அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Sunday, 31 May 2020
Thursday, 28 May 2020
சித்தன் அருள் - 866 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!
இந்த தொகுப்பின் தலைப்பை பற்றி, அதன் உட்கருத்துக்களைப் பற்றி அடியேனின் நண்பர், யோகா பயிற்றுவிப்பவரிடம், ஒரு சில நாட்களுக்கு முன் உரையாடினேன். அதிலிருந்து வந்த ஒரு சில உண்மை கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
"அநேகமாக, எல்லா சித்தர்களும் யோகக்கலையை வலியுறுத்தி இருந்தாலும், ஒரு சிலரின் யோகா கலை மட்டுமே இங்கு பயிற்றுவிக்கப்படுவதின் காரணம் என்ன?' என்றேன்.
"ரசவாதம் எல்லா சித்தர்களுக்கும் கைவந்த கலை. இருப்பினும் அகத்தியரிடம் கேட்டால், அவர் போகர் பெருமானைத்தான் முதன்மை படுத்துவார். போகரை விஞ்சிய ரசவாதம் தெரிந்தவர் இங்கு யாரும் இல்லை என்பார். அதுவும் உண்மை. அதற்காக மற்றவர்கள் எல்லோரும் விஷய ஞானம் தெரியாதவர் என்று அர்த்தமில்லை. அதுபோல் யோகா கலையில் எல்லோரும் தேர்ந்தவர்கள் ஆயினும், அந்த கலை எந்த காரணத்தினால் ஒருவருக்கு மிகச்சிறப்பாக அமைகிறது என்பதை, காரண, காரியங்களை பஞ்ச பூதங்களின் நிலையில் நின்று, உணர்ந்து, மிகத் தெளிவாக சூத்திரம் எழுதி தெரிவித்ததால், "பதஞ்சலி சித்தரே" யோகக்கலைக்கு ஆசானாக, ஆச்சாரியனாக கருதப் படுகிறர். பதஞ்சலி சூத்திர முறைப்படி யோகக்கலையை கற்று தேர்வது மிக கடினம். முழுவதும் கற்றவர் யாருமில்லை. அதற்கு ஒருவருக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும். ஏன் என்றால், பதஞ்சலி சூத்திர யோகக்கலையை முழுவதுமாக ஒருவர் கற்று தேர்ந்துவிட்டால், அவர் இறைவனுக்கு சமமானவராக, அத்தனை பலமுள்ளவராக, அனைத்தையும் உருவாக்கி, கட்டுப்படுத்துபவராக மாறிவிடுவார். அதனால்தான், பதஞ்சலி சூத்திரத்தை முழுவதுமாக பயின்றிட ஒரு ஜென்மம் போறாது என்ற ஒரு சொல் உண்டு. உதாரணமாக, அந்த சூத்திரத்தில் சித்தம் என்பதற்கு ஐநூறு அர்த்தங்கள் உண்டு. அந்த ஐநூறும், ஒவ்வொன்றும் ஐநூறாக பிரியும்." என்று நிறுத்தினார்.
ஒரு சின்ன கேள்விக்கு இத்தனை விரிவான பதில் இருக்கிறது என்றறிந்த அடியேன், அசந்து போனேன். வாழ்க்கையில், என்றேனும் வாய்ப்பு கிடைத்தால், பதஞ்சலி சூத்திரத்தை கற்றுணரவேண்டும், என்றிருந்த அவாவை, அப்பொழுதே கைகழுவிவிட்டேன்.
அத்தனை மர்மங்கள் இந்த மனித உடலுக்குள் மறைந்திருப்பதினால், முறையாக எதையும் கற்றுணர்ந்து, அவையடக்கத்துடன், ஆசையின்றி தன் கர்மாவை கழித்து வருகிற, இவரைப் போன்றவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
"நம் உடலில் 72000ம் நாடிகள் உள்ளதாக பதஞ்சலி சூத்திரத்தில் கூறப்படுகிறது. உடலின் வலது பக்கம் 36000ம் உடலின் இடது பக்கத்தில் 36000மும். யோகா பயிற்றுவிக்கும் பொழுது இரண்டு பக்கத்துக்கும் ஒரேபோல் பயிற்சி கொடுத்தால்தான் உடல் சரியான நிலையில் இருக்கும். ஒரு பக்கம் மட்டும் செய்தால். பயிற்சி கிடைக்காத பக்கத்துக்கு உடல் பலகீனம் ஏற்படும். அந்த பலகீனத்தை தாங்கிக்கொள்ள உடல் மறுபக்கத்தை நாடும் பொழுது வேதனை, வலி, தசை இருக்குதல், வீக்கம் போன்றவை ஏற்படுத்தி, உடலை சோர்வடையச் செய்கிறது. உதாரணமாக, பதஞ்சலி சூத்திரப்படி, ஒரு ஆசனம் பயிலும் முன் உடலை பிராணாயாமத்தினால் தயார்படுத்த வேண்டும் என்கிறார். இது அறியாத ஒருவர், உடலால் முடியும் என்பதற்காக, நேரடியாக பத்மாசனத்தில் அமர்ந்துவிட்டால், உடலின் தாங்கு சக்தி இருக்கும் வரை வலி தெரியாது. பின்னர் கால் முட்டிகளில் வலி வந்து போகாத பொழுது சிரமப்படவேண்டி இருக்கும். உடலை ஆசனங்கள் செய்வதற்கு மூச்சு பயிற்சி வழி தயார் படுத்த வேண்டும். அதற்கு பொறுமை மிகவும் அவசியம்." என்றார்.
