​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 29 January 2021

சித்தன் அருள் - 980 - பொதிகையில் அகத்தியப்பெருமான்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அடியனின் நண்பர் ஒருவர் பொதிகை சென்று அகத்தியப்பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்து பிரசாதம் கொண்டு தந்தார்.

கூடவே, அவர் எடுத்த ஓரிரு படங்களை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு படத்தில், அகத்தியப்பெருமான் விபூதி அபிஷேகத்துக்குப்பின் கண் திறந்து நம்மை பார்ப்பது போல் அமைந்துள்ளது.

யாம் பெற்ற அவரின் அருள்பார்வை, நீங்கள் அனைவரும் பெற்றிட, அந்த படத்தை பகிர்ந்துள்ளேன். பெரிதாக்கி பாருங்கள். புரியும். எடுத்து வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

Thursday, 28 January 2021

சித்தன் அருள் - 979 - ஆலயங்களும் விநோதமும் - திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர்!


மதுரையிலிருந்து 62 கிமீ தொலைவில் மதுரை-புதுக்கோட்டை சாலையில் இக்கோயில் உள்ளது.  

திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம். இவ்வூர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்துள்ளது. தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து எண்ணற்ற முனிவர்களும் சாதுக்களும் இவ்வூரில் தொடர்ந்து தவம் செய்து வந்துள்ளனர். முனிவர்களும் சாதுக்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து தவம் செய்தமையால் அவர்களை சுற்றி கரையான் புற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்விடம் முழுவதும் பல புற்றுகள் காணப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் இவ்விடத்தை புத்தூர் என அழைக்க ஆரம்பித்து, நாளடைவில் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருப்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினார். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சன்னதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத் திருத்தலத்தின் சிறப்பம்சம். பிருகு முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க விஷ்ணு இங்கே வந்து இறைவனை வழிபட்டு சாப நிவர்த்தி ஆனதாக வரலாறு.

ஸ்ரீயோக பைரவர் [கிரக தோஷம் போக்கும் ஸ்ரீயோக பைரவர்] (ஆதிபைரவர்)

திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர். இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர். பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார். 

பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. 

பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன. மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள். 

பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே!

கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். 

பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர். 

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது.

சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

Thursday, 21 January 2021

சித்தன் அருள் - 978 - ஆலயங்களும் விநோதமும் - அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம், தென்காசி!



திருக்கயிலையில் சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தைக் காண மூவுலகத்தவரும் கூடி இருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. இதைக் கண்ட ஈசன், குறுமுனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி பணித்தார். ஒப்புக்கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘ஐயனே! நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென் திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்’ என்றார்.
 
தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம், ‘தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல். அங்குள்ள திரிகூட மலையில், எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்’ என்று ஈசன் வாக்களித்தார். அகத்தியர் தென்திசையை வந்தடைந்தார். பூமி சமநிலை அடைந்தது. ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர். திரிகூட மலை என்பது ‘திருக்குற்றாலம்’ ஆகும்.


இந்தப் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக சிவ தலம் ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். ஆனால் அருகில் எந்த சிவத்தலமும் இல்லை. எனவே சிவ வழிபாடு எப்படிச் செய்வது என்று வருத்தம் கொண்டார் அகத்தியர். இந்த நிலையில் திரிகூட மலையில் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. பெருமாளை தரிசிக்க எண்ணிய அகத்தியர் கோவிலை நெருங்கினார்.

உடம்பெல்லாம் திருநீறு தரித்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த அகத்தியரை சிலர் ஆலயத்திற்குள் அனுமதிக்கவில்லை. ‘சைவ மத அடையாளம் தரித்தவர்களை உள்ளே விடமுடியாது’ என்று தடுத்து விட்டனர். அகத்தியர் செய்வதறியாது திகைத்துப்போனார். தன் மனக்குமுறலை கொட்டுவதற்காக அருகில் இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை தேடி வந்தார். திரிகூட மலையில் தனக்கு நடந்தவற்றை முருகப்பெருமானிடம் கூறி, தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

அகத்தியர் முன்பாக தோன்றிய முருகப்பெருமான், ‘வைணவ அடியவர் போல் சமயச் சின்னம் தரித்து கோவிலுக்குள் சென்று, பஞ்சாட்சரம் ஓதி விஷ்ணுவை, சிவலிங்கமாக்கி வழிபடுங்கள்’ என்று கூறி மறைந்தார்.

திருக்குற்றாலத்தில் மஹரிஷி அகஸ்திய பெருமான் இளஞ்சி குமாரரின் அறிவுறுத்தலின்படி வைஷ்ண வேடம் தரித்து மஹா விஷ்ணுவின் தலையில் கையை வைத்து சிவ லிங்கமாக மாற்றிய புடைப்பு சிற்பம்..

முருகப்பெருமான் கூறியபடி, தன் நெற்றியில் திருநாமம் இட்டு, மார்பில் துளசி மாலை அணிந்து வைணவ அடியவர் போல் திருக்குற்றாலத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் சென்றார் அகத்தியர். பின்னர் அங்கிருந்த அர்ச்சகரிடம், ‘பெருமாளுக்கு மானசீக பூஜை செய்ய வேண்டும். சிறிது நேரம் வெளியில் இருங்கள்’ என்று கூறி, கருவறைக் கதவை மூடினார். கருவறையில் நின்ற கோலத்தில் இருந்த பெருமாளின் தலையில் கை வைத்து அழுத்தி ‘குறுகுக... குறுகுக...’ எனக் கூறி சிவபெருமானை நினைத்து தியானித்தார்.

