அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Wednesday, 31 December 2014
Friday, 26 December 2014
அகத்தியர் அருளிய ஒரு இனிய அனுபவம் - 2
பெரியவர்கள் நம்மிடம் தர்மம், ஆழ்ந்த பக்தி, இறைவனை சார்ந்து நிற்கிற தன்மையை மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு இது கொடுக்க வேண்டும், அதை செய்ய வேண்டும் என ஆசை பட்டு செய்கிறோம். அப்படி ஆசைப்பட்டு செய்ய நினைக்கிற பொழுது, அவர்களே அருளினால் அதன் அர்த்தம் அவர்களாக விரும்பி அதை கேட்கிறார்கள் என்று அல்ல. தன் அடியவரின் விருப்பத்தை நிறைவு செய்து, அதன் மூலம், "நாங்கள் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று சொல்லாமல் சொல்கிற ஒரு நிலை.
என்னுள் எழுந்து, அகத்தியரிடம் நான் வேண்டிக் கொண்டது இது தான்.
"அய்யனே! உங்களுக்கு எல்லோரும் என்னென்னவோ செய்கிறார்கள். அடியேனுக்கும், உங்களுக்கு ஏதேனும் செய்ய, இந்த கோவிலில், ஒரு வாய்ப்பு தரக்கூடாதா? உங்கள் இருப்பை உணர்த்திய இந்த கோவிலில் அந்த பாக்கியம் கிடைத்தால், இப்பிறவியில் அடியேன் ஒரு நல்ல விஷயத்தை செய்ததாக மகிழ்வேனே!" என்றேன்.
வேண்டுதலை சமர்பித்துவிட்டு, அவர் அருளுடன் அன்று வீடு வந்து சேர்ந்தேன்.
இரு வாரம் அவர் தரிசன விதியுடன் கழிந்தது.
அடுத்த வாரம், வியாழக்கிழமை காலையில் நண்பர்களுடன் செல்ல முடியவில்லை. அன்று மாலை நான் மட்டும் என் பைக்கில் சென்றேன்.
கோவில் அமைதியாக இருந்தது. பூசாரி, மேலாளர் தவிர வேறு யாரும் இல்லை. உள்ளே சென்று தரிசனம் செய்து, "ஓம் அகத்தீசாய நமஹ" என்ற நாம ஜெபத்துடன் கோவில் உள்பிரதட்சிணம் செய்தேன். மனம் அவர் பாதத்தில் ஒன்றி இருந்தது.
"அருளினோம்" என்ற ஒற்றை சொல் யாரோ கூறுவது போல் கேட்டது. சுற்று முற்றும் திரும்பி பார்க்க யாருமே அங்கு இல்லை.
அந்த வார்த்தை அகத்தியப் பெருமான் தான் கூறியுள்ளார் என்று சட்டென்று உணர்ந்தேன். ஆனால் என்ன அருளினார்? வேண்டுதலை கொடுத்தோம். பதிலும் கொடுத்துவிட்டார். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்தேன்.
மனம் ஒரே குழப்பத்தில் இருக்கும் பொழுது "பொறுத்திரு! புரியும்" என்று வாக்கு வந்தது.
சரிதான்! என்னவோ வருகிறது. எது வந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பொறுத்திருப்போம் என்று தீர்மானித்து, பிரதக்ஷிணத்தை தொடர்ந்தேன்.
ஒரு 15 நிமிட பிரதக்ஷிணத்தில் 21 முறை வலம் வந்து அவர் சன்னதியின் முன் நின்றேன். உள்ளிருந்த பூசாரி பிரசாதம் கொண்டு தந்தார். அதில் ஒரு பூமாலை இருந்தது. அது அகத்தியர் விக்கிரகத்தில் இருந்து வந்தது என தெளிவாயிற்று. அகத்தியப் பெருமானுக்கு நன்றியை கூறி, பூசாரிக்கு தட்சிணையை கொடுத்த பின், உத்தரவு வாங்கிக் கொண்டேன். எதுவும் புரியவில்லை.
என்ன நடக்கும்? எப்பொழுது நடக்கும் என்று யோசித்தபடி, அங்கிருந்த பெஞ்சில் ஒரு நிமிடம் அமரலாம் என்று அமர்ந்தேன்.
பூசாரி சன்னதியிலிருந்து வெளியே வந்தார். நேராக நான் அமர்ந்த இடத்துக்கு வந்தவர், சற்று தள்ளி நின்று கொண்டு,
"சார்! ஒரு உதவி வேண்டுமே! செய்ய முடியுமா?" என்றார்.
சரி! செயல் படவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று உணர்ந்த நான் "சொல்லுங்க! என்ன உதவி வேண்டும்?" என்றேன்.
"நீங்க எல்லோரும் உங்கள் ஊரிலிருந்து எல்லா வியாழக்கிழமையும் காரில்தானே வருகிறீர்கள். உங்கள் ஊரில் உள்ள ஒரு கடையில் சன்னதிக்குள் இருக்கும் "ஜோதி பிரபை" கிடைக்கும். அதை அங்கிருந்து வாங்கி பத்திரமாக கொண்டு தர முடியுமா?" என்றார்.
முதலில் "ஜோதி பிரபை" என்னவென்று புரியவில்லை. அவரிடமே கேட்டபொழுது, அகத்தியர் சன்னதியில் அது இருப்பதை காட்டினார். அது என்னவென்றால், சுற்றிலும் கண்ணாடி இருக்கும். நடுவில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தால், நிறைய விளக்கு ஏற்றி வைத்தது போல் வெளிச்சத்தை கொடுக்கும். நிறைய கோவில்களில் சன்னதியில் இதை பார்க்கலாம்.
"சரி! கொண்டு தருகிறோம்" என்றேன்.
"ஆனா! அது எந்த கடையில் இருக்கிறது! இந்த கோவிலில் யார் பெயர் சொல்லி கேட்கவேண்டும்" என்றேன்.
"எந்த கடையில் வேண்டுமானாலும் வாங்கி வாருங்கள். பணத்தை நாங்கள் தந்துவிடுகிறோம்" என்றார்.
அவர் கூறிய பதிலை கேட்டு சற்றே அதிர்ந்த நான் " அட! அகத்தியர் எப்படி ஒரு வாய்ப்பை நமக்கு தருகிறார்" என்று எண்ணினேன்.
உடனேயே நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்.
"இப்ப இருக்கிற கண்ணாடியின் அளவு 12 இன்ச். அதை விட ஒரு இன்ச் பெரியதாக இருந்தால் நல்லது" என்று கூறிய பூசாரி, ஒரு தர்பையை சன்னதிக்குள் கொண்டு போய் அந்த கண்ணாடியை அளவெடுத்து என்னிடம் கொண்டு தந்தார்.
அந்த தர்பை அகத்தியப் பெருமானே என்னிடம் கொடுப்பது போல் உணர்ந்தேன். (இன்றும் அந்த தர்பையை பத்திரமாக வைத்திருக்கிறேன்)
அகத்தியரை வணங்கி, உத்தரவு பெற்று, கூடவே, என் விருப்பபடியே இந்த விஷயத்தை நல்ல படியாக முடித்துக் கொடுங்கள் என்று வேண்டி வீடு வந்து சேர்ந்தேன்.
அன்று இரவே, ஒரு நண்பரை அழைத்து விஷயத்தை கூறி, நாளை மார்க்கெட்டில் விசாரித்து வைக்கவும் என்றேன்.
மறுநாள், வெள்ளிக்கிழமை, மதியம் நண்பரிடமிருந்து போன் வந்தது. விசாரித்துவிட்டதாகவும் பல அளவுகளில், விலைகளில் கிடைக்கிறது என்றார்.
"சரி! மாலை நான் வருகிறேன். தயாராக இரு" என்று கூறினேன்.
மாலை மணி ஐந்து. நண்பரை அழைத்துக் கொண்டு அந்த கடைக்கு சென்று, பல அளவிலுள்ள "ஜோதி பிரபை" இருப்பதை கண்டேன். அதில் ஒன்று என் மனதை கவர, அதன் அளவை கேட்டேன்.
கடைகாரர் அது 18 இன்ச் என்றார்.
"அது தான் வேண்டும்" என வாங்கிக் கொண்டு இன்னொரு நண்பரின் கடைக்கு சென்றோம்.
போகும் வழியில் இன்றே கொடுத்துவிட்டால் என்ன? என்ற உணர்வு தோன்ற, நண்பர்கள் இருவரிடமும் விசாரித்த பொழுது, கூட வர முடியாத நிலை என்றனர். ஆனால், அதை வாங்கிக் கொடுக்கிற விலையில் நாங்களும் பங்கு பெறுவோம், என்றனர்.
"போய் உங்க வேலையை பாருங்க. கூப்பிட்டா ஒருவருக்கும் வர முடியலை. நாங்க ஸ்ரமப்பட்டு அகத்தியரிடம் உத்தரவு வாங்கி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால், அதுல மட்டும் பங்கு வேணுமாக்கும். முடியாது. இந்த வாய்ப்பு நான் அகத்தியப் பெருமானிடம் கேட்டு வாங்கியது. உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வேலையில் நான் யாரையும் உள்ளே நுழைய விட மாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறினேன்.
இதை அவர்கள் இருவரும் எதிர் பார்க்கவில்லை.
நானோ இதை எப்படி இன்று கொண்டு கொடுக்கப் போகிறோம்? இன்று வெள்ளிகிழமை நல்ல நாள் ஆயிற்றே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்று அறிந்த மற்ற நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டினர். (உபயம்: அந்த இரண்டு நண்பர்கள்).
எல்லோருக்கும் ஒரே பதில் "அனுமதி கிடையாது" என்றேன்.
இங்கு இருவருக்கு அனுமதி மறுத்து, மற்றவர்களுக்கு அனுமதித்தால், நண்பர்களிடம் பாரபட்ச்சம் கட்டினேன் என்று வரக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன்.
எப்படி கொண்டு செல்வது என்று திகைத்து நின்று, கடைசியில் ஒரு வழியை கண்டு பிடித்து, என் பைக்கில் பெட்ரோல் டாங்குக்கு மேலே வைத்து கொண்டு செல்லாலாம் என்று தீர்மானித்தேன். அந்த பொருள் கண்ணாடியால் அழகு படுத்தப்பட்டிருந்ததால், அத்தனை தூரம் வண்டியை ஒட்டிக் கொண்டு செல்லும் பொழுது, எந்த தவறும் நடந்துவிடக் கூடாதே என்ற எண்ணம் வந்தது.
