பெரியவர்கள் நம்மிடம் தர்மம், ஆழ்ந்த பக்தி, இறைவனை சார்ந்து நிற்கிற தன்மையை மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு இது கொடுக்க வேண்டும், அதை செய்ய வேண்டும் என ஆசை பட்டு செய்கிறோம். அப்படி ஆசைப்பட்டு செய்ய நினைக்கிற பொழுது, அவர்களே அருளினால் அதன் அர்த்தம் அவர்களாக விரும்பி அதை கேட்கிறார்கள் என்று அல்ல. தன் அடியவரின் விருப்பத்தை நிறைவு செய்து, அதன் மூலம், "நாங்கள் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று சொல்லாமல் சொல்கிற ஒரு நிலை.
என்னுள் எழுந்து, அகத்தியரிடம் நான் வேண்டிக் கொண்டது இது தான்.
"அய்யனே! உங்களுக்கு எல்லோரும் என்னென்னவோ செய்கிறார்கள். அடியேனுக்கும், உங்களுக்கு ஏதேனும் செய்ய, இந்த கோவிலில், ஒரு வாய்ப்பு தரக்கூடாதா? உங்கள் இருப்பை உணர்த்திய இந்த கோவிலில் அந்த பாக்கியம் கிடைத்தால், இப்பிறவியில் அடியேன் ஒரு நல்ல விஷயத்தை செய்ததாக மகிழ்வேனே!" என்றேன்.
வேண்டுதலை சமர்பித்துவிட்டு, அவர் அருளுடன் அன்று வீடு வந்து சேர்ந்தேன்.
இரு வாரம் அவர் தரிசன விதியுடன் கழிந்தது.
அடுத்த வாரம், வியாழக்கிழமை காலையில் நண்பர்களுடன் செல்ல முடியவில்லை. அன்று மாலை நான் மட்டும் என் பைக்கில் சென்றேன்.
கோவில் அமைதியாக இருந்தது. பூசாரி, மேலாளர் தவிர வேறு யாரும் இல்லை. உள்ளே சென்று தரிசனம் செய்து, "ஓம் அகத்தீசாய நமஹ" என்ற நாம ஜெபத்துடன் கோவில் உள்பிரதட்சிணம் செய்தேன். மனம் அவர் பாதத்தில் ஒன்றி இருந்தது.
"அருளினோம்" என்ற ஒற்றை சொல் யாரோ கூறுவது போல் கேட்டது. சுற்று முற்றும் திரும்பி பார்க்க யாருமே அங்கு இல்லை.
அந்த வார்த்தை அகத்தியப் பெருமான் தான் கூறியுள்ளார் என்று சட்டென்று உணர்ந்தேன். ஆனால் என்ன அருளினார்? வேண்டுதலை கொடுத்தோம். பதிலும் கொடுத்துவிட்டார். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்தேன்.
மனம் ஒரே குழப்பத்தில் இருக்கும் பொழுது "பொறுத்திரு! புரியும்" என்று வாக்கு வந்தது.
சரிதான்! என்னவோ வருகிறது. எது வந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பொறுத்திருப்போம் என்று தீர்மானித்து, பிரதக்ஷிணத்தை தொடர்ந்தேன்.
ஒரு 15 நிமிட பிரதக்ஷிணத்தில் 21 முறை வலம் வந்து அவர் சன்னதியின் முன் நின்றேன். உள்ளிருந்த பூசாரி பிரசாதம் கொண்டு தந்தார். அதில் ஒரு பூமாலை இருந்தது. அது அகத்தியர் விக்கிரகத்தில் இருந்து வந்தது என தெளிவாயிற்று. அகத்தியப் பெருமானுக்கு நன்றியை கூறி, பூசாரிக்கு தட்சிணையை கொடுத்த பின், உத்தரவு வாங்கிக் கொண்டேன். எதுவும் புரியவில்லை.
என்ன நடக்கும்? எப்பொழுது நடக்கும் என்று யோசித்தபடி, அங்கிருந்த பெஞ்சில் ஒரு நிமிடம் அமரலாம் என்று அமர்ந்தேன்.
பூசாரி சன்னதியிலிருந்து வெளியே வந்தார். நேராக நான் அமர்ந்த இடத்துக்கு வந்தவர், சற்று தள்ளி நின்று கொண்டு,
"சார்! ஒரு உதவி வேண்டுமே! செய்ய முடியுமா?" என்றார்.