என்ன ஆச்சரியம்! பெருமாளின் திருமேனி குறுகிப்போய் சிவலிங்கமாய் மாறிப்போனது. சிவனை துதித்து வழிபட்டார் அகத்தியர். வழிபாடு முடிந்ததும் கருவறைக் கதவைத் திறந்து வெளியேறினார். அப்போது கருவறையில் பெருமாளைக் காணவில்லை. சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கோபம் கொண்டனர். அகத்தியரை வசை பாடினர்; தாக்கவும் முயன்றனர். அதற்குள் அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட்டார். அது அவர்களைத் தாக்கியது. இதனால் அவர்கள் அகத்தியரிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர்.

அவர்களிடம் அகத்தியர், ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்று கூறினார். அந்த விஷ்ணுவே இன்று, ‘நன்னகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இதையடுத்து அங்கிருந்தே ஈசனின் திருமணக் கோலத்தை கண்டு களித்தார் அகத்தியர். இத்தல சிவபெருமான் அகத்திய முனிவரால் ‘குற்றாலநாதர்’ என்று அழைக்கப்பட்டார். பெருமாளைச் சிவனாக மாற்ற, தன் கைகளால் தொட்டதால், குற்றாலநாதரின் தலையில் அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்துள்ளதை இன்றும் காணமுடியும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘திரிகூட மலை’ என்று அழைக்கிறார்கள். ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும். ‘கு’ என்பது பிறவிப்பிணி. ‘தாலம்’ என்பது தீர்ப்பது. மனிதனின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர் குற்றாலநாதர்.

இந்த ஆலயத்தில் தல மரம் குறும்பலா. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் எப்படி மலையாக இருக்கிறாரோ, அதே போல் இந்த தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். இங்கு குறும்பலா நாதருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. குறும்பலா பதிகம் பாடியுள்ளார் சம்பந்தர். இந்த பலா மரத்தின் கிளைகள், கனிகள், சுளைகள், வித்துக்கள் என யாவும் சிவலிங்க வடிவமாகவே உள்ளது. ‘சுளையெலாஞ் சிவலிங்கம்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி.

இந்த ஆலயத்தின் நான்கு வாசல்களும் நான்கு வேதங்களாக விளங்குகின்றன. சிறிய அழகிய கோபுரம். குற்றாலநாதர் நடுவே கோவில் கொண்டு விளங்க, அவருக்கு வலதுபுறம் குழல்வாய் மொழியம்மையும், இடதுபுறம் பராசக்தியும் கோவில் கொண்டுள்ளனர். ஆலயம் சங்கு வடிவிலானது. அம்பாளும், சிவனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று குற்றாலநாதருக்கும், குழல்வாய் மொழியம்மைக்கும் அகத்தியர் சன்னிதி அருகில் திருமணம் நடைபெறும். ஈசனும், அம்பாளும் அகத்தியருக்கு திருமணக் காட்சிக் கொடுக்கிறார்கள்.

இங்குள்ள பராசக்தியே உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பீடத்தை ‘தரணிபீடம்’ என்கிறார்கள். பராசக்தியின் சன்னிதியில் தாணுமாலயன் பூந்தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது. பராசக்தியே இங்கு எழுந்தருளுவதால் நவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். ஆலயத்தில் விநாயகர், முருகர், சூரியன், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, பஞ்சபூத லிங்கம், சனீஸ்வரர், சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், துர்க்கை, கயிலாசநாதர், அறுபத்து மூவர், நன்னகரப் பெருமாள் என பல சன்னிதிகள் உள்ளன.

நோய் தீர்க்கும் தைலம்

தலையைத் தொட்டு அழுத்தியதால் ஈசனுக்கு இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது. பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேகவைத்து, அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கிறார்கள். இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.

தினமும் அர்த்த ஜாம பூஜையில் குற்றால நாதருக்கு ‘குடுனி நைவேத்தியம்’ செய்யப்படுகிறது. அதாவது சுக்கு, மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து நைவேத்தியம் செய்கிறார்கள். அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும் இந்த கசாயத்தை வாங்கிக் குடித்தால் நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது. இக்கோயில் வைணவக்கோயிலாக இருந்த போது, அகத்தியர் நேற்று வந்தாரா? என ஒரு துவாரபாலகர் கேட்பதைப்போலவும், இன்னொரு துவார பாலகர் அவர் வரவில்லை என கூறுவதைப்போலவும் உள்ளது.நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் (லிங்க பாணத்தின் மீது) தைலம் தடவுகின்றனர். சிவனுக்கு, அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாகவும் தருகின்றனர். இதுதவிர, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, “கடுக்காய் கஷாய’ நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர். சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து தயாரிக்கும் இதை, “குடுனி நைவேத்யம்’ என்கிறார்கள். சக்தி பீடங்கள் 64ல் இது, “பராசக்தி பீடம்’ ஆகும். இத்தல அம்பிகை, “குழல்வாய்மொழிநாயகி’ என்றழைக்கப்படுகிறாள். ஐப்பசி பூரத்தன்று திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று குற்றாலநாதர், குழல்வாய்மொழி நாயகி இருவரும் அகத்தியர் சன்னதிக்கு அருகில் எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுக்கின்றனர்.லிங்க வடிவ பலாச்சுளை: தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் “ஆதிகுறும்பலாநாதர்’ பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், “லிங்க’த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, “”சுளையெலாஞ் சிவலிங்கம்” என்று குறிப்பிடுகிறது. விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். இதுதவிர பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. இதனை சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்கின்றனர்.தொலைந்த பொருள் தரும் சிவன்: அர்ஜுனன், தான் பூஜை செய்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை (பெட்டி), காசியில் தொலைத்துவிட்டான். வருந்திய அர்ஜுனன் இங்கு வந்தபோது, அந்த பெட்டியைக் கண்டெடுத்தான். அதை இங்கேயே வைத்து பூஜித்துவிட்டுச் சென்றான். இந்த லிங்கம் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறது. பொருளை தொலைத்தவர்கள் இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொள்ள, மீண்டும் அவை கிடைக்கும் என்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று, அர்ஜுனன் இங்கு லிங்கத்தைக் கண்டான். எனவே, அன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதிக்கு அருகிலிருந்து இந்த லிங்கம், மேற்கு முக விநாயகர், குற்றாலநாதர் விமானம், திரிகூட மலை மற்றும் குற்றால அருவி ஆகிய ஐந்தையும் தரிசிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 14 January 2021