அகத்தியரிடம் வேண்டிக் கொண்டேன்.
"அய்யா! கேட்டதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டீர்கள். ஆனால் இந்த பொருளை பத்திரமாக உங்கள் கோவிலில் கொண்டு சேர்ப்பதற்கு உங்கள் அருள் இருந்தால் தான் முடியும். ஏதோ கொஞ்சம் உதவி தேவை. பார்த்து அருளுங்கள்" என்று விட்டு கிளம்பினேன்.
இன்பம் தனியாக வரும், துன்பம் துணையோடு வரும் என்ற பழ மொழிக்கு ஏற்ப, போகிற வழியெல்லாம் ஒரே வாகன நெரிசல். 30 நிமிடத்தில் போய் சேருகிற அந்த தூரத்தை ஒன்றே கால் மணிநேரம் எடுத்துதான் போய் சேர முடிந்தது. வழி எங்கும், மற்ற வண்டிகளின் இடைஞ்சல்கள் வேறு. இதற்கிடையில் இரு முறை இரண்டு பைக் சரியாக அந்த பிரபை மீது தட்டிவிட்டு சென்றனர். நான் கோபப்படாமல் இருக்க அகத்தியரை நினைத்துக் கொண்டே வண்டியை ஓட்டினேன்.
கோவிலை அடைந்து, அதை கொண்டு சென்று அகத்தியரின் முன் உள்ள மண்டபத்தில் வைத்து, "அய்யனே! ஏதோ உங்கள் உதவியால் இதுவரை கொண்டு வந்தாகிவிட்டது. அதில் ஒரு கண்ணாடி கூட உடைந்து போயிருக்க கூடாது. அப்படி உடைந்திருந்து பூசாரி ஏற்க மறுத்துவிட்டால், இன்னொன்று வாங்கித் தருகிறேன். நீங்கள் அருளிய இந்த வாய்ப்பிற்கு, உங்கள் பாதத்தில் அடியேனுடைய நன்றியை சமர்ப்பிக்கிறேன்" என்று வேண்டிக் கொண்டேன்.
மேலாளர் வந்து, இது என்ன என்றார். கூறினேன்.
"அப்படியா! நல்லது. பூசாரியிடம் கூறுங்கள்!" என்றார்.
நான் பூசாரியிடம் போய் கொண்டு வந்ததை கூறி திறந்து பார்க்கச் சொன்னேன்.
நல்ல நேரம். ஒரு சிறிய பிரச்சனையும் இன்றி, அந்த ப்ரபை அப்படியே இருந்தது.
அதை கையிலெடுத்த பூசாரி "இதன் அளவு என்ன?" என்றார்
"18 இன்ச்" என்றேன்.
"அட! தானாகவே அமைந்துவிட்டதே. நேற்று அளவெடுக்கும் பொழுது, பழையது 12 இன்ச் இருக்கிறது, புதியது 18 இன்ச் இருந்தால், அகத்தியரையும், லோபாமுத்திரை அம்மாவையும் சூழ்ந்தபடி சரியாக அமையுமே, என்று நினைத்தேன்" என்றார்.
எனக்கோ, அப்பொழுதே அகத்தியர் பின்னாடி இருக்கும் பழைய கண்ணாடியை மாற்றிவிட்டு, இந்த புதியதை மாட்டி, விளக்கேற்றி அழகு பார்க்க வேண்டும் என்ற துடிப்பு. ஆனால், பூசாரியிடம் எப்படி அதை சொல்வது. ஒருவேளை, நாளை மாற்றிக் கொள்ளலாம் என்று அவர் முன்னரே தீர்மானித்துவிட்டிருந்தால்? என்ற எண்ணமும் சூழ்ந்தது.
அமைதியாக இருந்தேன்.
"சாமி! அது எந்த வித உடைசலும் இல்லாமல் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மாட்டிக் கொள்ளுங்கள்" என்று கூறினேன்.
"இதற்கு எவ்வளவு ஆச்சு?" என்றார்.
"பரவாயில்லை! இது எங்கள் சார்பாக அகத்தியருக்கு கொடுத்ததாக இருக்கட்டும்" என்றேன்.
"அது சரி கிடையாது" என்றார்.
நானோ "அது தான் சரி!" என்று புன்னகைத்தபடி பிரசாதத்தை வங்கிக் கொண்டு நகர்ந்தேன்.
மேலாளர் கூப்பிட்டு " இதை யார் உபயமாக ரசீது எழுத வேண்டும்" என்றார்.
"அதெல்லாம் தேவை இல்லை. அவர் விரும்பியது, அவர் பொருள். இதில் என்ன ரசீது வந்தது?" என்றேன்.
"இல்லை. இந்த கோவில் ரூல்ஸ் படி யார் என்ன கொண்டு கொடுத்தாலும், ரசீது போடவேண்டும். அப்படி என்றால்தான் கணக்கில் சேர்க்க முடியும்" என்றார்.
அவர் சொல்வதும் சரிதான். இதனால் அவருக்கு பின்னால் பிரச்சினை வரக் கூடாது என்று யோசித்து "அகத்தியர் உபயம் என்று போட்டுவிடுங்கள்" என்றேன்.
நான் மேலாளர் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்கும் அந்த இடைவெளியில், பூசாரி, பழைய கண்ணாடியை மாற்றி, புதியதை அதன் இடத்தில் பதித்து, விளகேற்றிவிட்டார்.
அகத்தியருக்கு பின்னால், முன்னர் இருந்ததைவிட மிக பிரகாசமாக வெளிச்சம் தென்பட்டது.
நான் கைகூப்பி, லோபமுத்திரா சமேத அகத்தியரை வணங்கி "மிக்க நன்றி!" என சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இதிலிருந்து ஒன்று புரிந்தது. நியாயமான வேண்டுதலுக்கு, அகத்தியப் பெருமான் அருளுவார். சற்றே தாமதித்து வாய்ப்பு கொடுத்தாலும், நாம் பொறுமையாக இருந்து சந்தர்பத்தை கை பற்றிக்கொண்டால், அவர் அருளால் அது மிகச் சிறப்பாகவே அமையும்.
ஒருவருக்கு கிடைக்கிற அனுபவம், பகிர்ந்து கொண்டால், இன்னொருவருக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதினால்தான், இந்த அனுபவத்தை இங்கு உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லோரும் எல்லா அருளும் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறேன்! இந்த இனிய அனுபவம் நிறைவு பெற்றது!
வணக்கம்!
Thursday, 25 December 2014
சித்தன் அருள் - 205
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புகிறோம். எங்கள் திருமணம் பிரச்சினை இல்லாமல் நடக்குமா? என்று ஒரு இளம் வயது பெண்ணும், ஒரு வாலிபனும் என்னிடம் வந்து கேட்டனர்
படித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள் போல் இருப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் இரண்டும் அவர்களிடம் இருந்தது.
"இருவரது பெற்றோர்களும் இதற்க்கு ஒத்துழைத்தால் பிரச்சினையே இல்லையே?" என்று மேலோட்டமாக எண்ணினேன்.
"பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். என் பெற்றோர்கள் நீண்ட நாட்களாக தனித்தனியாக இருக்கின்றனர். இவளுக்கு தந்தை இல்லை. எனவே யாரும் முன் வந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க முன் வரவில்லை" என்றான் அந்த வாலிபன்.
"சவுகரியமாக போயிற்று! உங்களுக்கு வயது இருக்கிறது. தொழில் இருக்கிறது. பெற்றோரிடம் சொல்லி விட்டு பதிவு திருமணம் செய்து கொள்ளலாமே" என்றேன்.
"முடியாது சார். எதற்கும் அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்களேன்" என்றான் அந்தப் பையன்.
நாடியைப் பிரித்தேன்.
"முன் ஜென்ம தொடர்பு இவர்களது திருமணத்தில் தடையிருக்காது. ஆசைப்படுவதில் தவறில்லை. ஜாதி, மதமும் இதில் குறுக்கீடு இல்லை. ஆனால், எவ்வளவு காலம் தள்ளிப்போட வேண்டுமோ அவ்வளவு காலம் தள்ளிப் போடுங்கள். அவசரப்பட்டு முடிவெடுப்பதில் பயனில்லை. மறு பரிசீலனை செய்து மிகவும் நல்லது" என்று அகத்தியர் மேலோட்டமாமச் சொல்லி விட்டார்.
இந்த வார்த்தைகள் அவர்கள் இருவருக்கும் மன வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
"எங்கள் திருமணத்தை எத்தனை நாளைக்குத் தள்ளிப் போடுவது? இதுபற்றி அகத்தியர் சொல்லவே இல்லையா?" என்றாள் அந்தப் பெண்.
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
"எப்போதைக்கு எப்போது ஒரு பொடியை வைத்து அகத்தியர் இப்படி சொல்லிவிட்டாரோ அப்போது ஏதோ விஷயம் இருக்கிறது என்பது பொருள். எனவே ஓராண்டு காலம் தள்ளிப் போடுங்களேன்".
இதற்குள் அந்த வாலிபன் குறுக்கிட்டு, "முடியாது சார்! சீக்கிரமே திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். இதை மாற்ற முடியாது. ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதற்குரிய பரிகாரங்களைச் சொல்லட்டும்., அதை நாங்கள் செய்கிறோம்" என்றான் சற்று வேகமாக.
அவன் கேட்டபடி மறுபடியும் அகத்தியரை வேண்டி நாடியைப் படித்தேன்.
"திருமணத்திற்குப் பின்பு என்ன நடக்க வேண்டுமோ, அது இவர்களுக்குள் பல முறை நடந்து விட்டது. இனி ஊரறிய கணவன் மனைவியாக வாழத்தான் விரும்புகிறார்கள். அகத்தியன் பொறுத்திரு என்று சொன்னதற்கு எத்தனையோ காரணம் உண்டு. பிறக்கின்ற வாரிசு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதை உத்தேசித்துத் தான் சொன்னேன். இதற்கு பரிகாரம் ஏதும் இல்லை. பிறகு இவர்களது விருப்பம்" என்று சட்டென்று சொல்லி முடித்துக்கொண்டார்.
அந்த வாலிபனுக்கு பொதுவாக அகத்தியர் நாடி, ஜோதிடம் எதிலும் நம்பிக்கை இல்லை என்பதை நாடி படிக்கும் பொழுதே புரிந்து கொண்டேன்.
