​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 23 December 2014

அகத்தியர் அருளிய ஒரு இனிய அனுபவம்!


ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இதற்கு முன் "அகத்திய பெருமான் அருளிய அனுபவம்" என்கிற தலைப்பில் ஒரு "அகத்தியர் கோவிலை" பற்றி எழுதியிருந்ததை அகத்தியர் அடியவர்கள் படித்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த கோவிலை கண்டடைந்தது ஒரு நிகழ்ச்சி மூலம். அகத்தியர் ஜீவநாடி வழி நல்ல ஒரு அனுபவம் கிடைத்ததும், அகத்தியரிடம், அவர் பாதத்தில் அடியவராக ஐக்கியம் அடைய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வலுத்தது என்பதே உண்மை.  ஆனால் அவர் கண்டிப்பான குருவாயிற்றே என்ற எண்ணமும் கூட வந்தது. ஆம்! அவருக்கு எல்லாமே தெரியும். நாம் தவறக் கூடாது என்பதால், அவர் கண்டிப்பான ஒரு தகப்பனாக இருக்கிறார் என்பதை உணர்ந்து, அந்த கண்டிப்பான தன்மையையும் நான் உணர வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டேன்.  ஆனால், அவரிடம் வேண்டுதலை கொடுக்கிற பொழுது, மிக கவனமாக கேட்க வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்தது. அது ஏன் என்று பல பெரியவர்களையும் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அவர் சித்தர்களுக்கு தலைவர், அனைத்து தெய்வங்களின் அருளாசி பெற்றவர், மருத்துவம், ஜோதிடம், வாஸ்து சாஸ்த்திரம், இசை, ஞானம், தவம், யோகம்,  என இவ்வுலகில் உள்ள அனைத்து கலைகளையும் மிகச் சிறப்பாக கையாளுபவர், அவர் சொன்னால் விதி என்ன, இறையே வழங்கிக் கொடுக்கும், என பல வித கூற்றுக்கள் வெளிவந்தன. இதைக் கேட்டு மலைத்துப் போனேன் என்பது தான் உண்மை. இந்த உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமே அவர்தான், என்று உணர்ந்தேன். அன்று முதல் அவரை மானசீக குருவாக நினைத்து வழிபட்டு வருகிறேன் என்பது உண்மை.

அன்று, நான் இருந்த நிலையில், என் வீட்டிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்தால் மட்டுமே ஒரு கோவிலில் அகத்தியரை தரிசனம் செய்ய முடியும். எனக்கு தெரிந்த அகத்தியர் கோவில் அன்று அது ஒன்று தான்.  வெகு தூரம் என்பதால், மாதத்துக்கு ஒரு முறை, அகத்தியர் தரிசனம், அருளுக்கு வேண்டி, நண்பருடன் பயணம் செய்வேன். ஒரு சில நாட்களிலேயே, மாதம் ஒரு முறை என்பது, ஒரு தரிசனத்துக்கும், அடுத்த தரிசனத்துக்கும், இடையே மிகுந்த இடைவெளியாக உள்ளதாக உணரத் தொடங்கினேன். ஒரு முறை சென்று சேர்ந்த பொழுது, ரொம்பவும் உடல் அசந்து போனதால், அந்த கோவில் சன்னதியில், மனம் ஒன்றி வேண்டிக் கொண்டேன்.

"அய்யா! எப்படியோ மாதம் ஒருமுறை வந்து உங்களை பார்த்து, ஆசிர்வாதம் பெற முடிகிறது. ஒரு தரிசனத்துக்கும், அடுத்த தரிசனத்துக்கும் இடையில் மிகுந்த இடைவெளி வருவதாக என்னுள் சமீப காலமாக உணர்கிறேன். அது ஏன் என்று தெரியவில்லை. வீட்டுக்கு அருகிலேயே, சற்று தூரத்தில் எங்கேனும் உங்களுக்கு ஒரு கோவில் இருந்தால் காட்டிக் கொடுக்க கூடாதா? இதுவரை வந்து போவது என்பது சற்று ஸ்ரமமாக இருந்தாலும், உங்கள் அருளால் எப்படியோ நடந்துவிடுகிறது. வீட்டிற்கு அருகில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொடுத்தால், நினைக்கிற பொழுதெல்லாம் வந்து உங்களை தரிசிக்கலாமே! ஏதோ மனதில் தோன்றியதை சமர்பித்துவிட்டேன். தயை கூர்ந்து அருள வேண்டும்" என்றேன்.

மறுநாள் மனம் என்னவோபோல் இருந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன்.  வேலைக்குப் போய் விட்டு வந்து, ஏதோ ஒரு உந்துதலால், குளித்துவிட்டு அருகிலுள்ள சிவபெருமான் கோவிலுக்கு சென்று வரலாம் என்று கிளம்பினேன். போகும் வழியில் ஒரு அடியவரை சந்திக்க நேர்ந்தது.

