​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 31 March 2016

சித்தன் அருள் - 286 - "பெருமாளும் அடியேனும்" - 47 - மறுபடியும் கலிபுருஷனின் விளையாட்டு ஆரம்பம்!


ஆதிசேஷனும் கருடாழ்வாரும் சனீஸ்வரப் பெருமானும் திருமலையில் ஒன்று சேர்ந்திருந்த காட்சியை எளிதில் வர்ணிக்க முடியாது. என்றாலும், இதைக் கண்டு வெறுத்த ஒரே நபர் ​கலிபுருஷன் தான்.

யார் யாரையெல்லாம் நம்பினோமோ, அவர்கள் அத்தனைபேரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்ற கோபத்தின் எல்லையிலிருந்த கலிபுருஷனை திருமால் நேருக்கு நேர் பார்த்தார்.

சூரியப் பிரகாசம் போன்ற கருணை கொண்ட பெருமாளை நேருக்கு நேர் சந்தித்தால் எங்கே தானும் திருமாலின் பாதத்தில் வீழ்ந்து விடுவோமோ என்ற பயம் கலிபுருஷனுக்கு ஏற்பட்டது. எனவே, பெருமாளை நேரிடையாகப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.

"என்ன கலிபுருஷா! மூன்றாவது முறையாகவும் என்னிடம் தோற்றுப் போனாய். உன் செயலை நிறுத்திக் கொண்டால், உனக்கும் மனிப்பு கிடைக்கும். என் உள்ளத்திலும் இடம் கிடைக்கும். என்ன சொல்கிறாய்?" என்றார் பெருமாள்.

"தங்களுடைய அன்புக்கு நன்றி. அதே சமயம், பிரம்மா எனக்கிட்ட கட்டளையைத்தான்  அறிவீர்கள். அதை நான் நிறைவேற்றியாகவேண்டும். இனிமேல் பூலோகத்தில் என் ஆட்சிதான், பிரளயம் ஏற்படும்வரை இருக்கப் போகிறது. இதற்கு தாங்கள் தடை போடுவது, தடுத்து நிறுத்துவது, எவ்விதத்திலும் உகந்ததல்ல" என்று காட்டமாகவே பேசினான் கலிபுருஷன்.

"பரவாயில்லையே! இத்தனை தோல்விகளை சந்தித்த பின்பும் துணிச்சலோடு தன்னம்பிக்கையோடு தன்னந்தனியாக நிற்கிறாயே. உன் தைரியத்திற்கு என் பாராட்டுக்கள்" என்றார் வேங்கடவன்.

"தாங்கள் எப்படி பேசினாலும் அந்தப்  பேச்சில் நான் மயங்கப் போவதில்லை. நானென்ன சனீஸ்வரனா? கருடாழ்வாரா? அல்லது ஆதிசேஷனா? உங்கள் காலடியில் விழுவதற்கு? இன்றைக்கு உங்கள் கை ஓங்கலாம்.  ஆனால் இனி ஏழாயிரம் ஆண்டுகள் பூலோகம் என் கைவசம்தான். அப்போது எந்த வேங்கடவன் வந்தாலும், பூலோகத்தில் கலிசேஷ்டைகளை தடுத்து நிறுத்த முடியாது" என்றான் கலிபுருஷன், கோபமாக.

"ஏன் கலிபுருஷா இத்தனை கோபம்? இதோ பிரம்மா அருகில்தான் இருக்கிறார். அவரிடம் நான் கேட்டுக்கொண்டால், கலிபுருஷன் செயல்பாடுகள் முற்றிலும் ஒழிந்து போகும். இல்லையா பிரம்மதேவரே?" என்று அருகிலிருந்த பிரம்மாவைப் பார்த்துக் கேட்டார் திருமால்.

"மன்னிக்கவும் வேங்கடவா! பூலோகத்தில் "கலி" அவதாரம் அவசியம் தேவை. கலி முற்றும் பொழுது பிரளயம் ஏற்படும். பிரளயம் ஏற்பட்டால்தான் என்னால் புதிய உலகத்தைப் படைக்க முடியும். எனவே, தங்கள் வேண்டுகோளை பிரம்மா ஏற்பதற்கில்லை" என்று பிரம்மா சட்டென்று சொன்னதும், இதை வேங்கடவன் பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

"சரி! சரி! நீ உன் வேலையை செய். உன்னால் பாதிக்கப்பட்டு என்னிடம் உதவி கேட்க வந்தவர்களை மட்டும் நான் கைவிடமாட்டேன். ஆனால் ஒன்று உன் கலியின் பாதிப்பு தேவர்களிடம் இருந்தாலோ, என்னிடம் பாதசரணம் புகுந்தவர்களிடம் இருந்தாலோ, நான் வெகுண்டு விடுவேன். எனவே, சற்று யோசித்து செயல்படு" என்றார் பெருமாள்.