சரி! செயல் படவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று உணர்ந்த நான் "சொல்லுங்க! என்ன உதவி வேண்டும்?" என்றேன்.
"நீங்க எல்லோரும் உங்கள் ஊரிலிருந்து எல்லா வியாழக்கிழமையும் காரில்தானே வருகிறீர்கள். உங்கள் ஊரில் உள்ள ஒரு கடையில் சன்னதிக்குள் இருக்கும் "ஜோதி பிரபை" கிடைக்கும். அதை அங்கிருந்து வாங்கி பத்திரமாக கொண்டு தர முடியுமா?" என்றார்.
முதலில் "ஜோதி பிரபை" என்னவென்று புரியவில்லை. அவரிடமே கேட்டபொழுது, அகத்தியர் சன்னதியில் அது இருப்பதை காட்டினார். அது என்னவென்றால், சுற்றிலும் கண்ணாடி இருக்கும். நடுவில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தால், நிறைய விளக்கு ஏற்றி வைத்தது போல் வெளிச்சத்தை கொடுக்கும். நிறைய கோவில்களில் சன்னதியில் இதை பார்க்கலாம்.
"சரி! கொண்டு தருகிறோம்" என்றேன்.
"ஆனா! அது எந்த கடையில் இருக்கிறது! இந்த கோவிலில் யார் பெயர் சொல்லி கேட்கவேண்டும்" என்றேன்.
"எந்த கடையில் வேண்டுமானாலும் வாங்கி வாருங்கள். பணத்தை நாங்கள் தந்துவிடுகிறோம்" என்றார்.
அவர் கூறிய பதிலை கேட்டு சற்றே அதிர்ந்த நான் " அட! அகத்தியர் எப்படி ஒரு வாய்ப்பை நமக்கு தருகிறார்" என்று எண்ணினேன்.
உடனேயே நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்.
"இப்ப இருக்கிற கண்ணாடியின் அளவு 12 இன்ச். அதை விட ஒரு இன்ச் பெரியதாக இருந்தால் நல்லது" என்று கூறிய பூசாரி, ஒரு தர்பையை சன்னதிக்குள் கொண்டு போய் அந்த கண்ணாடியை அளவெடுத்து என்னிடம் கொண்டு தந்தார்.
அந்த தர்பை அகத்தியப் பெருமானே என்னிடம் கொடுப்பது போல் உணர்ந்தேன். (இன்றும் அந்த தர்பையை பத்திரமாக வைத்திருக்கிறேன்)
அகத்தியரை வணங்கி, உத்தரவு பெற்று, கூடவே, என் விருப்பபடியே இந்த விஷயத்தை நல்ல படியாக முடித்துக் கொடுங்கள் என்று வேண்டி வீடு வந்து சேர்ந்தேன்.
அன்று இரவே, ஒரு நண்பரை அழைத்து விஷயத்தை கூறி, நாளை மார்க்கெட்டில் விசாரித்து வைக்கவும் என்றேன்.
மறுநாள், வெள்ளிக்கிழமை, மதியம் நண்பரிடமிருந்து போன் வந்தது. விசாரித்துவிட்டதாகவும் பல அளவுகளில், விலைகளில் கிடைக்கிறது என்றார்.
"சரி! மாலை நான் வருகிறேன். தயாராக இரு" என்று கூறினேன்.
மாலை மணி ஐந்து. நண்பரை அழைத்துக் கொண்டு அந்த கடைக்கு சென்று, பல அளவிலுள்ள "ஜோதி பிரபை" இருப்பதை கண்டேன். அதில் ஒன்று என் மனதை கவர, அதன் அளவை கேட்டேன்.
கடைகாரர் அது 18 இன்ச் என்றார்.
"அது தான் வேண்டும்" என வாங்கிக் கொண்டு இன்னொரு நண்பரின் கடைக்கு சென்றோம்.
போகும் வழியில் இன்றே கொடுத்துவிட்டால் என்ன? என்ற உணர்வு தோன்ற, நண்பர்கள் இருவரிடமும் விசாரித்த பொழுது, கூட வர முடியாத நிலை என்றனர். ஆனால், அதை வாங்கிக் கொடுக்கிற விலையில் நாங்களும் பங்கு பெறுவோம், என்றனர்.
