அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Thursday, 31 March 2016
சித்தன் அருள் - 286 - "பெருமாளும் அடியேனும்" - 47 - மறுபடியும் கலிபுருஷனின் விளையாட்டு ஆரம்பம்!
ஆதிசேஷனும் கருடாழ்வாரும் சனீஸ்வரப் பெருமானும் திருமலையில் ஒன்று சேர்ந்திருந்த காட்சியை எளிதில் வர்ணிக்க முடியாது. என்றாலும், இதைக் கண்டு வெறுத்த ஒரே நபர் கலிபுருஷன் தான்.
யார் யாரையெல்லாம் நம்பினோமோ, அவர்கள் அத்தனைபேரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்ற கோபத்தின் எல்லையிலிருந்த கலிபுருஷனை திருமால் நேருக்கு நேர் பார்த்தார்.
சூரியப் பிரகாசம் போன்ற கருணை கொண்ட பெருமாளை நேருக்கு நேர் சந்தித்தால் எங்கே தானும் திருமாலின் பாதத்தில் வீழ்ந்து விடுவோமோ என்ற பயம் கலிபுருஷனுக்கு ஏற்பட்டது. எனவே, பெருமாளை நேரிடையாகப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.
"என்ன கலிபுருஷா! மூன்றாவது முறையாகவும் என்னிடம் தோற்றுப் போனாய். உன் செயலை நிறுத்திக் கொண்டால், உனக்கும் மனிப்பு கிடைக்கும். என் உள்ளத்திலும் இடம் கிடைக்கும். என்ன சொல்கிறாய்?" என்றார் பெருமாள்.
"தங்களுடைய அன்புக்கு நன்றி. அதே சமயம், பிரம்மா எனக்கிட்ட கட்டளையைத்தான் அறிவீர்கள். அதை நான் நிறைவேற்றியாகவேண்டும். இனிமேல் பூலோகத்தில் என் ஆட்சிதான், பிரளயம் ஏற்படும்வரை இருக்கப் போகிறது. இதற்கு தாங்கள் தடை போடுவது, தடுத்து நிறுத்துவது, எவ்விதத்திலும் உகந்ததல்ல" என்று காட்டமாகவே பேசினான் கலிபுருஷன்.
"பரவாயில்லையே! இத்தனை தோல்விகளை சந்தித்த பின்பும் துணிச்சலோடு தன்னம்பிக்கையோடு தன்னந்தனியாக நிற்கிறாயே. உன் தைரியத்திற்கு என் பாராட்டுக்கள்" என்றார் வேங்கடவன்.
"தாங்கள் எப்படி பேசினாலும் அந்தப் பேச்சில் நான் மயங்கப் போவதில்லை. நானென்ன சனீஸ்வரனா? கருடாழ்வாரா? அல்லது ஆதிசேஷனா? உங்கள் காலடியில் விழுவதற்கு? இன்றைக்கு உங்கள் கை ஓங்கலாம். ஆனால் இனி ஏழாயிரம் ஆண்டுகள் பூலோகம் என் கைவசம்தான். அப்போது எந்த வேங்கடவன் வந்தாலும், பூலோகத்தில் கலிசேஷ்டைகளை தடுத்து நிறுத்த முடியாது" என்றான் கலிபுருஷன், கோபமாக.
"ஏன் கலிபுருஷா இத்தனை கோபம்? இதோ பிரம்மா அருகில்தான் இருக்கிறார். அவரிடம் நான் கேட்டுக்கொண்டால், கலிபுருஷன் செயல்பாடுகள் முற்றிலும் ஒழிந்து போகும். இல்லையா பிரம்மதேவரே?" என்று அருகிலிருந்த பிரம்மாவைப் பார்த்துக் கேட்டார் திருமால்.
"மன்னிக்கவும் வேங்கடவா! பூலோகத்தில் "கலி" அவதாரம் அவசியம் தேவை. கலி முற்றும் பொழுது பிரளயம் ஏற்படும். பிரளயம் ஏற்பட்டால்தான் என்னால் புதிய உலகத்தைப் படைக்க முடியும். எனவே, தங்கள் வேண்டுகோளை பிரம்மா ஏற்பதற்கில்லை" என்று பிரம்மா சட்டென்று சொன்னதும், இதை வேங்கடவன் பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
"சரி! சரி! நீ உன் வேலையை செய். உன்னால் பாதிக்கப்பட்டு என்னிடம் உதவி கேட்க வந்தவர்களை மட்டும் நான் கைவிடமாட்டேன். ஆனால் ஒன்று உன் கலியின் பாதிப்பு தேவர்களிடம் இருந்தாலோ, என்னிடம் பாதசரணம் புகுந்தவர்களிடம் இருந்தாலோ, நான் வெகுண்டு விடுவேன். எனவே, சற்று யோசித்து செயல்படு" என்றார் பெருமாள்.
"வேங்கடவா! உன் யோசனைக்கு நன்றி. நான் இனி உன் பக்கத்தில் வரமாட்டேன். இது உயிருக்கு பயந்து அல்ல. பூலோக மக்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஓட்டிவிட்டால் போதும்" எனக் கொக்கரித்தான் கலிபுருஷன்.
அப்போது, வாசலில் சப்தம் கேட்க, திரும்பி பார்த்தவர்கள் அனைவரும் "நிலோத்தும்பிகை" (சனீஸ்வரனின் மனைவி நீளா) தன் தோழிகள் சகிதம் பூரண கும்பத்தோடு வேங்கடவனை நோக்கி வந்தாள். திருமாலின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.
