அழைப்பு வந்து விட்டது. டிசம்பர் 25 எனக்கு அலுவலகம் விடுமுறை இல்லை அதனால் எனக்கு விடுப்பு கிடைக்காது என்றும் கூறினேன். இருந்தாலும் 2 நாடகளுக்கு ஒரு முறை என்னை கூப்பிட்டு அவசியம் வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்கள். நான் என்னுடைய சூழ்நிலையை விளக்கியும் அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை அகத்தியரிடம் முறையிடுங்கள் எல்லாம் அவர் பார்த்துகொள்வார் என்றுதான். 

இதனிடையில் தாங்கள் சித்தன் அருள் வலை தளத்தில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் அகத்தியர் ஆயில்ய பூசை அருகில் எங்கு நடந்தாலும் கலந்து கொண்டு, அவர் அருள் பெற வேண்டும் என்று பதிவிட்டு இருந்தீர்கள். சரிதான் இனி எல்லாம் அவர் செயல். அவர் பார்த்துக்கொள்வார் என்று வீட்டில் அகத்தியர் முன்பு தங்கள் விழாவில் கலந்து கொள்ள எந்த தடைகளும் இருக்க கூடாது என்று, ஒரு வேண்டுதலை அவரிடம் சமர்பித்தேன்.

அன்றே அலுவலகத்தில் என்னுடைய மேலாளரிடம் விடுப்பு கோரிக்கையை வைத்தேன்.எந்த தடையும் இல்லாமல் விடுமுறைக்கு ஒப்புதல் கிடைத்தது. 

அதன்பிறகு எதிர்பாராத விதமாக சனிக்கிழமை இரவு சொந்த வேலையாக சென்னை கிளம்ப வேண்டி இருந்தது. மறுபடியும் மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரமே பெங்களூர் திரும்ப வேண்டும். மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை இரவு பாண்டிச்சேரி கிளம்ப வேண்டும். உடம்பு ஒத்துழைக்க வேண்டுமே என்று ஒரு சிறு கவலை ஆட்கொண்டது. மிகவும் சோர்வாக உணர்ந்ததால் சரி இந்த முறை பாண்டிச்சேரி செல்ல வேண்டாம், என்று முடிவெடுத்தேன். ஆனால் முடிவெடுப்பது நாம். முடித்து வைப்பது அகத்தியர் என்று இந்த 2 சம்பவங்கள் மூலம் எனக்கு உணர்த்தி விட்டார். 

ஞாயிற்றுக்கிழமை காலை சொந்த வேலையை முடித்து கோயம்பேடு நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். உடல் சோர்வில் கண் அசந்திருந்தாலும் என் மனதில் இந்த நிலையில் நாளை பாண்டிச்சேரி செல்ல முடியுமா! என்ற நினைப்புடன் அமர்ந்திருந்தேன். எதேச்சையாக ஒரு நிறுத்தத்தில் (காசி நகர் பேருந்து நிறுத்தம்) மூடிய  கண்களை மெல்ல திறந்து பார்த்தபோது, பளிச்சென்று அகத்தியர் படம்,  ஒரு பேருந்து நிறுத்ததில் ஒட்டப்பட்டிருந்தது. அகத்தியர் சூட்சும நாடிக்கான விளம்பரம்தான் அது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அசந்து விட்டேன். என்னடா நாம் விட்டாலும் அவர் விட மாட்டார் போலிருக்கிறதே என்று அப்போதே தீர்மானித்து விட்டேன்.  உடல் சோர்வு பாதி சரியாகி விட்டதாக ஒரு உணர்வு. சரி என்னவோ எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று அவரை பிரார்தித்தேன். இரண்டாவதாக கோயம்பேடு பேருந்து நிறுத்ததில் இறங்கியவுடன் காலை சிற்றுண்டியை முடித்து மீதி பணத்தை வாங்கினேன். அதில் 786 என்ற எண்ணுள்ள 50 ரூபாய் நோட்டு என்னிடம் வந்தது. சரி இதுவும் அகத்தியர் அருள்தான். நம்மை எப்போதும் வழிகாட்ட, நம் கூடவே இருக்கிறார் என்று எண்ணி, அவருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தேன்.

மறுநாள் திங்கட்கிழமை சீக்கிரம் அலுவலக வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டேன். சிறிது சோர்வாக உணர்ந்தாலும் அவருடைய விழாவில் கலந்து கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே என்னுள் இருந்த சிறிது சோர்வையும் விரட்டி விட்டது. என்னுடைய தங்கை பூசை பொருட்கள் செலவை தாமே ஏற்பதாக சொன்னார்கள். பிறகு சிறிது பூசைப் பொருட்களை வாங்கிய பிறகு, இரவு பாண்டிச்சேரி கிளம்பினேன். கிளம்பும் முன்பு வழக்கம் போல் அகத்தியரிடம்,  பயணத்திற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது. உங்களுடைய பார்வை என்னை சுற்றி ஒரு கவசமாக இருந்து என்னை பாதுக்காக்கட்டும் என்று மனதார பிரார்த்தனையை சமர்பித்து விட்டு கிளம்பினேன்.  நல்ல வேளையாக அன்று பேருந்தில் முன் பதிவில் இடம் இருந்தது. வருவதற்கும் சேர்த்து முன்பதிவு செய்து கொன்டேன்.