"போய் உங்க வேலையை பாருங்க. கூப்பிட்டா ஒருவருக்கும் வர முடியலை. நாங்க ஸ்ரமப்பட்டு அகத்தியரிடம் உத்தரவு வாங்கி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால், அதுல மட்டும் பங்கு வேணுமாக்கும். முடியாது. இந்த வாய்ப்பு நான் அகத்தியப் பெருமானிடம் கேட்டு வாங்கியது. உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வேலையில் நான் யாரையும் உள்ளே நுழைய விட மாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறினேன்.
இதை அவர்கள் இருவரும் எதிர் பார்க்கவில்லை.
நானோ இதை எப்படி இன்று கொண்டு கொடுக்கப் போகிறோம்? இன்று வெள்ளிகிழமை நல்ல நாள் ஆயிற்றே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்று அறிந்த மற்ற நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டினர். (உபயம்: அந்த இரண்டு நண்பர்கள்).
எல்லோருக்கும் ஒரே பதில் "அனுமதி கிடையாது" என்றேன்.
இங்கு இருவருக்கு அனுமதி மறுத்து, மற்றவர்களுக்கு அனுமதித்தால், நண்பர்களிடம் பாரபட்ச்சம் கட்டினேன் என்று வரக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன்.
எப்படி கொண்டு செல்வது என்று திகைத்து நின்று, கடைசியில் ஒரு வழியை கண்டு பிடித்து, என் பைக்கில் பெட்ரோல் டாங்குக்கு மேலே வைத்து கொண்டு செல்லாலாம் என்று தீர்மானித்தேன். அந்த பொருள் கண்ணாடியால் அழகு படுத்தப்பட்டிருந்ததால், அத்தனை தூரம் வண்டியை ஒட்டிக் கொண்டு செல்லும் பொழுது, எந்த தவறும் நடந்துவிடக் கூடாதே என்ற எண்ணம் வந்தது.
அகத்தியரிடம் வேண்டிக் கொண்டேன்.
"அய்யா! கேட்டதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டீர்கள். ஆனால் இந்த பொருளை பத்திரமாக உங்கள் கோவிலில் கொண்டு சேர்ப்பதற்கு உங்கள் அருள் இருந்தால் தான் முடியும். ஏதோ கொஞ்சம் உதவி தேவை. பார்த்து அருளுங்கள்" என்று விட்டு கிளம்பினேன்.
இன்பம் தனியாக வரும், துன்பம் துணையோடு வரும் என்ற பழ மொழிக்கு ஏற்ப, போகிற வழியெல்லாம் ஒரே வாகன நெரிசல். 30 நிமிடத்தில் போய் சேருகிற அந்த தூரத்தை ஒன்றே கால் மணிநேரம் எடுத்துதான் போய் சேர முடிந்தது. வழி எங்கும், மற்ற வண்டிகளின் இடைஞ்சல்கள் வேறு. இதற்கிடையில் இரு முறை இரண்டு பைக் சரியாக அந்த பிரபை மீது தட்டிவிட்டு சென்றனர். நான் கோபப்படாமல் இருக்க அகத்தியரை நினைத்துக் கொண்டே வண்டியை ஓட்டினேன்.
கோவிலை அடைந்து, அதை கொண்டு சென்று அகத்தியரின் முன் உள்ள மண்டபத்தில் வைத்து, "அய்யனே! ஏதோ உங்கள் உதவியால் இதுவரை கொண்டு வந்தாகிவிட்டது. அதில் ஒரு கண்ணாடி கூட உடைந்து போயிருக்க கூடாது. அப்படி உடைந்திருந்து பூசாரி ஏற்க மறுத்துவிட்டால், இன்னொன்று வாங்கித் தருகிறேன். நீங்கள் அருளிய இந்த வாய்ப்பிற்கு, உங்கள் பாதத்தில் அடியேனுடைய நன்றியை சமர்ப்பிக்கிறேன்" என்று வேண்டிக் கொண்டேன்.
மேலாளர் வந்து, இது என்ன என்றார். கூறினேன்.
"அப்படியா! நல்லது. பூசாரியிடம் கூறுங்கள்!" என்றார்.
நான் பூசாரியிடம் போய் கொண்டு வந்ததை கூறி திறந்து பார்க்கச் சொன்னேன்.
நல்ல நேரம். ஒரு சிறிய பிரச்சனையும் இன்றி, அந்த ப்ரபை அப்படியே இருந்தது.
அதை கையிலெடுத்த பூசாரி "இதன் அளவு என்ன?" என்றார்
"18 இன்ச்" என்றேன்.
