​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 10 March 2016

சித்தன் அருள் - 276 - "பெருமாளும் அடியேனும்" - 44 - கருடன்களின் படையெடுப்பு!


​தவறு செய்பவர்களுக்கு முதலில் பயம் தெரியாது. ஆத்திரமும் கோபமும் அவர்களது கண்ணை மறைக்கும்.

ஆனால் தர்மம் தலைதூக்கும்போது தவறு செய்தவர்கள் பொடிப் பொடியாகிப் போவார்கள். பின்னர் அவர்களால், எழுந்திருக்கவே முடியாது.

ஏறத்தாழ அதே நிலையில்தான் அன்றைக்கு ஆதிசேஷனும் இருந்தான். இத்தனை யுகங்களாக திருமாலுக்கு ஆனந்தசயனமாகவும், குடை பிடித்தும் ​காத்துக் கொண்டிருந்தான். இன்றைக்கு திருமாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறான்.

எல்லாவற்றையும் மிக நன்றாக அறிந்த திருமால் இதுவரை தன்மீது கோபம் கொள்ளவில்லை, தூது அனுப்பி சமாதானம் செய்ய முன் வரவில்லை. அதோடு, தான் சனீச்வரனுடனும், கலிபுருஷனுடனும் சேர்ந்து திருமாலுக்கு எதிராக போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் போது கூட அவர், அமைதியாக இருக்கிறாரே! இது நல்லதற்கல்லவே என்று ஒரு பயம் ஆதிசேஷனுக்கு இருந்தது.

அதே சமயம், ஆதிசேஷனுக்கு ஒரு நம்பிக்கையும் இருந்தது. திருமாலிடம் சரணாகதி அடைந்துவிட்டால் அவர் நிச்சயம் தன்னை மன்னித்து அருளுவார் என்பதுதான் அது.

ஆனால்,

இதற்கும் மேலாக தன் தலைக்குமேல் பெரும் மேகத்தைப் போல் ஆயிரமாயிரம் கருடன்கள் சூரியனை மறைத்து, பகலை இருளாக்குவதைப் போல வந்ததைக் கண்டு ஆதிசேஷன் அரண்டே போய்விட்டார்.

இதுவரை ஆதிசேஷன் இப்படியொரு கருடக் கூட்டத்தைக் கண்டதே இல்லை.

வானிலிருந்து பறந்து வந்த அத்தனை கருடன்களும் ஒவ்வொரு நாகத்தையும் கொத்தித் தூக்கிக் கொண்டு போக, நாகப்பாம்புகள் அனைத்தும் பயந்து நடுநடுங்கி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாறைகள் இடுக்கிலேயும், மரப்பொந்துகளிலும் நுழையத் தொடங்கின.

ஆனாலும் கருடன்கள், அத்தனையும் மரப்பொந்துகளில் அழகாய் அலகை விட்டு அந்தப் பாம்புகளை கொத்திக் கொத்திப் பிடுங்கின. சில கருடன்கள் பாறைகளை தம் அலகால் பலவந்தமாக உருட்டி அந்த பாறைகளின் இடுக்கில் இருக்கும் பாம்புகளைக் கவ்விப் பிடித்தன.

இந்த காட்சிகளை கண்டு சனீச்வரன் வாய் பேசாமல் மிரண்டு போனார். அவர் பக்கத்தில் இருந்த கலிபுருஷன் ஆதிசேஷனை மிரட்டினான்.

"என்ன ஆதிசேஷா! எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாயே. உடனே உன் சாமர்த்தியத்தைக் காட்டி, அந்தக் கருடன்களின் கழுத்தைச் சுற்றி வளைத்து எமலோகத்திற்கு அனுப்பி இருக்க வேண்டாமா" என்றான்.

"ஒரு கருடனா? இரண்டு கருடனா? அவற்றின் கழுத்தை இறுகச் சுற்றி அவர்களை கொல்வதற்கு? பல லட்சம் கருடன்கள். இதோ பார்! உன் பக்கத்தில் இருக்கும் சனீஸ்வரரே எப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறார்?" என்று வெறுப்பில் பேசிய ஆதிசேஷன் 

"இன்னும் ஒரு வினாடி நாம் இங்கிருந்தால் நம்ம கதியும் அதோ கதிதான். சட்டென்று வேறு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குச் செல்வதுதான் புத்திசாலித்தனம் இலையா? சனீஸ்வரரே?" என்றார்.