"பரிகாரம் எதுவும் இல்லை. வாரிசு பாக்கியம் மிக நன்றாக இருக்க பொறுத்திரு" என்று அகத்தியர் சொன்னதால் வந்திருந்த அந்த இளம் பெண்ணும் முகத்தை சுளித்துக் கொண்டாள்.
பிறகு வேண்டா வெறுப்போடு கிளம்பிச் சென்றார்கள்.
ஒன்றரை ஆண்டுகள் கழிந்தது.
ஒருநாள் அந்தப் பையனும், அந்தப் பெண்ணும் முகத்தைத் தொங்கப் போட்டு கொண்டு என்னிடம் வந்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கான அடையாளம் தெரிந்தது.
கலங்கி இருந்த அவர்களது முகத்தைப் பார்த்தவுடன் ஏதோ மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
"சார்! எங்களை மன்னித்து விடுங்கள். அகத்தியர் பொறுத்திருக்கச் சொன்னார். நாங்கள் அதையும் மீறி மணந்து கொண்டோம். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம்" என்றார்கள்.
நான் மௌனமாக இருந்தேன்.
"எனக்கு குழந்தை என்றால் அவ்வளவு உயிர். எங்கள் வம்சத்தைச் சேர்ந்த பலருக்கு வாரிசே இல்லை. ஆண் வாரிசு என்பது மிகவும் அபூர்வம். இதை எல்லாம் நினைத்து ஆசைப்பட்டுத்தான் அவசரப்பட்டு இவளைத் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்தவுடன் என் தந்தையும் இறந்து போனார். இவள் தாயும் இறந்து போனாள்."
"என்ன ஆயிற்று?" நான் கேட்டேன்.
"ஆண் குழந்தையாக பிறந்தது. சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்தக் குழந்தையின் தலை பூசணிக்காய் அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கிறது. அதன் உடல் சோம்பி குறுகி எலும்பும் தோலுமாக காணப்படுகிறது. பார்க்க மிகவும் விகாரமாக இருப்பதால், யார் அந்தக் குழந்தையைக் கண்டாலும் வெறுத்துப் போகிறார்கள். எங்களுக்கும் குழந்தை பிறந்த சந்தோஷமே அடியோடு போயிற்று?" என்று அழுதனர்.
"இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?"
"அகத்தியர் வார்த்தையை மதிக்காததால் எங்களுக்கு இந்த சோதனை ஏற்பட்டது. பார்க்க மிகவும் விகாரமாக இருக்கும் அந்தக் குழந்தையைக் கண்டு தினம் தினம் புண்பட்டுப் போகிறோம். ஒரு சமயத்தில் அந்தக் குழந்தையைக் கருணைக்கொலை செய்து விடலாமா? என்று கூடத் தோன்றுகிறது" என்று தன் ஆற்றாமையை சொல்லித் தீர்த்தான் அந்தப் பையன்.
"ஆரோக்கியமான குழந்தை வேண்டுமென்றால் பொறுமையாக இரு என்று அன்றைக்கே அகத்தியர் சொன்னார். நாங்கள் தான் அவசப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் இயல்பான நிலைக்கு வருமா? இலையா? அல்லது எங்கள் தலை எழுத்தே இதுதானா? என்று அறிய விரும்புகிறோம்" என்று கண்ணீர் மல்க அவனது மனைவி கேட்டாள்.
நான் நாடியை புரட்டினேன்.
"எதையும் அகத்தியன் சூசகமாகவே சொல்வேன். இதை புரிந்து கொண்டு நடந்தால் நிம்மதியாக இருக்கலாம். உங்கள் தலை விதியை மாற்ற அகத்தியனுக்கு என்ன அக்கறை? தேவையே இல்லை! எப்போது அகத்தியனை நாடி வந்தீர்களோ, அப்போதே அவர்களுக்கு ஏதாவது நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று தான் அகத்தியன் விரும்புவான்.
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அகத்தியன் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. எது நடக்கிறதோ நடக்கட்டும். இதில் நான் என்ன சொல்ல வேண்டி கிடக்கிறது? என்று நினைப்பவர்கள் எதற்காக என்னை நாடி வரவேண்டும்? வர வேண்டாமே! இந்த வகையை சேர்ந்தவன் தான் நீ.
அது மட்டுமல்ல, ஒரு உண்மையை இப்பொழுது சொல்கிறேன். உன் தந்தைக்கும், இவளது தாயாருக்கும் தொடர்பு உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் இருவரும் அண்ணன், தங்கையாக மாறி விட்டீர்கள். இந்த காரணத்தால் தான் உன் தந்தை பெரும்பாலும் சேர்ந்து வாழவில்லை என்று விஷயம் உனக்குத் தெரியாது.
உன் தந்தை இளம் வயதிலேயே பல்வேறு பெண்களோடு தொடர்பு கொண்டு கெட்டுப் போனவன். திருமண ஆசை காட்டி பல பெண்களுடைய வாழ்க்கையைச் சூறை ஆடியிருக்கிறான்.அதில் பாதிக்கப்பட்டவள்தான் இவளது தாயும். இப்போது உன் தாயும் இல்லை. இவனோட தந்தையும் உயிரோடு இல்லை என்பதால் தான் இந்த விஷயத்தை அகத்தியன் சொல்கிறேன்" என்று சிறிது இடைவெளிவிட்டார்.
"இதை அகத்தியர் முன்பே சொல்லியிருந்தால், நாங்கள் திருமணமே செய்து கொண்டிருக்க மாட்டோமே. இப்படிப்பட்ட விகாரமான குழந்தையும் பிறந்திருக்காதே" என்ற அதிர்ச்சியால் புலம்பினாள் அந்த பெண்.
"ஓராண்டு கழிந்திருந்தால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காதோ?" என்றான் அவன்.
"நடந்தது நடந்து விட்டது. விரும்பி மணந்து கொண்டீர்கள். ஓர் ஆண் குழந்தையும் வாரிசாகப் பெற்று விட்டீர்கள். செய்த கர்மாவை சில காலம் அனுபவிக்கத்தான் வேண்டும். இது அகத்தியரின் சாபம் அல்ல. விதி. இதை மாற்றத்தான் அன்றே சூசகமாகச் சொன்னேன். யாரும் புரிந்து கொள்ளவில்லை" என்றவர் "இன்றைக்கு கூட பலருக்கு அகத்தியர் சொன்னபடி பல நிகழ்வுகள் நடப்பதில்லை என்ற குறையுண்டு. என்னை மாத்திரமல்ல, என் மைந்தனான இவனையும் குறை கூறித் திட்டவும் செய்கிறார்கள். அதையும் யாம் அறிவோம். இந்த நிலை மாறுவதற்கு சில காலம் ஆகும்" என்று ஏதேதோ சொன்னவர்,
"கவலைப்படாதீர்கள். விகாரமான உங்கள் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க மேல் நாட்டிலிருந்து நவீன மருத்துவர் ஒருவர் வருவார். அன்னவர் மூலம் ஒரு கீறல் வைத்தியம் நடக்கும். அதற்கு பிறகு தலை வீக்கம் வடியும். முழுமையாக வடியாவிட்டாலும் விகாரமாக இருக்காது. குழந்தையும் உயிர் தப்பிக்கும். இதற்கு குறைந்த பட்சம் ஐந்து அல்லது பத்தாண்டுகள் ஆகும். அதுவரை பொறுத்திருக்க முடியுமெனில் பொருந்திருக்க" என்று அருள்வாக்கு தந்தார்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் -
அந்தப் பையனை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவனிடம் எந்த வித விகாரமும் இல்லை. புத்திசாலித்தனம், உடல் ஆரோக்கியம் சீராக இருந்தது. இப்பொழுது அமெரிக்க நாட்டில் கணிப்பொறி துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறான்.
அந்தப் பையனின் பெற்றோர்கள், இப்பொழுது தான் மன நிம்மதியோடு இருக்கிறார்கள். அகத்தியரை தினமும் துதிக்கிறார்கள்.
"எங்களது பொறுமையும், நம்பிக்கையும் எங்கள் பையனை ஒரு முழு மனிதனாக மாற்றியிருக்கிறது. இப்போது எங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கிறது" என்று எல்லோரிடமும் அந்த தம்பதிகள் சொல்கிறார்கள்.
சித்தன் அருள்..................... தொடரும்!
Tuesday, 23 December 2014
அகத்தியர் அருளிய ஒரு இனிய அனுபவம்!
ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இதற்கு முன் "அகத்திய பெருமான் அருளிய அனுபவம்" என்கிற தலைப்பில் ஒரு "அகத்தியர் கோவிலை" பற்றி எழுதியிருந்ததை அகத்தியர் அடியவர்கள் படித்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அந்த கோவிலை கண்டடைந்தது ஒரு நிகழ்ச்சி மூலம். அகத்தியர் ஜீவநாடி வழி நல்ல ஒரு அனுபவம் கிடைத்ததும், அகத்தியரிடம், அவர் பாதத்தில் அடியவராக ஐக்கியம் அடைய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வலுத்தது என்பதே உண்மை. ஆனால் அவர் கண்டிப்பான குருவாயிற்றே என்ற எண்ணமும் கூட வந்தது. ஆம்! அவருக்கு எல்லாமே தெரியும். நாம் தவறக் கூடாது என்பதால், அவர் கண்டிப்பான ஒரு தகப்பனாக இருக்கிறார் என்பதை உணர்ந்து, அந்த கண்டிப்பான தன்மையையும் நான் உணர வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டேன். ஆனால், அவரிடம் வேண்டுதலை கொடுக்கிற பொழுது, மிக கவனமாக கேட்க வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்தது. அது ஏன் என்று பல பெரியவர்களையும் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அவர் சித்தர்களுக்கு தலைவர், அனைத்து தெய்வங்களின் அருளாசி பெற்றவர், மருத்துவம், ஜோதிடம், வாஸ்து சாஸ்த்திரம், இசை, ஞானம், தவம், யோகம், என இவ்வுலகில் உள்ள அனைத்து கலைகளையும் மிகச் சிறப்பாக கையாளுபவர், அவர் சொன்னால் விதி என்ன, இறையே வழங்கிக் கொடுக்கும், என பல வித கூற்றுக்கள் வெளிவந்தன. இதைக் கேட்டு மலைத்துப் போனேன் என்பது தான் உண்மை. இந்த உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமே அவர்தான், என்று உணர்ந்தேன். அன்று முதல் அவரை மானசீக குருவாக நினைத்து வழிபட்டு வருகிறேன் என்பது உண்மை.
