​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 12 August 2021

சித்தன் அருள் - 1023 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!

கருட பகவான் மேலும் வினவினார்.

"ஹே! பரமாத்மா! ஒருவன், மனத்தூய்மையோடு, தானதர்மங்களைத் தன கையாலேயே செய்வானாயின் அதனால், அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான் தர்மம் செய்வார்கள் ஆனால் அதனால் உண்டாகும் பயன் என்ன? தான தர்மம் செய்யும் பொழுது முறை தவறாகச் செய்தால் ஏற்படும் பயன் என்ன? இவற்றை திருவாய் மலர்ந்து அருள வேண்டுகிறேன்!" என்றார்.

பரமாத்மா கூறலானார்.

"கலுழனே! மனத்தூய்மை இல்லாமலும், மன உறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ, அத்தனை பயனும் சித்த சுத்தத்தோடு, சாஸ்த்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை தானம் வாங்குவோரும் நல்லவராக வேண்டும். 

ஒருவன் இறந்த பிறகு அவனை குறித்து செய்யப்படும் செய்யப்படும், லட்சம் கோதானங்களுக்கு என்ன பயனோ, அத்தனை பயனும் அவன் இறக்கும் காலத்தில்  செய்யும் ஆயிரம் கோதானத்திலேயே கிட்டிவிடும். ஆகையால்தான், கலுழனே! ஒருவன் தனது மரண காலத்திற்குள்ளேயே, கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வது மிகவும் நல்லது என்பதை தெரிந்துகொள். 

தானமும் நல்லதாக இருக்க வேண்டும், தானம் வாங்குவோரும் நல்லவராக இருக்க வேண்டும்.

தானம் கொடுக்கப்படும் இடமும் நல்ல க்ஷேத்ரமாக இருக்க வேண்டும். 

தானம் கொடுப்பவனுடைய மனமும் தூயமையானதாக இருக்க வேண்டும்.

இவை அனைத்துமே, ஒன்று சேர்ந்துவிட்டால், ஒன்று ஒரு கோடி பயனைத்தரும்.

கற்றுணர்ந்த சான்றோருக்கு கொடுக்கப்படும் தானம், நாளுக்கு நாள் விருத்தி அடையும்.

தானத்தை வாங்கிக்கொள்பவர் உத்தமராக இருந்துவிட்டால், தானம் கொடுப்போனுக்கு அதிக புண்ணியம் உண்டாகும்.

விஷத்தைப் போக்கும் மந்திரம், குளிரைப் போக்கும் அக்னியும் தத்தமது சக்திகள் தத்தமது செயல்களால் இழந்து விடுவதுமில்லை. அந்த சக்திகள் குறைவதுமில்லை. அது போலவே, தானம் வாங்கும் உத்தமரும், அவருடைய நற்கர்மத்தாலும், நல்லொழுக்கத்தாலும் குற்றமற்றவராவர்.

உத்தம பயனை அடைய விரும்புவோன், கோதானம் முதலிய தானங்களை செய்யும் பொழுது வேத சாஸ்த்திரங்களை ஓதி உணர்ந்த செந்தண்மை பூண்டு, அந்தணனான உத்தமனுக்கே கொடுக்க வேண்டும்.

வேத ஸ்த்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை கொண்டவனுக்கு கோதனம் கொடுத்தால், அந்த கோதானமே, கொடுத்தவனுக்கு, நரகத்தை கொடுக்கும். 

மேலும் தானம் வாங்குவதற்கே தகுதி இல்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களோடு நரகம் புகுவான். 

ஒரு பசுவை ஒருவனுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். 

எப்போதாயினும், ஒரு பசுவை பலருக்கு தானம் ஆக கொடுக்க கூடாது. 

அப்படிக் கொடுத்து, அந்த பசுவை, தானத்தை வாங்கியவர் அதை விற்று, அந்த தொகையை பங்கு போட்டுக்கொண்டாலும், ஒருவர் ஒரு மாதம் வைத்திருப்பது, மற்றொருவர் அடுத்தமாதம் வைத்திருந்து அனுபவித்துக் கொள்வது, என்று விதித்துக்கொண்டாலும், தானம் கொடுத்தவன், தன் ஏழு தலை முறையினரோடு நெடும்காலம், நரகத்தில் வாசம் செய்வான்.

சாதுக்களிடம், நல்ல பொருட்களை, பக்தி சிரத்தையோடு தானம் கொடுப்பவன், அந்தப்பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனை சந்தேகமின்றி அடைவான். அந்த பயன், பெட்டியில் வைத்து பூட்டிய பொருளாகவே நினைக்கத் தக்கது. 

அதிக தனம் உடையவன், இறந்த பிறகு அவனது பிள்ளைகள் அப்பனுக்கென்று பக்தியாகவும், சிரத்தையோடும், மனத்தூய்மையோடும் செய்யும் க்ரித்யங்களால் அவன் அடையக்கூடிய நல்லுலகை விட மேலானதாகிய உலகத்தை, புத்திரனில்லாதவன், தரித்திரனுமாகிய ஒருவன் சொற்ப அளவுடைய தர்மத்தை, தான் வாழும் காலத்தில் தானே தன் கையால் செய்வானாகின், அடைந்து விடுவான்.

