“வேங்கடவனே! அஞ்சனையின் புத்திரனுக்கு ‘ஹனுமான்’ என்று பெயர் வைத்தது மிகப்பெரும் அதிர்ஷ்டம்தான். என்ன இருந்தாலும் என் மகனை வாயு பகவானுக்கு தத்து கொடுத்தது எனக்கே பிடிக்கவில்லை. ஏதோ ஒன்று என் மனத்தை உறுத்திக் கொண்டு இருக்கிறது” என்று கேசரி, அஞ்சனையிடம் புலம்பத்தான் செய்தான்.
“நாதா! எதுவும் நம் கையில் இல்லை. எல்லாம் கலியுக நாதனான வேங்கடவன் பார்த்துக் கொள்வான். எனக்குக் கூட உள் மனத்தில் மிகப் பெரும் மனவருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய?”
“நீ வேங்கடவனிடம் சொல்லி, நம் குழந்தையை நம்மிடமே பெற்று வந்திருக்கலாம். ஏனோ வாய் மூடி மௌனமாகி விட்டாய். கஷ்டப்பட்டுப் பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்தாற் போல் நிற்கிறோம்.”
“கேசரி மன்னா! நான்தான் வேங்கடவன் சொல்லுக்கு வாயடைத்துப்போய் நின்றேன் என்றால், தாங்களாவது வேங்கடவனிடம் போராடி மறுத்து குழந்தையைத் திரும்பப் பெற்றிருக்கக் கூடாதா? அப்போது தாங்களும் தான் மௌனமாக இருந்து விட்டீர்கள்.”
“அஞ்சனை! ஒன்று செய்யலாமா? மீண்டும் வேங்கடவனிடம் சென்று நம் ஏக்கத்தைச் சொல்லி வாயுபகவான் தத்து எடுக்கும் முன் தடுத்துப் பார்க்கலாமா?” என்று குழந்தையின் மீதுள்ள பாசத்தைக் காட்டி நாத் தழுதழுக்க கேசரி கேட்டான்.
“நாதா! ஹனுமான் நம் குழந்தைதான். அவன் வேறு எங்கும் சென்றிடவில்லை. நம்மிடம்தான் வளரப்போகிறான். வாயுபகவான் அவ்வப் போது வந்து அவனுக்கு வளமான ஆரோக்கியத்தையும் ஞான பலத்தையும் கொடுக்கப் போகிறார். அவ்வளவுதானே! இதற்கு ஏன் கலங்குகிறீர்கள்? நாம் மறுபடியும் வேங்கடவனிடம் சென்று முறையிடுவது நன்றாக இருக்காது.” என்றாள் அஞ்சனை.
அதற்குப் பிறகு, கேசரியால் பதில் ஒன்றும் பேச முடியவில்லை. முதலில் தலையை ஆட்டி விட்டு, இப்பொழுது குழந்தையைப் பிரிய மனமில்லாமல் இருதலைக் கொள்ளிமேல் எறும்பு போல மனத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கேசரியை நினைத்து அஞ்சனைக்கு அழுகை வந்தது.
“எதுவும் நிரந்தரமில்லை” என்னும் தத்துவத்தை இந்தப் பூலோக மக்களுக்கு தனக்குப் பிறந்த குழந்தையின் மூலம் பரம் பொருளான திருமலைவாசன் வெளிப்படுத்துகிறான் போலும் என்று அஞ்சனை எண்ணிக்கொண்டு, தன் கணவன் கேசரியைச் சமாதானப்படுத்த அழைத்துச் சென்றாள்.
மறுநாள் காலை வேங்கடவனை தரிசிக்க அஞ்சனை மாத்திரம் சென்றாள். வேங்கடவன் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக கேசரி அஞ்சனையுடன் செல்லவில்லை.
“என்ன ஏதாவது குழப்பமா? கேசரி ஏன் வரவில்லை?” என்று திருமலைவாசன் கேட்டார் அஞ்சனையிடம்.