அன்று, நான் இருந்த நிலையில், என் வீட்டிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்தால் மட்டுமே ஒரு கோவிலில் அகத்தியரை தரிசனம் செய்ய முடியும். எனக்கு தெரிந்த அகத்தியர் கோவில் அன்று அது ஒன்று தான். வெகு தூரம் என்பதால், மாதத்துக்கு ஒரு முறை, அகத்தியர் தரிசனம், அருளுக்கு வேண்டி, நண்பருடன் பயணம் செய்வேன். ஒரு சில நாட்களிலேயே, மாதம் ஒரு முறை என்பது, ஒரு தரிசனத்துக்கும், அடுத்த தரிசனத்துக்கும், இடையே மிகுந்த இடைவெளியாக உள்ளதாக உணரத் தொடங்கினேன். ஒரு முறை சென்று சேர்ந்த பொழுது, ரொம்பவும் உடல் அசந்து போனதால், அந்த கோவில் சன்னதியில், மனம் ஒன்றி வேண்டிக் கொண்டேன்.
"அய்யா! எப்படியோ மாதம் ஒருமுறை வந்து உங்களை பார்த்து, ஆசிர்வாதம் பெற முடிகிறது. ஒரு தரிசனத்துக்கும், அடுத்த தரிசனத்துக்கும் இடையில் மிகுந்த இடைவெளி வருவதாக என்னுள் சமீப காலமாக உணர்கிறேன். அது ஏன் என்று தெரியவில்லை. வீட்டுக்கு அருகிலேயே, சற்று தூரத்தில் எங்கேனும் உங்களுக்கு ஒரு கோவில் இருந்தால் காட்டிக் கொடுக்க கூடாதா? இதுவரை வந்து போவது என்பது சற்று ஸ்ரமமாக இருந்தாலும், உங்கள் அருளால் எப்படியோ நடந்துவிடுகிறது. வீட்டிற்கு அருகில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொடுத்தால், நினைக்கிற பொழுதெல்லாம் வந்து உங்களை தரிசிக்கலாமே! ஏதோ மனதில் தோன்றியதை சமர்பித்துவிட்டேன். தயை கூர்ந்து அருள வேண்டும்" என்றேன்.
மறுநாள் மனம் என்னவோபோல் இருந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன். வேலைக்குப் போய் விட்டு வந்து, ஏதோ ஒரு உந்துதலால், குளித்துவிட்டு அருகிலுள்ள சிவபெருமான் கோவிலுக்கு சென்று வரலாம் என்று கிளம்பினேன். போகும் வழியில் ஒரு அடியவரை சந்திக்க நேர்ந்தது.
வணக்கம் சொல்லிவிட்டு நடக்கப்போக, என்னை கூர்ந்து கவனித்தவர், அவராகவே பேசினார்.
"என்ன? நேற்று எங்கே போனீர்கள்? என்ன வேண்டிக் கொண்டீர்கள்?" என்றார்.
அவர் கேட்ட கேள்விகளால், நான் ஆச்சரியப் படவில்லை. அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
நடந்தவைகளை கூறினேன். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் பேசத் தொடங்கினார்.
"ஏன் அவ்வளவு தூரம் செல்லவேண்டும்? இங்கேயே பக்கத்தில் ஒரு அகத்தியர் கோவில் உள்ளதே. அங்கே போய் வரலாமே" என்று இடத்தை கூறினார்.
உண்மையாக அந்த இடத்தை கடந்து தான் எப்பொழுதும் தூரத்தில் இருக்கும் அகத்தியர் கோவிலை நோக்கி செல்வோம். இங்கு பக்கத்தில் இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.
அட! கேட்டதற்கு, குருநாதர் உடனேயே, ஒருவரை அனுப்பி காட்டிக் கொடுத்துவிட்டாரே. இனிமேல் எல்லா வாரமும் சென்று வரலாமே! என்று நினைத்து, இடத்தை மாற்ற தீர்மானித்தேன்.
அது ஒரு ஞாயிற்றுகிழமை. முதல் முறையாக இந்தக் கோவிலை தேடி நண்பருடன் சென்ற பொழுது, கோவில் பூசை முடித்து பூட்டி விட்டனர்.
"சரி! குருவை, குருவாரத்தில்தான் சந்திக்கவேண்டும் போல" என்று தீர்மானித்து, அங்கிருந்தவர்களிடம், கோவில் திறந்திருக்கும் நேரத்தை விசாரித்தறிந்துவிட்டு, வியாழக் கிழமை அன்று நண்பருடன் சென்றேன்.
ஸ்ரீ லோபாமுத்திரை சமேதே அகத்தியப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். கண்கள் பேசின, ஆனால் அதில் கூர்ந்த பார்வையும், கண்டிப்பும் இருந்ததை உணர முடிந்தது.
ஹ்ம்ம்! ரொம்ப கவனமாக ஆனால் உண்மையாக பெரியவரிடம் பேசவேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கொண்டேன்.
"எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டபடி வந்தார் மேலாளர்.
அறிமுகப்படுத்திக் கொண்டு "இந்த வழியாக செல்லும் பொழுது, கோவிலை கண்டு இங்கு வந்து சேர்ந்தோம்" என்றேன்.
"நல்லது" என்றபடி அவர் விலகினார்.
ஒரு நிமிட அமைதி கிடைத்தது. உடனேயே அகத்தியப் பெருமானிடம் "அய்யனே மிக்க நன்றி!" என்று கூறினேன்.
அதற்குப் பின் அங்கு செல்லும் பொழுதெல்லாம் பல விஷயங்கள் மளமளவென்று வளர, அகத்தியப் பெருமானின் அந்தக் கோவிலில் அவரே தன் இருப்பை எங்களுக்கு ஒரு நாள் உணர்த்தினார். அதை நாங்கள் மட்டும் எங்கள் மனதுக்குள் வைத்துக் கொண்டோம், அந்தக் கோவிலில் உள்ள ஒருவரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவில்லை.
சில வியாழக்கிழமையில், அதிகாலையில் என்னால் செல்லா முடியாத பொழுது, மாலை நான் மட்டும் தனியே சென்று வருவேன். நண்பர்களை காலையிலேயே சென்று வர அனுப்பிவிடுவேன்.
கோவில் ஸ்தாபிதம் செய்த நாள் அங்கு விமரிசையாக கொண்டாடப்படும். சற்று தள்ளியுள்ள முருகர் கோவிலில் இருந்து, முருகப் பெருமானின் உற்சவ மூர்த்தி விக்ரகம், அகத்தியர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். முருகர், அகத்தியப் பெருமானை காண வரும் பொழுது, அகத்தியரே சென்று அவரை வரவேற்று வழி நடத்திக் கொண்டுவருவதை , காண கண் கோடி வேண்டும். அந்த கோவிலின் இந்த முக்கியமான விழாவில் நாங்களும் பங்கு பெற்றோம்.
இப்படி ஒரு முறை வியாழனன்று அகத்தியப் பெருமானை தரிசனம் செய்கிற பொழுது, திடீரென்று என்னுள்ளில் இருந்து ஒரு வேண்டுதல் வெளி வந்தது. அதை அவரிடம் சமர்பித்தேன்.
சித்தன் அருள் .................. தொடரும்
Monday, 22 December 2014
பிருகு மஹரிஷி குரு பூசை 02/01/2015 அன்று சென்னையில்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சென்னை அருகே உள்ள அனுமந்தபுரம் என்ற இடத்தில் பிருகு மஹரிஷி அவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி, மார்கழி மாதம் ரோஹிணி நட்ஷத்திரத்தில் குரு பூஜை நடக்க உள்ளதாக ஒரு அகத்தியர் அடியவர் தெரிவித்தார்.. சப்த ரிஷிகளில் ஒருவர் பிருகு மஹரிஷி. சென்னை திருவோற்றியூரில் அகத்தியர்-நந்தி-பிருகு நாடி மற்றும் பிருகு ஜீவ நாடி வாசிக்கப்படுகிறது. அந்த நாடியில் இவ்வருடம் அய்யன் அகத்தியர் வாக்கின் படி அனைவருக்கும் குரு பூஜை அன்று விசேஷ மருந்து கொடுக்கும்படி அருள் வாக்காக வந்துள்ளது. அனைவரின் நன்மைக்காக சில நல்ல உள்ளங்கள் குரு பூஜைக்கான ஏற்பாடுகளில் இறங்கிஉள்ளனர். சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி பலரும் இவ்விழாவுக்காக வருகின்றனர். முடிந்தவரை அவ்விடம் சென்று அருள் பெறவேண்டுகிறோம். அந்த அருமையான அய்யன் அகத்தியரின் பாடல் அந்தாதி வடிவில்!
ஓங்கவே பிரிகுமுனி ஆசியும் தான்
ஒரு சேர சித்தர்களின் ஆசியும் உண்டு
பாங்குடனே கைபாகங்கள் செய் பாகங்கள்
பக்குவமாய் காட்டுவித்தோம் மருந்தின் அளவை
அளவுபடி என்சகமாம் சகத்திரம் குன்றா
அழகான கமலமது திண்ணத் தொப்ப
நாளதனில் கும்பமுனி வாக்கு சொல்ல
நலமுடைய மரகதமும் மொட்டு விட்டு
விட்டதொரு இதழ்தானே சிதைத்து சுண்ணம்
விதிப்படியே எண்மரக்கால் இரண்டும் நெல்லி
தாட்டிகமாய் விதைசுத்தி சுண்ணம் ஆக்கி
தஞ்சமென பலமளவு தூக்களவு
அளவுமுறை பிடிநூறாம் அளவில் வாணி
அத்துடனே இயற்கையதாம் மதுர பண்டம்
தெள்ளவே சர்க்கரையும் தாள வெல்லம்
தகும் அழகாய் ஓர் பகுதி கலவை செய்து
செய்துமே மூன்றுப்படி அளவில் நெய்யும்
சேர்த்துமே நலம் மதுரமது இத்துடனே
மெய்யாக குரு மிளகும் சுக்குசுண்ணம்
மருந்தான அரத்தையுடன் சீரகம் சீர்
சீர்படுத்தி சுகந்தவேர் நீரிநோடும்
சிவசிவமே குளிகைநலம் மழலையற்கே
நேர்த்திபட பாகுவகை உயர்வாய் கூட்டி
நல்விதமாய் ஒர்படிக்கு மேலாய் குளிகை
மேலான ஓர்பகுதி நீரும் நன்று
மங்கலமாய் குருவிழா பொலிவும் காண
நிலத்தோர்கள் அதிசயிக்க வண்ணம் அப்பா
நிர்மலமாய் சமதர்ம நியதி படி
விவரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் பார்க்கவும்.