சரியாக காலை 5.30 மணிக்கு திரு. சுவாமி நாதன் அவர்கள் இல்லம் சென்றடைந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் மொத்த குடும்பமும் என்னை வரவேற்றது. வழக்கம்போல் அவர் இல்லமெங்கும் ஒரு தெய்வீக நறுமணம் சூழும்  லக்ஷ்மி கடாக்ஷத்தின் அருளை உணர முடிந்தது. பிறகு குளித்து விட்டு அகத்தியர் லோபமுத்திரை அபிஷேகத்தை காணத்  தயாரானேன். என்னால் ஆன சிறு உதவிகளை அவருக்கு செய்தேன். இடையில் அவர் இல்லத்தில் புதிதாக எழுந்தருளியிருக்கும் காஞ்சி  மகாப் பெரியவரையும் தரிசித்தேன்.

சரியாக 6.45 மணிக்கு அபிஷேகம் தொடங்கியது. அப்பப்பா...... அரூபமான நறுமணம் ஒருபக்கம்.......அருமையான சாம்பிரானி  புகையுடன் அதிகாலை பனிமூட்டம் கலந்த அபிஷேக மூலப்பொருட்களின் வாசனை மறுபுறம். அந்த சமயம் சூரியனின் ஆரம்ப ஒளிக்கற்றைகள் அபிஷேகத்தில்  இருக்கும் அகத்தியர்  சிலை மேல் பட்டு பொன் போல் ஜொலித்த அவர் திருமேணி ஒருபுறம்.  சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா. சூர்ய பகவானே கண் குளிர அபிஷேகத்தை பார்திருப்பார் என்று தோன்றியது.  சரியாக 1 மணி நேரத்திற்கு மேலாக அகத்தியர் லோபமுத்திரை தாயார் மற்றும் இன்னும் பல தெய்வங்களுக்கும் மிகவும் அருமையாக அபிஷேகம் நடைபெற்றது.  அந்த சமயம் என்னை அகத்தியருக்கு தேன் அபிஷேகம் செய்ய சொல்லி திரு. சுவாமிநாதன் அவர்கள் கூறினார்கள். அபிஷேகம் செய்யும்போது என்னுடைய பிரார்த்தனையை, சமர்பிக்க சொன்னார்கள். சரி என்று சொல்லி நான் அகத்தியருக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தவுடன் அவரிடம் என்ன கோரிக்கை வைப்பது என்ற நினைப்பு எதுவும் இல்லாமல், என்னை மறந்து அவருக்கு ஆனந்தமாக அபிஷேகம் செய்து வந்தவுடன் இது போதும் வேறு எதுவும் வேண்டாம் என்று அவருக்கு ஒரு நன்றியை மட்டும் தெரிவித்தேன். 

அபிஷேகம் முடிந்து ஒருபுறம் ஹோமத்திற்கான் ஏற்பாடுகள் ஆரம்பமாகின. மறுபுறம் அகத்தியர் லோபமுத்திரை தாயார் திருமண அலங்காரம் தொடங்கி இருந்தது. இதனிடையில் அடியவர்கள் பசி தீர ஒரு சிறிய காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹோமம் செய்ய வேண்டிய அந்தணர் வருவதற்கு சிறிது கால தாமதமாகும் நிலை ஏற்பபட்டதால் பக்தர்கள் அனைவருக்கும் சிவ புராணம் புத்தகம் கொடுக்கப்பட்டு  ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி என்று ஒரு  தெய்வீக இன்னிசை தொடங்கியது.....ஒருபக்கம் சிவ புராணம் முழங்க மறுபக்கம் அபிஷேக அகத்தியர் ராஜ அலங்காரத்துடன் மாப்பிள்ளை அகத்தியராக லோபா முத்திரை தாயார் மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் தேவி சமேதமாக திருமணத்திற்கு தயாராக இருக்க, தேவாதி தேவர்களும் அனைத்து சித்தர்களும் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வந்து விட்டதாக ஒரு ஆனந்த உணர்வு, அந்த சமயத்தில் தோன்றியது.

