ப்ருகு மகரிஷிக்கும், புலோமா என்பவளுக்கும் பிறந்தவர் சுக்கிரன். சகல வித்தைகளிலும் கரை கண்டவர். சுக்ர நீதி என்ற ராஜதந்திர நூலை எழுதியவர்.
சுக்ரன் அழகு தெய்வம் என்று சொல்லப்படுபவர். இவர் அசுரர்களுக்கு தலைவனாக விளங்கினார்.
இளம் வயதில் குபேரனது உடலில் புகுந்து அவனது பொருள்களையெல்லாம் கவர்ந்தவர். குபேரன் சிவனிடம் முறையிட்டார். சிவன் சூலத்தை எடுத்து சுக்கிரன நோக்கி பிரயோகித்தார். இதைக்கண்டு சுக்கிரன் சூலத்தில் நுனியில் தங்கி, உயிர் பிழைத்தார்.
திருமால், எப்பொழுதும் தேவர்களுக்கு உதவி செய்வதைக் கண்டு அசுரர்கள் வருந்தினார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி, கொஞ்சம் பொறுங்கள், நான் சிவபெருமானிடம் உபதேசம் பெற்று வந்து, உங்களைக் காப்பாற்றுகிறேன். அதுவரை தேவர்களுடன் சண்டைக்குப் போகாதீர்கள்" என்று வாக்குறுதி கொடுத்தார்.
சுக்கிரன், நேராக காசி நகரம் சென்று, அங்கே லிங்கம் ஒன்றை நிறுவி பூசித்தான். இறைவன் காட்சியைக் கொடுக்கவில்லை. சுக்கிரன் மனவருத்தமடைந்து மீண்டும் புலன்களை அடக்கித் தவம் புரியத் தொடங்கினான்.
ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வதை அறிந்த சிவபெருமான், சுக்கிரன் முன்பு தோன்றி, "உன் தவம் மிகவும் வலிமைமிக்கது. அதனால் உள்ளம் மகிழ்ந்தோம்" என்று சொல்லி இதுவரை யாருக்கும் "கிடைக்காத "மிருத சஞ்சீவினி" என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார். மிருத சஞ்சீவனி மந்திரத்தால், இறந்தவர்கள் அத்தனை பேர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்.
ஒருமுறை......
அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் ஒரு பெரிய போட்டி ஏற்ப்பட்டது.
மூன்று உலகங்களையும் தாங்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் விரும்பினார்கள். இதனால் பகை வளர்ந்தது.
தேவர்கள், தங்கள் குல குருவான பிரகஸ்பதியைக் கொண்டு, வெற்றி பெறுவதற்காக யாகங்கள் செய்யத் தொடங்கினார்கள்.
அசுரர்கள், சுக்கிரனை தங்கள் குருவாக ஏற்று தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள். இதனால் அமரர்களாகிய தேவர்கள், சுக்கிரன் மீது கோபம் கொண்டார்கள்.
திடீரென்று ஒருநாள்,
அவர்கள் இவர்களுக்கும் போர் மூண்டது. அசுரர்கள் நிறைய பேர்கள் போரில் மாண்டனர். சுக்கிரனோ, தான் பெற்ற மிருத சஞ்சீவனி மந்திரத்தால், இறந்த அசுரர்களை உயிர்பித்துக் கொண்டிருந்தார்.
தேவர்கள், இதைக் கண்டு கலங்கிப் போனார்கள்.
தேவர்களுக்கு குருவாக இருக்கும் ப்ரகஸ்பதிக்கு, மிருத சஞ்சீவனி மந்திரம் தெரியாது. அதனால் தேவர்கள் வீழ்ச்சியடைந்து கொண்டே இருந்தனர்.
பிரகஸ்பதியின் தபஸ், சுக்கிரனுக்கு முன்பு ஒன்றும் பலன் தரவில்லை. இதனால், தேவர்கள், போரை இடையில் நிறுத்திவிட்டு, ஓடினார்கள்.
