​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 24 March 2016

சித்தன் அருள் - 282 - "பெருமாளும் அடியேனும்" - 46 - பிரிந்தவரும் புதியவரும் பெருமாளுடன் ஒன்றுசேருதல்!

கலிபுருஷனது கோபம் சற்று அதிகமானது என்றாலும், சனீச்வரன் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப் படவேயில்லை. ஞானத்தை உண்டாக்கவே ஜனங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து  சனீச்வரன் முன்பொரு சமயம் பிரம்மாவுக்கு  கொடுத்த வாக்குறுதியைக் கூட மறந்தான்.

பிரம்மா கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. இனியும் திருமலை வேங்கடவனைவிட்டால் வேறு கதியே இல்லை என்ற முடிவுக்கு வந்த சனீச்வரன், கலிபுருஷனை கண்டுகொள்ளவே இல்லை.

"இந்த கலிபுருஷனது பேச்சைக் கேட்டுத்தான் என் மனைவி என்னை  விட்டுப் பிரிந்து போனாள்.  இன்றுவரை திரும்பி வரவேயில்லை.  இன்னும் எத்தனை நாளைக்கு மனைவியைப் பிரிந்து வாழ்வது? மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழும் போது நான் மட்டும் தனிமையில் கிடந்தது கஷ்டப்படுவானேன்?" என்று மனம் வெதும்பித்தான் சனீச்வரன் இந்த முடிவுக்கு வந்தான்.

கலிபுருஷனுக்கோ குடும்பம் இல்லை, மனைவி இல்லை, குழந்தை குட்டிகள் யாரும் இல்லை. எனவே கலிபுருஷனுக்கு இல்லற வாழ்க்கை இல்லை.

இதை உணர்ந்து சனீச்வரன் உறுதியாக இந்த முடிவை எடுத்த போது திருமலை வேங்கடவன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

அவர் பக்கம் இருந்த அத்தனை தேவர்களும், ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் சனிபகவான் திருந்திவிட்ட செய்தியைச் சொன்னார்கள். அது மட்டுமல்ல, பெருமாள் சனீஸ்வரனை கௌரவப்படுத்தும் விதத்தில், "இனி என் தரிசனத்திற்காக இந்த ஏழு மலைக்கு  வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும், சனி பகவானால் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற, இனி ஏற்படப்போகின்ற அத்தனை பாதிப்புகளும் சட்டென்று விலகும். குறிப்பாக யாரெல்லாம் சனியன்று இந்த வேங்கடமலைக்கு வந்து, தங்கி, காத்துக்கிடந்து, தரிசனம் செய்கிறார்களோ, அவர்களுக்கு மூன்று ஜென்ம சனிபகவான் தோஷம் விலகும்."

"அது மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரும், சனிபகவானால் பாதிக்கப்பட்டு அங்கஹீனம் இல்லாமல், ஊனம் இல்லாமல், மூளை பாதிப்பு இல்லாமல், வாரிசுகளும் தோன்றுவர். உண்மையிலேயே, அவர்கள் முற்பிறவியில் மன்னிக்கமுடியாத குற்றம் செய்திருந்தாலும் , சனிக்கிழமை அன்று இந்த ஏழுமலைக்கு வந்தாலே எந்தக் கொடிய பிரம்மஹத்தி தோஷமும்  நீங்கும். இது சனீஸ்வரனுக்கு யாம் கொடுக்கும் மிகச் சிறந்த மரியாதையை."

"இன்னும் சொல்லப்போனால் மற்ற கிழமைகளைவிட இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சனியன்று எந்த முயற்சியை மேற்கொண்டாலும் நல்லபடியாக முடியும். சனிக்கிழமைக்கே வெகு முக்கியத்துவம் உண்டாகும்" என்று பெருமாள் அருள்வாக்கு கூறினார்.

அதைக் கேட்டு அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.

சனீஸ்வரனுக்குத் திருமால் கொடுத்த முக்கியத்துவத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஆதிசேஷனுக்கு மனம் துடித்தது.