"என் கணவர் திருந்திவிட்டாரென்று கேள்விப்பட்டேன். எல்லாம் தாங்கள் அருள்தான். இதை என்றும் மறக்கவே மாட்டேன்" என்ற நீளாம்பிகை, திருமாலின் பொற்பாதங்களில் வீழ்ந்தாள்.
திருமால் பரவசப்பட்டார். அருகிலிருந்த சனீஸ்வரனை அழைத்து "இனி நீங்கள் ஒரு போதும் ஒருவரை ஒருவர் விட்டு பிரியக் கூடாது" என்று அன்போடு ஆணையிட்டார்.
மரியாதைக்கு கூட எதுவும் பேசாமல் அத்தனை கட்டுக்காவலையும் தாண்டி விறு விறுப்பாகவும், வேகமாகவும் வெளியேறினான் கலிபுருஷன். அவனைத் தடுத்து நிறுத்த யாரும் முயற்சி செய்யவில்லை.
கலிபுருஷன் சென்றதும், "இனி, கருடாழ்வாருக்கு மட்டுமல்ல, ஆதிசேஷனுக்கும், சனீச்வரனுக்கும் கூட அற்புதமாக விழா எடுக்கலாம்" என்றார் பெருமாள்.
"திருமால் உத்தரவு கொடுத்தால் அப்படியே நிறைவேற்றுகிறோம்" என்ற தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஒரே குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். ஆதிசேஷன் புளங்காகிதம் அடைந்தான்.
சனீஸ்வரனுக்கோ சந்தோஷம் தாங்க முடியவில்லை. கருடாழ்வாரோ அனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.
அடுத்த நாள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஐங்கரன் வேள்வியோடு திருமலையில் விழா ஆரம்பமாயிற்று. எங்கு பார்த்தாலும் மங்கள இசைகள், வாத்தியங்கள் முழங்கின.
திருமலையில் எல்லோர் முகத்திலும் சந்தோஷக்களையும், தெய்வீகக் களையும் இருந்தது. யார் முகத்திலும் வாட்டமில்லை. நாராயணா! நாராயணா என்ற கோஷம் விண்மட்டும் எதிரொலித்தது. சந்தோஷமான பேச்சுக்களும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் குறைவின்றி ஆரம்பமாயின.
இந்த விழாவை கண்டு மனம் பொறுக்காத கலிபுருஷன், எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்தி ஆதிசேஷனையும், கருடாழ்வாரையும், சனீச்வரனையும் பழிவாங்க நினைத்தான்.
எப்படி செய்வது? என்று புரியவில்லை. கடைசியில், சமையற்கட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்த அவன், வரிசை வரிசையாக வைக்கப் பட்டிருந்த உணவுப் பண்டங்களின் மேல் அவன் பார்வை விழுந்தது.
"ஆஹா" என்று தன்னைத்தானே "சபாஷ்" சொன்னவன் யாருக்கும் தெரியாமல் அத்தனை பண்டங்களின் மீதும் விஷத்தைக் கொட்டினான். இதனால், அங்கிருந்த உணவுப் பண்டங்கள் அத்தனையும் விஷமாயின.
சித்தன் அருள்.................... தொடரும்!
Wednesday, 30 March 2016
Tuesday, 29 March 2016
Monday, 28 March 2016
Thursday, 24 March 2016
சித்தன் அருள் - 282 - "பெருமாளும் அடியேனும்" - 46 - பிரிந்தவரும் புதியவரும் பெருமாளுடன் ஒன்றுசேருதல்!
கலிபுருஷனது கோபம் சற்று அதிகமானது என்றாலும், சனீச்வரன் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப் படவேயில்லை. ஞானத்தை உண்டாக்கவே ஜனங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து சனீச்வரன் முன்பொரு சமயம் பிரம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியைக் கூட மறந்தான்.
பிரம்மா கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. இனியும் திருமலை வேங்கடவனைவிட்டால் வேறு கதியே இல்லை என்ற முடிவுக்கு வந்த சனீச்வரன், கலிபுருஷனை கண்டுகொள்ளவே இல்லை.
"இந்த கலிபுருஷனது பேச்சைக் கேட்டுத்தான் என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து போனாள். இன்றுவரை திரும்பி வரவேயில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு மனைவியைப் பிரிந்து வாழ்வது? மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழும் போது நான் மட்டும் தனிமையில் கிடந்தது கஷ்டப்படுவானேன்?" என்று மனம் வெதும்பித்தான் சனீச்வரன் இந்த முடிவுக்கு வந்தான்.
கலிபுருஷனுக்கோ குடும்பம் இல்லை, மனைவி இல்லை, குழந்தை குட்டிகள் யாரும் இல்லை. எனவே கலிபுருஷனுக்கு இல்லற வாழ்க்கை இல்லை.
இதை உணர்ந்து சனீச்வரன் உறுதியாக இந்த முடிவை எடுத்த போது திருமலை வேங்கடவன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவர் பக்கம் இருந்த அத்தனை தேவர்களும், ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் சனிபகவான் திருந்திவிட்ட செய்தியைச் சொன்னார்கள். அது மட்டுமல்ல, பெருமாள் சனீஸ்வரனை கௌரவப்படுத்தும் விதத்தில், "இனி என் தரிசனத்திற்காக இந்த ஏழு மலைக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும், சனி பகவானால் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற, இனி ஏற்படப்போகின்ற அத்தனை பாதிப்புகளும் சட்டென்று விலகும். குறிப்பாக யாரெல்லாம் சனியன்று இந்த வேங்கடமலைக்கு வந்து, தங்கி, காத்துக்கிடந்து, தரிசனம் செய்கிறார்களோ, அவர்களுக்கு மூன்று ஜென்ம சனிபகவான் தோஷம் விலகும்."
