​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 January 2021

சித்தன் அருள் - 976 - ஸ்ரீ அகத்தியர் கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துக்கள்!

ஒரு நிகழ்ச்சி நாம் நினைப்பது போல் அல்லாமல், வேறுவிதமாக மாற்றி நடத்திக் கொள்வதில், அகத்தியப்பெருமான் மிக திறமையானவர். இதை பல முறை உணர்ந்திருக்கிறேன். அன்றைய காலை பூஜையை அவர்தான் மாற்றி அமைத்திருப்பார் என்ற திடமான நம்பிக்கை அடியேனுள் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன், தமிழ்நாட்டில், அகத்தியரின் நட்சத்திர தினத்தில், ஏன் அவர்கள் மாலை வேளைகளில் அபிஷேகம் செய்கிறார்கள்? அதில் என்ன தாத்பர்யம் என்று யோசித்தேன். ஒன்றுமே புரியவில்லை. உணர்ந்துபார் என உணரவைக்க, இப்படி மாற்றி அமைத்து தந்தாரோ என்று தோன்றியது.

குருநாதர் கழுத்தில் அணிவித்து பூசை செய்து வாங்கி வந்த ருத்திராக்ஷ மாலை உங்களுக்கு நினைவிருக்கும். அது அடியேனிடம் வந்தது என்ன காரணத்தினால் என்று தெரியாமலேயே இருந்தது. அடியேனிடம் இருந்த இரு மாலைகளையும் (ஒரு ருத்ராக்ஷ மாலை. ஸ்படிகலிங்கத்துடனும், இரண்டாவது ஸ்படிக மாலை - ஸ்படிக லிங்கத்துடனும்) அகத்தியப்பெருமான் தனக்கு வேண்டும் என கேட்டு வாங்கிக்கொண்டுவிட்டதால், அதற்குப்பின் எந்த மாலையையும் கழுத்தில் அணியாமல் இருந்தேன். ஒரு ஆறுமுக ருத்ராக்ஷத்தை நூலில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ளலாம், என்று நினைத்து எடுத்த பொழுது, முன்னரே தன சிஷ்யனிடம் ருத்திராக்ஷ மாலையை இழந்த, ஓதியப்பர் அந்த ஒரு ருத்ராக்ஷத்தை பார்த்தபடி நின்றிருந்தார். அவர் கழுத்திலும் எதுவும் இல்லை. ஆதலால், அந்த ஒரு ருத்ராக்ஷத்தை அவர் கழுத்தில் அணிவித்து, பிறகு உம்மிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன் என கூறி, இன்று வரை வெறும் கழுத்தாக இருந்து வந்தேன். ஓதியப்பரும் திருப்பி தருவதாக தெரியவில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அப்பனுக்கு பொறுக்கவில்லையோ என்னவோ. சிதம்பரம் நடராஜருக்கு போட்டு சந்தன அபிஷேகம் செய்த ஒரு மாலையை கொடுத்தனுப்பினார். அந்த மாலை முழுவதும் சந்தனம் ஒட்டிக் கொண்டிருந்ததால், பூஜை அறையில் இருக்கும், சிவபெருமான் பார்வதி விக்கிரகத்தில் போட்டு வைத்திருந்தேன். அதைத்தான் அகத்தியப்பெருமானின் கழுத்தில் அணிவித்து வாங்கி வந்தேன்.

முதல் நாள் பிரார்த்தனையில் அகத்தியரிடம் "உங்கள் அபிஷேக பூஜையை நல்ல படியாக நடத்திக் கொடுங்கள் என மனதார வேண்டிக்கொண்ட பொழுது, ஒரு உத்தரவு வந்தது.

"என் அப்பனிடமிருந்து வந்த அந்த ருத்ராட்ச மாலையை கொண்டு வா. அபிஷேகம் தொடங்கும் முன் அது என் கழுத்தில் இருக்கவேண்டும். கவனம், கொண்டு வருகிற உன் கையும், பூஜாரியின் கையை தவிர வேறு யாரும் அதை தொடக்கூடாது!" என்றார்.

இது என்ன புது நாடகம்? என்று யோசித்து "அய்யா! அதைத்தான் அன்று உங்கள் கழுத்தில் அணிவித்தாயிற்றே!" என்று மனதுள் நினைத்த பொழுது..........

"அதில் படிந்திருக்கும் என் அப்பனுக்கு அபிஷேகம் செய்த சந்தனம், அன்றைய அபிஷேகத்தின் பொழுது யாம் ஏற்றுக்கொள்வோம். அது எமக்கு வேண்டும்!" என்றாரே பார்க்கலாம்.

உடனேயே பூஜாரியை கூப்பிட்டு இந்த விஷயத்தை கூற, சரி! என ஒத்துக்கொண்டார். இதை கூறக்காரணம், அன்றைய தினம் அவருக்கு பூசை செய்ய நான்கு பூஜாரிகள் உள்ளே இருப்பார்கள். அகத்தியப்பெருமான் தீர்மானித்தவர் தவிர வேறு யார் கையும் படக்கூடாது.  அன்றைய காலை பூஜை நின்று போனதால், பூஜாரியே கூப்பிட்டு பூஜை நேரத்தை சொல்லட்டும் என்று அலுவலகப்பணிகளில் கவனம் செலுத்தினேன்.

மதியம் 12 மணிக்கு ரத்தீஷ் என்ற அகத்தியர் பக்தரிடமிருந்து போன் வந்தது.