இதற்கிடையில்,
"அந்தகாசுரன்" என்பவன், தனியாக வந்து, தேவர்களோடு சண்டையிட்டான். தேவர்கள், அவனை விரட்டி அடித்தனர். உயிருக்கு பயந்து, அந்தகாசுரன், சுக்கிரனிடம் வந்து "பெருமானே, தாங்கள் வந்து என்னைக் காப்பாற்றுங்கள், அமரர்கள், வெகுவேகமாக நம் அசுர குலத்தை நசுக்க ஓடி வருகிறார்கள்" என்று அலறினான்.
அந்தகாசுரன் பேச்சை நம்பி, சுக்கிரன் கடும் கோபம் கொண்டு, அசுரர்களை அழைத்து, "தேவர்களோடு போர் புரியுங்கள்! உங்களை காப்பாற்றுவது என் பொறுப்பு" என்று தூண்டிவிட்டார். இந்தமுறை நடந்த கடுமையான போரில் தேவர்கள் தோற்றுக்கொண்டிருக்க, கொல்லப்பட்ட அசுரர்கள், உயிர் பிழைத்துக் கொண்டே இருந்தார்கள்.
நிலைமையை ஞானக்கண்ணால் அறிந்தார், நந்திதேவர். சிவபெருமானிடம் சென்றார். "எம்பெருமானே தேவரீர் தாங்கள் அருளிய மந்திரத்தால், சுக்கிரன் இறந்துபோன அசுரர்களை உயிர்பித்துக் கொண்டிருக்கிறான். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. தேவர்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தார்.
சிவபெருமான், நந்தி தேவரின் வேண்டுகோளை ஏற்றார். சுக்கிரனை தன்னிடம் வரச் சொன்னார். சுக்கிரன் வந்ததும் அவனை விழுங்கி, தன் திரு வயிற்றிலே இருக்கும்படி செய்தார்.
இதற்குப் பிறகு, அசுரபலம் குறைந்தது. தேவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் சிவபெருமான் வயிற்றில் இருந்த சுக்கிரன், ஆயிரம் ஆண்டு யோகத்திலே இருந்தான். சுக்கிரனது யோக நிலை சிவபெருமானை மனமிரங்கச் செய்தது.
சுக்கிரனை தன் வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தார். இதனால் சுக்கிரனுக்கு, சிவகுமாரன் என்ற பெயரும் விளங்கிற்று.
சிவபெருமான் வயிற்றிலிருந்து வெளியே வந்த சுக்கிரனைக் கண்டு அசுரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதே சமயம், தேவர்களுக்கு வயிற்றைக் கலக்கியது.
பிரகஸ்பதியும், இதுபற்றி சிலகாலம் சிந்தனை பண்ணினார். பின் ஒருநாள், பிரகஸ்பதி தன் மகன் "கசனை" அணுகி "தேவர்குலம் செழிக்க வேண்டுமானால் நீ ஒரு உபாயம் செய்ய வேண்டும். நீ யார் என்பது தெரியாமல் சுக்கிரனிடம் சென்று, அவனுடைய திருமகளாகிய தேவயானியின் உள்ளம் உவக்கும் வண்ணம் நடந்துகொள். சுக்கிரன் மனமிரங்கி, மிருத சஞ்சீவனி மந்திரத்தை உனக்கு அருள்வான்" என்று ஆசையைத் தூண்டி விட்டார்.
கசன், சுக்கிரனிடம் மாணவனாக சேர்ந்தான். நாளடைவில் தேவயானியின் உள்ளத்தையும் கவர்ந்தான். அவர்கள் இன்பமுற்று இருக்கும் பொழுது, அசுரர்களுக்கு "கசன்" யார் என்று தெரிந்துவிட்டது.
சுக்கிரனுக்கு தெரியாமலேயே கசனை அசுரர்கள் கொன்றனர்.
செய்தி அறிந்த சுக்கிரன் தன் மகள் தேவயானிக்காக இறந்து போன கசனை, மந்திரத்தால் உயிர் எழுப்பினான்.