"அது மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரும், சனிபகவானால் பாதிக்கப்பட்டு அங்கஹீனம் இல்லாமல், ஊனம் இல்லாமல், மூளை பாதிப்பு இல்லாமல், வாரிசுகளும் தோன்றுவர். உண்மையிலேயே, அவர்கள் முற்பிறவியில் மன்னிக்கமுடியாத குற்றம் செய்திருந்தாலும் , சனிக்கிழமை அன்று இந்த ஏழுமலைக்கு வந்தாலே எந்தக் கொடிய பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும். இது சனீஸ்வரனுக்கு யாம் கொடுக்கும் மிகச் சிறந்த மரியாதையை."
"இன்னும் சொல்லப்போனால் மற்ற கிழமைகளைவிட இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சனியன்று எந்த முயற்சியை மேற்கொண்டாலும் நல்லபடியாக முடியும். சனிக்கிழமைக்கே வெகு முக்கியத்துவம் உண்டாகும்" என்று பெருமாள் அருள்வாக்கு கூறினார்.
அதைக் கேட்டு அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.
சனீஸ்வரனுக்குத் திருமால் கொடுத்த முக்கியத்துவத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஆதிசேஷனுக்கு மனம் துடித்தது.
"எல்லையற்ற கருணையைக் கொண்ட இந்தப் பெருமாளையா நான் விரோதித்துக் கொண்டேன்? இவ்வளவு பெரிய பாபத்தைச் செய்த எனக்கு, எந்தத் தெய்வமும் மன்னிப்புத் தரமாட்டார்கள். என் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போயிற்று? இந்த சனீச்வரன் பேச்சைக் கேட்டேன். கலிபுருஷனின் வார்த்தையை நம்பினேன். சொந்தமாக யோசிக்கக்கூடத் திராணியற்றுப் போனேன். இது விதியா? இல்லையேல், வேங்கடவன் நடத்துகின்ற நாடகமா?"
என்று மனம் ஒரு நிலையில்லாமல், தலை குனிந்து, திருமாலைப் பார்க்க மனம் குறுகி கவலைப் பட்டுக்கொண்டிருந்தான், ஆதிசேஷன்.
"என்ன ஆதிசேஷா! மனதில் அப்படியென்ன குழப்பம்? வாய் விட்டுச் சொன்னால் வழி பல கிடைக்குமே?" என்றார் வேங்கடவன்.
மரியாதைக்கு எழுந்து நின்றார் ஆதிசேஷன்.
"என்னதான் இருந்தாலும் தங்களை விரோதித்துக் கொண்டது தவறுதான். என் தவற்றை அருள்கூர்ந்து மன்னித்து விடுங்கள். மீண்டும் தங்கள் பாதத்திலே சரண் அடைகிறேன்" என்றார் ஆதிசேஷன்.
இப்படி கூறிய ஆதிசேஷன் சட்டென்று வேங்கடவன் பாதத்தில் விழுந்தார். தன் பாதத்தில் விழுந்த ஆதிசேஷனை, கைதூக்கி எழுப்பி அப்படியே தன் நெஞ்சோடு நெஞ்சாக அணைத்து ஆலிங்கனம் செய்து, பாசத்தோடு ஆதிசேஷன் முதுகில் தடவிக் கொடுத்தார் திருமால்.
"இதோ பார்! ஆதிசேஷா! நான் உன்னை விட்டு பிரிவதும் இல்லை. நீ என்னை விட்டு விலகுவதும் இல்லை. உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். நீ எப்பொழுதும் என் பாதத்தில் நிரந்தரமாக இருப்பாய். போதுமா?" என்று வேங்கடவன் ஆதிசேஷனின் உச்சி முகர்ந்து சொன்னபோது, அங்கிருந்த அத்தனை பேரும் கரகோஷம் எழுப்பினார்கள்.
அதிசேஷனுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. சந்தோஷப் பெருக்கால் தன் வாலைச் சுழற்றி ஓங்கித் தரையில் அடித்தார்.
உடனே கருடாழ்வார் ஓடி வந்து, ஆதிசேஷனை கட்டிப் பிடித்து, "சில நாழிகைக்கு முன்னால் கொல்லப்பட்ட அத்தனை வாரிசுகளான பாம்புகள் அனைத்திற்கும் "பெருமாள்" இப்பொழுது மீண்டும் உயிர் பிச்சை தருவார். இனி என்றும் போல் நாமிருவரும் ஒற்றுமையோடு திருமாலுக்கு பணிவிடை செய்வோம்" என்று அன்போடு சொன்னார்.
இந்த கண் கொள்ளாக் காட்சியைத் திருமலையிலுள்ள அத்தனை பேரும் பரவசமாக பார்த்து ஆனந்தப்பட்டனர்.
ஆனால்................ கலிபுருஷன்!
சித்தன் அருள்.................... தொடரும்!
Wednesday, 23 March 2016
Tuesday, 22 March 2016
Saturday, 19 March 2016
Friday, 18 March 2016
சித்தன் அருள் - 278 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஏனோ தெரியவில்லை, அகத்தியப் பெருமான் அருளிய இந்த அருள் வாக்கை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் தோன்றியது. கீழே தருகிறேன். படித்து உணர்ந்து செயல்படுங்கள்.