"எல்லையற்ற கருணையைக் கொண்ட இந்தப் பெருமாளையா நான் விரோதித்துக் கொண்டேன்? இவ்வளவு பெரிய பாபத்தைச் செய்த எனக்கு, எந்தத் தெய்வமும் மன்னிப்புத் தரமாட்டார்கள். என் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போயிற்று? இந்த சனீச்வரன் பேச்சைக் கேட்டேன். கலிபுருஷனின் வார்த்தையை நம்பினேன். சொந்தமாக யோசிக்கக்கூடத் திராணியற்றுப் போனேன். இது விதியா? இல்லையேல், வேங்கடவன் நடத்துகின்ற நாடகமா?"

என்று மனம் ஒரு நிலையில்லாமல், தலை குனிந்து, திருமாலைப் பார்க்க மனம் குறுகி கவலைப் பட்டுக்கொண்டிருந்தான், ஆதிசேஷன்.

"என்ன ஆதிசேஷா! மனதில் அப்படியென்ன குழப்பம்? வாய் விட்டுச் சொன்னால் வழி பல கிடைக்குமே?" என்றார் வேங்கடவன்.

மரியாதைக்கு எழுந்து நின்றார் ஆதிசேஷன்.

"என்னதான் இருந்தாலும் தங்களை விரோதித்துக் கொண்டது தவறுதான். என் தவற்றை அருள்கூர்ந்து மன்னித்து விடுங்கள். மீண்டும் தங்கள் பாதத்திலே சரண் அடைகிறேன்" என்றார் ஆதிசேஷன்.  

இப்படி கூறிய ஆதிசேஷன் சட்டென்று வேங்கடவன் பாதத்தில் விழுந்தார். தன் பாதத்தில் விழுந்த ஆதிசேஷனை, கைதூக்கி எழுப்பி அப்படியே தன் நெஞ்சோடு நெஞ்சாக அணைத்து ஆலிங்கனம் செய்து, பாசத்தோடு ஆதிசேஷன் முதுகில் தடவிக் கொடுத்தார் திருமால்.

"இதோ பார்! ஆதிசேஷா! நான் உன்னை விட்டு பிரிவதும் இல்லை. நீ என்னை விட்டு விலகுவதும் இல்லை. உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். நீ எப்பொழுதும் என் பாதத்தில் நிரந்தரமாக இருப்பாய். போதுமா?" என்று வேங்கடவன் ஆதிசேஷனின் உச்சி முகர்ந்து சொன்னபோது, அங்கிருந்த அத்தனை பேரும் கரகோஷம் எழுப்பினார்கள்.

அதிசேஷனுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. சந்தோஷப் பெருக்கால் தன் வாலைச் சுழற்றி ஓங்கித் தரையில் அடித்தார்.

உடனே கருடாழ்வார் ஓடி வந்து, ஆதிசேஷனை கட்டிப் பிடித்து, "சில நாழிகைக்கு முன்னால் கொல்லப்பட்ட அத்தனை வாரிசுகளான பாம்புகள் அனைத்திற்கும் "பெருமாள்" இப்பொழுது மீண்டும் உயிர் பிச்சை தருவார். இனி என்றும் போல் நாமிருவரும் ஒற்றுமையோடு திருமாலுக்கு பணிவிடை செய்வோம்" என்று அன்போடு சொன்னார்.

இந்த கண் கொள்ளாக் காட்சியைத் திருமலையிலுள்ள அத்தனை பேரும் பரவசமாக பார்த்து ஆனந்தப்பட்டனர்.

ஆனால்................ கலிபுருஷன்!

சித்தன் அருள்.................... தொடரும்!

2 comments:

  1. Aum Sairam, Om Agatheesaya Namaha,

    The Illustration is simply superb, very elegant and apt, Thanks

    ReplyDelete
  2. Jeeva nadi reading at Kanchipuram: Recently, when I had gone to VS Kumaravel, nadi reader, Kanchipuram, for leaf (grantha) nadi reading, in the reading Sri Agastiar said I should also consult jeeva nadi at the same place. Mr. VS Kumaravel thereafter took out jeeva nadi and gave a reading. He is also conducting monthly homam (yagam) at the nearby Agateeswarar temple.

    ReplyDelete