சுக்கிரன், இப்படி இருமுறை, கசனை உயிர்ப்பித்தான். மூன்றாவது முறையாகவும் அசுரர்கள் கசனை கொல்ல முயற்சித்தார்கள். சுக்ராச்சாரியாருக்கு மதுவருந்தும் பழக்கம் உண்டு.
இதை வைத்து அசுரர்கள் ஒரு திட்டம் தீட்டி கசனைக் கொன்று, கொளுத்தி அவனது சாம்பலை மதுவோடு கலந்து சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்தார்கள்.
சுக்ராச்சாரியார் அதைக் குடித்துவிட்டார்.
கசனைக் காணாமல் தேவயானி தன் தந்தையிடம் கலங்கவே, சுக்ராச்சாரியார் மந்திரத்தைச் சொன்னார்.
இதைக் கேட்டதும் அவர் வயிற்ருக்கு உள்ளிருந்த கசன் உயிர் பெற்றான். கசனை தன் வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டுமென்றால், தான் மாளவேண்டும் என்பதை அறிந்த சுக்கிரன் வயிற்றுக்குள் இருந்த கசனுக்கு, அங்கிருந்தபடியே கற்றுக் கொள்ளும்படி சஞ்சீவனி மந்திரத்தை உபதேசித்தார்.
அதை பெற்ற கசன், சுக்கிரனது வயிற்றை பிளந்து கொண்டு வெளியே வந்தான். சுக்கிரன் இறந்து போனார்.
வெளியே வந்த கசன், தான் பெற்ற மந்திர பலத்தால் சுக்கிரனை எழுப்பினான். சுக்கிரனும் உயிர் பிழைத்தார்.
இதற்குப் பிறகு கசன், தன தந்தை பிரகஸ்பதியை அடைந்தான். "மிருத சஞ்சீவனி" மந்திரத்தைக் கற்று வந்த தன் மகனை ஆரத்தழுவி வரவேற்றார் குரு பகவான். கசனது முயற்சியால் தேவர் குலம், மரணத்திலிருந்து தப்பியது....
மகாபாரத கதைகளும், அபிதான சிந்தாமணியும்.
வாமன அவதாரத்தின் போது, குள்ள பிராமணனாக வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானம் செய்யாதே என்று சுக்கிரன் தடுத்தார். மகாபலி இதை அலட்ச்சியம் செய்து கேட்காது போகவே, வண்டு ரூபம் எடுத்து, தானம் செய்ய விழும் தண்ணீர் துவாரத்தை அடைத்தார். வாமனர் தர்ப்பையால் கிண்டியின் துவாரத்தை குத்தவே, சுக்கிரனுக்கு கண் போய்விட்டது. மீண்டும் தவமிருந்து சிவபெருமான் மூலம் இழந்த கண்ணைப் பெற்றார்.
ஜோதிடத்தில் சுக்கிரனை பற்றி கூறும் பொழுது, அனைத்து இன்பங்களுக்கும் வித்தானவன், அழகன், மணம், மங்கை, அன்பு, ஆசை எல்லாமே இவனே, என்கிறது.
அதிர்ஷ்டம் என்பதும், காமனுக்கு அரண் என்பதும் இவனே.
வியாபாரத் தேவதை. வித்தைகளில் உலகத்தின் பார்வையை கவர்கின்றவன். காதல், கூடல், பதவி, வசதியான வாழ்க்கை, சௌபாக்கியம் தருவதும் சுக்கிரன்தான். உடல் வீர்யம், புளிப்பு சுவை பிரியன். ராஜஸ குணத்தோன், வெள்ளிக்கு அதிபதி. பஞ்ச பூதங்களில் நீர் இவன். அந்தண குலத்தோன். வைரம் இவனுக்குரியது. பெண் குணம் கொண்டவன்.
ரிஷபம், துலாம் சொந்த வீடு.