நாடி வாசிக்கும் விவரம் பற்றி கீழ்க்கண்ட லிங்க் பார்க்கவும்
ஓம் ஸ்ரீம் சத்குரு பதமே சாப பாவ விமோசனம்
ருண ரோஹ கிலேச விமோசனம்
சர்வதேவ சர்வசித்தி ஒளி ஸ்வரூபாய , ஆத்ம ரூபாய
குலவம்ச பிர்குவே நமஹ
எல்லோரும் சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்!
அழைப்பிதழை கீழே தருகிறேன்!
கார்த்திகேயன்!
Thursday, 18 December 2014
சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை "நாடியில்" நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் நம்மிடை உண்டு. அவர் சொல்கிற எத்தனையோ பரிகாரங்களை செய்தும், நாம் எதிர்பார்ப்பது நடக்க தாமதமாகலாம். வருத்தப் படுவது வேண்டாம். அகத்தியப் பெருமானே, ஏன் என்று, அதற்கான காரணங்களை, பல தருணங்களில் விளக்கியுள்ளார். இந்த வாரம், சித்தன் அருளில், அகத்தியரின் பல அறிவுரைகளை உங்களுக்கு வழங்கலாம் என்று எண்ணம்.
அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பலமுறை கூறிய அறிவுரைகளை, என் நண்பர் விவரித்த விஷயங்களை, எளிய முறையில், இங்கு தொகுத்து தந்திருக்கிறேன். அகத்தியப் பெருமான் அருள் தந்தும் ஏன் நடக்கவில்லை என்று நினைத்திருப்பவர்களுக்கும், நம்முள்ளே எழுந்து இன்றுவரை விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு சில கேள்விகளுக்கும், இங்கு கண்டிப்பாக பதில் இருக்கும். அதை சரியாக தரம் பிரித்து பார்த்து, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு அகத்தியர் கூறுகிற பதிலாக எடுத்துக் கொண்டு, அதன்படி நடந்து, பின்னர் அமைதி உங்களுக்குள் தவழ்ந்தால், இவைகள் உங்களுக்கென அகத்தியர் கூறிய பதில் என்று உணர முடியும்.
- அகத்தியர் ஒரு சித்தர். அவரை நாடிக் கேட்கும் பொழுது நல்வழி காட்டுவார். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு நல்ல வழி, நல்ல பயன் கிடைக்கிறது. மற்றவர்கள், பொறுமையாக , மறுபடியும், மறுபடியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் அவர்களுக்கும் அருள் புரிவார். இங்கு நம் கடமை என்பது, பரிகாரங்களை செய்வதோடு மட்டும் அல்லாமல், பொறுமையாக, நிறைய நல்ல விஷயங்களை நம்பிக்கையோடு செய்து கொண்டிருக்க வேண்டும். மனம் தளரக்கூடாது. கண்டிப்பாக நல்லது நடக்கும்.
- பொதுவாக அகத்தியர் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாக்கு கொடுப்பதில்லை. சோதனைகளை உண்டாக்கி, "உண்மையில் அவன்/அவள் நம்பிக்கையோடு வந்திருக்கிறார்களா? இல்லை சுயநலத்திற்காக வந்து கேட்கிறார்களா என்பதை அறிந்த பின்னர்தான், தனது தவவலிமையை கொண்டு, வியத்தகு காரியங்களை செய்து காட்டுவார். ஆகவே, கேட்பதில், நாம்தான் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். கேட்பது, நிலைத்து நிற்கும் விஷயங்களாக இருந்தால். நிச்சயமாக கிடைக்கும்.
- அகத்தியர் வாக்கு சில சமயம் பொய்த்துவிட்டது போல் தோன்றும். ஆனால், சரியான நேரத்தில் அது விஸ்வரூபம் எடுத்து மீண்டும் பிரம்மாண்டமாக வெளியே வரும். இது தான் உண்மை.
- "காரணமில்லாமல் பொறுத்திரு என்று அகத்தியன் கூற மாட்டேன். இது அவசரமான உலகம். பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறார்கள். கலியுகம் என்பதால் அப்படி நடக்கவும் செய்கிறது. எப்போதைக்கு எப்போது எவன் ஒருவன் அகத்தியனிடம் முழு நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்கிறானோ அவனை நானே கைபிடித்து தூக்கி அழைத்துச் செல்வேன். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி பொருட்படுத்தவே மாட்டேன். ஏனெனில், என்னை நம்பி வருபவர்களுக்கு பிற்காலத்தில் எந்தவிதத் துன்பமும் வரக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை பிரம்மாவிடம் கேட்டு பிரம்மாவின் அனுமதியோடு அவர்களுக்கு நல்லது செய்வேன். இதற்கு சில காலம் ஆகலாம். பலருக்கு பிரம்மா இரக்கப்படாமல் கூடப் போகலாம். பிரம்மா மறுத்துவிட்டால், அதை நான் அப்படியே என் பக்தர்களுக்கு சட்டென்று நான் சொல்லிவிடமாட்டேன். மீண்டும் பிரம்மாவின் மனதை சாந்தப்படுத்த முயற்ச்சிப்பேன். எனது வேண்டுகோளை பிரம்மா உடனடியாக ஏற்றுவிட்டால் என் பக்தர்களுக்கு உரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பேன். இது நடக்கும், நடக்காது என்று வெட்டு ஒன்று துன்று ரெண்டாக சொல்லும் பழக்கம் அகத்தியனுக்கு இல்லை, அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் நூற்றுக்கு ஒருவர், இருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்தக் காரியமும் நடக்காது. "பொறுத்திரு" என்று சொன்னால் அவர்களுக்காக அகத்தியன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். பக்தர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார். சரியாக புரிந்து கொள்வது நமது கடமை, பொறுமை மேலும் நல்லதை செய்யும்.
- அனுபவப்பட்ட பின்தான் பலருக்கும் புரிகின்றது - பிரார்த்தனையும், பெரியோர்களின் வழிகாட்டலும்தான் ஒருவரை சோதனையிலிருந்து காப்பாற்றுகிறது என்று. நாம்தான் அவசரக் குடுக்கையாக நடந்து கொள்கிறோம், என்பதே அகத்தியரின் முடிவு.
- அகத்தியர் சொன்னால் எல்லாமே நடக்கும் என்பது பொது விதிதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். ஒருவர், இருவர் என்றால் அகத்தியர் உடன் ஓடி வந்து உதவி செய்வார். ஒரு நாளைக்கு 1000 பேர் வந்து முறையிடுகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று அகத்தியருக்கும் ஆசைதான். ஆனால் அவருக்கும் எத்தனையோ பிரார்த்தனைகள் இருக்கின்றன. த்யானம் செய்ய வேண்டும். தெய்வம் இடும் கட்டளைகளை/கடமைகளை செய்யவேண்டும். அதற்காக, அவர் பல அவதாரங்கள் எடுத்து எல்லோரையும் நிறைவு செய்ய முடியாது. எனினும் படிப்படியாக ஒவ்வொருவருக்கும் உதவி செய்வார். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என அகத்தியப் பெருமானே பல முறை கூறியுள்ளார்.
- அகத்தியப் பெருமான் சொன்ன பரிகாரங்களை செய்துவிட்டு, அடுத்த நாளே பலனை எதிர்பார்ப்பது தவறு. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம புண்ணியத்தால் உடனடியாக பலன் கிடைத்து விடுகிறது. பலருக்கு தாமதம் ஏற்படுகிறது. ஆதலில், பொறுமை, நம்பிக்கை மிக அவசியம்.
- குறுக்கு வழியில் பணம் சேர்ப்பவர்கள் எல்லோரும் பின்னொரு காலத்தில் அவல நிலைக்குத்தான் ஆளாக வேண்டிவரும். சிலருக்கு வாரிசு இல்லாமலே போய்விடும். பலருக்கு இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைக்கு நோய்கள் தாக்கும். இவை எல்லாம் உத்தேசித்துத்தான் "பொறுத்திரு சிலகாலம்" என உரைக்கிறார்.
- கர்மவினையை அனுபவிக்காமல் யாரும் தப்பிக்க முடியாது. அது இறைவன் இடுகின்ற கட்டளை.
- ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அகத்தியர் ஒரு வழிகாட்டி. சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும் சொல்வார். பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது அனைவருக்கும் நல்லது. அகத்தியர் சொன்னது நடக்கவில்லை என்றால் "விதி" இன்னும் இரங்கவில்லை என்று அர்த்தம். இதற்காக அகத்தியரை பழி சொல்வதில் அர்த்தமில்லை. இங்கு நம்செயல் சரி இல்லை, குறைந்த பட்சம், அகத்தியர் வாக்கில் நம்பிக்கை இல்லை, பக்தி இல்லை என்று அர்த்தம். முதலில் அவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
- எல்லோரும் அவரை தேடி வந்து, நாடியில் வாக்கு கேட்பார்கள். ஆனால், முன் ஜென்மத்தில் அகத்தியரை வழிபட்டதால், இந்த ஜென்மத்தில் ஏழ்மையில் பிறந்தும், நாடியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தூக்கிக் கொண்டு போய், அவர்களுக்காக அகத்தியர் நாடியில் வந்து அருள்வாக்கு கொடுத்து, அவர்கள் வாழ்க்கை செம்மையான பல நிகழ்ச்சிகள் உண்டு. அப்படிப்பட்ட புண்ணிய நிலைக்காக, இந்த ஜென்மத்திலேனும் நல்லதை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
- வீட்டில் நடத்தப்படும் யாகத்தின் புகை, அந்த வீட்டில் உள்ள குடும்பத்தாரை சுற்றி நின்று காப்பாற்றும். அதனால்தான் அகத்தியர் குறைந்தது, வாரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், வீட்டில் சாம்பிராணி புகை போடச் சொல்கிறார். அப்படி புகைக்கும் சாம்பிராணியில், சிறிதளவு நெய் சேர்த்துக் கொண்டால், யாகபலன் (பாதுகாப்பு) எளிதில் அனைவருக்கும் கிடைக்கும்.