சித்தன் அருள் - 977 - குருநாதரின் அருள் வாக்கு!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பொங்கல் தினமான இன்று நம் குருநாதர் அருளிய வாக்கை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

"பாடுபட்டால் பலன் உண்டு என்பதும், பாத்திரமறிந்து பிட்சையிடு என யாம் உரைத்தவற்றை இறுகப்பற்றி கடைப்பிடித்து வருபவர்கள் எம்மால் அனுக்கிரகிக்கப்பட்டு(( ஏற்றுக்கொண்டநிலை)) பிந்நாளில் பிறருக்கு அதனை தகுந்த காலத்தின் பொருட்டு அறிவுறுத்தல் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள்.  எப்போதும் எந்நிலையிலும் விழிப்புடன் இருக்கும் எம் சேய்களினும் மேலான கண்மணிகள் சூட்சுமத்தை உணர்ந்து கொண்டு இது நம்மால் (அகத்தியனால்) உணர்த்தப்பட்டது என சுதாரித்துக் கொண்டு அதனை பிறருக்கு தகுந்த நேர காலத்தில் எடுத்துரைக்கவும் செய்கிறார்கள்.

யாம் நேரடியாக எல்லா சேய்களிடத்திலும் அன்போடு உரையாட வேண்டுமென்று ஆவலாக தான் இருக்கிறோம்.

ஆனால் ஒரு குழுவாக இருந்து அதனை ஒழுங்கு படுத்த்தி வழிகாட்டிக் கொண்டு இருக்கும் தன்மைப் பண்புடையவனிடத்திலே சேய்கள் காட்டும் சிரத்தையானது இன்னும் ச்ரத்திக்கவேண்டும். அப்போது யாமே தகுந்தவனை தேடி வருவோம்.

ஒழுக்கம் என்றால் சத்தியம்  அது சத்தியம் என்றால் அது *சத்தியத்தின் திருவுருவான அகத்தியனே என ஆதிசக்தியின் திருவாக்கினால் எமக்கு கிடைத்த வரமப்பா

அங்ஙனமே எம் வழி வரும் சேய்களினும் மேலான கண்மணிகள்  சமூகத்தில் எங்கு எச்செயல் செய்யினும் எமது முகவரியை சுட்டிக் காட்டும் என்பது தெரிந்து செய்தால்  மிகவும் நன்றப்பா. 

அதிகமாக பேச எண்ணம் கொண்டு வந்தோம். மகர சங்கராந்தி நிமித்தம் சில பணிகள் இருக்கிறதப்பா எங்கு போகப் போகிறேன். வந்து மீண்டும் தொடர்வோம்.

ஆனால் நெற்றிப் பொட்டில் அடித்தார் போல சொல்லப்பா எம் வழி வருபவர்களுக்கு நாம ஜெபம் மிக மிக முக்கியமென்று."

சித்தன் அருள் ............ தொடரும்!

சித்தன் அருள் - 976 - ஸ்ரீ அகத்தியர் கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துக்கள்!

ஒரு நிகழ்ச்சி நாம் நினைப்பது போல் அல்லாமல், வேறுவிதமாக மாற்றி நடத்திக் கொள்வதில், அகத்தியப்பெருமான் மிக திறமையானவர். இதை பல முறை உணர்ந்திருக்கிறேன். அன்றைய காலை பூஜையை அவர்தான் மாற்றி அமைத்திருப்பார் என்ற திடமான நம்பிக்கை அடியேனுள் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன், தமிழ்நாட்டில், அகத்தியரின் நட்சத்திர தினத்தில், ஏன் அவர்கள் மாலை வேளைகளில் அபிஷேகம் செய்கிறார்கள்? அதில் என்ன தாத்பர்யம் என்று யோசித்தேன். ஒன்றுமே புரியவில்லை. உணர்ந்துபார் என உணரவைக்க, இப்படி மாற்றி அமைத்து தந்தாரோ என்று தோன்றியது.

