​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 January 2021

சித்தன் அருள் - 978 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம், தென்காசி!



திருக்கயிலையில் சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தைக் காண மூவுலகத்தவரும் கூடி இருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. இதைக் கண்ட ஈசன், குறுமுனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி பணித்தார். ஒப்புக்கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘ஐயனே! நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென் திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்’ என்றார்.
 
தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம், ‘தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல். அங்குள்ள திரிகூட மலையில், எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்’ என்று ஈசன் வாக்களித்தார். அகத்தியர் தென்திசையை வந்தடைந்தார். பூமி சமநிலை அடைந்தது. ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர். திரிகூட மலை என்பது ‘திருக்குற்றாலம்’ ஆகும்.


இந்தப் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக சிவ தலம் ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். ஆனால் அருகில் எந்த சிவத்தலமும் இல்லை. எனவே சிவ வழிபாடு எப்படிச் செய்வது என்று வருத்தம் கொண்டார் அகத்தியர். இந்த நிலையில் திரிகூட மலையில் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. பெருமாளை தரிசிக்க எண்ணிய அகத்தியர் கோவிலை நெருங்கினார்.

உடம்பெல்லாம் திருநீறு தரித்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த அகத்தியரை சிலர் ஆலயத்திற்குள் அனுமதிக்கவில்லை. ‘சைவ மத அடையாளம் தரித்தவர்களை உள்ளே விடமுடியாது’ என்று தடுத்து விட்டனர். அகத்தியர் செய்வதறியாது திகைத்துப்போனார். தன் மனக்குமுறலை கொட்டுவதற்காக அருகில் இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை தேடி வந்தார். திரிகூட மலையில் தனக்கு நடந்தவற்றை முருகப்பெருமானிடம் கூறி, தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

அகத்தியர் முன்பாக தோன்றிய முருகப்பெருமான், ‘வைணவ அடியவர் போல் சமயச் சின்னம் தரித்து கோவிலுக்குள் சென்று, பஞ்சாட்சரம் ஓதி விஷ்ணுவை, சிவலிங்கமாக்கி வழிபடுங்கள்’ என்று கூறி மறைந்தார்.

திருக்குற்றாலத்தில் மஹரிஷி அகஸ்திய பெருமான் இளஞ்சி குமாரரின் அறிவுறுத்தலின்படி வைஷ்ண வேடம் தரித்து மஹா விஷ்ணுவின் தலையில் கையை வைத்து சிவ லிங்கமாக மாற்றிய புடைப்பு சிற்பம்..

முருகப்பெருமான் கூறியபடி, தன் நெற்றியில் திருநாமம் இட்டு, மார்பில் துளசி மாலை அணிந்து வைணவ அடியவர் போல் திருக்குற்றாலத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் சென்றார் அகத்தியர். பின்னர் அங்கிருந்த அர்ச்சகரிடம், ‘பெருமாளுக்கு மானசீக பூஜை செய்ய வேண்டும். சிறிது நேரம் வெளியில் இருங்கள்’ என்று கூறி, கருவறைக் கதவை மூடினார். கருவறையில் நின்ற கோலத்தில் இருந்த பெருமாளின் தலையில் கை வைத்து அழுத்தி ‘குறுகுக... குறுகுக...’ எனக் கூறி சிவபெருமானை நினைத்து தியானித்தார்.

என்ன ஆச்சரியம்! பெருமாளின் திருமேனி குறுகிப்போய் சிவலிங்கமாய் மாறிப்போனது. சிவனை துதித்து வழிபட்டார் அகத்தியர். வழிபாடு முடிந்ததும் கருவறைக் கதவைத் திறந்து வெளியேறினார். அப்போது கருவறையில் பெருமாளைக் காணவில்லை. சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கோபம் கொண்டனர். அகத்தியரை வசை பாடினர்; தாக்கவும் முயன்றனர். அதற்குள் அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட்டார். அது அவர்களைத் தாக்கியது. இதனால் அவர்கள் அகத்தியரிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர்.

அவர்களிடம் அகத்தியர், ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்று கூறினார். அந்த விஷ்ணுவே இன்று, ‘நன்னகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இதையடுத்து அங்கிருந்தே ஈசனின் திருமணக் கோலத்தை கண்டு களித்தார் அகத்தியர். இத்தல சிவபெருமான் அகத்திய முனிவரால் ‘குற்றாலநாதர்’ என்று அழைக்கப்பட்டார். பெருமாளைச் சிவனாக மாற்ற, தன் கைகளால் தொட்டதால், குற்றாலநாதரின் தலையில் அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்துள்ளதை இன்றும் காணமுடியும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘திரிகூட மலை’ என்று அழைக்கிறார்கள். ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும். ‘கு’ என்பது பிறவிப்பிணி. ‘தாலம்’ என்பது தீர்ப்பது. மனிதனின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர் குற்றாலநாதர்.