"பூக்களைப் பறித்தாலும், தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு என்ற நோக்கத்திலே மெய்யாக, மெய்யாக, மெய்யாக அந்த நோக்கம் சற்றும் மாறாமல் பொது நலத்திற்கு என்று செய்யப்படும்பொழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல. அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும், இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மோட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது. ஆனால் இறந்த மனிதனின் மீது மலர்களைப் போடுவது கடுமையான தோஷத்தையும், பூக்களின் சாபத்தையும், விருக்ஷங்களின் சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபொழுதும் செய்யக்கூடாது. ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள். சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும், தோஷமும் ஆகும். ஆனால் எத்தனையோ பாவங்களை நியாயப்படுத்திக் கொண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஒரு (வாழ்ந்த) மகான் உண்மையாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான், நல்ல சேவைகளை செய்திருக்கிறான், பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பொழுதும் துளசி போன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்போட வேண்டுமே தவிர மகானாக இருந்தாலும் மலர்களைப் போடுவது எமக்கு உடன்பாடு இல்லை."
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
Thursday, 17 March 2016
சித்தன் அருள் - 277 - "பெருமாளும் அடியேனும்" - 45 - பெருமாளின் தந்திரம்!
அத்தனை நாகங்களுக்கும் உயிர் கொடுப்பேன் என்ற சனீஸ்வரனின் வார்த்தை ஆதிசேஷனின் மனதை குளிரவைத்தது.
"எப்படி உயிர் கொடுக்கப் போகிறீர்கள்?" என்றார் ஆதிசேஷன்.
"என்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் யமனிடம் சொல்லித்தான் அந்த உயிர்களைக் காப்பாற்றப் போகிறேன்" என்றார் சனீச்வரன்.
"யமன் தங்கள் கோரிக்கையை ஏற்பாரா? ஒரு வேளை மறுத்துவிட்டால்?"
"என்ன ஆதிசேஷா? சிறுகுழந்தை போல் கேட்கிறாய். யமன் என் பேச்சை இதுவரை மறுத்ததில்லை. இனியும் மறுக்கப் போவதுமில்லை. அப்படி மறுத்துவிட்டால். அவன் உயிர் அவனிடம் இருக்காது" என்று அலட்ச்சியமாக சிரித்தார் சனீச்வரன்.
ஆதிசேஷனுக்கு இந்த வார்த்தைகள்தான் பலத்த நம்பிக்கையைத் தந்தன. கலி புருஷனுக்கும் சிறிது நம்பிக்கை வந்தது.
அவர்கள் மூவரும் கலந்தாலோசித்து எப்படி இந்த கருட உற்சவத்தை நிறுத்தலாம் என்று முடிவெடுத்துக் கொண்டிருந்த போது அவர்கள் மூவரையும் கழுகு கூட்டமும், கருடன் கூட்டமும் சுற்றி வளைத்தன.
"நாங்கள் கருடாழ்வார் உத்தரவுக்கேற்ப உங்களை கைது செய்து திருமலை வேங்கடவன் முன்பு நிறுத்தப் போகிறோம். மற்ற விஷயங்கள் எல்லாம் திருமாலின் அரசமாளிகை முன்புதான்" என்றவர்கள் மரியாதை நிமித்தம் பேசிவிட்டு, அப்படியே மூவரையும் தகுந்த மரியாதையோடு தூக்கிப்போய், முதலில் கருடாழ்வார் முன்பு நிறுத்தினர்.
அவர்களிடம் முகம் கொடுத்துக்கூட கருடாழ்வார் பேசவில்லை. நேராக திருமலை வேங்கடவன் முன்பு கொண்டு நிறுத்த ஆணையிட்டார்.
கருடாழ்வாரின் அந்தச் செயலைக் கண்டு ஆதிசேஷனுக்கு அடிவயிற்றில் நெருப்பு பற்றியது. நேற்றுவரை ஒன்றாக இருந்து திருமால் பாதத்தைக் கண்ணில் ஒற்றிப் பணிபுரிந்த ஆதிசேஷன் சனீஸ்வரனின் புத்தியைக் கேட்டு கெட்டுப் போய் விட்டானே என்றுதான் ஆதிசேஷனைப் பற்றிக் கவலைப் பட்டு அவரது கைதிக் கோலத்தைக் காண முடியாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்றே என்று கருடாழ்வார் கண்ணீர் விட்டது ஆதிசேஷனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
திருமலைத் தெய்வமான வேங்கடவன் முன்பு, சனீச்வரன், ஆதிசேஷன், கலிபுருஷன் ஆகிய மூவரும் கொண்டு நிறுத்தப்பட்டனர்.
அந்த சபையில் ஆண்டாண்டு காலமாக சபை ஆலோசகரும், தலையாய சித்தருமான அகஸ்தியரும் அமர்ந்திருந்தார்.
திருமால் சட்டென்று ஆயிரங்கோடி சூரிய ஒளியைப் போலத் தோன்றி சபை நடுவில் அமர்ந்தார்.
எல்லோரும் திருமாலுக்கு "சரணாகதி" செய்ததும் திருமால் தன் பவழ வாய் திறந்து "ஆதிசேஷா! இப்படி என் பக்கத்தில் வந்து அமரலாமே" என்று சொன்னதும்,
ஆதிசேஷனுக்கு அழுகையே வந்துவிட்டது. தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்தார்.
திருமால் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். பின்பு சனீச்வரன் பக்கம் திரும்பி, "சனீஸ்வரரே! நீங்கள் என் முன்பு நிற்பது என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதோ அகஸ்தியர் ஆசனத்திற்கு அருகே நீங்களும் அமரலாமே" என்று கையை காண்பித்தார்.
மிகப் பெரிய சிம்மாசனம் அது. அதைக் கண்டதும் சனீஸ்வரனுக்கு எல்லையற்ற ஆனந்தம். தன் மீது கொலைத்தாக்குதல், வெறித்தாக்குதல் என்று பழி சுமத்தி கடும் தண்டனை கொடுப்பார் திருமால் என்று எண்ணி வந்த சனீஸ்வரனுக்கு திருமலைத் தெய்வம் கொடுத்த அளவு கடந்த மரியாதைக் கண்டதும், திருமால் மீது அளவற்ற பக்தி ஏற்பட்டது.