குருநாதர் கழுத்தில் அணிவித்து பூசை செய்து வாங்கி வந்த ருத்திராக்ஷ மாலை உங்களுக்கு நினைவிருக்கும். அது அடியேனிடம் வந்தது என்ன காரணத்தினால் என்று தெரியாமலேயே இருந்தது. அடியேனிடம் இருந்த இரு மாலைகளையும் (ஒரு ருத்ராக்ஷ மாலை. ஸ்படிகலிங்கத்துடனும், இரண்டாவது ஸ்படிக மாலை - ஸ்படிக லிங்கத்துடனும்) அகத்தியப்பெருமான் தனக்கு வேண்டும் என கேட்டு வாங்கிக்கொண்டுவிட்டதால், அதற்குப்பின் எந்த மாலையையும் கழுத்தில் அணியாமல் இருந்தேன். ஒரு ஆறுமுக ருத்ராக்ஷத்தை நூலில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ளலாம், என்று நினைத்து எடுத்த பொழுது, முன்னரே தன சிஷ்யனிடம் ருத்திராக்ஷ மாலையை இழந்த, ஓதியப்பர் அந்த ஒரு ருத்ராக்ஷத்தை பார்த்தபடி நின்றிருந்தார். அவர் கழுத்திலும் எதுவும் இல்லை. ஆதலால், அந்த ஒரு ருத்ராக்ஷத்தை அவர் கழுத்தில் அணிவித்து, பிறகு உம்மிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன் என கூறி, இன்று வரை வெறும் கழுத்தாக இருந்து வந்தேன். ஓதியப்பரும் திருப்பி தருவதாக தெரியவில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அப்பனுக்கு பொறுக்கவில்லையோ என்னவோ. சிதம்பரம் நடராஜருக்கு போட்டு சந்தன அபிஷேகம் செய்த ஒரு மாலையை கொடுத்தனுப்பினார். அந்த மாலை முழுவதும் சந்தனம் ஒட்டிக் கொண்டிருந்ததால், பூஜை அறையில் இருக்கும், சிவபெருமான் பார்வதி விக்கிரகத்தில் போட்டு வைத்திருந்தேன். அதைத்தான் அகத்தியப்பெருமானின் கழுத்தில் அணிவித்து வாங்கி வந்தேன்.

முதல் நாள் பிரார்த்தனையில் அகத்தியரிடம் "உங்கள் அபிஷேக பூஜையை நல்ல படியாக நடத்திக் கொடுங்கள் என மனதார வேண்டிக்கொண்ட பொழுது, ஒரு உத்தரவு வந்தது.

"என் அப்பனிடமிருந்து வந்த அந்த ருத்ராட்ச மாலையை கொண்டு வா. அபிஷேகம் தொடங்கும் முன் அது என் கழுத்தில் இருக்கவேண்டும். கவனம், கொண்டு வருகிற உன் கையும், பூஜாரியின் கையை தவிர வேறு யாரும் அதை தொடக்கூடாது!" என்றார்.

இது என்ன புது நாடகம்? என்று யோசித்து "அய்யா! அதைத்தான் அன்று உங்கள் கழுத்தில் அணிவித்தாயிற்றே!" என்று மனதுள் நினைத்த பொழுது..........

"அதில் படிந்திருக்கும் என் அப்பனுக்கு அபிஷேகம் செய்த சந்தனம், அன்றைய அபிஷேகத்தின் பொழுது யாம் ஏற்றுக்கொள்வோம். அது எமக்கு வேண்டும்!" என்றாரே பார்க்கலாம்.

உடனேயே பூஜாரியை கூப்பிட்டு இந்த விஷயத்தை கூற, சரி! என ஒத்துக்கொண்டார். இதை கூறக்காரணம், அன்றைய தினம் அவருக்கு பூசை செய்ய நான்கு பூஜாரிகள் உள்ளே இருப்பார்கள். அகத்தியப்பெருமான் தீர்மானித்தவர் தவிர வேறு யார் கையும் படக்கூடாது.  அன்றைய காலை பூஜை நின்று போனதால், பூஜாரியே கூப்பிட்டு பூஜை நேரத்தை சொல்லட்டும் என்று அலுவலகப்பணிகளில் கவனம் செலுத்தினேன்.

மதியம் 12 மணிக்கு ரத்தீஷ் என்ற அகத்தியர் பக்தரிடமிருந்து போன் வந்தது.

"அய்யா! வணக்கம்! காலை பூஜை நின்று போனது கேள்விப்பட்டிருப்பீங்க! அபிஷேக பூஜையை மாலை செய்யலாம் என்று ஒரு தீர்மானம். பூஜாரி 2 மணிக்கு வந்து கோவிலை சுத்தம் பண்ணிவிட்டு  ஒரு 3.45 மணிக்கு அபிஷேகத்தை தொடங்விடலாம் என்று உள்ளோம். நீங்க முன்னரே வந்து விடுங்கள்" என்றார்.

"அதென்ன அவ்வளவு அவசரப்பட்டு பண்றீங்க?" என்றேன்.

"நிறைய அபிஷேக வகைகள் இருக்கு. இதை முடித்து சரியாக 6.30 மணிக்கு தீபாராதனையில் கொண்டு சேர்க்க வேண்டும். மட்டுமல்ல தூரத்திலிருந்து வந்து அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், சற்று சீக்கிரமே கிளம்பி செல்ல வேண்டும்" என்றார்.

அடியேனால் நிச்சயமாக 3.45 மணிக்கு அங்கு இருக்க முடியாது. எப்படி வேகமாக சென்றாலும் 4.15 மணி ஆகி விடும். இன்னும் சில வேலைகள் கோவிலில் முடிக்க வேண்டியுள்ளது எனத்தெரியும். தீர்மானித்தேன்.

