"ஆதிசேஷா! இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். உன்னையும், என்னையும் பிரிக்கத்தான் திருமலை வேங்கடவன் இப்படிப்பட்ட சூழ்ச்சியை உண்டு பண்ணுகிறான். இதற்கெல்லாம் மயங்கிவிடாதே. கருடாழ்வார் சுயநலக்காரன். இரட்டை வேடம் போட்டு ஏமாற்றிவிட்டான். நீ அப்படியல்ல. மானத்திற்கு முதலிடம் கொடுப்பவன். மனத்தளர்ச்சி அடையாதே" என்று சனீச்வரன் ஆதிசேஷன் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
"இத்தனை ஆண்டுகளாக கருடாழ்வாருக்கு திருமலை வேங்கடவன் மதிப்பு கொடுத்தாரா? அல்லது என் மீது அமர்ந்து ஆட்சி செய்து கொண்டே என் இரண்டாவது தலைக்கு "கருடாத்ரி" என்று பெயர் வைத்து என்னைக் கேவலப் படுத்தும் அளவுக்கு நடந்து கொள்கிறாரே, இதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை" என்றார் ஆதிசேஷன்.
"சரி! ஆதிசேஷா! இதற்குப் பதிலடி கொடுக்க என்ன செய்யப் போகிறாய்? அதை முதலில் சொல்" என்றார் சனீச்வரன்.
"அண்ணா உங்களை நம்பி வந்துவிட்டேன். இதற்கும் நீங்கள்தான் ஒரு வழிகாட்ட வேண்டும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை" என்றார் ஆதிசேஷன்.
"ஆதிசேஷா! இப்போதுதான் நாம் தன்நம்பிக்கையை இழக்கக்கூடாது. சோதனைகளை நாம்தான் இதுவரை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்தோம். இப்போது நமக்கே சோதனை தருகிறார் திருமலைவாசன்" என்றார் சனீச்வரன்.
"நீங்கள் சொல்வது எனக்கும்தான் புரிகிறது. அதையே சொல்லிச் சொல்லி என்ன பயன்? வேறு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்" என்றார் ஆதிசேஷன்.
"ஆதிசேஷா! எதற்காக இப்படி பெருமூச்சு விடுகிறாய்? இப்போது நான் இருக்கும் நிலையில் எந்தத் திட்டத்தையும் தீட்ட முடியாது. வா, நாம் இருவரும் தேவலோகம் சென்று சோமபானம், சுராபானம் குடித்துவிட்டு வரலாம்" என்றார் சனீச்வரன்.
"என்னது? சோமபானமா? சுராபானமா? இதுவரை கனவில் கூட நினைத்துப் பார்க்காததை நான் குடிக்க வேண்டுமா?" என்று சீறினார் ஆதிசேஷன்.
"இதில் என்ன தவறு இருக்கிறது? நாம் செய்யப்போகும் செயல்களுக்கு இந்த பானங்கள் தான் நமக்கு உற்சாகத்தைத் தரும். இதை நீ அறியவில்லை போலும்!" என்றார் சனீச்வரன்.
"வேண்டாம் சுவாமி! வேண்டாம்! தயவுசெய்து என்னை அந்தக் கொடிய பழக்கத்திற்கு ஆளாக்கி விடாதீர்கள். தாங்கள் வேண்டுமானால் தாராளமாக அங்கு சென்று அருந்துங்கள்."
"சரியான ஆதிசேஷன் நீ! பிழைக்கத் தெரியாதவன். ம்ம்..... என்ன செய்வது? உனக்காக நானும் அங்கு போகப் போவதில்லை. சோமபானமும் அருந்தப் போவதில்லை" என்ற சனீச்வரன் "ஆதிசேஷா! ஒன்று செய்! அந்த விழாவை நாம் எப்படியாவது தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்" என்றார் சனீச்வரன்.
சனீஸ்வரனின் இந்தப் பேச்சில் வெறியும் ஆக்ரோஷமும் தெரிந்தது. இதைக் கண்டு ஆதிசேஷனே பயந்து போனான்.
அச்சமயம் பார்த்து கலிபுருஷன் உள்ளே நுழைந்தான். சந்தோஷக் களை இருந்தது.
"நல்ல சமயத்தில் வந்தாய் கலிபுருஷா" என்றான் சனீச்வரன்.
"நான் என்றைக்கு கெட்ட நேரத்தில் வந்திருக்கிறேன்?" என்று சிரித்துக் கொண்டே சொன்ன கலிபுருஷன், சனீச்வரன் பக்கத்தில் அமர்ந்தான்.
"எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அந்தக் கருடாழ்வாருக்கு விழா நடக்காமல் தடுக்க சகலவிதமான எற்பாடுகளையும் செய்து விட்டேன்.முதல் காரியமாக பூலோகத்தில் யாரும் திருமலையில் நடக்கும் கருட உற்சவ விழாவில் கலந்து கொள்ள முடியாதவாறு அவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தைக் கலந்துவிட்டேன்" என்றான்.