"வேங்கடவா! உன் யோசனைக்கு நன்றி. நான் இனி உன் பக்கத்தில் வரமாட்டேன். இது உயிருக்கு பயந்து அல்ல. பூலோக மக்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஓட்டிவிட்டால் போதும்" எனக் கொக்கரித்தான் கலிபுருஷன்.

அப்போது, வாசலில் சப்தம் கேட்க, திரும்பி பார்த்தவர்கள் அனைவரும் "நிலோத்தும்பிகை" (சனீஸ்வரனின் மனைவி நீளா) தன் தோழிகள் சகிதம் பூரண கும்பத்தோடு வேங்கடவனை நோக்கி வந்தாள். திருமாலின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.

"என் கணவர் திருந்திவிட்டாரென்று கேள்விப்பட்டேன். எல்லாம் தாங்கள் அருள்தான். இதை என்றும் மறக்கவே மாட்டேன்" என்ற நீளாம்பிகை, திருமாலின் பொற்பாதங்களில் வீழ்ந்தாள்.

திருமால் பரவசப்பட்டார். அருகிலிருந்த சனீஸ்வரனை அழைத்து "இனி நீங்கள் ஒரு போதும் ஒருவரை  ஒருவர் விட்டு பிரியக் கூடாது" என்று அன்போடு ஆணையிட்டார்.

மரியாதைக்கு கூட எதுவும் பேசாமல் அத்தனை கட்டுக்காவலையும் தாண்டி விறு விறுப்பாகவும், வேகமாகவும் வெளியேறினான் கலிபுருஷன். அவனைத் தடுத்து நிறுத்த யாரும் முயற்சி செய்யவில்லை.

கலிபுருஷன் சென்றதும், "இனி, கருடாழ்வாருக்கு மட்டுமல்ல, ஆதிசேஷனுக்கும், சனீச்வரனுக்கும் கூட அற்புதமாக விழா எடுக்கலாம்" என்றார் பெருமாள்.

"திருமால் உத்தரவு கொடுத்தால் அப்படியே நிறைவேற்றுகிறோம்" என்ற தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஒரே குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். ஆதிசேஷன் புளங்காகிதம் அடைந்தான்.

சனீஸ்வரனுக்கோ சந்தோஷம் தாங்க முடியவில்லை. கருடாழ்வாரோ அனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

அடுத்த நாள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஐங்கரன் வேள்வியோடு திருமலையில் விழா ஆரம்பமாயிற்று. எங்கு பார்த்தாலும் மங்கள இசைகள், வாத்தியங்கள் முழங்கின.

திருமலையில் எல்லோர் முகத்திலும் சந்தோஷக்களையும், தெய்வீகக் களையும் இருந்தது. யார் முகத்திலும் வாட்டமில்லை. நாராயணா! நாராயணா என்ற கோஷம் விண்மட்டும் எதிரொலித்தது. சந்தோஷமான பேச்சுக்களும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் குறைவின்றி ஆரம்பமாயின.

இந்த விழாவை கண்டு மனம் பொறுக்காத கலிபுருஷன், எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்தி ஆதிசேஷனையும், கருடாழ்வாரையும், சனீச்வரனையும் பழிவாங்க நினைத்தான்.

எப்படி செய்வது? என்று புரியவில்லை. கடைசியில், சமையற்கட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்த அவன், வரிசை வரிசையாக வைக்கப் பட்டிருந்த உணவுப் பண்டங்களின் மேல் அவன் பார்வை விழுந்தது.

"ஆஹா" என்று தன்னைத்தானே "சபாஷ்" சொன்னவன் யாருக்கும் தெரியாமல் அத்தனை பண்டங்களின் மீதும் விஷத்தைக் கொட்டினான். இதனால், அங்கிருந்த உணவுப் பண்டங்கள் அத்தனையும் விஷமாயின.

சித்தன் அருள்.................... தொடரும்!  

1 comment:

  1. Sir, thank you. 3 important points are stated here:
    (1) The length of Kali yuga is 7000 years. “ இனி ஏழாயிரம் ஆண்டுகள் பூலோகம் என் கைவசம்தான்”

    (2) Lord Venkateswara has a special affection and protection for his surrendered devotees. “உன் கலியின் பாதிப்பு தேவர்களிடம் இருந்தாலோ, என்னிடம் பாதசரணம் புகுந்தவர்களிடம் இருந்தாலோ, நான் வெகுண்டு விடுவேன். எனவே, சற்று யோசித்து செயல்படு"

    (3) Saniswar, who initially went against Perumal, had a change of heart and re-joined the Divine side.

    ReplyDelete