"நீங்க வேணா சீக்கிரமா தொடங்கிக்குங்க. என்னால் அவ்வளவு சீக்கிரமாக வரமுடியாது. அலுவலக பணிகளை நிறைவு செய்து, ரிப்போர்ட் கொடுத்து வந்து சேரும் பொழுது எப்படியாயினும் 4.30 ஆகிவிடும்! அடியேன் அபிஷேகம் தொடங்கியபின் வந்து சேர்ந்து கொள்கிறேன்" என்று கூறிவிட்டேன்.

அவரும் சரி என்று கூறினார்.

பின்னர்தான் உரைத்தது. "அடடா! அபிஷேகம் தொடங்கும் முன் இந்த ருத்ராக்ஷ மாலை அவர் கழுத்தில் இருக்க வேண்டுமே! அதெப்படி அபிஷேகம் நடத்த முடியும். இந்த விஷயம் அடியேனுக்கும், முக்கிய பூஜாரிக்கும்தானே தெரியும்!" என்று யோசித்தேன்.

அப்படியே பூஜை அறையில் அமர்ந்திருக்கும் அகத்தியப் பெருமானை நிமிர்ந்து பார்த்தேன்.

"அய்யா! அடியேனுக்கு வேறு வழி தெரியவில்லை.நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. அபிஷேகத்துக்காக நடக்கிற வேலைகளை சற்று தாமதப்படுத்துங்கள்! அடியேன் வந்து அந்த மாலை உங்கள் கழுத்தில் அமர்ந்த பின் தான், அபிஷேகம் நடக்கலாம். இது உங்கள் பொறுப்பு, நடத்திக் கொடுங்கள்" என்றேன்.

3.45 மணிக்கு கிளம்பி செல்லும் பொழுது, அதே ரத்தீஷ் போன் செய்தார்.

"எங்க இருக்கீங்க? அவசரப்பட்டு வர வேண்டாம். ஏனோ பஞ்சாமிர்தம் செய்கிற வேலை தாமதமாகிறது. பூஜாரி 4.30க்கு அபிஷேகம் தொடங்கலாம் என்றுவிட்டார். நிதானமாக வாருங்கள்" என்றார்.

சிரித்தபடி நான் சொன்னேன் "நீங்க ஒரு தீர்மானம் எடுத்தா, நான் அகத்தியரிடம்தான் சொல்வேன். அவர் நியாயம் இருக்கும் பக்கத்துக்கு உதவுவார். அடியேன்தான் அவரிடம் சொல்லி தாமதப்படுத்த சொன்னேன். ஏன் என்றால், அடியேனுக்கும், பூஜாரிக்கும் மட்டும் உள்ள ஒரு உத்தரவு அங்கு வந்து சேர உள்ளது. அது வந்தால்தான் அபிஷேகம் தொடங்க முடியும்" என்றேன்.

கோவிலை சென்றடைந்ததும் மணி 4.15. பஞ்சாமிர்த வேலைகள் நிறைவை அடைந்தது.

பூஜாரியை அழைத்து, முதலில் ருத்ராக்ஷ மாலையை அவரிடம் கொடுத்து, "கவனம்" என்றேன்.

தலையை குலுக்கி வாங்கிக்கொண்டவர், முதலில் அதை கொண்டுபோய் அகத்தியப்பெருமானின் கழுத்தில் அணிவித்தார். மற்றவர்களிடம் அந்த மாலையை தொடக்கூடாது என்று கூறிவிட்டு, பூஜையை தொடங்க கோவில் மணியை அடித்தார்!

4.30 மணிக்கு பூஜை தொடங்கியது!

சித்தன் அருள்...............தொடரும்!

Thursday, 7 January 2021

சித்தன் அருள் - 975 - ஸ்ரீ அகத்தியர் கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!



பச்சை கற்பூரத்திற்கு பல வித குணங்கள் உண்டு. வீட்டில் இருக்கும், நம்மில் இருக்கும் திருஷ்டி தோஷம், துர்சக்திகளை விரட்டி அடித்து, நாம் வாழும் சுற்றுப்புறத்தை, காற்றை சுத்தமாக்கி, நிம்மதியை தரும். வீட்டில் பூஜை அறையிலேயோ அல்லது குபேர/ஈசான மூலையில் ஒரு துணியில் கட்டி வைத்திருந்தால், வீட்டில் செல்வ வளம் பெருகும், நாம் நினைக்கிற விஷயங்கள் அப்படியே விரும்பியபடி நடக்கும். அனாவசிய பேச்சுக்கள் குறைந்துவிடும், த்யான நிலைக்கு மனதை கொண்டு செல்லும், உறங்கும் படுக்கைக்கு அடியில் சிறிது வைத்து உறங்கினால், நிம்மதியாக உறங்க முடியும். வாயுவில் உள்ள கிருமிகளை, விஷ பூச்சிகளை அழித்து விடும். இதை ஒரு தகவலாக கூறுகிறேன்.

போன வருட கோடகநல்லூர் (அந்த நாள்/இந்த வருட) அழைப்பிதழ் தொகுப்பில், "பெருமாளுக்கு உங்களால் இயன்ற பச்சை கற்பூரத்தை வாங்கிக்கொடுங்கள் என உரைத்ததின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இதை எந்த கோவிலுக்கும் வாங்கி கொடுக்கலாம். மனதில் இருத்திக் கொள்ளவும். இனி பாலராமபுரம் செல்வோம்.