"சபாஷ்! அற்புதமான யோசனை" என்று சனீச்வரன் தட்டிக் கொடுத்தான்.
"பிறகு மலையேறி திருமலைக்கு வராமலிருக்க பெரும் பாறாங்கற்களை வைத்து நடைபாதையைத் தடுத்து விட்டேன்" என்றான்.
"பலே! பலே!"
"மூன்றாவதாக பாறாங்கற்களைத் தாண்டி வந்துவிடக் கூடாது என்பதற்காக, நெருஞ்சி முட்களை நிறையப் பரப்பிவிட்டேன். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் செய்ய முடியாமல் போயிற்று. அதை ஆதிசேஷனை வைத்துச் செய்து விடலாமென்று வேகமாக வந்தேன்" என்று கூறி முடித்தான் கலிபுருஷன்.
"ஆதிசேஷன் என்ன செய்ய வேண்டும்?" என்றார் சனீச்வரன்.
"நிறைய ராஜநாகப்பாம்புகளை நடைபாதையில் நடமாட விடவேண்டும். சீறுகின்ற அவற்றின் விஷம் நூறு காத தூரம் காற்றிலே கலந்து அதை சுவாசிகின்ற அனைவரும் மயக்கமடைந்தோ. மரணமடைந்தோ போக வேண்டும்" என்றான் கலிபுருஷன்.
"இதென்ன கொடுமை. நமக்கும் வேங்கடவனுக்கும்தான் போராட்டம். இதற்காக அப்பாவி ஞானிகளையும், ஒன்றும் அறியாத பாமர மக்களையும் கொல்வது தர்மத்திற்கு அழகல்ல" என்றார் ஆதிசேஷன்.
இந்த வார்த்தையை சிறிதும் எதிர்பார்க்காத சனீஸ்வரனும், கலிபுருஷனும் அதிர்ந்து போனார்கள்.
சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.
"ஆதிசேஷா! சுயநினைவோடுதான் பேசுகிறாயா? நன்றாகச் சிந்தித்துப் பார். எனக்கும், திருமாலுக்கும் சண்டையோ, சமாதானமோ இல்லை. எல்லாம் உன் நன்மையின் பொருட்டு நடக்கிற காரியம். யோசித்துப் பார்" என்றான், கலிபுருஷன்.
"ஆதிசேஷா! உனக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை என்றால் இப்போதே நீ, அங்கு போய் சேர்ந்து விடு. ஆனால், அங்கு உன்னைக் கேவலப்படுத்தி விரட்டி அடித்தால் என்னிடம் வராதே. அவ்வளவுதான் சொல்வேன்" என்று பயமுறுத்தினார் சனீச்வரன்.
யோசித்துப் பார்த்த ஆதிசேஷனுக்கு திருமாலிடம் சென்று கேவலப்படுவதை விட பேசாமல் இவர்களுடன் இணைத்து கொள்வது தான் உத்தமம் என்று தோன்றியது. தன் சம்மதத்தை அவர்களிடம் தெரிவித்தான்.
அடுத்த வினாடி............
ஆதிசேஷனின் உத்தரவின் படி ஆயிரக்கணக்கான ராஜநாகங்கள், கட்டுவிரியன்கள், புற்றீசல் போல திருமலைப் பாதையில் தோன்றின. அவற்றில் சில, பறக்கும் சக்தியைப் பெற்றிருந்ததால் இங்குமங்கும் பறந்தன. விஷத்தை தம் இஷ்டப்படி கக்கின.
திருமலையின் கீழ் கோனேரிக் கரையில் அமர்ந்த முனிவர்கள் கண்களுக்கு ஆயிரக் கணக்கான பாம்புகள் இங்கும் அங்கும் விஷத்தைக் கக்கிக் கொண்டு பறப்பது தெரிந்தது.
விஷமேறிய காற்று அப்படியே நான்கு திக்குகளிலும் பரவி மெதுவாக பூலோக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மூர்ச்சை அடைய வைத்துக் கொண்டிருந்தது.
முனிவர்கள் இந்தக் காற்று எப்படி வருகிறது என்பதை தம் தவ வலிமையினால் அறிந்து விஷமுறிவிற்கு உரிய யாகத்தை செய்ய ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் செய்ய ஆரம்பிப்பதைக் கண்ட பாம்புகள், அதைச் செய்யவிடாமல் சுற்றி சுற்றித் தாக்க ஆரம்பித்தது.
பயந்து போன அவர்களைக் கண்டு, சனிஸ்வரனும், கலிபுருஷனும் கைதட்டி ஆனந்தப் பட்டனர். அதே சமயம் ஆதிசேஷனுக்கு மாத்திரம் ஏதோ ஒரு தேவையில்லாத பயம் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
அப்போதுதான், கலிபுருஷனும் சனீஸ்வரனும் கண்டு மிரண்டு போகும் அளவுக்கு, வானத்தில் ஓர் அதிசய நிகழ்ச்சி நடந்தது.
சித்தன் அருள்................ தொடரும்!
This comment has been removed by the author.
ReplyDelete