தன் இரு கைகளையும் கூப்பி திருமாலை வணங்கிய சனீச்வரனிடம் திருமால் சொன்னார்.
"இந்த திருமலையில் கால்வைத்த இந்த தினம் மிகவும் அருமையானது. இனி சனீச்வரன் இங்குதான் என்னருகே இருந்து சனியால் பீடிக்கப்பட்ட அனைவருக்கும் முக்தியைக் கொடுப்பார் என்று நான் சொல்லலாமா?" என்றவுடன்
"தங்கள் சித்தம் என் பாக்கியம். இனி யாரெல்லாம் இந்த திருமலை வேங்கடநாதனை சனியன்று தரிசிக்க வருகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் என்னால் பீடிக்கப்பட்ட சனிதோஷம் அறவே விலகும். ஒவ்வொரு சனிதோறும் இந்த மலை மேலும் புனிதமாகும்" என்று சனீச்வரன் தன்னை மறந்து பேசியதைக் கேட்டுப் பதறிப்போன கலிபுருஷன்
"போதும் சனீஸ்வரா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். இல்லையேல் இங்கேயே விபரீதம் ஏற்படும்" என்று நற நறவென்று பற்களை கடித்துக் கொண்டு கர்ஜித்தான்.
சித்தன் அருள்.................... தொடரும்!
Thursday, 10 March 2016
சித்தன் அருள் - 276 - "பெருமாளும் அடியேனும்" - 44 - கருடன்களின் படையெடுப்பு!
தவறு செய்பவர்களுக்கு முதலில் பயம் தெரியாது. ஆத்திரமும் கோபமும் அவர்களது கண்ணை மறைக்கும்.
ஆனால் தர்மம் தலைதூக்கும்போது தவறு செய்தவர்கள் பொடிப் பொடியாகிப் போவார்கள். பின்னர் அவர்களால், எழுந்திருக்கவே முடியாது.
ஏறத்தாழ அதே நிலையில்தான் அன்றைக்கு ஆதிசேஷனும் இருந்தான். இத்தனை யுகங்களாக திருமாலுக்கு ஆனந்தசயனமாகவும், குடை பிடித்தும் காத்துக் கொண்டிருந்தான். இன்றைக்கு திருமாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறான்.
எல்லாவற்றையும் மிக நன்றாக அறிந்த திருமால் இதுவரை தன்மீது கோபம் கொள்ளவில்லை, தூது அனுப்பி சமாதானம் செய்ய முன் வரவில்லை. அதோடு, தான் சனீச்வரனுடனும், கலிபுருஷனுடனும் சேர்ந்து திருமாலுக்கு எதிராக போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் போது கூட அவர், அமைதியாக இருக்கிறாரே! இது நல்லதற்கல்லவே என்று ஒரு பயம் ஆதிசேஷனுக்கு இருந்தது.
அதே சமயம், ஆதிசேஷனுக்கு ஒரு நம்பிக்கையும் இருந்தது. திருமாலிடம் சரணாகதி அடைந்துவிட்டால் அவர் நிச்சயம் தன்னை மன்னித்து அருளுவார் என்பதுதான் அது.
ஆனால்,
இதற்கும் மேலாக தன் தலைக்குமேல் பெரும் மேகத்தைப் போல் ஆயிரமாயிரம் கருடன்கள் சூரியனை மறைத்து, பகலை இருளாக்குவதைப் போல வந்ததைக் கண்டு ஆதிசேஷன் அரண்டே போய்விட்டார்.
இதுவரை ஆதிசேஷன் இப்படியொரு கருடக் கூட்டத்தைக் கண்டதே இல்லை.
வானிலிருந்து பறந்து வந்த அத்தனை கருடன்களும் ஒவ்வொரு நாகத்தையும் கொத்தித் தூக்கிக் கொண்டு போக, நாகப்பாம்புகள் அனைத்தும் பயந்து நடுநடுங்கி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாறைகள் இடுக்கிலேயும், மரப்பொந்துகளிலும் நுழையத் தொடங்கின.
ஆனாலும் கருடன்கள், அத்தனையும் மரப்பொந்துகளில் அழகாய் அலகை விட்டு அந்தப் பாம்புகளை கொத்திக் கொத்திப் பிடுங்கின. சில கருடன்கள் பாறைகளை தம் அலகால் பலவந்தமாக உருட்டி அந்த பாறைகளின் இடுக்கில் இருக்கும் பாம்புகளைக் கவ்விப் பிடித்தன.
இந்த காட்சிகளை கண்டு சனீச்வரன் வாய் பேசாமல் மிரண்டு போனார். அவர் பக்கத்தில் இருந்த கலிபுருஷன் ஆதிசேஷனை மிரட்டினான்.
"என்ன ஆதிசேஷா! எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாயே. உடனே உன் சாமர்த்தியத்தைக் காட்டி, அந்தக் கருடன்களின் கழுத்தைச் சுற்றி வளைத்து எமலோகத்திற்கு அனுப்பி இருக்க வேண்டாமா" என்றான்.
"ஒரு கருடனா? இரண்டு கருடனா? அவற்றின் கழுத்தை இறுகச் சுற்றி அவர்களை கொல்வதற்கு? பல லட்சம் கருடன்கள். இதோ பார்! உன் பக்கத்தில் இருக்கும் சனீஸ்வரரே எப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறார்?" என்று வெறுப்பில் பேசிய ஆதிசேஷன்
"இன்னும் ஒரு வினாடி நாம் இங்கிருந்தால் நம்ம கதியும் அதோ கதிதான். சட்டென்று வேறு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குச் செல்வதுதான் புத்திசாலித்தனம் இலையா? சனீஸ்வரரே?" என்றார்.