கலுழனே! அயலூருக்கு பயணம் செல்பவன், கட்டுசோற்றை, கையிலே கொண்டு செல்வானாகில், வழியிலே, பசி பற்றிய கவலை இல்லாமல் எப்படி செல்வானோ, அவ்வாறே, ஒருவன் உயிரோடு இருக்கும் காலத்தில், அன்னதானம், கோ தானம் முதலிய தானங்களை தன் கையாலேயே செய்துவிடுவானாகில், மரணமடைந்து செல்லும் போது பசி தாகம் எதுவும் அடையாமல், நல்லுலகத்தை சேர்ந்து சுகிப்பான். 

கையிலே கட்டமுதை காட்டிக்கொள்ளாமல் செல்பவன், பசி தாக்கத்தால் வருந்துவதைப் போல, தான தர்மங்களை தான் வாழும் காலத்தில் தன் கையாலேயே செய்யாதவன், இறந்து செல்லும் போது, வழியில் மிகுந்த துன்பம் அடைவான்.

புனிதமான தலத்தில், புண்ணிய தலத்தில் செய்த நல்வினையாகிய நற்கர்மம், நெய் பெய்த அக்னி ஓங்கி வளர்வதை போல பயனாக வளரும்.

புண்ணிய ஷேத்ரமில்லாத எந்த இடத்திலாயினும், புண்ணிய காலமில்லாத எந்த காலமாயினும், விருஷோற்சனம் செய்து, நல்ல ஒழுக்க சீலமில்லாத அந்தணனுக்கு தானம் கொடுத்து விட்டாலும் கூட அந்த விருஷோற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால், உத்தம ஷேத்ரத்தில், உத்தம காலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் என்ன பயன் உண்டோ, அந்த பலன் நிச்சயமாக கைகூடும்.

ஆகையால், ஒரு மனிதன் நற்கதி  அடைவதற்கு, முதற் காரணமாக அமைவது விருஷோற்சனம் ஆகும். இன்றிருப்பர், நாளை இருப்பார் என்று எண்ணுவது திடமில்லை. மனித உடல் அநித்தியமாகயால், நல்ல காரியங்களையும், நற்செயல்களையும், நாளை செய்துகொள்ளலாம் என்று நினைக்காமல், நற்கர்மங்களை நினைத்த அன்றே செய்வது நல்லது.

புத்திர பாக்கியமுடையவன், தன் கையால், எந்த ஒரு தருமத்தையும், செய்யாமல், இறப்பானாகில், நற்கதி அடையமாட்டான். 

புத்திரனே இல்லாதவன் நல் வினைகளை செய்து மரிப்பானாகில் நற்கதியை அடைவான்.

யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வதை விட, விருஷோற்சனம் செய்வதே உத்தமமான நற்கர்மம் ஆகும்.

கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலாவது, மற்று எந்த  புண்ணிய தினத்திலாவது, உத்தராயண காலத்தில், சுக்ல பட்சத்திலாவது, கிருஷ்ண பட்சத்திலாவது, துவாதசியிலாவது தூய மனத்தோடு உத்தமமான திருத்தலத்தில் நல்ல திதி, யோக நட்சத்திரத்தில், நல்ல முறையில் வேத சாஸ்த்திரங்களை கற்றுணர்ந்த ஒழுக்கமுடைய அந்தணர்களை வருந்தி அழைத்து, சுபம் ஹோமம் முதலியவற்றை செய்வித்து, தன்னை தூயமையாளனாக செய்துகொண்டு, நவகிரகங்களையும் பூசித்து, மாதுர் தேவதைகளை அர்ச்சனை செய்து, பூர்ணாஹுதி கொடுத்து, மஹாவிஷ்ணுவை குறித்து ஸ்ரார்த்தம் செய்து, மந்திர நீரால் ரிஷபக்கன்று ஒன்றை நீராட்டி, ஆடை ஆபரணம் கந்த புஷ்பங்களால், நன்றாக அலங்கரித்து, மேலும், நான்கு ஆண் கன்றுகளோடு அந்த காளை கன்றானது, அக்னியை வலம் வரச்செய்து, வடதிசை நோக்கி நின்று, அந்த ரிஷபக்கன்றை நோக்கி "தர்மமே நீயே ரிஷ்பமானாய்! பிரம்மனாலே ஆதியில் படைக்கப்பட்டாய்!" என்று சொல்லி இறந்தவனுக்காக தானம் செய்தால், அவனை குறித்தும், செய்பவன், தனக்கே செய்து கொள்வானாயின், தன்னை குறித்தும், அதன் வாலில் மந்திர நீர் விட்டு, அந்த நீரை தன கரத்தால் ஏந்தி, தன சிரசின் மீது ப்ரோக்ஷித்து கொண்டு, ஆண் கன்றுகளோடு அந்த ரிஷபக்கன்றையும் விட்டு விட வேண்டும்.