"ஆதிசேஷன் சொல்வதுதான் முற்றிலும் சரி. தற்சமயம் சீக்கிரம் இங்கிருந்து புறப்படுவதுதான் உத்தமம்" என்று சனிபகவானும் ஆமோதித்தார்.

இந்தப் பேச்சு கலிபுருஷனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

"இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் பயந்து கொண்டிருந்தால் என்ன லாபம்? நாம் வந்த வேலை என்ன? பிரம்மாவுக்கு நாம் கொடுத்த உத்தரவாதம் என்ன ஆவது? எனக்கு மிகப் பெரும் வருத்தமெல்லாம் இப்படிப்பட்ட கோழைகளை வைத்து இந்த பூலோகத்தை என்னுடைய கலியுக சாம்ராஜ்யத்தை எப்படி ஆளப் போகிறேன் என்பதுதான் பெரும் கவலை"  என்று பெரு மூச்சு விட்டான், கலிபுருஷன்.

ஆதிசேஷனுக்கும், சனீச்வரனுக்கும் இதைக் கேட்டதும், கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

"கலிபுருஷா!" என்று சிம்ம கர்ஜனை செய்த சனீஸ்வரர், "அவசரப்பட்டு எங்களை இகழந்து பேசிவிடாதே. இதுவரை எங்கள் யாரையும் யாரும் இகழ்ந்தோ புண்படுத்தியோ பேசியதில்லை. நண்பனாக பழகுகிறாயே என்று விட்டுவிட்டேன்." என்றார் சனீச்வரன்.

"இல்லையெனில் அப்படியே எகிறிக்குதித்து அத்தனை கருடங்களையும் துவம்சம் செய்து, ஆதிசேஷனின் வாரிசுகளைக் காப்பாற்றி விட்டிருப்பீரா என்ன? அப்படியேதும் செய்யவில்லை, ஆதிசேஷன் கண்ணெதிரே அவருடைய வாரிசுகள் கருடன்களால் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அதைத் தடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தீர்களே, அதை நினைத்துத்தான் நான் வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன்" என்று கலிபுருஷன் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தினான்.

இது சனீஸ்வரனுக்கு மேலும் வெறுப்பினை ஏற்படுத்தியது. உடனே ஆதிசேஷன் பக்கம் திரும்பினார்.

"என்ன ஆதிசேஷா! மௌனமாக இருக்கிறாய்?" என்றார்.

"வேறு என்ன செய்வது? என் வாரிசுகள் உயிரோடு கொல்லப்படும்போது அவர்களை என்னால் காப்பாற்ற முடியாமல்தானே போயிற்று?" என்று ஆதிசேஷன் கண்கலங்கி, தலைகுனிந்து சொன்ன போது சனீஸ்வரருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

சனீச்வரன் மெதுவாக ஆதிசேஷன் அருகில் வந்தார். ஆதிசேஷனின் இரு தோள்களையும் இறுகப் பிடித்தார்.

"ஆதிசேஷா! முகத்தை தூக்கி என்னைப்பார். நான் உன்னை கைவிடுவேனா? கலிபுருஷன் சொல்கிறான் என்று நீயும் என்னைப் பழிப்பது போல் பேசுகிறாயே! இது என்ன அவலம்? இதோ பார், என் வலிமையால், கருடன்களால் கொத்தப்பட்டு உயிர் இழந்த அத்தனை நாகங்களுக்கும் உயிர் கொடுப்பேன். என்னை நம்பு" என்றார் சனீச்வரன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

2 comments:

 1. Sorry
  My children didn't talk with each other for the six months
  I need solutions

  ReplyDelete
 2. தமிழ் அரசி அவர்களுக்கு தினமும் காலை அல்லது மாலை
  வீட்டில் சாம்பராணி உடன் சிறிது வெண்கடுகு சேர்த்து போட்டால்
  1 - வீட்டில் ஏதேனு காத்து கருப்பு இருந்தால் வெளியேறிவிடும்.
  2 - எப்பொழுதும் வீட்டில் உள்ள அனைவரின் மன நிலை அமைதியும் அன்பும் உள்ளதாக இருக்கும்.
  3 - எந்த விதமான சண்டையும் சச்சரவுகள் இருந்தாலும் அது மறையும்.

  ஒரிஜிநல் சாம்பராணி பூஜை சாமான் கடையில் கிடைக்கும்

  ReplyDelete