"ஆதிசேஷன் சொல்வதுதான் முற்றிலும் சரி. தற்சமயம் சீக்கிரம் இங்கிருந்து புறப்படுவதுதான் உத்தமம்" என்று சனிபகவானும் ஆமோதித்தார்.
இந்தப் பேச்சு கலிபுருஷனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
"இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் பயந்து கொண்டிருந்தால் என்ன லாபம்? நாம் வந்த வேலை என்ன? பிரம்மாவுக்கு நாம் கொடுத்த உத்தரவாதம் என்ன ஆவது? எனக்கு மிகப் பெரும் வருத்தமெல்லாம் இப்படிப்பட்ட கோழைகளை வைத்து இந்த பூலோகத்தை என்னுடைய கலியுக சாம்ராஜ்யத்தை எப்படி ஆளப் போகிறேன் என்பதுதான் பெரும் கவலை" என்று பெரு மூச்சு விட்டான், கலிபுருஷன்.
ஆதிசேஷனுக்கும், சனீச்வரனுக்கும் இதைக் கேட்டதும், கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
"கலிபுருஷா!" என்று சிம்ம கர்ஜனை செய்த சனீஸ்வரர், "அவசரப்பட்டு எங்களை இகழந்து பேசிவிடாதே. இதுவரை எங்கள் யாரையும் யாரும் இகழ்ந்தோ புண்படுத்தியோ பேசியதில்லை. நண்பனாக பழகுகிறாயே என்று விட்டுவிட்டேன்." என்றார் சனீச்வரன்.
"இல்லையெனில் அப்படியே எகிறிக்குதித்து அத்தனை கருடங்களையும் துவம்சம் செய்து, ஆதிசேஷனின் வாரிசுகளைக் காப்பாற்றி விட்டிருப்பீரா என்ன? அப்படியேதும் செய்யவில்லை, ஆதிசேஷன் கண்ணெதிரே அவருடைய வாரிசுகள் கருடன்களால் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அதைத் தடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தீர்களே, அதை நினைத்துத்தான் நான் வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன்" என்று கலிபுருஷன் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தினான்.
இது சனீஸ்வரனுக்கு மேலும் வெறுப்பினை ஏற்படுத்தியது. உடனே ஆதிசேஷன் பக்கம் திரும்பினார்.
"என்ன ஆதிசேஷா! மௌனமாக இருக்கிறாய்?" என்றார்.
"வேறு என்ன செய்வது? என் வாரிசுகள் உயிரோடு கொல்லப்படும்போது அவர்களை என்னால் காப்பாற்ற முடியாமல்தானே போயிற்று?" என்று ஆதிசேஷன் கண்கலங்கி, தலைகுனிந்து சொன்ன போது சனீஸ்வரருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
சனீச்வரன் மெதுவாக ஆதிசேஷன் அருகில் வந்தார். ஆதிசேஷனின் இரு தோள்களையும் இறுகப் பிடித்தார்.
"ஆதிசேஷா! முகத்தை தூக்கி என்னைப்பார். நான் உன்னை கைவிடுவேனா? கலிபுருஷன் சொல்கிறான் என்று நீயும் என்னைப் பழிப்பது போல் பேசுகிறாயே! இது என்ன அவலம்? இதோ பார், என் வலிமையால், கருடன்களால் கொத்தப்பட்டு உயிர் இழந்த அத்தனை நாகங்களுக்கும் உயிர் கொடுப்பேன். என்னை நம்பு" என்றார் சனீச்வரன்.
சித்தன் அருள்.................... தொடரும்!
Wednesday, 9 March 2016
சித்தன் அருள் - ராமதேவர் பூசை, விளக்கு பூசை - சென்னையில்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"அகத்தியரின் சித்தன் அருள்" வலைப்பூவை வாசித்துவரும் ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பி தந்த "ராமதேவர் சித்தரின்" பூசை மற்றும் விளக்கு பூசை பற்றிய தகவலை கீழே தருகிறேன்.
பிருகு மகரிஷியின் ஜீவ நாடியில் வந்த உத்தரவின் பேரில் இந்த பூசையை ஏற்பாடு செய்கிறார்கள். விருப்பம், உள்ளவர் கலந்துகொண்டு சித்தர் அருள் பெறுங்கள்.