வாசனாதி திரவியங்கள், மூலிகைகள், இயற்கை கிழங்கு/இல்லை பொடிகள், 108 மூலிகை பொடிகளுடன் கடைசியாக அபிஷேகம் செய்திட பச்சை கற்பூரம் வேண்டும். ஆகவே ஒரு நீண்ட பட்டியல் உருவாயிற்று. அனைத்தையும் வாங்கிட தீர்மானித்தனர். அகத்தியர் அடியவர்களுக்கு "சித்தன் அருள்" வலைப்பூ வழி தெரிவிக்க அனுமதி கேட்டேன்.  அகத்தியரும், நிவாகமும் அனுமதி அளித்தனர்.

சென்ற வருடம், பாலராமபுரத்தில் அபிஷேக பூஜையில் கலந்து கொண்டவர்கள், அகத்தியப் பெருமானிடம் சமர்ப்பித்த வேண்டுதல்கள் நிறைவேறியதா,  என்ற கேள்வி தொக்கி நின்றது. நிச்சயமாக நிறைவேற்றியிருப்பார், பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தோன்றியது.

யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக என்ற எண்ணத்தில், சித்தன் அருள் வலைப்பூவில் நிகழ்ச்சியை பற்றி விவரிக்கப்பட்டது.

அன்றைய தின பூஜையில் பங்கு பெற விருப்பப்பட்ட அனைத்து அடியவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.

போன வருடம் பிரார்த்தனையோடு, பங்குபெற்ற இரு அகத்தியர் அடியவர்கள், தங்கள் பிரார்த்தனையை அகத்தியர் நிறைவேற்றி விட்டதாகவும், அதற்கு நன்றி கூறும் விதமாக இம்முறை பூசையில் ஏதேனும் ஒரு சிறு பங்கை தங்களுக்கு தருமாறும் பூசை நிர்வாகிகளிடம் வேண்டிக் கொண்டனர். கருத்து வேறுபாட்டினால் பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்ந்ததும், மகளுக்கு பிள்ளை வரம் வேண்டி பெற்றதும், அகத்தியர் அடியவர்கள் பெற்ற வரமாக அமைந்தது.

பாலராமபுரம் கோவிலை சுற்றியே அனைத்து கைத்தறி ஜவுளிக் கடைகள் உள்ளதால், குருநாதருக்கும், குருபத்னிக்கும் வஸ்திரங்கள் முதலில் வாங்கி சமர்ப்பிக்கப்பட்டது.

திரிப்பூணித்துறையில் அமைந்துள்ள ஒரு அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாக எல்லா வருடமும் காலை அன்னம் தானம் நடைபெறும். இம்முறை அவர்களும் அபிஷேக பூஜையில் கலந்து கொண்டனர்.

எல்லா விஷயங்களும் மிக நேர்த்தியாக முன்னே செல்வதை கண்டவுடன், என்ன இப்படி எளிதாக நடக்கிறதே, குருவின் எண்ணம் என்ன? என்ற கேள்வி அடியேனுள் வந்தது. அடியேன் நண்பர்களிடம் அடிக்கடி கூறுகிற ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது.

"எப்பொழுதும், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். குருவும், இறைவனும், நாம் கேட்பதை எல்லாம் அருளுகிறார்களா, எல்லாம் எளிதாக நடக்கிறதா...................... பின்னாடி பெரிய ஆப்பு வைக்கப் போறாங்க, என்று அர்த்தம். ஆதலால், எதை கேட்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருங்கள். பின்னாடி மூச்சு முட்டுதுன கதறாதீங்க!" என்பேன்.

இங்கும் அப்படியே நடந்தது!

2/1/2021 அன்று காலை 4 மணிக்கு எழுந்து குளித்து, 5 மணிக்கு புறப்பட்டு சென்று 6 மணிக்கு அபிஷேக பூசையில் கலந்து கொள்வதாக திட்டம்.

2-1-2021 காலை 4 மணிக்கு எழுந்ததும், நண்பரிடமிருந்து போன் வந்தது.

"பூசாரி அழைத்திருந்தார்! கோவிலுக்கு அருகில் ஒரு வீட்டில், ஒருவர் இயற்கை எய்தினார். ஆகவே ஈம கிரியைகள் நடத்தி, உடலை எடுத்தபின்தான் கோவிலை சுத்தி பண்ணி திறப்பார்கள். 10 அல்லது 11 மணியாகும். இப்பொழுது வர வேண்டும் என கூறுகிறேன்" என்றார்.

குருநாதரின் திருநட்சத்திர காலை நேர அபிஷேக/பூஜைகள் அப்படியே நின்றது.

பூஜைக்கென ஓடிய அனைவரும் அதிர்ந்து போயினர். மனம்  சோர்ந்து போனது!

அடியேன் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்!

சித்தன் அருள்..................தொடரும்!

Sunday, 3 January 2021

சித்தன் அருள் - 974 - ஸ்ரீ அகத்தியர் கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மார்கழி மாத ஆயில்ய திரு நட்சத்திரம் 02/01/2021 அன்று, பாரதத்தில் "சித்தர்கள் தினமாக" கொண்டாடப்பட்டது என்பது நமக்கெல்லாம் மிக பெருமை அளிக்கும் விஷயம். ஆம் அன்றைய தினம் நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திரம் ஆக அமைந்தது. பாலராமபுரத்தில், அவருக்கு அபிஷேக பூஜைகளுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரும், எப்பொழுதும்போல் சோதனைகளை கொடுத்து, கடைசியில் பூஜை நடக்க வேண்டிய நேரத்துக்கு, அனைத்தையும், இயல்பாக ஆக்கித்தந்து, பூசையை ஏற்றுக் கொண்டார். அன்றைய தினத்தின் அருளுக்கு செல்லும் முன், எல்லோரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள ஒரு விஷயத்தை கூறுகிறேன்.