இந்த ஆலயத்தில் தல மரம் குறும்பலா. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் எப்படி மலையாக இருக்கிறாரோ, அதே போல் இந்த தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். இங்கு குறும்பலா நாதருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. குறும்பலா பதிகம் பாடியுள்ளார் சம்பந்தர். இந்த பலா மரத்தின் கிளைகள், கனிகள், சுளைகள், வித்துக்கள் என யாவும் சிவலிங்க வடிவமாகவே உள்ளது. ‘சுளையெலாஞ் சிவலிங்கம்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி.

இந்த ஆலயத்தின் நான்கு வாசல்களும் நான்கு வேதங்களாக விளங்குகின்றன. சிறிய அழகிய கோபுரம். குற்றாலநாதர் நடுவே கோவில் கொண்டு விளங்க, அவருக்கு வலதுபுறம் குழல்வாய் மொழியம்மையும், இடதுபுறம் பராசக்தியும் கோவில் கொண்டுள்ளனர். ஆலயம் சங்கு வடிவிலானது. அம்பாளும், சிவனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று குற்றாலநாதருக்கும், குழல்வாய் மொழியம்மைக்கும் அகத்தியர் சன்னிதி அருகில் திருமணம் நடைபெறும். ஈசனும், அம்பாளும் அகத்தியருக்கு திருமணக் காட்சிக் கொடுக்கிறார்கள்.

இங்குள்ள பராசக்தியே உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பீடத்தை ‘தரணிபீடம்’ என்கிறார்கள். பராசக்தியின் சன்னிதியில் தாணுமாலயன் பூந்தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது. பராசக்தியே இங்கு எழுந்தருளுவதால் நவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். ஆலயத்தில் விநாயகர், முருகர், சூரியன், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, பஞ்சபூத லிங்கம், சனீஸ்வரர், சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், துர்க்கை, கயிலாசநாதர், அறுபத்து மூவர், நன்னகரப் பெருமாள் என பல சன்னிதிகள் உள்ளன.

நோய் தீர்க்கும் தைலம்

தலையைத் தொட்டு அழுத்தியதால் ஈசனுக்கு இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது. பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேகவைத்து, அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கிறார்கள். இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.

தினமும் அர்த்த ஜாம பூஜையில் குற்றால நாதருக்கு ‘குடுனி நைவேத்தியம்’ செய்யப்படுகிறது. அதாவது சுக்கு, மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து நைவேத்தியம் செய்கிறார்கள். அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும் இந்த கசாயத்தை வாங்கிக் குடித்தால் நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது. இக்கோயில் வைணவக்கோயிலாக இருந்த போது, அகத்தியர் நேற்று வந்தாரா? என ஒரு துவாரபாலகர் கேட்பதைப்போலவும், இன்னொரு துவார பாலகர் அவர் வரவில்லை என கூறுவதைப்போலவும் உள்ளது.நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் (லிங்க பாணத்தின் மீது) தைலம் தடவுகின்றனர். சிவனுக்கு, அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாகவும் தருகின்றனர். இதுதவிர, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, “கடுக்காய் கஷாய’ நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர். சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து தயாரிக்கும் இதை, “குடுனி நைவேத்யம்’ என்கிறார்கள். சக்தி பீடங்கள் 64ல் இது, “பராசக்தி பீடம்’ ஆகும். இத்தல அம்பிகை, “குழல்வாய்மொழிநாயகி’ என்றழைக்கப்படுகிறாள். ஐப்பசி பூரத்தன்று திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று குற்றாலநாதர், குழல்வாய்மொழி நாயகி இருவரும் அகத்தியர் சன்னதிக்கு அருகில் எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுக்கின்றனர்.லிங்க வடிவ பலாச்சுளை: தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் “ஆதிகுறும்பலாநாதர்’ பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், “லிங்க’த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, “”சுளையெலாஞ் சிவலிங்கம்” என்று குறிப்பிடுகிறது. விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். இதுதவிர பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. இதனை சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்கின்றனர்.தொலைந்த பொருள் தரும் சிவன்: அர்ஜுனன், தான் பூஜை செய்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை (பெட்டி), காசியில் தொலைத்துவிட்டான். வருந்திய அர்ஜுனன் இங்கு வந்தபோது, அந்த பெட்டியைக் கண்டெடுத்தான். அதை இங்கேயே வைத்து பூஜித்துவிட்டுச் சென்றான். இந்த லிங்கம் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறது. பொருளை தொலைத்தவர்கள் இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொள்ள, மீண்டும் அவை கிடைக்கும் என்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று, அர்ஜுனன் இங்கு லிங்கத்தைக் கண்டான். எனவே, அன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதிக்கு அருகிலிருந்து இந்த லிங்கம், மேற்கு முக விநாயகர், குற்றாலநாதர் விமானம், திரிகூட மலை மற்றும் குற்றால அருவி ஆகிய ஐந்தையும் தரிசிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

6 comments:

  1. ஐயன் அருள் ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    ReplyDelete
  2. திருநட்சத்திர விழா தொடர்/வலைப்பதிவு ஐயா? நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. புகைப்படத்தில் குருநாதரே மலையாய் உருவகித்துள்ளாரே ! ஓம் அம் அகத்தீசாய நமக!

    ReplyDelete
  4. Aum Nama Shivaya....Aum Agastheeshaya Namaha...

    ReplyDelete