கருடா, இந்த விருஷோற்சனமானது இறந்தவனைக் குறித்து செய்யப்பட்டதே ஆனால், உடனடியாக ஏகாதிஷ்ட ஸ்ரார்தத்தை செய்து விட வேண்டும். 

இறவாத்திருப்பவன், தனக்குத் தானாகவே செய்து கொள்வானாயின், தனக்கு பிரியமாக இருக்கும், நற்பொருட்களை அந்தணருக்கு தானமாக கொடுக்க வேண்டும். 

விருஷோற்சனம் செய்யாவிட்டால், பிரேத ஜென்மம் பற்றாமல் விடாது. ஆகையால் அந்த விருஷோற்சனம் செய்யாமலேயே, மற்ற நற்கர்மங்களை தனக்குத்தானே செய்து கொண்டாலும் கூட, மரித்த பிறகு புத்திரர் முதலியவர்கள் பற்பல நல் வினைகளை செய்தும் கூட, அவற்றால் எந்தவித பயனும் இல்லை என்று உணர்வாயாக. 

ஒருவன் மரித்த 11வது நாளிலாவது, ஷோடச ஸ்ரார்தத்தை, சபிண்டீகரணத்துக்கு முன்னதாகவே செய்து, ததியாராதனம் செய்து பலதானமும் கொடுக்க வேண்டும்.

பருத்தி ஆடையின் மீது, செம்பினால் வட்டில் செய்து வைத்து, அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து, ஆராதனை செய்து, நற்பிராமணனுக்கு அதையும் தானமாக கொடுக்க வேண்டும். 

வைதரணி என்ற நதியை தீ துன்பம் இல்லாமல், காக்கும் பொருட்டு, கரும்பினால் ஓடம்செய்து, வெண்பட்டினால் அதை சுற்றி நெய் ஊற்றிய வெண்கல பாத்திரத்தை அதனுள்ளே வைத்து, ஸ்ரீமன் நாராயணனை அர்ச்சித்து, அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாக கொடுத்தால், நலம் உண்டு.

கருடனே! எள், இரும்பு, பொன், பருத்தி, உப்பு, நவதானியங்கள் ஆகியவற்றையும் தவிர்க்காமல் தகுதி வாய்ந்த அந்தணருக்கு, தானமாக கொடுக்க வேண்டும். 

தானம் கொடுப்பவன், எளியவனாக இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்தாலும் போதுமானது. சக்தியை அனுசரித்து, பொருள் கொடுத்து, தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களுக்கும் தட்சிணையை அதிகமாக கொடுத்து அந்தணரை உவப்புடன் ஏற்கச் செய்ய வேண்டும். சய்யா தானம் வாங்கும் அந்தணனை, இருக்கச் செய்து தானம் செய்வது சிறப்புடையது. புத்திரன் இல்லாமல் இறந்தவனுக்கு பௌத்திரன் முதலியவர்களில் யாராவது செய்தால், நற்கதி உண்டாகும். தன் சக்தியை அனுசரித்து, நித்திய தானம் செய்பவன் யாவனோ, அவன் தன் வாழ்வின் இறுதியில், நற்கதியை அடைவான்.

உடலானது திடமாக இருக்கும் போதே, திருவணை முதலிய ஷேத்ராடனமும், கங்கை யாத்திரையும் செய்ய வேண்டும். 

தாய், தந்தையர் இறந்த பிறகு, ஆண்டாண்டு தோறும், அவர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். 

தாய், தந்தை, குரு முதலியவர்களுக்கு தன்னால் இயன்ற புண்ணியத்தை செய்து கொடுக்க வேண்டும். 

கருடா! மரித்தவரை குறித்து கிரியைகளை செய்யும் பொழுது, அந்தணருக்கு, எவன் ஒருவன் பூரி(தக்ஷிணை) கொடுக்கிறானோ, அவன் தான் வேண்டிய நல்லவைகளை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜென்மத்தை அடைய மாட்டான். யோகிகள், சன்யாசிகள், துறவிகள் முதலியவர்கள் எந்த லோகத்தை அடைவார்களோ, அந்த புண்ணிய லோகம் அவனுக்கு கிட்டிவிடும். 

கருடா, ஒருவன் மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியை பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்" என்று கூறி அருளினார்.

சித்தன் அருள்................தொடரும்!

3 comments:

  1. Om Lopamudra Mata samhet Agastheesaya Namah

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    விரோஷர்ணம் , கோ தானம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன,மேற் கூறிய தானங்கள் செய்வது கடினமாக இருக்கும் போல் தோன்றுகிறது. புண்ணியம் செய்தவருக்கே இத்தொகுதி கிடைக்கும் என்று தோன்றுகிறது
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

    ReplyDelete