2021இல் டிசம்பர் 23ம் தேதி அன்று மறுபடியும் ஒரு மார்கழி-ஆயில்ய நட்சத்திரம் வருகிறது. மேலும் 2022இல் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே இந்த வருட கடைசியில், அவரவருக்கு இயன்ற வரை மிக நன்றாக அவரின் திரு நட்சத்திர பூஜையை கொண்டாட, வேண்டுமானால், இப்பொழுதே அவரிடம் வேண்டிக் கொண்டு, தவமிருக்க தொடங்கலாம்.

ஆன்மீகத்தில் புகும்முன் பலவிதமான கேள்விகளை சுமந்து நடந்து, இவைகளுக்கு எங்கு பதில் கிடைக்கும்? அது எப்படி கிடைக்கும் என தெரியாமலேயே நடந்த காலங்களில், ஒவ்வொரு இடத்தில் ஒன்று அல்லது சில கேள்விகளுக்கு பதில் கிடைக்க, அந்த வழியையே கைப்பற்றி நடந்தவன் அடியேன். வெகு தூரம் நடந்த பொழுது, பல கேள்விகள் காணாமல் போயின. சிலவற்றுக்கு அனுபவம் வழி பதில் கிடைத்தது. அதில், நிறைய அனுபவங்களை பதிலாக்கி, பாலராமபுரத்தில் உள்ள கோவிலில் நம் குருநாதர் அடியேனுக்கு பாடம் எடுத்துள்ளார். எத்தனையோ ஆச்சரியங்கள். ஆசீர்வாதங்கள். அடியேனின் செயல்களை, எண்ணங்களை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், அதில் எழும் சந்தேகங்களை உடனேயே அல்லது அடுத்த முறை அவரை சந்திக்கும் பொழுதோ தெளிவித்து விடுவார். அவருக்கு நிகர், சிறந்த ஆசிரியர், யாருமே இல்லை எனத்தான் கூறுவேன். ஒவ்வொரு  விஷயத்திலும் இருக்கும் மிக சிறந்த மேன்மையை, நம்மை பார்க்க வைப்பார். ஆனால் மிக கண்டிப்பான தகப்பன்.

இந்த வருடம் அன்றைய தின பூஜைக்கு, ஏற்பாடு செய்ய, பொருட்கள் வாங்க உதவி செய்ய, யாருமின்றி தனியாய் இருக்க, ஒரு நாள் வீட்டிலிருந்தே, வேண்டுதலை அவரிடம் சமர்பித்தேன்.

"அய்யா! கட்டுப்பாடான சூழ்நிலை காரணமாக, இம்முறை அபிஷேக பூஜைகளை எப்படி செய்வது என தெரியவில்லை. எப்போதும் உதவிக்கு வரும் நண்பர்களையும் காணவில்லை. உங்களை தரிசித்து மாதங்களாயிற்று. நீங்களாக ஒரு வழி தந்தால் அன்றி பூஜைக்கு ஏற்பாடு செய்ய முடியாது. அருள வேண்டும்!" என்றேன்.

இரண்டு நாட்கள் சென்றது. கோவில் பூஜாரியிடமிருந்து அழைப்பு வந்தது.

"அய்யா! குருநாதர் உங்களை அழைக்கிறார்! இந்த வருட பூஜைக்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறீர்கள்?" என்றார்.

"அடியேனால் வந்து பங்கு பெற முடியுமா எனத்தெரியவில்லை. நீங்களே ஏற்பாடு செய்து நடத்தி விடுங்கள். அடியேனின் பங்கை தந்துவிடுகிறேன்" என்றேன்.

"அது முடியாது. நீங்கள் வர வேண்டும். அதற்கு முன் ஒரு நாள் இங்கு வந்து குருவை கண்டு பேசிவிடுங்கள்!" என்றார். குருநாதர் ஏதோ விளையாட மேடை தயாரிக்கிறார் என்று தோன்றியது. சரி! சனிக்கிழமை அன்று, முயற்சி செய்து, எப்படியாவது அவரை போய் பார்த்துவிட்டு வருவோம், என தீர்மானித்தேன்.

சனிக்கிழமை மாலை, கோவில் சென்றுவர, பூஜை அறையில் இறைவனிடம் உத்தரவு கேட்க சென்ற பொழுது, அவர் கழுத்தில் கிடந்த சந்தனத்தால் சூழப்பட்ட ருத்திராக்ஷ மாலை கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு போய், குருநாதர் கழுத்தில் போட்டு பூசை செய்து வாங்கி வரலாம் என எடுத்துக்கொண்டு, பஸ் பிடித்து கோவிலை அடைந்தேன்.

அடியேனும், மனைவியும் தவிர மூன்று பக்தர்கள் இருந்தனர். சன்னதி அமைதியாக இருந்தது.

பூஜாரிக்கு நம்பவே முடியவில்லை. அதற்குள்ளாகவா! என்ற கேள்வியுடன் வந்தார்.

"குரு தீர்மானித்துவிட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது இல்லையா?" என்றேன்.