"அட! தானாகவே அமைந்துவிட்டதே. நேற்று அளவெடுக்கும் பொழுது, பழையது 12 இன்ச் இருக்கிறது, புதியது 18 இன்ச் இருந்தால், அகத்தியரையும், லோபாமுத்திரை அம்மாவையும் சூழ்ந்தபடி சரியாக அமையுமே, என்று நினைத்தேன்" என்றார்.
எனக்கோ, அப்பொழுதே அகத்தியர் பின்னாடி இருக்கும் பழைய கண்ணாடியை மாற்றிவிட்டு, இந்த புதியதை மாட்டி, விளக்கேற்றி அழகு பார்க்க வேண்டும் என்ற துடிப்பு. ஆனால், பூசாரியிடம் எப்படி அதை சொல்வது. ஒருவேளை, நாளை மாற்றிக் கொள்ளலாம் என்று அவர் முன்னரே தீர்மானித்துவிட்டிருந்தால்? என்ற எண்ணமும் சூழ்ந்தது.
அமைதியாக இருந்தேன்.
"சாமி! அது எந்த வித உடைசலும் இல்லாமல் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மாட்டிக் கொள்ளுங்கள்" என்று கூறினேன்.
"இதற்கு எவ்வளவு ஆச்சு?" என்றார்.
"பரவாயில்லை! இது எங்கள் சார்பாக அகத்தியருக்கு கொடுத்ததாக இருக்கட்டும்" என்றேன்.
"அது சரி கிடையாது" என்றார்.
நானோ "அது தான் சரி!" என்று புன்னகைத்தபடி பிரசாதத்தை வங்கிக் கொண்டு நகர்ந்தேன்.
மேலாளர் கூப்பிட்டு " இதை யார் உபயமாக ரசீது எழுத வேண்டும்" என்றார்.
"அதெல்லாம் தேவை இல்லை. அவர் விரும்பியது, அவர் பொருள். இதில் என்ன ரசீது வந்தது?" என்றேன்.
"இல்லை. இந்த கோவில் ரூல்ஸ் படி யார் என்ன கொண்டு கொடுத்தாலும், ரசீது போடவேண்டும். அப்படி என்றால்தான் கணக்கில் சேர்க்க முடியும்" என்றார்.
அவர் சொல்வதும் சரிதான். இதனால் அவருக்கு பின்னால் பிரச்சினை வரக் கூடாது என்று யோசித்து "அகத்தியர் உபயம் என்று போட்டுவிடுங்கள்" என்றேன்.
நான் மேலாளர் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்கும் அந்த இடைவெளியில், பூசாரி, பழைய கண்ணாடியை மாற்றி, புதியதை அதன் இடத்தில் பதித்து, விளகேற்றிவிட்டார்.
அகத்தியருக்கு பின்னால், முன்னர் இருந்ததைவிட மிக பிரகாசமாக வெளிச்சம் தென்பட்டது.
நான் கைகூப்பி, லோபமுத்திரா சமேத அகத்தியரை வணங்கி "மிக்க நன்றி!" என சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இதிலிருந்து ஒன்று புரிந்தது. நியாயமான வேண்டுதலுக்கு, அகத்தியப் பெருமான் அருளுவார். சற்றே தாமதித்து வாய்ப்பு கொடுத்தாலும், நாம் பொறுமையாக இருந்து சந்தர்பத்தை கை பற்றிக்கொண்டால், அவர் அருளால் அது மிகச் சிறப்பாகவே அமையும்.
ஒருவருக்கு கிடைக்கிற அனுபவம், பகிர்ந்து கொண்டால், இன்னொருவருக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதினால்தான், இந்த அனுபவத்தை இங்கு உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லோரும் எல்லா அருளும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறேன்! இந்த இனிய அனுபவம் நிறைவு பெற்றது!
வணக்கம்!
Om Agastheesaya Namaha !!!
ReplyDeleteOm Agastheesaya Namaha !!!
Om Agastheesaya Namaha !!!
Thank sir for sharing, I have also put forth my request to Shri Agatheesar requesting him to guide me. After reading your naration, I got a message that we have to wait patiently and he will fulfill our wishes.
ReplyDeleteom agatheesaya namaha
om agatheesaya namaha
om agatheeesaya namaha
kindly inform us the place of the temple mentioned by you.
ReplyDeletekindly inform us the holy place of this temple
ReplyDeleteWe are also blessed with similar order from Iyya. Mahaththana Agatheesa.
ReplyDelete