Date : 20th March Noon Aganda Jothi for Ramadevar (also known as Yacob)
Food : Annam Palithal and Medicine This event will be followed by Vilakku Poosai
Location @: Bhrigu Maharishi Arul Nilayam, Maruderi
All are Welcome
Note: People coming for Thiruvillaku Poosai bring your Vilakku (5 faced lamp)
பிருகு மகரிஷியின் சீவ வாக்கு கீழே
தான்முறையே சித்தர்கள் ஆசி வேண்டி
நுட்பமாய் கயல்திங்கள் ஆதி வாரம்
நிச்சயித்த ஆயில்ய மகத்தின் சந்தி
To attain the blessings of Siddha per principles
in the month of panguni on first sunday (20th March)
as destined in the time when ayilyam and Magam starmeets
மகத்துவமாய் மலைகடவுள் கூடல் நாதன்
மொழிந்த விதம் சுந்தரானந்தன் தொடர்ச்சியாக
உகந்ததொரு பூசைவிழா இராமதேவருக்கு
ஓர்மையுடன் இதுகாலம் வேலோன் தனக்கும்
with greatness the mountain god koodal naadhan (koodal = Madurai)
in continuation to siddhar Sundaranandhan
the time is right for the puja of Ramadevar
with oneness time to worship, the Lord of Spear/Vel (Lord Muruga)
தனக்குரிய திணை உணவும் ஈய நன்மை
தானுரைத்த மன்மதவாம் ஆண்டு இறுதி
ஊனமிலா திருமகளை முப்பெரும் தேவியரை
உன்னதமாய் போற்றுவிதம் திருவிளக்கேற்றி பூசை கொள்வீர்
his favourite food Thinai (Millet) will be good to serve
to say before the end of this tamil year (Manmadha aandu)
the flawless Mahalakshmi the three divine devi (Ambal)
Offer Obeisance through Thiruvilakku pooja (5 faced lamp)
பூசைபலன் மங்கலங்கள் பெரும் பொருட்டு
பிசகில்லா அன்னையர்கள் ரிஷி பத்னிகள்
இசைந்து ஆசிபெரும்பொருட்டு போற்றி செய்வீர்
இக்காலம் சக்தியவள் ஆசி எல்லாம்
The Pooja to obtain all blessings and Mangalam
The great mothers the rishi pathni(s)
To make them happy and get their blessing by adoring
and get the blessing of Shakthi during this period
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
Thursday, 3 March 2016
சித்தன் அருள் - 275 - "பெருமாளும் அடியேனும்" - 43 - கலிபுருஷனின் தடங்கலுக்கான ஏற்பாடு!
"ஆதிசேஷா! இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். உன்னையும், என்னையும் பிரிக்கத்தான் திருமலை வேங்கடவன் இப்படிப்பட்ட சூழ்ச்சியை உண்டு பண்ணுகிறான். இதற்கெல்லாம் மயங்கிவிடாதே. கருடாழ்வார் சுயநலக்காரன். இரட்டை வேடம் போட்டு ஏமாற்றிவிட்டான். நீ அப்படியல்ல. மானத்திற்கு முதலிடம் கொடுப்பவன். மனத்தளர்ச்சி அடையாதே" என்று சனீச்வரன் ஆதிசேஷன் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
"இத்தனை ஆண்டுகளாக கருடாழ்வாருக்கு திருமலை வேங்கடவன் மதிப்பு கொடுத்தாரா? அல்லது என் மீது அமர்ந்து ஆட்சி செய்து கொண்டே என் இரண்டாவது தலைக்கு "கருடாத்ரி" என்று பெயர் வைத்து என்னைக் கேவலப் படுத்தும் அளவுக்கு நடந்து கொள்கிறாரே, இதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை" என்றார் ஆதிசேஷன்.
"சரி! ஆதிசேஷா! இதற்குப் பதிலடி கொடுக்க என்ன செய்யப் போகிறாய்? அதை முதலில் சொல்" என்றார் சனீச்வரன்.
"அண்ணா உங்களை நம்பி வந்துவிட்டேன். இதற்கும் நீங்கள்தான் ஒரு வழிகாட்ட வேண்டும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை" என்றார் ஆதிசேஷன்.
"ஆதிசேஷா! இப்போதுதான் நாம் தன்நம்பிக்கையை இழக்கக்கூடாது. சோதனைகளை நாம்தான் இதுவரை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்தோம். இப்போது நமக்கே சோதனை தருகிறார் திருமலைவாசன்" என்றார் சனீச்வரன்.
"நீங்கள் சொல்வது எனக்கும்தான் புரிகிறது. அதையே சொல்லிச் சொல்லி என்ன பயன்? வேறு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்" என்றார் ஆதிசேஷன்.
"ஆதிசேஷா! எதற்காக இப்படி பெருமூச்சு விடுகிறாய்? இப்போது நான் இருக்கும் நிலையில் எந்தத் திட்டத்தையும் தீட்ட முடியாது. வா, நாம் இருவரும் தேவலோகம் சென்று சோமபானம், சுராபானம் குடித்துவிட்டு வரலாம்" என்றார் சனீச்வரன்.
"என்னது? சோமபானமா? சுராபானமா? இதுவரை கனவில் கூட நினைத்துப் பார்க்காததை நான் குடிக்க வேண்டுமா?" என்று சீறினார் ஆதிசேஷன்.
"இதில் என்ன தவறு இருக்கிறது? நாம் செய்யப்போகும் செயல்களுக்கு இந்த பானங்கள் தான் நமக்கு உற்சாகத்தைத் தரும். இதை நீ அறியவில்லை போலும்!" என்றார் சனீச்வரன்.
"வேண்டாம் சுவாமி! வேண்டாம்! தயவுசெய்து என்னை அந்தக் கொடிய பழக்கத்திற்கு ஆளாக்கி விடாதீர்கள். தாங்கள் வேண்டுமானால் தாராளமாக அங்கு சென்று அருந்துங்கள்."
"சரியான ஆதிசேஷன் நீ! பிழைக்கத் தெரியாதவன். ம்ம்..... என்ன செய்வது? உனக்காக நானும் அங்கு போகப் போவதில்லை. சோமபானமும் அருந்தப் போவதில்லை" என்ற சனீச்வரன் "ஆதிசேஷா! ஒன்று செய்! அந்த விழாவை நாம் எப்படியாவது தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்" என்றார் சனீச்வரன்.
சனீஸ்வரனின் இந்தப் பேச்சில் வெறியும் ஆக்ரோஷமும் தெரிந்தது. இதைக் கண்டு ஆதிசேஷனே பயந்து போனான்.
அச்சமயம் பார்த்து கலிபுருஷன் உள்ளே நுழைந்தான். சந்தோஷக் களை இருந்தது.
"நல்ல சமயத்தில் வந்தாய் கலிபுருஷா" என்றான் சனீச்வரன்.
