​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 17 March 2016

சித்தன் அருள் - 277 - "பெருமாளும் அடியேனும்" - 45 - பெருமாளின் தந்திரம்!

அத்தனை நாகங்களுக்கும் உயிர் கொடுப்பேன் என்ற சனீஸ்வரனின் வார்த்தை ஆதிசேஷனின் மனதை குளிரவைத்தது.

"எப்படி உயிர் கொடுக்கப் போகிறீர்கள்?" என்றார் ஆதிசேஷன்.

"என்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் யமனிடம் சொல்லித்தான் அந்த உயிர்களைக் காப்பாற்றப் போகிறேன்" என்றார் சனீச்வரன்.

"யமன் தங்கள் கோரிக்கையை ஏற்பாரா? ஒரு வேளை மறுத்துவிட்டால்?"

"என்ன ஆதிசேஷா? சிறுகுழந்தை போல் கேட்கிறாய். யமன் என் பேச்சை இதுவரை மறுத்ததில்லை. இனியும் மறுக்கப் போவதுமில்லை. அப்படி மறுத்துவிட்டால். அவன் உயிர் அவனிடம் இருக்காது" என்று அலட்ச்சியமாக சிரித்தார் சனீச்வரன்.

ஆதிசேஷனுக்கு இந்த வார்த்தைகள்தான் பலத்த நம்பிக்கையைத் தந்தன. கலி புருஷனுக்கும் சிறிது நம்பிக்கை வந்தது.

அவர்கள் மூவரும் கலந்தாலோசித்து எப்படி இந்த கருட உற்சவத்தை நிறுத்தலாம் என்று முடிவெடுத்துக் கொண்டிருந்த போது அவர்கள் மூவரையும் கழுகு கூட்டமும், கருடன் கூட்டமும் சுற்றி வளைத்தன.

"நாங்கள் கருடாழ்வார் உத்தரவுக்கேற்ப உங்களை கைது செய்து திருமலை வேங்கடவன் முன்பு நிறுத்தப் போகிறோம். மற்ற விஷயங்கள் எல்லாம் திருமாலின் அரசமாளிகை முன்புதான்" என்றவர்கள் மரியாதை நிமித்தம் பேசிவிட்டு, அப்படியே மூவரையும் தகுந்த மரியாதையோடு தூக்கிப்போய், முதலில் கருடாழ்வார் முன்பு நிறுத்தினர்.

அவர்களிடம் முகம் கொடுத்துக்கூட கருடாழ்வார் பேசவில்லை. நேராக திருமலை வேங்கடவன் முன்பு கொண்டு நிறுத்த ஆணையிட்டார்.

கருடாழ்வாரின் அந்தச் செயலைக் கண்டு ஆதிசேஷனுக்கு அடிவயிற்றில் நெருப்பு பற்றியது. நேற்றுவரை ஒன்றாக இருந்து திருமால் பாதத்தைக் கண்ணில் ஒற்றிப் பணிபுரிந்த ஆதிசேஷன் சனீஸ்வரனின் புத்தியைக் கேட்டு கெட்டுப் போய் விட்டானே என்றுதான் ஆதிசேஷனைப் பற்றிக் கவலைப் பட்டு அவரது கைதிக் கோலத்தைக் காண முடியாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்றே என்று கருடாழ்வார் கண்ணீர் விட்டது ஆதிசேஷனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

திருமலைத் தெய்வமான வேங்கடவன் முன்பு, சனீச்வரன், ஆதிசேஷன், கலிபுருஷன் ஆகிய மூவரும் கொண்டு நிறுத்தப்பட்டனர்.

அந்த சபையில் ஆண்டாண்டு காலமாக சபை ஆலோசகரும், தலையாய சித்தருமான அகஸ்தியரும் அமர்ந்திருந்தார்.

திருமால் சட்டென்று ஆயிரங்கோடி சூரிய ஒளியைப் போலத் தோன்றி சபை நடுவில் அமர்ந்தார்.

எல்லோரும் திருமாலுக்கு "சரணாகதி" செய்ததும் திருமால் தன் பவழ வாய் திறந்து "ஆதிசேஷா! இப்படி என் பக்கத்தில் வந்து அமரலாமே" என்று சொன்னதும்,

ஆதிசேஷனுக்கு அழுகையே வந்துவிட்டது. தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்தார்.

திருமால் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். பின்பு சனீச்வரன் பக்கம் திரும்பி, "சனீஸ்வரரே! நீங்கள் என் முன்பு நிற்பது என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதோ அகஸ்தியர் ஆசனத்திற்கு அருகே நீங்களும் அமரலாமே" என்று கையை காண்பித்தார்.

மிகப் பெரிய சிம்மாசனம் அது. அதைக் கண்டதும் சனீஸ்வரனுக்கு எல்லையற்ற ஆனந்தம். தன் மீது கொலைத்தாக்குதல், வெறித்தாக்குதல் என்று பழி சுமத்தி கடும் தண்டனை கொடுப்பார் திருமால் என்று எண்ணி வந்த சனீஸ்வரனுக்கு திருமலைத் தெய்வம் கொடுத்த அளவு கடந்த மரியாதைக் கண்டதும்,  திருமால் மீது அளவற்ற பக்தி ஏற்பட்டது.

தன் இரு கைகளையும் கூப்பி திருமாலை வணங்கிய சனீச்வரனிடம் திருமால் சொன்னார்.

"இந்த திருமலையில் கால்வைத்த இந்த தினம் மிகவும் அருமையானது. இனி சனீச்வரன் இங்குதான் என்னருகே இருந்து சனியால் பீடிக்கப்பட்ட அனைவருக்கும் முக்தியைக் கொடுப்பார் என்று நான் சொல்லலாமா?" என்றவுடன் 

"தங்கள் சித்தம் என் பாக்கியம். இனி யாரெல்லாம் இந்த திருமலை வேங்கடநாதனை சனியன்று தரிசிக்க வருகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் என்னால் பீடிக்கப்பட்ட சனிதோஷம் அறவே விலகும். ஒவ்வொரு சனிதோறும் இந்த மலை மேலும் புனிதமாகும்" என்று சனீச்வரன் தன்னை மறந்து பேசியதைக் கேட்டுப் பதறிப்போன கலிபுருஷன்

"போதும் சனீஸ்வரா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். இல்லையேல் இங்கேயே விபரீதம் ஏற்படும்" என்று நற நறவென்று பற்களை கடித்துக் கொண்டு கர்ஜித்தான்.

சித்தன் அருள்.................... தொடரும்!

2 comments:

  1. This is the nature of Vishnu bhagawan. There is the puranic account of how Rishi Bhrigu kicked Him on his chest (in order to test Him), but Lord Narayana never got angry, but massaged Bhrigu's feet as they might have been hurt by kicking Him.

    ReplyDelete
  2. Sri Agastiar, Suka and Markandeya are 3 rishis, who are associated closely with both Siva bhagawan and Vishnu bhagawan. Inside the Tirupati temple, just before entering the main sanctum, on the wall, there is a large painting of Lord Srinivasa's wedding to Padamavati. Sage Markandeya and Suka brahma rishi can be seen in that painting. It is also said that Lord Srinivasa spent a few weeks in Sri Agastiar's ashram in Tirupati.

    ReplyDelete