கன்னி நீச வீடு
மீனம் உச்ச வீடு
பரணி, பூரம், பூராடம் என்ற நட்சத்திரம் இவனுக்கு சொந்தம்.
சனி, புதன் நண்பர்கள்
குரு, செவ்வாய் சமமானவர்கள்
மற்றவர்கள் பகைவர்கள்
ஜாதகத்தில் களத்திரகாரனாக இருந்து காம சுகத்தை தருபவன்.
சுக்கிரனின் யோக பலம் ஒருவருக்கு எப்பொழுது வந்தாலும், சந்தோஷத்தையும், சௌபாக்கியத்தையும், தானத்தையும், தனத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள். தேவயானி, கரசை என்ற பெண்கள். அசுரர்களின் தலைவராக இன்றைக்கும் இருந்து வருகிறார்.
சுக்கிரனுக்கு கரங்கள், நான்கு. இவரது தேரை, பத்து குதிரைகள் இழுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பஞ்ச கோணமான பீடத்தை உடையவர். வெண்சந்தானம், வெண்மலர், வெண்மணிமாலை, வெள்ளாடை, வெண்குடை, வெண்ணிறக்கொடி உடையவர். பத்மாசனம் கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவன்.
சுக்கிரனுடைய மந்திரத்திற்கு உரிய முனிவர் பாரத்துவாஜர். சந்தம். த்ரிஷ்டும் சுக்கிரனுக்கு அதிதேவதை. இந்த்ராணி ப்ரத்யாதி தேவதை.
சுக்கிரன் அக்னி திக்குக்கு அதிபதி. கிழக்கு திசைக்கும் தலைவன். கருட வாகனமும் உண்டு.
களத்திர காரகன். மழை பெய்ய உதவுபவன். இனிப்பு சுவை சுக்கிரனுக்கு உகந்தது.
அசுர குருவாக விளங்கும் சுக்கிராச்சாரியார் தமிழ்நாட்டில் பூசித்த ஸ்தலங்கள் உண்டு. திருநாவலூர், ஸ்ரீரங்கம்.
திருநாவலூர், பண்ருட்டி ரயில் நிலையத்திலிருந்து பதினைந்து கல் தொலைவில் உள்ளது. ஸ்ரீரங்கம் வைணவத்தலம் திருச்சியில் இருக்கிறது. இந்தக் கோவிலில் ஏழு மதில்கள் உண்டு. அந்த ஏழு மதில்களும் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜநலோகம், தபோலோகம், சத்யலோகம் என்று பெயர் கொண்டு வழங்கப் படுகிறது.
மற்றொரு சிறப்பு, இதில் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. சந்திர புஷ்கரணி, நாவல் தீர்த்தம், வில்வ தீர்த்தம், அசுர தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், பரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மாதீர்த்தம் என்பவையே அது.
"அஸ்வ த்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்"
என்பது சுக்கிரனின் காயத்திரி மந்திரம்.
ஜோதிட சாஸ்த்திரத்தில் எண் "6"ஐ சுக்கிரனுக்கு கொடுத்துள்ளார்கள்.
திருமணம் ஆகவேண்டும் என்பவர்கள், சௌபாக்கியம் , குழந்தை பாக்கியம் எற்படவில்லையே என்று கலங்குபவர்கள் சௌந்தர்ய லஹரியில் உள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.
"சதுர்ப்பி ஸ்ரீ கண்ட்டை சிவயுவதிபி பஞ்சப்ரபி:
ப்ரபிந்தாபி: சம்போர் நவபிரபி: மூலப்ரக்ருதிபீ:
த்ரயஸ் சத்வாரிம் சத் வசுதல காலாஸ்ர: த்ரிவலய
திரிரேகாபி: ஸார்த்தம் தவ ஸரண கோணா பரிணதா!
வெள்ளிக்கிழமை அன்று, இந்த ஸ்லோகத்தை எத்தனை தடவை சொல்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை நற்பலன் அடையலாம்.
சித்தன் அருள்......... தொடரும்!