"நான் என்றைக்கு கெட்ட நேரத்தில் வந்திருக்கிறேன்?" என்று சிரித்துக் கொண்டே சொன்ன கலிபுருஷன், சனீச்வரன் பக்கத்தில் அமர்ந்தான்.
"எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அந்தக் கருடாழ்வாருக்கு விழா நடக்காமல் தடுக்க சகலவிதமான எற்பாடுகளையும் செய்து விட்டேன்.முதல் காரியமாக பூலோகத்தில் யாரும் திருமலையில் நடக்கும் கருட உற்சவ விழாவில் கலந்து கொள்ள முடியாதவாறு அவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தைக் கலந்துவிட்டேன்" என்றான்.
"சபாஷ்! அற்புதமான யோசனை" என்று சனீச்வரன் தட்டிக் கொடுத்தான்.
"பிறகு மலையேறி திருமலைக்கு வராமலிருக்க பெரும் பாறாங்கற்களை வைத்து நடைபாதையைத் தடுத்து விட்டேன்" என்றான்.
"பலே! பலே!"
"மூன்றாவதாக பாறாங்கற்களைத் தாண்டி வந்துவிடக் கூடாது என்பதற்காக, நெருஞ்சி முட்களை நிறையப் பரப்பிவிட்டேன். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் செய்ய முடியாமல் போயிற்று. அதை ஆதிசேஷனை வைத்துச் செய்து விடலாமென்று வேகமாக வந்தேன்" என்று கூறி முடித்தான் கலிபுருஷன்.
"ஆதிசேஷன் என்ன செய்ய வேண்டும்?" என்றார் சனீச்வரன்.
"நிறைய ராஜநாகப்பாம்புகளை நடைபாதையில் நடமாட விடவேண்டும். சீறுகின்ற அவற்றின் விஷம் நூறு காத தூரம் காற்றிலே கலந்து அதை சுவாசிகின்ற அனைவரும் மயக்கமடைந்தோ. மரணமடைந்தோ போக வேண்டும்" என்றான் கலிபுருஷன்.
"இதென்ன கொடுமை. நமக்கும் வேங்கடவனுக்கும்தான் போராட்டம். இதற்காக அப்பாவி ஞானிகளையும், ஒன்றும் அறியாத பாமர மக்களையும் கொல்வது தர்மத்திற்கு அழகல்ல" என்றார் ஆதிசேஷன்.
இந்த வார்த்தையை சிறிதும் எதிர்பார்க்காத சனீஸ்வரனும், கலிபுருஷனும் அதிர்ந்து போனார்கள்.
சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.
"ஆதிசேஷா! சுயநினைவோடுதான் பேசுகிறாயா? நன்றாகச் சிந்தித்துப் பார். எனக்கும், திருமாலுக்கும் சண்டையோ, சமாதானமோ இல்லை. எல்லாம் உன் நன்மையின் பொருட்டு நடக்கிற காரியம். யோசித்துப் பார்" என்றான், கலிபுருஷன்.
"ஆதிசேஷா! உனக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை என்றால் இப்போதே நீ, அங்கு போய் சேர்ந்து விடு. ஆனால், அங்கு உன்னைக் கேவலப்படுத்தி விரட்டி அடித்தால் என்னிடம் வராதே. அவ்வளவுதான் சொல்வேன்" என்று பயமுறுத்தினார் சனீச்வரன்.
யோசித்துப் பார்த்த ஆதிசேஷனுக்கு திருமாலிடம் சென்று கேவலப்படுவதை விட பேசாமல் இவர்களுடன் இணைத்து கொள்வது தான் உத்தமம் என்று தோன்றியது. தன் சம்மதத்தை அவர்களிடம் தெரிவித்தான்.
அடுத்த வினாடி............
ஆதிசேஷனின் உத்தரவின் படி ஆயிரக்கணக்கான ராஜநாகங்கள், கட்டுவிரியன்கள், புற்றீசல் போல திருமலைப் பாதையில் தோன்றின. அவற்றில் சில, பறக்கும் சக்தியைப் பெற்றிருந்ததால் இங்குமங்கும் பறந்தன. விஷத்தை தம் இஷ்டப்படி கக்கின.
திருமலையின் கீழ் கோனேரிக் கரையில் அமர்ந்த முனிவர்கள் கண்களுக்கு ஆயிரக் கணக்கான பாம்புகள் இங்கும் அங்கும் விஷத்தைக் கக்கிக் கொண்டு பறப்பது தெரிந்தது.
விஷமேறிய காற்று அப்படியே நான்கு திக்குகளிலும் பரவி மெதுவாக பூலோக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மூர்ச்சை அடைய வைத்துக் கொண்டிருந்தது.
முனிவர்கள் இந்தக் காற்று எப்படி வருகிறது என்பதை தம் தவ வலிமையினால் அறிந்து விஷமுறிவிற்கு உரிய யாகத்தை செய்ய ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் செய்ய ஆரம்பிப்பதைக் கண்ட பாம்புகள், அதைச் செய்யவிடாமல் சுற்றி சுற்றித் தாக்க ஆரம்பித்தது.
பயந்து போன அவர்களைக் கண்டு, சனிஸ்வரனும், கலிபுருஷனும் கைதட்டி ஆனந்தப் பட்டனர். அதே சமயம் ஆதிசேஷனுக்கு மாத்திரம் ஏதோ ஒரு தேவையில்லாத பயம் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
அப்போதுதான், கலிபுருஷனும் சனீஸ்வரனும் கண்டு மிரண்டு போகும் அளவுக்கு, வானத்தில் ஓர் அதிசய நிகழ்ச்சி நடந்தது.
சித்தன் அருள்................ தொடரும்!
Subscribe to:
Posts (Atom)