சிவ புராணம் முடிவதற்கும் அந்தணர் வருவதற்கும் மிக சரியாக இருந்தது. ஹோமம் மெதுவாக தொடங்கியது. நவ தானியங்களை சேர்த்து விட்டு மந்திர உபாசனையுடன் யாகம் தொடர அக்னி கொழுந்து விட்டு எரிந்தது. யாகத்தில் புகைப்படம் எடுக்க சில படங்களில் அகத்தியர் உட்பட நிறைய தெயவங்களின் ரூபங்கள் பதிவாகி இருந்தன. அவர் அரூபமாக வந்திருக்கிறார் என்பதற்கு வேறு எதுவும் சாட்சி தேவையில்லை. படிப்படியாக ஹோமம் வளர வளர, அதன் முடிவில் பட்டு வஸ்திரம், தாம்பூலம் கனி வகைகள் சேர்த்து அக்னி தேவனுக்கு ஆஹுதி கொடுக்கப்பட்டு, ஹோமம் நிறைவு பெற்றது. ஹோமத்திற்கு இடையில் அகத்தியர் லோபமுத்ரா தாயார் மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் தேவி திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. அந்த சமயம் உக்ர நரசிம்மர் திருமண கோலத்தில் முகம் முழுவதும் புன்னகையுடன் தம்பதி சமேதராக ஆனந்தமாக தோன்றினார். அந்த சிரிப்பு முகம் இன்னும் என் மனதை விட்டு அகலவிலை அய்யா.

இது அகத்தியர் விழா என்பதில் சிறிதும் அய்யமில்லை. ஏனென்றால் அவ்வளவு சிறப்பாக நடைபற்றது. அனைத்து வைபவங்களும் முடிந்த பின்பு தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. பிறகு அடியவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கல்யாண விருந்து சாப்பிட்டு முடித்த பின்பு அருட்பிரசாதத்துடன் தாம்பூலப் பை வழங்கப்பட்டது. அனைவரும் அகத்தியருடைய அருளை அன்று பெற்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.        

எனக்கு அன்று இரவுதான் பேருந்து என்பதால் அவர் வீட்டில் இருதேன். அனைவரும் சென்ற பின்பு அகத்தியர் லோபமுத்திரை தாயாருக்கு நன்றி சொன்னேன். மீண்டும் என்னல் ஆன சிறு உதவிகளை (பூசை பொருட்களை பிரித்து எடுத்தல்) அன்று இரவு அவர் இல்லத்தில் இரவு சிற்றுண்டியை முடித்து கிளம்பினேன். பிரியா விடை கொடுத்து திரு.ஸ்வாமிநாதன் குடுப்பத்தினர் அன்புடன் என்னை வழி அனுப்பி வைத்தார்கள்.

மறு நாள் அதிகாலை இல்லம் வந்து சேர்ந்தவுடன் அகத்தியப் பெருமான் முன்பு எனக்கு கொடுத்த அபிஷேகப் பொருள்கள் மற்றும் தாம்பூல பையை வைத்து இதைவிட வேறு என்ன பேறு வேண்டும் என்று அவருக்கு மானசீகமாக நன்றியை தெரிவித்தேன். 

இப்படிக்கு
ஜெயராமன்
பெங்களூர்

சித்தன் அருள்............... தொடரும்!

5 comments:

 1. இன்று எனக்கு 786 நம்பர் போட்ட ஒர் நூறு ரூபாய் கிடைத்தது...ஓம் அகஸ்திய குருவே சரணம்...

  ReplyDelete
 2. If we receive many 786 notes , shall we give to others except one note or keep all with us Sir ?

  ReplyDelete
 3. அகத்தியப்பெருமானின் அருள் வாக்கின்படி பார்த்தால், "ஒருவருக்கு இறை அருள் நிறைய இருக்குமென்றால், அவனது பூர்வ, இந்த ஜென்ம புண்ணியமாயினும், அத்தனையையும் இறைவன் ஒரு சோதனைக்காக நடத்துகிறார். இவன் அது இல்லாதவர்களுக்கு, அதை கொடுக்கிறானா, அது அவர்களுக்கு பின்னர் நல்லதை செய்கிறதா, என்கிற சோதனை. ஆதலால், நம்மிடம் உள்ள, எந்த இறை அருளையும், பிறருடன், அவர்கள் வாழ்க்கை நன்றாகா அமைய பிரார்த்தித்து கொடுத்தால், அவர்களும் நல்ல படியாக முன்னேறுவார்கள். நாமும் சோதனையில் வென்றுவிடுவோம்." பிறருக்கும், பிரார்த்தித்து கொடுங்கள். உங்கள் ஆத்மா, கர்மா சுத்தமாகத் தொடங்கிவிடும். பலனை எதிர் பார்க்காதீர்கள்.

  அக்னிலிங்கம்!

  ReplyDelete
 4. Thank you very much for your kind reply. Om guruvae saranam!!

  ReplyDelete
 5. yes, you are correct aiah! om agatheesaya namah

  ReplyDelete