- நான்கு வேதங்களில், அதர்வண வேதமும் ஒன்று. அது மாந்த்ரீகத் தன்மை கொண்டது. இதனை பிரயோகிப்பவர்கள் தங்களை தாங்கள் உடல் சுத்தம் செய்து கொள்வதோடு, மற்றவர்களுக்கு மாந்த்ரீகத்தால் உதவி செய்யும் முன்பு தங்களைத் தாங்களே ஒரு பாதுகாப்பு வளயம் போட்டுக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் அதர்வண வேதத்தை யாரும் தவறாக பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் தவறாக உபயோகப்படுத்தி, மற்றவர்களிடமிருந்து பணத்தை பிடுங்குகின்றனர். அதர்வண வேதத்தின் பெருமை இப்படிப்பட்டவர்களால்தான் வீழ்ச்சி அடைகிறது.
- நாம் முற்பிறவியில் செய்த வினைதான் செய்வினையாக இந்த பிறவியில் நம்மை ஸ்ரமப்படுத்தும். இதை உண்மையான பிரார்த்தனையால் சரி செய்து கொள்ளலாம். ஆனால், அதை செய்பவர்கள் (மந்திரவாதம்) குடும்பம் சூன்யமாகிவிடும், ஏன் அவர்களுக்கு (செய்பவர்களுக்கு) மரணம் கூட, துர்மரணமாகிவிடும். (தயவு கூர்ந்து யாரும் இதன் பக்கம் சென்று விடாதீர்கள்.)
- கணபதி யாகமும், மகாசுதர்சன யாகமும் செய்துவிட்டு ஒரு வீட்டுக்கு குடியிருக்கப் போனால், நாம் அறியாமலேயே அந்த வீட்டில் இருக்கும் துர்சக்திகள், பலமிழந்துவிடும். பாதிப்பில்லாமல் தப்பிக்கலாம். நிம்மதியாக வாழலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை இந்த யாகங்களை செய்வது, வைத்துக்கொண்ட (தெரிந்தோ/தெரியாமலோ) கழிவுகளை அகற்றும்.
- குற்றால மலையில் உள்ள மலை பாம்புகளின் கொழுப்பு செண்பகதேவி அருவியில் கலந்து வருவதால், அது குஷ்ட நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது. சதுரகிரியில் சித்தர்கள் இதை குணப்படுத்துகிறார்கள். தீர்த்தாமலையே ஒரு மூலிகை மலை என்பதால் ஆறு இடங்களில் சிறு அருவிபோல் மலைப் பாறையில் இருந்து தண்ணீர் கொட்டும். இது மருத்துவ குணம் கொண்டது. அந்த தீர்த்தமும் குஷ்டம் போன்ற கடுமையான எந்த சரும நோயையும் தீர்க்கும்.
- குறுக்கு வழியில், தகாத வழியில் பொருள்/செல்வம் ஈட்டியவர்களுக்கு, அகத்தியர் துணை போவதில்லை. அவரவர் கர்மாவை அவர்களே அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவார். அதே சமயம் அவர்களை உயிர் ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவார். அது கூட, என்றேனும் அவர்கள் திருந்தி வாழட்டுமே என்கிற பரந்த எண்ணத்தில்தான்.
- கோவில் சொத்தை கொள்ளை அடித்தால், சம்பந்தப்பட்டவர்களது, குடும்பம், வாரிசு பிற்காலத்தில், பைத்தியமாக வீதியில் ஆலயவேண்டிவரும், அல்லது மிகப் பெரிய விபத்தில் உடல் உறுப்புக்களை இழக்கவேண்டி வரும், அல்லது மரணம்வரை படுத்த படுக்கையில் விழ வேண்டிவரும். அதிலும், நரசிம்ஹர், ஆஞ்சநேயர் கோவில் சொத்துக்களானால், நிச்சயம் இப்படிப்பட்ட தண்டனைகள் உண்டு. இந்த தண்டனை இறைவனால் விதிக்கப் படுகிறது.
- பக்தியும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.
- நோயுள்ளவன்தான் மருந்து சாப்பிடவேண்டும். அது போல அவரவர் கர்மாவுக்கு, அவரவர் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.
Saturday, 13 December 2014
அகத்தியப் பெருமான் அருளிய அனுபவம்!
[ புகைப்பட நன்றி :திரு பாலச்சந்திரன், மலேசியா ]
உள்ளே இருந்த பூசாரி, நறுமணம் உள்ளே நுழைந்ததும், ஆச்சரியப்பட்டு, வெளியே திரும்பி பார்த்தார். அவரால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் மேலும் அபிஷேகத்தை தொடர்ந்தார்.
பொதுவாக எண்ணை காப்பு போட்டுவிட்டு, சுத்தமான நீரினால் அபிஷேகத்தை முடித்துவிடும் பூசாரி, என்ன தோன்றியதோ, நல்ல நறுமணப் பொடிகளை நீரில் கலக்கி அன்று அபிஷேகம் செய்தார்.
முன்னே நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அகத்தியப் பெருமான் ஒரு வினாடி தன் விழி இமையை திறந்து பார்த்துவிட்டு, சிறு புன்னகையுடன் மறுபடியும் த்யானத்தில் அமர்ந்தது போல் தோன்றியது. அபிஷேகத்தின் போதே, அவர் வலது கரத்திலிருந்து ஒரு ஒளி தோன்றி எங்கும் பரவ, சூரிய கிரணங்களும் அவர் பாதத்தை தொட்டு நமஸ்காரம் செய்தது. அனைவரும், பூசாரி சகிதம் அந்த சூரிய ஒளியைத்தான் கவனித்தனர். சூரிய ஒளிதான் அந்த வெளிச்சத்திற்கு காரணம் என்று நினைத்தனர்.
பார்த்துக் கொண்டிருந்த நான் உடல் சிலிர்த்து "இது போதும் அய்யா! மிக்க நன்றி!" என மனதால கூறிவிட்டு, நமஸ்காரம் செய்தேன். என்னவோ அந்த ஒரு நிமிடத்தில் கிடைத்த அருளில், வாழ்க்கையில் எல்லாமே அடைந்துவிட்டோம், இனி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றியது நிதர்சனமான உண்மை. இருந்தும் அந்த பளபளத்த விழிகளின் தரிசனம் நினைக்கும் போதெல்லாம் கிடைக்கிற மாதிரி ஒரு வழி பண்ணித்தரக் கூடாதா என்று வேண்டிக் கொண்டேன்.
வேண்டுதலுக்குப் பின் ஆச்சரியம் என்னவென்றால், மறுநாளே என் நண்பர் அனுப்பித்தந்த அகத்தியரின் ஒரு படத்தில், அகத்தியர் யோசனையுடன் தூரத்தில் விழித்துப் பார்ப்பதுபோல் இருந்தது. அதில் மனித கண்கள் இருந்தது கண்டு ஆச்சரியத்தில் திகைத்து நின்றுவிட்டேன்.
அபிஷேகம் முடிந்து, அலங்காரம் நிறைவுபெற்று, தீபாராதனை நடந்தது. என்றும் தென்படும் அகத்தியரின் உருவத்தைத்தான் பிறகு காண முடிந்தது. அபிஷேகத்தை பார்த்து ஆனந்தப்பட்டது, நாங்கள் மூவர் மட்டும் தான். பொதுவாக ஒரு 10 பேர் மட்டும் இருக்கிற அபிஷேக நேரத்தில் அன்று நாங்கள் மூவர் மட்டும் தான் இருந்தோம். அது ஏன் என்று புரியவில்லை. அந்த கிராமத்தில் இருக்கிற ஒருவர் கூட அன்று அப்பொழுது அங்கு வரவில்லை. பூசாரியும், மேலாளரும் அவர்கள் பணி நிமித்தமாக இருந்தனர். நாங்கள், அகத்தியர் அருளுக்காக இருந்தோம் என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
பூசை முடிந்து பிரசாதத்தை தந்த பூசாரி, அப்பொழுதும் அந்த நறுமணம் எங்கிருந்து வந்தது என்று யோசித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. நாங்கள் மூவரும் ஒன்றும் பேசவில்லை. மனம் அவ்வளவு அமைதியாகிவிட்டது.
பிரசாதம் வாங்கி, பிரதட்சிணம் செய்து வெளியே வந்த உடன், கூட வந்த நண்பர் மெதுவாக கூறினார்.
"மண்டபத்துக்கு பின்னால் நிற்கும் பொழுது, அபிஷேகம் தொடங்கும் முன், மேலிருந்து ஒரு காற்று வீசி கீழே இறங்கி சன்னதியை நோக்கி சென்றதை உணர்ந்தேன். பின்னர் நறு மனமும். பெரியவர் இன்று வந்திருந்தாரோ? என்றார்.
பரவாயில்லை! நேரத்துக்கு விழித்துக் கொண்டுவிட்டார்கள், என்று நினைத்து
"ஹ்ம்ம்!" என்ற பதிலை மட்டும் கூறினேன். அதில் அவர்களுக்கு அனைத்தும் புரிந்தது. எங்கள் அனைவரின் மனதும் மிக திருப்தியாக இருந்தது.
அன்று நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து பல விஷயங்கள் புரிந்தது.
- மிக எளிய வேண்டுதல்களை, ஆத்மார்த்தமாக அவர் பாதத்தில் சமர்பித்தால் நிச்சயம் அருளுவார்/நிறைவேற்றுவார்.
- அகத்தியப் பெருமான் மிக கண்டிப்பான குருநாதர்தான், பாரபட்சம் இல்லாதவர், ஆனால் மிகுந்த கருணை கொண்ட ஒரு தகப்பன். தன் குழந்தைகளின் மனம் அறிந்தவர்.
- சூழ்நிலைகளை அவரே முன் நின்று சாதகமாக்கி, சுத்தமாக்கி ஒரு பரிசாக நம்மிடம் ஒப்படைப்பார்.
- நாம் தான் பவ்யமாக இருந்து, அகம்காரத்தை, அகம்பாவத்தை விலக்கி, அவர் காட்டும் வழியில் நடக்க வேண்டும்.
- எல்லா நல்ல விஷயங்களுக்கும் மேலாக அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது, திடமான நம்பிக்கை, இறை பக்தி, குரு வந்தனம், மிக அதிக அளவில் பொறுமை என்பது தெளிவாக புரிந்தது.
சித்தன் அருள் தொகுப்பை வாசித்து இன்புறும் அனைவரிடமும் எனக்கு தெரிந்தவரையில், மிக முக்கியமான செய்தி என்று தோன்றியதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
நம்பிமலையில் நாடி வாசித்த பொழுது அங்கிருந்த அனைவரையும் "நீங்கள் எல்லோரும் என் மைந்தர்கள்" என அகத்தியர் கூறினார். அது ஒரு மிகப் பெரிய வரம்.
அது போல், நாம் ஒவ்வொருவரையும் "நீ என் மைந்தன்", "நீ என் மகள்" என அகத்தியரை, அவர் வாயால் கூற வைக்க நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும்!
யோசியுங்கள்.
அனுபவ தொகுப்பு நிறைவு பெறுகிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்திய சித்தாய நமஹ!
Friday, 12 December 2014
அகத்தியப் பெருமான் அருளிய அனுபவம்!
அகத்தியப் பெருமான் அருளி, திரு கார்த்திகேயன் அவர்களால் தொகுக்கப்பட்டு நம் முன் உலாவரும் "சித்தன் அருள்" தொகுப்பை வாசித்தவர்களுக்கு, அவரவர் கண் முன் நடக்கிற சில விஷயங்கள், அகத்தியரால் அருளப் பெறுகிறது, என்று சிலவேளை திண்ணமாக உணர முடியும்.
ஆன்மீகத்திலும், எங்கோ நோக்கி சென்ற வாழ்க்கையை, தன் அருள் அன்பினால் கட்டிப்போட்டு, நிறைய நல்ல விஷயங்களை செய்ய வைத்து, நம்மையும் திகட்டிட வைக்க, அவரால் தான் முடியும், என்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி உணர்ந்த பல அனுபவங்களில் ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லா வியாழக்கிழமையும் வரும் சித்தன் அருளை அதிகாலையிலேயே படித்துவிட்டு, வீட்டுக்கு சற்று தொலைவில் இருக்கும் அகத்தியர் கோயிலுக்கு சென்று அவரை வணங்கி அருள் வேண்டி வருவேன். என் இரு நண்பர்களும் உடன்வர, ஒரு நண்பரின் காரில் சென்று வருவோம். போகமுடியாத பட்சத்தில், என் நண்பர்களை சென்று வரச்சொல்லிவிட்டு, அன்று மாலை நான் மட்டும் சென்று தரிசனம் செய்து வருவேன். இது எத்தனையோ வருடங்களாக நடக்கின்ற ஒன்று. அப்படி காரில் செல்லும் பொழுது, அகத்தியர் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடத்தும் அதிசயங்களை மனதில் அசை போட்டு, "ஹ்ம்ம்! நமக்கும், இதே போல் ஏதேனும் அருளை அகத்தியப் பெருமான் வழங்கினால் சந்தோஷப் பாடலாமே," என்று பலமுறை நினைத்தது உண்டு.
இறைவனே நம் முன் தோன்றி "என்ன வேண்டும் உனக்கு?" என்று கேட்டாலும், மிகத் தெளிவாக இருந்து கேட்க வேண்டும், என்று என் நண்பர்களிடம் அடிக்கடி கூறிவருவேன். இறைவன் அருளால், த்யானத்தில் அமர்வதில் தான் எனக்கு மிகுந்த விருப்பம். ஆம்! த்யானத்தில் இருக்கும் அமைதி தான் ஒருவரை மேன்மை படுத்தும் என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
அப்படி ஒரு முறை த்யானத்தில் இருக்கும் பொழுது "அகத்தியப் பெருமானிடம்" "தாங்கள் அருள் வேண்டும்! அதை உணரவும் வேண்டும். அதற்கு அனுமதி அளியுங்கள்" என்று வேண்டிக் கொண்டேன்.
கேட்கும் பொழுது ஆத்மார்த்தமாக கேட்டுவிட்டு, பின்னர் அதை மறந்துவிடும் ஒரு பழக்கம் எனக்கு உண்டு. அது போல், இந்த வேண்டுதலையும், அவர் பாதத்தில் சமர்பித்தப்பின் இயற்கையாக மறந்து போனேன்.
மாதங்கள் பல ஓடின. இந்த கால அளவில் பல புண்ணிய இடங்களுக்கும் சென்று, இறைவனை தரிசித்து, த்யானத்தில் இருக்கும் பொழுது அகத்தியரிடம் "அருள் வேண்டும்" என்று மட்டும் எளிதாக கூறுவேன்.
ஒரு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி. எப்போதும் போல் எழுந்து சித்தன் அருள் தொகுப்பு வந்துவிட்டதா என்று பார்த்து, அதை படித்த பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத மெல்லிய உணர்வு பரவிற்று. இன்று ஏதோ ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்று உள்மனம் கூறியது. படித்து முடித்தபின், குளித்து விட்டு, மந்திர ஜெபத்துடன் த்யானத்தில் அமர்ந்தேன்.
சற்று நேர எளிய போராட்டத்துக்குப் பின் மனம், உடல், உணர்வு எல்லாம் அடி பணிந்து அமைதியாயிற்று. ஒரு நாழிகை அதே மோன நிலையில் அமர்ந்திருக்கும் பொழுது, சற்று சன்னமாக யாரோ வலது செவிக்கருகில் வந்து "இன்று அபிஷேகம் ஏற்றுக்கொள்ள நான் அங்கு வருவேன்! அபிஷேகத்துக்கு முன் அங்கு நிலவும் சூழ்நிலையையும், அபிஷேகத்தின் போது என் உருவச்சிலையையும் நன்றாக கவனி" என்று கூறுவது போல் கேட்டது.
த்யானம் கலைத்து வெளியே வந்த நான் "அட! இது பெரியவர் தான்! நமக்கு (நண்பர்களையும் சேர்த்து) தெரிவிக்க வேண்டியதை சொல்லி போயுள்ள்ளர். ஹ்ம்ம் அமைதியாக இருப்போம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என தீர்மானித்தேன்.
சற்று நிமிடத்தில், மழை மிகுந்த இரைச்சலோடு பெய்யத் தொடங்கியது. சரிதான் இன்று நிறைய ஆட்டம் இருக்கும் போல என்று நினைத்தேன்.
என்னை பொருத்தவரை, மழை இன்றி சூழ்நிலை இருந்தால், எளிதாக நினைக்கிற இடத்துக்கு போய் வந்துவிடலாம், என்று நினைப்பவன். ஆனால் அப்பொழுது பெய்த மழை வேறு ஒரு விஷயத்துக்காக என்று பின்னர் புரிந்தது.
செய்தியை உள்வைத்துக் கொண்டு, பூசையை தொடங்கும் பணிகளில் அமர்ந்தேன். மனம் அமைதியாக இருந்தது. உன்னிப்பாக ஒவ்வொரு நிமிடமும் இருந்தேன். இன்னும் ஏதேனும் உத்தரவு வரும் என்றால் கவனிக்க வேண்டுமே.
நான் செல்கிற அந்தக் கோவிலை பற்றி சொல்லவேண்டும். என் வீட்டிலிருந்து 30 நிமிடம் பயணம் செய்கிற தூரத்தில் இருக்கிறது. எப்பொழுதும் வாகனங்களின் நெரிசல் அதிகம் உள்ள வழியாகத்தான் போக வேண்டும். கோவிலில், அகத்தியப் பெருமான் லோபா முத்திரையுடன் ஒரு சன்னதியில் நின்ற கோலத்தில் இருப்பார். கணபதி, நாகராஜர், கிருஷ்ணர், ஓதியப்பர், நவக்ரகங்கள் இவர்களுக்கு தனித்தனி சன்னதி இவரை சுற்றி இருக்கும். காலை 5.30க்கு கோவில் திறக்கப்பட்டு 6 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
நிர்மால்யம், அபிஷேகம், அலங்காரம், பூசை இவைகளை 6 மணிக்கு போனால் பார்த்துவிட்டு, 6.30க்குள் பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பிவிடலாம். இது எப்பொழுதும் உள்ள சாதாரண சூழ்நிலை. அதனால், எப்பொழுதும் நாங்கள் 5 மணி 15 நிமிடங்களுக்கே எப்பொழுதும் புறப்பட்டுவிடுவோம்.
அன்று காலை 5.40 மணி ஆயிற்று. நண்பரை காணவில்லை. மெல்லிதாக கோபம் தலைக்கு ஏறிற்று. ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டிய நிமித்தத்தில், கோபப்பட்டு அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்து, அகத்தியப் பெருமானின் பாதத்தையே த்யானித்துக் கொண்டிருந்தேன். நண்பர் வரும் பொழுது வரட்டும். சீக்கிரம் வா என்று கூப்பிடப்போவதில்லை என்று தீர்மானித்தேன். எனெக்கென்னவோ, என் நம்பிக்கையை, பழகும் முறையை எப்படி கையாளுகிறேன் என்று அகத்தியப் பெருமான் சோதனை பண்ணுகிறாரோ என்ற எண்ணம்.
காலை மணி 5.50. நண்பர் வந்து சேர்ந்தார், நிறைய "மன்னிக்கவும்" வார்த்தைகளுடன். நான் எதுவும் பேசாமல், என் கையிலிருந்த பையை அவரிடம் கொடுத்து காரில் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.
கிளம்பும் பொழுது மணி 5.55. நம்பிக்கை இழக்கவில்லை.
ஆனால் அந்த கோவிலின் பொதுவான நிகழ்ச்சிகள் படி 6 மணிக்கு அபிஷேகம் ஆகிவிடும். 6.30க்குள் பூசை முடிந்துவிடும். எப்படி அகத்தியர் அபிஷேகத்தை, அவர் சாந்நித்யத்தை நாம் உணர முடியும்? அவரே நினைத்து ஏதேனும் அதிசயத்தை நடத்தினால் தான் உண்டு. எல்லாம் உங்கள் செயல் என்று அவர் பாதத்தில் வைத்துவிட்டு கிளம்பினோம்.
நல்ல மழை பெய்திருந்ததால், செல்லும் வழி எங்கும் மிக சுத்தமாக ஆக்கப் பட்டிருந்தது. என் வீடு முதல் அகத்தியர் கோவில் செல்வது வரை எந்த வாகன நெரிசலும் இல்லை. இங்கு மழை பெய்தாலே, எல்லோரும் அடங்கிவிடுவார்கள். யாரும் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வர மாட்டார்கள். பெய்த மழை, காற்றில் குளிர்ச்சியை ஊட்டியிருந்தது. என் மனமோ கவலை இன்றி அமைதியாக இருந்தது. வண்டியின் பின் இருக்கையில் கால் மடக்கி அமர்ந்து, த்யானத்தில் அமர்ந்தேன். எங்கே போனேன் என்று எனக்கே தெரியாது.
