​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 2 October 2014

சித்தன் அருள் - 195 - சிவதாச சித்தர்!


சித்தர்கள் பெரும்பாலும் தனிமையாகவும் மலை உச்சியிலும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் அவர்களைத் தரிசிக்க நாம், மலை உச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

மலை உச்சிக்குப் போய்த்தான் சித்தர்களைத் தரிசனம் செய்ய வேண்டுமா? பக்தியால் அந்த சித்தர்களை நம் வீட்டிற்கு, நாம் குடியிருக்கும் ஊருக்கு வரவழைக்க முடியாதா? என்ற கேள்வி நிறைய பேர்களுக்கு எழும். இது நியாயமான கேள்வியும் கூட.

ஒரு சித்தரை பற்றி அகத்தியப்பெருமான் கூறியதை பார்ப்போம்.

சென்னைக்கு அருகே உள்ள ஒரு சிற்றூர். அதை சிற்றூர் என்று சொல்வதை விட எந்த வசதியும் இல்லாத ஒரு கிராமம் என்று சொல்லலாம். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் குடியானவர்கள். விவசாயத்தை நம்பி வயிறு வளர்ப்பவர்கள். பண வசதி, படிப்பு வசதி எதுவும் அவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.

அந்த சிற்றூரில் பிறந்தவன் சிவதாசன்.

அருகிலுள்ள பொட்டை வயலில், ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். வறுமையின் உச்சகட்டம் காரணமாக, அந்த ஏழு வயது சிவதாசனுக்கு பசிக்கு சரியான ஆகாரம் கிடைக்கவில்லை.

வீட்டில் பழைய சாதமும், "சாற்றமுது" என்று சொல்லப்படும் நீராகாரமும்தான் சிவதாசனின் உயிரை வளர்த்துக் கொண்டிருந்தன. நல்ல துணிமணி இல்லை. அவனது தலைமுடி எண்ணை பசியைக் கண்டு பல வருஷங்கள் ஆகியிருக்கும். வெறும் கோவணத்தோடுதான் அவன் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள், மதியவேளை! மரத்தின் நிழலில், அலுமினிய தூக்கில் வைக்கப்பட்டிருந்த பழைய சாதத்தை சாப்பிட சிவதாசன் சென்றபோது, கால் தடுக்கிக் கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அலுமினியத் தூக்கு உருண்டு, அதிலுள்ள சாப்பாடு எல்லாம் மண்ணில் கொட்டிவிட்டது.

இந்த சாப்பாட்டை விட்டால், இரவு ஒன்பது மணிக்குத்தான் கஞ்சியோ, கூழோ கிடைக்கும். பசி வயிற்றைக் கிள்ளியது. மண்ணில் விழுந்த உணவை மேலோட்டமாக எடுத்துச் சாப்பிட்டு விடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் மனது கேட்கவில்லை.

சிவதாசனுக்கு பசி போயிற்று. ஆனால் அழுகைதான் வந்தது. குமறிக் குமறி அழுதான். இவனது அழுகை அந்த பொட்டல்காட்டில் "ஒ"வென்று ஒலித்தது.

அப்போது,

"சாப்பாடிற்குதானே அழுகிறாய், இந்தா, இதில் உனக்கு வேண்டிய எல்லா சாப்பாடும் இருக்கிறது. ஆசை தீர சாப்பிடு!" என்று ஒரு வயதான சாமியார் தன் கையிலிருந்த பெரிய பொட்டலத்தைக் கொடுத்தார்.

வந்தவர் யாரென்று கூட கேட்காமல், பெரியவர் கொடுக்கிறாரே, என்று அதை பொறுமையாகச் சாப்பிடாமல் அவசர அவசரமாக அப்படியே முழுங்கினான். கடித்து சாப்பிடக் கூட அவனால் பொறுமை காட்ட முடியவில்லை.

சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பி பார்த்தான் சிவதாசன். சாப்பாடு கொடுத்த அந்த பெரியவரை காணவே இல்லை.

"சரி! ஏதோ வழிப்போக்கர் போலிருக்கிறது. என் நிலையைக் கண்டு இரக்கப்பட்டு சாப்பாடு கொடுத்திருக்கிறார், என்று எண்ணிக் கொண்டானே தவிர, வேறு சிந்தனை அவனுக்கு வரவில்லை.

​மறுநாள், வழக்கம்போல் ஆடு மாடுகளை அழைத்துக்கொண்டு, அந்த பொட்டல்காடு நோக்கிப் புறப்பட்டான். நேற்றைக்காவது அவன் தாய் தூக்கில் சாப்பாடு கொடுத்தாள்.  இன்றைக்கு முற்றிலும் அவளால் எழுந்திருக்க கூட முடியாமல் ஜுரத்தில் இருந்ததால், சிவதாசனுக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க முடியவில்லை.

சிவதாசனுக்கு, ஒரு நம்பிக்கை. நேற்றைக்கு தனக்கு உணவளித்த அதே சாமியார் இன்றைக்கும் தனக்கு மதியம் சாப்பாடு தருவார், என்று நம்பினான். அதற்காக மதியம் வரை காத்திருந்தான்.

அதே பெரியவர், மத்தியான நேரத்தில், சிவதாசனுடைய இருப்பிடத்தை நோக்கி வந்தார். ஆனால் அவர் கையில் சாப்பாடு பொட்டலம் இல்லை.

இது சிவதாசனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

வந்த, அந்த பெரியவர் சிவதாசனது ஏமாற்றத்தைக் கண்டு மெல்லியதாக சிரித்து, அவன் முகத்தைத் தட்டிக் கொடுத்தார்.

 "பசியோடு இருக்கிறோம்! சாப்பாடு கொடுக்கவில்லை. மாறாக என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? என்று எரிச்சல் பட்ட சிறுவன், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

"தம்பி! சிவதாசா! உனக்கு என் மீது கோபமா?" என்றார் அவர்.

"ஆமாம்" என்று மாடுபோல் தலை ஆட்டினான்.

"எதுக்கு? நான் நேற்றைக்கு மாதிரி சாப்பாடு தரவில்லை என்பதற்குத்தானே!" ஒரு பச்சைக் குழந்தை போல் கேட்டார் அந்த பெரியவர்.

"ஆமாம்" என்று பலமாக தலை ஆட்டினான்.

"சரி கோபப்படாதே! இப்போ உனக்கு சாப்பாடுதானே வேணும்" என்றவர், ஏதோ கையையும், காலையும் அசைத்தார், ஜபம் பண்ணினார். கை பட தான் கொண்டுவந்த ஒரு "திருஓட்டை" எடுத்து கீழே வைத்தார். மரத்தின் சருகுகள் காய்ந்து கீழே கிடந்ததில், இரண்டு உதிரிச் சருகுகளை கொண்டுவந்தார்.

காலை மடக்கி அமர்ந்துகொண்டார்! ஏதோ த்யானம் செய்தார். அவரது வாயோ எதையோ நினைத்து முணுமுணுத்தது. சாமியாரின் இந்த செய்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிவதாசனுக்கு, இப்பொழுது பசி போயிற்று.

பேசாமல் அவனும் இந்த சாமியார் எதிரில் உட்கார்ந்துவிட்டான்.

சாமியார் கண்ணை திறந்து பார்த்தார். சிவதாசன் கையைக் கட்டிக்கொண்டு தன் எதிரே அமர்ந்திருப்பதை கண்டார்.

"ஒரு நிமிடம் பொறு. உனக்கு இலை, பாயாசத்தோடு சாப்பாடு வரும்" என்றார்.

சித்தன் அருள்.................... தொடரும்!

2 comments:

  1. Aum Agattiya Maharishi Namah!!!

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete