இதனால், மேலும் பதற்றமடைந்த அவர்கள், ஊரை கூட்டிக்கொண்டு பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் கிடைக்காமல் உள்ளூர் கோயில் திண்ணையில் சோர்ந்து அமர்ந்திருதிருந்தபோது, அந்த கோயிலை திறக்க மாலை நேரத்தில் வந்த குருக்கள், "வாருங்கள், இங்குள்ள வைத்தீஸ்வரன் நிச்சயம் உங்கள் குழந்தையை வைத்தியம் செய்து உயிர் காப்பார்" என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார்.
கோயில் கருவறையை திறந்தபோது, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து புன்னகையோடு, , உடல் ஆரோக்கியத்தோடு, காவி வேஷ்டி, முண்டாசு சகிதம் கையில் தண்டத்தோடு சிவதாசன் வெளியே வந்தான்.
இது சிவதாசனா? என்று பலரும் ஐயமுற்றனர்.
"எப்படி இந்த கோயிலின் கருவறைக்குள் வந்தான். இவன் தெய்வீக சிறுவனா? மந்திரவாதியா? என்று சிலர் முணுமுணுத்தனர், அடிபட்டு செத்துப் போனான் என்று எண்ணிக் கொண்டிருந்த சிவதாசன் உயிரோடு வந்திருக்கிறான் என்றால், இது வைத்தீஸ்வரர் பெருமாள் செய்த லீலைதான். வைத்தியமும் செய்து தன்னோடு அழைத்து ஞானத்தையும் போதித்திருக்கிறார். சிவதாசன் கொடுத்து வைத்தவன் என்று பெரியவர்கள் பலரும் முடிவெடுத்து, சிவதாசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டனர். சிவதாசன் முகத்தைப் பார்த்த பொழுது, தெய்வீககளை ஏறியிருந்தது. உடலில் ஒரு புதிய சக்தி உண்டாயிருப்பதால், கண்களில் ஞானம் பரவி இருந்தது.
கருவறையிலிருந்து வெளியே வந்த சிவதாசன், ஈன்றோரை பார்த்து "அன்றைக்கு எனக்கு அன்னமளித்ததும் இந்த வைத்தீஸ்வரரே! இன்றைக்கு மருத்துவ சிகிர்ச்சை செய்து , என்னை கைத்தாங்கலாக இந்த கருவறைக்குள் கிடத்தி , ஞானத்தை புகுத்தி, அவருக்கு அடிமையாக்கி, சித்தத் தன்மையை கொடுத்தவரும் இதோ இந்த வைதீஸ்வரர்தான். கண்கண்ட தெய்வமாக விளங்கும் இந்த வைத்தீஸ்வரப் பெருமாள் புகழ் இன்னும் முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் புகழ் பெறப் போகிறது" என்றவன் "நான் தேசாந்திரம் சென்று மீண்டும் இதே கோவிலுக்கு திரும்புவேன். இங்கு ஒன்பது வகையான சித்தர்கள் ஜீவசமாதி நிலையில் உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வருவார்கள். இனி இந்த கோயில் சித்தர் கோயில் என்றும், காட்டிலே இருப்பதால், இதற்கு சித்தர் காடு என்றும் புகழ் பெறப் போகிறது" என்று சொன்னவன், அப்படியே வெளியே நடந்தான், யார் கண்ணிலேயும் பின்பு தென்படவே இல்லை.
சிவதாசன் சித்ததன்மையை அடைந்து வெளியேறிய பின்பு, அங்குள்ள சிலர், "அதெப்படி! ஏதோ ஒரு மந்திரஜாலம் மாதிரி நடக்கிறது. அடிபட்டவன் கருவறைக்குள் வருகிறான். உயிரோடு நடப்பது போல் நடக்கிறான். இது தோஷம் இல்லையா? எனவே சிவதாசன் சித்தன் அல்ல; செத்துப் போனவன். ஆவியாக இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறான். எனவே இந்தக் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது" என்று குரல் எழுப்பினர்.
பொதுமக்கள் இதை கண்டு குழம்பிப்போனார்கள்.
அன்றைக்கு ராத்திரி, திடீரென்று அந்த வைத்தீஸ்வரன் கோயில் ஆலயமணி வெகு வேகமாக அடித்தது. இதைக் கேட்டு அந்த கிராம மக்கள் பதறியடித்து அரிவாள், கம்பு, கத்தியோடு கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே சென்று பார்த்தால், வைத்தீஸ்வரன் லிங்கத்துக்கு பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கிறது. மலர்களின் நறுமணம் எல்லோரையும் சுண்டி இழுத்தது.
கோபத்தோடும், ஆத்திரத்தோடும், பயத்தோடும் வந்த அந்த ஜனங்கள் பக்தி பரவசத்தால் தங்களையும் மறந்து கைகூப்பித் தொழுதனர். அப்போது ஒரு அசரீரி குரல் கேட்டது.
"சிவதாசன் முதற் பிறவியிலே சித்தத்தன்மை பெற்று, இங்குள்ள வைத்தியநாதனுக்கு தொன்டு செய்தவன். மறுபிறவியிலும் தொண்டு செய்ய விரும்பினான். தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவனுக்கு வைத்தியநாதசுவாமி அருள்பாலித்தார்.
அவன் இப்பொழுது இளம்வயது சித்தர். வடபுல யாத்திரைக்குச் செல்லும் சிவதாச சித்தன், இறையருளால் பல்வேறு அதிசயங்களைச் செய்து காட்டப்போகிறான். அவனால் இந்த சித்தர் காட்டில் குடியிருக்கும் கோயில் பெருமை படப்போகிறது.
சிவதாசன் வடபுலம் சென்றாலும், தினமும் இங்கு பறவையாக வந்து இறைவனுக்கு மலர் தூவுவான். கொழுந்துவிட்டு எரிகின்ற விளக்கின் அருகே காக்கையாக இருந்து நெய்தனை உண்டு மகிழ்வான்.
இந்த கோயிலுக்கு வருகின்ற உண்மையான பக்தர்களின் குறைகளை, தன் சித்தத்தன்மையால் தீர்த்து வைப்பான். சிவதாசன் இளம் சித்தன்தான், ஆனால் முழுமையான இறையருள் பெற்றவன், இதனை உங்களுக்கு எடுத்துச் சொல்லவே, இங்கு ஜீவா சமாதியான நாங்கள் நான்கு சித்தர்கள் உங்களை வரவழைத்தோம்" என்றது அந்த குரல்.
இதற்குப் பிறகுதான் அந்த கிராமத்து மக்கள் நம்பினார்கள், அதற்கேற்றபடி சில அதிசயங்களும் சித்தர் காட்டில் நடக்க ஆரம்பித்தது.
ஒவ்வொரு பிரதோஷம் தோறும் ஆந்தைகள் இரண்டு வரும். சுவாமி புறப்பாடு ஆகும்பொழுது வந்து அமர்ந்த அந்த இரண்டு (சித்தர்) ஆந்தைகள், பிறகு சுவாமி உள்ளே கொண்டு செல்லப்பட்டவுடனே சிறகடித்துப் பறந்துவிடும்.
இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட காட்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் தோறும் சுவாமி சன்னதியில் ஏற்றுகின்ற நெய் விளக்கிற்கு அருகில் காக்காய் வந்து அமரும்.
விளக்கு எரிவதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த அகல்விளக்கு நெய்யை மட்டும் உண்டுவிட்டு, எரிகின்ற தீபத்திற்கு இடையூறு இல்லாமல் பறந்து சென்று விடும்.
மாலை நேரத்தில் பறவைகள் அடைக்கலமாகி விடுவதையும் தாண்டி காக்காய் வந்து இப்படிச் சாப்பிட்டு விட்டுப்போவது சிவதாசச் சித்தர் என்று சொல்கிறார்கள்.
யாரேனும் கோயிலில் நள்ளிரவு நேரத்தில் புகுந்து விடாமலிருக்க கோயிலுக்கு வலப் புறத்தில் உள்ள ஜீவசமாதி ஆனா சித்தர்கள் வேத கோஷத்தோடு மாறி மாறி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், என்பதுகூட சிவசித்தர் செய்து காட்டும் அதிசயம் தான். அந்த கோயிலுக்கு இடது பக்கத்தில் நந்தவனத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒரு நாகப்பாம்பு அவ்வப்போது நடமாடிக் கொண்டிருக்கிறது, இதுவும் ஒரு சித்தர் என்றும், இதுவரை யாரையும் துன்புறுத்தவில்லை என்றும் பார்த்தவர்கள் சொல்வதையும் கேட்கலாம்.
இன்றைக்கு அந்த கோயிலுக்குச் சென்று சித்தர்கள் தூண்களைச் சுற்றி பிரார்த்தனை செய்தால், சிவதாசச் சித்தரே இன்ன இன்ன தோஷத்திற்கு இன்ன இன்ன நிவர்த்தி என்று எப்படியாவது, யார் மூலமாவது காட்டிவிடுவார், என்று எல்லோரும் உண்மையாகச் சொல்கிறார்கள்.
இது நமது கலிகாலத்தில் அன்றாடம் நடக்கக் கூடிய தெய்வீக நிகழ்ச்சி. சித்தர்கள் நமக்காக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவரவர்கள், நடக்கின்ற நிகழ்ச்சிகள் வழி நம்புகிறார்கள்.
சிவதாச சித்தரின் தொகுப்பை படித்த அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த கோவில் எங்கு இருக்கிறது, ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டுமே என்று தோன்றும். அதை பற்றிய தகவல்களை கீழே தருகிறேன்.
அருள்மிகு ஸ்ரீப்ரசூன குந்தளாம்பிகா சமேத ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோவில், திருமணம் கிராமம், சித்துக்காடு. [Sri Thatheeswarar Temple, (Chithukadu), South Mada Street, 1/144, Thirumanam Village, Via Pattabhiram, Vayalanallur Post, Chennai - 600072.]
கோவில் திறந்திருக்கும் நேரம் :காலை 8 மணி முதல் 10.30 வரை, மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை.
அர்ச்சனை நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 6.30 வரை.
தொடர்புக்கு: திரு.குமரன் சிவாச்சாரியார் (Mobile No. +91 94447 93942)
முடிந்தவர்கள், இந்த கோவிலுக்கு சென்று இறைவன், சித்தர்கள் அருள் பெற்றுக் கொண்டு நலமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்..
சித்தன் அருள்.................... தொடரும்!