கோவிலை அடைந்து, நண்பர் உலுக்கிய பொழுதுதான் நிகழ் காலத்திற்கு வந்த நான், நன்றாக பொழுது புலர்ந்துவிட்டதை கண்டேன். மணியை பார்த்தால் 6.30 என்றது.
வேறு எதையும் யோசிக்காமல், "சரி நடப்பதை பார்ப்போம்" என்று நினைத்து கோவிலுக்குள் சென்று பார்த்தால், சன்னதி திறந்து, விளக்கேற்றி இருந்தது. அபிஷேகம் இன்னும் நடக்கவில்லை என்பதை அகத்தியர் சன்னதியில் அவர் முன் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த தண்ணீர் உணர்த்தியது. யாரும் அங்கு இல்லை. ஆச்சரியப் படாமல் அங்கு நிலவிய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்தேன். மேலாளர் வந்து "பூசாரி இன்னும் வரவில்லை. நான் தான் சன்னதியை திறந்து வைத்தேன். சற்று பொறுங்கள்! இப்பொழுது அவர் வந்து அபிஷேகம் செய்துவிடுவார்" என்று கூறிச்சென்றார்.
அகத்தியர் சன்னதிக்கு எதிரே ஒரு மண்டபம். பூசை சாமான்களை அங்குதான் வைப்பார்கள். அதற்கும், அகத்தியர் சன்னதிக்கும் இடையில் ஒரு சின்ன வழி உண்டு. அங்கிருந்துதான் அகத்தியர் சன்னதிக்கு ஏறுகிற "படி" தொடங்கும். நான் அங்கே போய் நின்று அகத்தியரை தரிசனம் செய்து "வந்துவிட்டேன்! அருள வேண்டியது உங்கள் முறை." என்று கூறிவிட்டு மண்டபத்தில் இடுப்பை சாய்த்தபடி அங்கேயே நின்றேன்.
கூட வந்த நண்பர்கள் மண்டபத்துக்கு பின் பக்கத்தில் நின்று தரிசனம் செய்தனர். நண்பர்களிடம் வந்த செய்தியை பற்றி எதுவுமே நான் சொல்லவில்லை. நடக்கும் பொழுது புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.
சற்று நேரத்தில், தாமதமாகிப் போனதை உணர்ந்து, அரக்கபரக்க பூசாரி ஓடி வந்தார்.
சன்னதிக்குள் சென்று, அபிஷேகத்துக்கு முன் உள்ள மந்திரங்களை பூசாரி சொல்லத் தொடங்க, அந்தரத்திலிருந்து "அடர்த்தியான" காற்று (ஒன்று) கீழிறங்கி, நண்பர்களை தாண்டி மண்டபத்தில் ஏறி, என் வலது பக்கம் வழியாக சன்னதிக்குள் மெதுவாக நடந்து சென்று ஏறியது. கூடவே, நல்ல நறுமண விபூதி, கொழுந்து, பன்னீர், மஞ்சள் வாசனைகளும் என்னை கடந்து சன்னதிக்குள் சென்றது.
நான் அசைவின்றி அப்படியே அகத்தியர் சிலையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.
Thursday, 11 December 2014
சித்தன் அருள் - 203 - குதம்பை சித்தர்!
மாதக் கணக்கில் தவமிருந்து, யாகங்கள் பல செய்து சித்தத்தன்மை அடைந்தவர்கள் பலருண்டு. ஆனால் முப்பத்திரண்டு தத்துவப் பாடல்களில் மிகப் பெரிய சித்ததன்மை பெற்றவர்களில் முதன்மையாக நிற்கிறவர் குதம்பைச் சித்தர்.
இவரது இயற்பெயர் இதுவரையிலும் யாரும் அறிந்திடாத செய்தி என்றாலும், இவருக்கு இந்தப் பெயர் வரக்காரணமே, அவரது காதில் அணியும் ஒரு ஆபரணம்தான்.
பொதுவாக இந்த ஆபரணத்தை பெண்கள்தான் அணிவர். அந்த ஆபரணத்தின் பெயர்தான் குதம்பை.
பிறந்தவுடன் இவரைப் பார்த்த அனைவரும் பெண்மை கலந்த தெய்வீக அம்சம் இருப்பதை உணர்ந்தனர். ஆணாக இருந்தாலும், இவரைப் பெண்ணாக எண்ணிப் பாவித்து, பெண்களுக்குரிய ஆடை, அணிகளை அணிவித்து, அக மகிழ்ந்து போனார்கள்.
யாரெல்லாம் இந்தக் குழந்தையைப் பார்க்கிறார்களோ, மறுநாள் அவர்கள் வீட்டில் குதம்பை ஆபரணம் தானாகக் கிடைக்கும். இது எப்படி வருகிறது, யாரால் கொண்டு தரப்படுகிறது என்று நிறைய ஆராய்ந்து பார்த்தனர். கடைசியில் அவர்கள் கண்டுபிடித்தது, இந்தக் குழந்தைதான் அதற்குக் காரணம் என்று தெரிய வந்தது.
ஒருநாள், இந்தக் குழந்தை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது, ஒரு மகான் வந்தார்.
"உனக்கு ஞானம் பிடிக்குமா, தானம் பிடிக்குமா?" என்று கேட்டார்.
"எனக்கு ஞானம்தான் பிடிக்கும்" என்றது அக்குழந்தை.
"அப்படி என்றால், இந்த இரண்டையும் கற்றுத் தருகிறேன். என் கூட வருகிறாயா?" என்றார்.
"இதோ, இப்பொழுதே வருகிறேன் சுவாமி! இதைவிட எனகென்ன பாக்கியம் வேண்டும்" என்று சொன்ன அந்தக் குழந்தை அவர் பின்னாலேயே சென்று விட்டது.
குழந்தையைக் காணவில்லை என்றதும், பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு எல்லா இடங்களிலும் தேடினர். கடைசியில் அந்த மகானுக்கு முன்னால் ஒரு சிஷ்யனைப் போல் கைகட்டி, பாடம் கேட்கும் பாவனையில், ஊருக்கு வெளியே அத்திமரத்தடியில் அந்தக் குழந்தை அமர்ந்து இருந்தது.
இதைக் கண்டதும் அந்த பெற்றோரும், ஊர் ஜனங்களும், அந்த மகானை தவறாகப் புரிந்து கொண்டு அடிக்கக் கிளம்பினர். தகாத வார்த்தைகளை பேசினார்.
"பிள்ளை பிடித்து நரபலி இடப்போகும் கயவன் இவன்" என்று நாக்கூசாமல் குற்றம் சாட்டினர்.
அப்பொழுது, ஒரு அசரீரி குரல் கேட்டது.
"யாரும் இந்த மகானை துன்புறுத்தாதீர்கள். வார்த்தைகளால் தகாத வார்த்தைகளைச் சொல்லி, அந்த மெல்லிய மனதை காயப்படுத்தாதீர்கள். இவர்தான் இந்தக் குழந்தையின் கடந்த கால குரு! அவரால் தான் இந்த குழந்தை மோட்ச நிலையை அடைப் போகிறது" என்று சொல்லியது.
சிவபெருமான் முன்பொரு காலத்தில் திருவிளையாடல் செய்து காட்டியதுபோல், இந்தக் குழந்தை "குதம்பை சித்தர்" என்னும் பெயர் பெற்று, பெருவாழ்வு வாழப்போகிறது" என்று சொல்லியது.
முதலில் இந்த அசரீரி வாக்கை நம்பவில்லை, யாரோ வேண்டுமென்றே சொல்லியது போல்தான் எண்ணிக் கொண்டனர்.
அப்பொழுது, அந்தக் குழந்தை சட்டென்று ஒரு பாடல் பாடியது.
"வெண் காயமுண்டு, மிளகுண்டு, சுக்குண்டு,
உண்காயம் எதுக்கடி? குதம்பாய்
உண்காயம் எதுக்கடி?
கொல்லா விரதம், குளிர் பசி நீக்குதல்
நல்ல விரதமடி, குதம்பாய்
நல்ல விரதமடி"
என்று மிகப்பெரிய தத்துவப் பாடலைப் பாடி, அதற்குரிய அர்த்தங்களை, பாமரரும் நல்லபடியாக புரிந்து கொள்ள வேண்டுமென்று, விளக்கத்தோடு சொன்னவுடன், அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் உட்பட அத்தனை பேர்களும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
அந்த மகான் சிவபெருமானது அம்சம் என்பதும், அந்தக் குழந்தை சித்தனாக போன ஜென்மத்தில் வாழ்ந்ததும், அது முற்றிலும் முடியாத தன்மையினால், இந்த ஜென்மத்தில் பிறந்திருக்கிறது, என்றும் போகப் போக எல்லோருக்கும் தெரிந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்தக் குழந்தை, குதம்பைச் சித்தராக மாறி, பெரும்பாலான நாட்கள் அந்தக் காட்டில் உள்ள அத்திமரப் பொந்துக்குள் நுழைந்து, கடும்தவம் இருந்தது. தெய்வ அம்சம், கருணை பேச்சு, காருண்ய உள்ளம் கொண்ட குதம்பைச் சித்தர் ஏராளமான அதிசயங்களைச் செய்து, பொதுமக்களின் துயரங்களை வியத்தகு முறையில் தீர்த்து வைத்தவர்.
இன்றைக்கும் கூட இவர் தவம் செய்த அத்திமரப் பொந்திலிருந்து, "ஓம் நமசிவாயா நம" என்ற மந்திரக் குரல், அவ்வப்போது ஒலிப்பதாக சொல்லப்படுகிறது. யாருக்கு அந்த பாக்கியம் கிட்டுகிறதோ, அவர்கள் பாக்கிய சாலிகள், என்கிறார்கள். சுமார் முப்பத்திரண்டு பாடல்கள் மூலம் வாழ்க்கையின் அத்தனை தத்துவங்களையும் பெற்று இந்தப் பிறவியின் பயனை அடைந்துவிடலாம்.
"மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப் பால் எதுக்கடி! குதம்பாய் தேங்காய்ப் பால் எதுக்கடி!
என்ற குதம்பைச் சித்தரின் எளிய பாட்டு, இன்றைக்கு ஏகப்பட்ட பேர்களது வாயில் அடிக்கடி முணுமுணுப்பதை காணலாம். இதைவிட ஒரு எளிமையான தத்துவப் பாடலை வேறு எங்கு காண முடியும்.
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
சித்தன் அருள்.................... தொடரும்!
Subscribe to:
Posts (Atom)