​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 13 December 2014

அகத்தியப் பெருமான் அருளிய அனுபவம்!

[ புகைப்பட நன்றி :திரு பாலச்சந்திரன், மலேசியா ]

உள்ளே இருந்த பூசாரி, நறுமணம் உள்ளே நுழைந்ததும், ஆச்சரியப்பட்டு, வெளியே திரும்பி பார்த்தார். அவரால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் மேலும் அபிஷேகத்தை தொடர்ந்தார்.

பொதுவாக எண்ணை காப்பு போட்டுவிட்டு, சுத்தமான நீரினால் அபிஷேகத்தை முடித்துவிடும் பூசாரி, என்ன தோன்றியதோ, நல்ல நறுமணப் பொடிகளை நீரில் கலக்கி அன்று அபிஷேகம் செய்தார்.

முன்னே நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அகத்தியப் பெருமான் ஒரு வினாடி தன் விழி இமையை திறந்து பார்த்துவிட்டு, சிறு புன்னகையுடன் மறுபடியும் த்யானத்தில் அமர்ந்தது போல் தோன்றியது. அபிஷேகத்தின் போதே, அவர் வலது கரத்திலிருந்து ஒரு ஒளி தோன்றி எங்கும் பரவ, சூரிய கிரணங்களும் அவர் பாதத்தை தொட்டு நமஸ்காரம் செய்தது. அனைவரும், பூசாரி சகிதம் அந்த சூரிய ஒளியைத்தான் கவனித்தனர். சூரிய ஒளிதான் அந்த வெளிச்சத்திற்கு காரணம் என்று நினைத்தனர்.

பார்த்துக் கொண்டிருந்த நான் உடல் சிலிர்த்து "இது போதும் அய்யா! மிக்க நன்றி!" என மனதால கூறிவிட்டு, நமஸ்காரம் செய்தேன். என்னவோ அந்த ஒரு நிமிடத்தில் கிடைத்த அருளில், வாழ்க்கையில் எல்லாமே அடைந்துவிட்டோம், இனி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றியது நிதர்சனமான உண்மை. இருந்தும் அந்த பளபளத்த விழிகளின் தரிசனம் நினைக்கும் போதெல்லாம் கிடைக்கிற மாதிரி ஒரு வழி பண்ணித்தரக் கூடாதா என்று வேண்டிக் கொண்டேன்.

வேண்டுதலுக்குப் பின் ஆச்சரியம் என்னவென்றால், மறுநாளே என் நண்பர் அனுப்பித்தந்த அகத்தியரின் ஒரு படத்தில், அகத்தியர் யோசனையுடன் தூரத்தில் விழித்துப் பார்ப்பதுபோல் இருந்தது. அதில் மனித கண்கள் இருந்தது கண்டு ஆச்சரியத்தில் திகைத்து நின்றுவிட்டேன்.

அபிஷேகம் முடிந்து, அலங்காரம் நிறைவுபெற்று, தீபாராதனை நடந்தது. என்றும் தென்படும் அகத்தியரின் உருவத்தைத்தான் பிறகு காண முடிந்தது. அபிஷேகத்தை பார்த்து ஆனந்தப்பட்டது, நாங்கள் மூவர் மட்டும் தான். பொதுவாக ஒரு 10 பேர் மட்டும் இருக்கிற அபிஷேக நேரத்தில் அன்று நாங்கள் மூவர் மட்டும் தான் இருந்தோம். அது ஏன் என்று புரியவில்லை. அந்த கிராமத்தில் இருக்கிற ஒருவர் கூட அன்று அப்பொழுது அங்கு வரவில்லை. பூசாரியும், மேலாளரும் அவர்கள் பணி நிமித்தமாக இருந்தனர். நாங்கள், அகத்தியர் அருளுக்காக இருந்தோம் என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

பூசை முடிந்து பிரசாதத்தை தந்த பூசாரி, அப்பொழுதும் அந்த நறுமணம் எங்கிருந்து வந்தது என்று யோசித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. நாங்கள் மூவரும் ஒன்றும் பேசவில்லை. மனம் அவ்வளவு அமைதியாகிவிட்டது.

பிரசாதம் வாங்கி, பிரதட்சிணம் செய்து வெளியே வந்த உடன், கூட வந்த நண்பர் மெதுவாக கூறினார்.

"மண்டபத்துக்கு பின்னால் நிற்கும் பொழுது, அபிஷேகம் தொடங்கும் முன், மேலிருந்து ஒரு காற்று வீசி கீழே இறங்கி சன்னதியை நோக்கி சென்றதை உணர்ந்தேன். பின்னர் நறு மனமும். பெரியவர் இன்று வந்திருந்தாரோ? என்றார்.

பரவாயில்லை! நேரத்துக்கு விழித்துக் கொண்டுவிட்டார்கள், என்று நினைத்து 

"ஹ்ம்ம்!" என்ற பதிலை மட்டும் கூறினேன். அதில் அவர்களுக்கு அனைத்தும் புரிந்தது. எங்கள் அனைவரின் மனதும் மிக திருப்தியாக இருந்தது.

அன்று நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து பல விஷயங்கள் புரிந்தது.
  1. மிக எளிய வேண்டுதல்களை, ஆத்மார்த்தமாக அவர் பாதத்தில் சமர்பித்தால் நிச்சயம் அருளுவார்/நிறைவேற்றுவார்.
  2. அகத்தியப் பெருமான் மிக கண்டிப்பான குருநாதர்தான், பாரபட்சம் இல்லாதவர், ஆனால் மிகுந்த கருணை கொண்ட ஒரு தகப்பன். தன் குழந்தைகளின் மனம் அறிந்தவர்.
  3. சூழ்நிலைகளை அவரே முன் நின்று சாதகமாக்கி, சுத்தமாக்கி ஒரு பரிசாக நம்மிடம் ஒப்படைப்பார்.
  4. நாம் தான் பவ்யமாக இருந்து, அகம்காரத்தை, அகம்பாவத்தை விலக்கி, அவர் காட்டும் வழியில் நடக்க வேண்டும்.
  5. எல்லா நல்ல விஷயங்களுக்கும் மேலாக அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது, திடமான நம்பிக்கை, இறை பக்தி, குரு வந்தனம், மிக அதிக அளவில் பொறுமை என்பது தெளிவாக புரிந்தது.
சித்தன் அருள் தொகுப்பை வாசித்து இன்புறும் அனைவரிடமும் எனக்கு தெரிந்தவரையில், மிக முக்கியமான செய்தி என்று தோன்றியதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

நம்பிமலையில் நாடி வாசித்த பொழுது அங்கிருந்த அனைவரையும் "நீங்கள் எல்லோரும் என் மைந்தர்கள்" என அகத்தியர் கூறினார். அது ஒரு மிகப் பெரிய வரம்.

அது போல், நாம் ஒவ்வொருவரையும் "நீ என் மைந்தன்", "நீ என் மகள்" என அகத்தியரை, அவர் வாயால் கூற வைக்க நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும்!

யோசியுங்கள்.

அனுபவ தொகுப்பு நிறைவு பெறுகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்திய சித்தாய நமஹ!

2 comments:

  1. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  2. எந்த ஊர் ஆலையத்தில் தரிசனம் பெற்றிகள்

    ReplyDelete