"அய்யா! வணக்கம்! காலை பூஜை நின்று போனது கேள்விப்பட்டிருப்பீங்க! அபிஷேக பூஜையை மாலை செய்யலாம் என்று ஒரு தீர்மானம். பூஜாரி 2 மணிக்கு வந்து கோவிலை சுத்தம் பண்ணிவிட்டு  ஒரு 3.45 மணிக்கு அபிஷேகத்தை தொடங்விடலாம் என்று உள்ளோம். நீங்க முன்னரே வந்து விடுங்கள்" என்றார்.

"அதென்ன அவ்வளவு அவசரப்பட்டு பண்றீங்க?" என்றேன்.

"நிறைய அபிஷேக வகைகள் இருக்கு. இதை முடித்து சரியாக 6.30 மணிக்கு தீபாராதனையில் கொண்டு சேர்க்க வேண்டும். மட்டுமல்ல தூரத்திலிருந்து வந்து அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், சற்று சீக்கிரமே கிளம்பி செல்ல வேண்டும்" என்றார்.

அடியேனால் நிச்சயமாக 3.45 மணிக்கு அங்கு இருக்க முடியாது. எப்படி வேகமாக சென்றாலும் 4.15 மணி ஆகி விடும். இன்னும் சில வேலைகள் கோவிலில் முடிக்க வேண்டியுள்ளது எனத்தெரியும். தீர்மானித்தேன்.

"நீங்க வேணா சீக்கிரமா தொடங்கிக்குங்க. என்னால் அவ்வளவு சீக்கிரமாக வரமுடியாது. அலுவலக பணிகளை நிறைவு செய்து, ரிப்போர்ட் கொடுத்து வந்து சேரும் பொழுது எப்படியாயினும் 4.30 ஆகிவிடும்! அடியேன் அபிஷேகம் தொடங்கியபின் வந்து சேர்ந்து கொள்கிறேன்" என்று கூறிவிட்டேன்.

அவரும் சரி என்று கூறினார்.

பின்னர்தான் உரைத்தது. "அடடா! அபிஷேகம் தொடங்கும் முன் இந்த ருத்ராக்ஷ மாலை அவர் கழுத்தில் இருக்க வேண்டுமே! அதெப்படி அபிஷேகம் நடத்த முடியும். இந்த விஷயம் அடியேனுக்கும், முக்கிய பூஜாரிக்கும்தானே தெரியும்!" என்று யோசித்தேன்.

அப்படியே பூஜை அறையில் அமர்ந்திருக்கும் அகத்தியப் பெருமானை நிமிர்ந்து பார்த்தேன்.

"அய்யா! அடியேனுக்கு வேறு வழி தெரியவில்லை.நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. அபிஷேகத்துக்காக நடக்கிற வேலைகளை சற்று தாமதப்படுத்துங்கள்! அடியேன் வந்து அந்த மாலை உங்கள் கழுத்தில் அமர்ந்த பின் தான், அபிஷேகம் நடக்கலாம். இது உங்கள் பொறுப்பு, நடத்திக் கொடுங்கள்" என்றேன்.

3.45 மணிக்கு கிளம்பி செல்லும் பொழுது, அதே ரத்தீஷ் போன் செய்தார்.

"எங்க இருக்கீங்க? அவசரப்பட்டு வர வேண்டாம். ஏனோ பஞ்சாமிர்தம் செய்கிற வேலை தாமதமாகிறது. பூஜாரி 4.30க்கு அபிஷேகம் தொடங்கலாம் என்றுவிட்டார். நிதானமாக வாருங்கள்" என்றார்.

சிரித்தபடி நான் சொன்னேன் "நீங்க ஒரு தீர்மானம் எடுத்தா, நான் அகத்தியரிடம்தான் சொல்வேன். அவர் நியாயம் இருக்கும் பக்கத்துக்கு உதவுவார். அடியேன்தான் அவரிடம் சொல்லி தாமதப்படுத்த சொன்னேன். ஏன் என்றால், அடியேனுக்கும், பூஜாரிக்கும் மட்டும் உள்ள ஒரு உத்தரவு அங்கு வந்து சேர உள்ளது. அது வந்தால்தான் அபிஷேகம் தொடங்க முடியும்" என்றேன்.

கோவிலை சென்றடைந்ததும் மணி 4.15. பஞ்சாமிர்த வேலைகள் நிறைவை அடைந்தது.

பூஜாரியை அழைத்து, முதலில் ருத்ராக்ஷ மாலையை அவரிடம் கொடுத்து, "கவனம்" என்றேன்.

தலையை குலுக்கி வாங்கிக்கொண்டவர், முதலில் அதை கொண்டுபோய் அகத்தியப்பெருமானின் கழுத்தில் அணிவித்தார். மற்றவர்களிடம் அந்த மாலையை தொடக்கூடாது என்று கூறிவிட்டு, பூஜையை தொடங்க கோவில் மணியை அடித்தார்!

4.30 மணிக்கு பூஜை தொடங்கியது!

சித்தன் அருள்...............தொடரும்!

3 comments:

  1. 💐🙏🏻💐❤️❤️❤️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க வளமுடன். தங்களுக்கும் தங்கள் அன்பு குடும்பத்திற்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்றைய நன்நாளில் இறைவனுக்கு பலகோடி நன்றிகள், பிரபஞ்ச சக்திக்கு பலகோடி நன்றிகள், சித்தர்களுக்கும் நவகோடி சித்தர்களுக்கும் என் குருமாரர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் மருத்துவ பெருமக்களுக்கும் பலகோடி நன்றிகள். கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி💐🙏🏻💐❤️❤️❤️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு
    குருவே துணை
    குருவே போற்றி போற்றி
    குரு வாழ்க பல்லாண்டு
    குரு திருவடிகள் சரணம் சரணம்🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரயா நமோ நமஹ!

    ReplyDelete
  3. குருவே சரணம் குருபாதம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

    ReplyDelete