வணக்கம் சொல்லிவிட்டு நடக்கப்போக, என்னை கூர்ந்து கவனித்தவர், அவராகவே பேசினார்.

"என்ன? நேற்று எங்கே போனீர்கள்? என்ன வேண்டிக் கொண்டீர்கள்?" என்றார்.

அவர் கேட்ட கேள்விகளால், நான் ஆச்சரியப் படவில்லை. அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

நடந்தவைகளை கூறினேன். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் பேசத் தொடங்கினார்.

"ஏன் அவ்வளவு தூரம் செல்லவேண்டும்? இங்கேயே பக்கத்தில் ஒரு அகத்தியர் கோவில் உள்ளதே. அங்கே போய் வரலாமே" என்று இடத்தை கூறினார்.

உண்மையாக அந்த இடத்தை கடந்து தான் எப்பொழுதும் தூரத்தில் இருக்கும் அகத்தியர் கோவிலை நோக்கி செல்வோம். இங்கு பக்கத்தில் இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

அட! கேட்டதற்கு, குருநாதர் உடனேயே, ஒருவரை அனுப்பி காட்டிக் கொடுத்துவிட்டாரே. இனிமேல் எல்லா வாரமும் சென்று வரலாமே! என்று நினைத்து,  இடத்தை மாற்ற தீர்மானித்தேன்.

அது ஒரு ஞாயிற்றுகிழமை. முதல் முறையாக இந்தக் கோவிலை தேடி நண்பருடன் சென்ற பொழுது, கோவில் பூசை முடித்து பூட்டி விட்டனர்.

"சரி! குருவை, குருவாரத்தில்தான் சந்திக்கவேண்டும் போல" என்று தீர்மானித்து, அங்கிருந்தவர்களிடம், கோவில் திறந்திருக்கும் நேரத்தை விசாரித்தறிந்துவிட்டு, வியாழக் கிழமை அன்று நண்பருடன் சென்றேன்.

ஸ்ரீ லோபாமுத்திரை சமேதே அகத்தியப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். கண்கள் பேசின, ஆனால் அதில் கூர்ந்த பார்வையும், கண்டிப்பும் இருந்ததை உணர முடிந்தது.

ஹ்ம்ம்! ரொம்ப கவனமாக ஆனால் உண்மையாக பெரியவரிடம் பேசவேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கொண்டேன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டபடி வந்தார் மேலாளர்.

அறிமுகப்படுத்திக் கொண்டு "இந்த வழியாக செல்லும் பொழுது, கோவிலை கண்டு இங்கு வந்து சேர்ந்தோம்" என்றேன்.

"நல்லது" என்றபடி அவர் விலகினார்.

ஒரு நிமிட அமைதி கிடைத்தது. உடனேயே அகத்தியப் பெருமானிடம் "அய்யனே மிக்க நன்றி!" என்று கூறினேன்.

அதற்குப் பின் அங்கு செல்லும் பொழுதெல்லாம் பல விஷயங்கள் மளமளவென்று வளர, அகத்தியப்  பெருமானின் அந்தக் கோவிலில் அவரே தன் இருப்பை எங்களுக்கு ஒரு நாள் உணர்த்தினார். அதை நாங்கள் மட்டும் எங்கள் மனதுக்குள் வைத்துக் கொண்டோம், அந்தக் கோவிலில் உள்ள ஒருவரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவில்லை.

சில வியாழக்கிழமையில், அதிகாலையில் என்னால் செல்லா முடியாத பொழுது, மாலை நான் மட்டும் தனியே சென்று வருவேன். நண்பர்களை காலையிலேயே சென்று வர அனுப்பிவிடுவேன்.

கோவில் ஸ்தாபிதம் செய்த நாள் அங்கு விமரிசையாக கொண்டாடப்படும். சற்று தள்ளியுள்ள முருகர் கோவிலில் இருந்து, முருகப் பெருமானின் உற்சவ மூர்த்தி விக்ரகம், அகத்தியர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். முருகர், அகத்தியப் பெருமானை காண வரும் பொழுது, அகத்தியரே சென்று அவரை வரவேற்று வழி நடத்திக் கொண்டுவருவதை , காண கண் கோடி வேண்டும். அந்த கோவிலின் இந்த முக்கியமான விழாவில் நாங்களும் பங்கு பெற்றோம்.

இப்படி ஒரு முறை வியாழனன்று அகத்தியப் பெருமானை தரிசனம் செய்கிற பொழுது, திடீரென்று என்னுள்ளில் இருந்து ஒரு வேண்டுதல் வெளி வந்தது. அதை அவரிடம் சமர்பித்தேன்.
​​
சித்தன் அருள் .................. தொடரும்

2 comments:

  1. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்ரா சமேத அகத்தியாக நம:

    ReplyDelete