கொண்டு போன வாசனாதி திரவியங்களை கொடுத்து, பின் ருத்திராட்ச மாலையை குருவின் கழுத்தில் போடச்சொன்னேன்.

"அடியேனை வரச்சொன்னீர்கள்! வந்துவிட்டேன். என்ன உத்தரவோ?" என்ற கேள்வியுடன் அவர் முன் த்யானத்தில் அமர்ந்தேன்.

"திருநட்சத்திர பூஜை சிறப்பாக நடக்கும். ஆசிகள். ஆனால் இன்று நீ காண்பதை இவனிடம் உரைத்துவிடு, அதற்கு பிரதி விதியும் உனக்கு தெரியும். அதையும் செய்யச் சொல்லி கூறிவிடு!" என்றார்!

"இதென்ன புது கதையாக இருக்கிறது? அடியேன் பூஜாரிக்கு சொல்லவா. அவர்தான் உங்களிடம் அமர்ந்து உத்தரவு வாங்குகிறாரே, நீங்களே அவருக்கு காட்டி கொடுத்து விடலாமே!" என்றேன்.

பதில் வரவில்லை.

என்னவோ ஒரு மௌனம் பரவி நின்றது.

இரவு கடைசி தீபாராதனை! எப்பொழுதும், தீபாராதனையின் பொழுது இறைவனுக்கு கூறப்படும் மந்திரமான "ராஜாதி ராஜாய" என்கிற மந்திரத்தை கூறி அதில் கலந்து கொள்வேன். அப்பொழுது அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயாருக்குப்பின், இந்த கோவிலில் மட்டும், ஏழு மலையான் புன்னகைத்தபடி வந்து நின்று பூஜையை ஏற்றுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். உடனேயே பெருமாளின் தீபாராதனா நேர மந்திரமான "ஸ்ரியஸ்காந்தாய கல்யாண" என்கிற மந்திரத்தை கூறி நிறைவு செய்வேன்.

அன்றும் அப்படியே நடந்தது. ஆனால் பெருமாள் முகத்தில் புன்னகையை காணவில்லை. குருநாதர் முகத்தை சுட்டி காண்பித்தது போல் இருந்தது.

சட்டென குருநாதரின் முகத்தில் பார்க்க அவர் முகம் மிக சோர்வுற்று இருந்தது.

ஏதோ திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டது தெளிவாயிற்று. என்னவோ நடந்திருக்கிறது!

"சரி! இதிலிருந்து வெளியே வருகிற வழியைத்தான் கூற சொல்கிறார் போல!" என்றுணர்ந்தேன்.

பொதுவாக கோவில் மூர்த்தங்களுக்கு த்ரிஷ்டி தோஷம் போன்றவை வந்து செல்கிற பக்தர்களால் வரும்! அல்லது தற்காலிகமாக பூஜை செய்கின்றவர்களாலோ, பூஜாரியின் கவனக் குறைவினாலோ வரும்! அதற்கான ரகசிய பூஜைகள், அபிஷேகங்கள் போன்றவை செய்யப்படும். "பச்சை கற்பூரம்" கலந்த அபிஷேகம், அல்லது இரவு நடை சார்த்தும் பொழுது மூலஸ்தானத்தில் உள்ளே பச்சை கற்பூரத்தை பொடித்து தூவி விடுவார்கள். இதை பூஜாரி ரகசியமாக செய்ய வேண்டும்!

இதை தினமும் செய்து வர பூஜாரியிடம் தெரிவித்து, பின் எதற்கும் நாளை நீங்களே அவர் முன் அமர்ந்து பார்த்து பின் செய்யவும், என கூறி ருத்ராக்ஷ மாலையை, பிரசாதத்தை பெற்றுக்கொண்டு விடை பெற்றேன்.

மறுநாள் மாலை பூஜையில் அமர்ந்த பொழுது, த்யானத்தில் திருஷ்டி தோஷம் இருப்பதை, அவர் முக பாவனையில் கண்டுபிடித்தார். 

அன்று முதல், பச்சை கற்பூரத்தை உபயோகிக்க தொடங்கினார்.

மறுபடியும், எல்லாம் நல்லபடியாக நடக்கத் தொடங்கியது.

சித்தன் அருள்.................தொடரும்! 

Saturday, 2 January 2021

சித்தன் அருள் - 973 - இன்றைய ஸ்ரீ அகத்தியப்பெருமான் திருநட்சத்திர விழா!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று உலகெங்கும் நம் குருநாதரின் திருநட்சத்திர பூஜையில் கலந்து கொண்டு "சித்தன் அருளுக்கு" அனுப்பித் தந்த புகைப்படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

[பாலராமபுரம், திருவனந்தபுரம்]

[ கல்யாண தீர்த்தம், பாபநாசம் ]

[ வடசேரி, நாகர்கோயில் ]
[ பனப்பாக்கம் ]
[ திரு.சதீஷ், சென்னை.]
[வன்னிவேடு, வாலாஜாபேட்டை]



[பாலராமபுரம், திருவனந்தபுரம்]
[ பொதிகை என்கிற அகஸ்தியர் கூடம் ]
[ பஞ்சேஷ்டி அகஸ்தியர் - திரு ஜெயக்குமார்]









விருப்பமுள்ள அடியவர்கள், அவர்கள் எடுத்த புகைப்படத்தை அனுப்பித்தந்தால் இங்கு பிரசுரிக்கப்படும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்............ தொடரும்!


சித்தன் அருள் - 972 - அகத்தியர் அருள்வாக்கு!



சித்தன் அருள்.................தொடரும்!