“பின்னால் வருவார். அவருக்கு மனமே சரியில்லை”
“என்ன குறை?”
“எல்லாம் பிள்ளையின் மீதுள்ள பாசம்தான்”
“கேசரிக்கு, தன் பிள்ளையைத் தத்து கொடுக்க விருப்பமில்லை போலிருக்கிறது. அவ்வளவுதானே?”
“ஆமாம். முதலில் தங்கள் முன்பு தலையை ஆட்டினார். பின்னர் என்னிடம் வந்து புலம்புகிறார். இரவு முழுவதும் தூங்கவே இல்லை.”
“அப்படியென்றால், வாயு பகவானை அழைக்கிறேன். நேரிடையாகவே அழைத்துப் பேசிவிடலாமே”
“திருமாலே! தாங்கள் எங்களைச் சோதிக்க வேண்டாம். எல்லாமே தங்கள் திருவுள்ளப்படியே நடக்கட்டும்.”
“அஞ்சனை! உன் மனம் பக்குவப்பட்டு விட்டது. கஷ்டப்பட்டு ஈன்றெடுத்த குழந்தையை உடனடியாக தத்து கொடுக்க யாருக்குமே மனம் வராது. நீ தெய்வ அம்சம் பொருந்தியவள். தைரியமாக முன்வந்து நான் சொன்னதை ஏற்றுக் கொண்டாய். ஆனால் கேசரி இன்னும் என் வேண்டுகோளை ஏற்கவில்லை போலும்...”
“பெருமாளே! கேசரியை நான் சமாதானப்படுத்திக் கொள்கிறேன். அதோடு அவருக்கு இந்த திருமலையில் ஒரு விநாடி கூட இருக்கப் பிடிக்கவில்லையாம். இன்றே இந்த மலையை விட்டுக் கிளம்பவேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார். தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்?”
“அப்படியா! அனுமதி கொடுத்துவிட்டால் போயிற்று. ஆனால் ஒன்று. இந்த மலையில் இன்னும் பத்து நாளில் மிகப்பெரும் யாகமும் நாமகரணமும் நடக்கப்போகிறது. அதை முடித்துவிட்டு ஆனந்தமாக நீங்கள் ‘அனுமனோடு’ உங்கள் ராஜ்யத்திற்குச் செல்லலாமே” என்றார் திருமலைவாசன்.
“தங்கள் உத்தரவுக்கு நான் கீழ்ப்படிகிறேன். அதே சமயம் கேசரியைக் கட்டுப்படுத்தி இங்கே வைப்பது என்பது சிரமம்.”
“அதுசரி, கேசரியை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த யாகமும் நாமகரணமும் எதற்கு என்று கேட்கவில்லையே” என்று திருமலைவாசன் சிரித்துக் கொண்டே அஞ்சனையிடம் கேட்டார்.
“சொல்லுங்கள் வேங்கடவா!”
“நீ வந்து இங்கு தவம் செய்து, தெய்வீகக் குழந்தையைப் பெற்றாய் அல்லவா? உன் பெயரில் இந்த பூலோகத்தில் பிரளயம் ஏற்பட்டாலும், அந்த பிரளயத்தையும் தாண்டி இந்த ஏழுமலைகளில் ஒன்றாக விளங்க வேண்டும் என்பதற்காக நாமகரணம் சூட்டப் போகிறேன்.”
“என் பெயரிலா?”
“ஆமாம். அஞ்சனைக்கு இந்தத் திருவேங்கடவன் கொடுக்கும் அன்புப்பரிசு. இனிமேல் நீ வாழ்ந்த, தவம் புரிந்த அந்த இடத்திற்கு ‘அஞ்சனாத்திரி’ என்று பெயர் வைக்கப்போகிறேன்.”
“மிக்க மகிழ்ச்சி வேங்கடவா! தங்களுக்கு இந்த அஞ்சனை தன்யளானேன்.”
“அது சரி! ஒரு சிறு சந்தேகம்.”