"நோயினால் வருந்துபவர்களுக்கு, பதஞ்சலி சித்தர் முறையில் பிராணாயாம பயிற்சி கொடுப்பதற்கு, எனக்கு குருவின் அனுமதி அல்லது உத்தரவு வேண்டும். அனுமதி இல்லாமல், அவர்கள் அருகில் கூட செல்ல முடியாது. ஏன் என்றால், எல்லா கலைகளும் கடைசியில் சென்று நிற்பது மனிதரின் "கர்மாவில்". இதனால்தான் சித்தர்கள் "புண்ணியத்தை சேர்த்துக்கொள், அல்லேல் பாபத்தையாவது செய்யாதே" என திருப்பி திருப்பி கூறுகிறார்கள். சித்தர்கள் அருகாமை கிடைப்பதற்கு, மனித பிறவியில் அவர்கள் சொல்கிற விதத்தில், நல்லவனாய் இருந்தால் மட்டும் போதும். சரியான நேரத்துக்கு அவர்களே வந்து நம்மை வழி நடத்துவார்கள் என்பது உண்மை. இக்கால சித்த, ஆயுர்வேத மருத்துவர்களை தவிர மற்ற பிரிவுகளில் உள்ள மருத்துவர்கள், தாங்கள் கொடுக்கும் மருந்தினால் வியாதி குணமாகிறது என்று பெருமைப்படுகின்றனர். ஆனால் ஒருபோதும், ஒருவருக்கு உதவிய மருந்து, மற்றவருக்கு, சரியாக கொடுத்தும், ஏன் குணமாவதில்லை, என்று யோசிப்பதில்லை. அதுதான் விதி என்பதை கூட நம்புவதில்லை." என அடியேன் கேள்விகளை கேட்காமலேயே, மிக விரிவான பதிலை, தந்தார்.
"சரி! ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு எளிய யோகா முறைகளை பற்றி கூறுங்களேன்" என்றேன்.
"ஒரு வீடியோவை அனுப்பி தருகிறேன். அதில் கூறப்பட்டுள்ள 7 விதமான பயிற்சியை தினமும் காலையில் எழுந்த உடன் ஒவ்வொரு பயிற்சியும் ஒரு நிமிடம் என மொத்தம் 7 நிமிடம் செய்து வந்தால் ஒரு மனிதன் மிக ஆரோக்கியமாக வாழலாம். ஏனென்றால் உடலை கட்டுப்படுத்துகிற அனைத்து நரம்புகளும், கையிலும், காலிலும் முடிவடைகிறது. இதில் சொல்கிற பயிற்சிகள் கையும், விரலும் சம்பந்தப்பட்டது." என்றார்.
பின்னர், அந்த வீடியோவை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அது மலையாள மொழியில் ஒரு மருத்துவர் பேசுகிற வீடியோ. உங்கள் அனைவருக்காகவும், அதை இங்கே தருகிறேன். அடியேன் செய்து பார்த்தேன். மிக சிறந்த பலன் கொடுக்கிறது. அதில் கூறப்படுகிற, செய்து காட்டப்படுகிற பயிற்சியை தினமும் செய்து, நல் ஆரோக்கியம் அனைவரும் பெற வேண்டிக்கொள்கிறேன்.
Thursday, 21 May 2020
சித்தன் அருள் - 865 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!
அபான முத்திரை:-
நடுவிரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்டை விரலின் நுனியை தொடவேண்டும்.
உடலில் தங்கி உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை இந்த அபான முத்திரை சுத்தப்படுத்தும். சிறுநீரகம், மலக்குடல், பிறப்புறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. பெண்களுக்கு சுகப்பிரசவம் தருவதோடு, கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை நீக்க வல்லது. மூலம், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்தை வலுப்படுத்தி, இதயத்துடிப்பை சீராக்கும்.
சுண்டுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடித்து இதனை செயற்படுத்த முடியும். இந்த முத்திரை முகம், கை, கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது. உடலில் நீர் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது. உடலில் நீர் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும். இம்முத்திரையானது வயிறு எரிவை குணப்படுத்துவதோடு முகம், கை, கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது, உடலில் நீர் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தி தடிமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிலிருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது.
இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும்படி வைத்து வலது பெருவிரல் தவிர மற்ற விரல்களால் அதை இறுக மூடிக் கொள்ளவும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். தைராய்டு சுரப்பிகளை இயங்கச் செய்கிறது. தொண்டை சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமானக் கோளாறுகளைப் போக்கவும் வல்லது. மூளை சோர்வடையாமல் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. திக்குவாய் நீங்கவும், நல்ல குரல்வளம் பெறவும் உதவுகிறது.
இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம். இந்த முத்திரையை விரிப்பில் அமர்ந்து கொண்டோ, சேரில் அமர்ந்து கொண்டோ செய்யலாம். அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும். மூச்சுத்திணறல் பிரச்சனைகளை குணமாக்கும் சுவாசகோச முத்திரை.
பெருவிரலில் உள்ள அடி ரேகை, நடுரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும், மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும். இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக் கூடாது. விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும். மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம் ஆகியவை குறையும். ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும். இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும். இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும். இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரை பயன்படுத்தலாம். சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.
சுவாசகோச முத்திரை செய்முறை : இரண்டாம் நிலை
இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். ஆஸ்துமா குணமாகும். இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது.
Thursday, 14 May 2020
சித்தன் அருள் - 864 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!
அக்னி முத்திரை:-
மோதிர விரலை மடக்கி அதன்மேல் கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதன் பலன்கள், உடலில் உள்ள அக்னியின் அம்சத்தை, இந்த முத்திரை சமநிலைப்படுத்துகிறது. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை குறைப்பதோடு, செரிமான செயல்பாட்டை வேகப்படுத்தும்.
சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் இரண்டையும் சேர்த்து மடக்கி வைத்து, கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
இந்த முத்திரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். வாழ்க்கையைக் குறிக்கும் முத்திரை ஆனதினால் வாழ்வின் மேன்மைக்கு வழி காட்டும்.. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வு நீங்கும். கண் பார்வை சிறப்பாகும். செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. களைப்பை போக்கி, ஆற்றல் திறனுடன் வைத்திருக்கவும் உதவும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். உடலின் நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும். பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.
ப்ரித்வி/பூமி முத்திரை:-
மோதிர விரல் நுனியால் கட்டைவிரலை தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.இதன் பலன்கள் ஆவன, அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்கள் அம்சத்தை, உடலுக்குள் ஊக்குவிக்கும். ரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். உள்ளார்ந்த ஸ்திரத்தன்மையை வளர்க்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மன அமைதிக்கும் உதவும் சிறந்த முத்திரை இது. உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மேலும், உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க இந்த முத்திரையைச் செய்யலாம்.
சூன்ய முத்திரை:-
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சுக்கிர மேடு என்பது, மோதிரவிரலின் அடியில் நேர் கீழே உள்ள கையின் பாகம். சூன்ய முத்திரை காது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கானது. இந்த முத்திரை உங்கள் காது வலிகளைப் போக்கும். மேலும் வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கும் இது உதவும். இவர்கள் தினமும் 45 நிமிடமாவது இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வலது காதில் பிரச்னை இருந்தால் வலது கரத்தாலும், இடது காதில் பிரச்னை இருந்தால் இடது கரத்தாலும் செய்ய வேண்டும். உடல் சோர்வினையும் போக்கக் கூடியது.
இரு உள்ளங்கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் தனித்து நேராக நிற்க வேண்டும். வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இந்த முத்திரை ஆண்மையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில், இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். மழை. பனி காலத்தில் வரும் கபம்மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவும் வல்லது. உடல் எடை குறையும்.
சித்தன் அருள்............... தொடரும்!
Sunday, 10 May 2020
சித்தன் அருள் - 863 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!
யோகாசனத்தை நமக்களித்தது சித்தர்கள்தான். ஒவ்வொருவரும், அவரவர் முறைப்படி பயிற்சி முறையை ஏற்படுத்தினார். பதஞ்ஜலி, திருமூலர், தன்வந்தரி சித்தர் போன்றவர்கள் யோகாப்யாசத்தில் முத்திரைகளை புகுத்தி, உடலின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, உடலை எப்படி உரமாக்குவது, நோயை எப்படி உடலை விட்டு விரட்டுவது என்பதை பற்றியெல்லாம் ஆராய்ந்து, மிக நுட்பமான முறைகளை வகுத்து தந்துள்ளனர்.
உதாரணமாக, ஒருவருக்கு உறக்கமே வரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரை சின் முத்திரையில் பத்மாசனத்தில் அமர வைத்து, குறிப்பிட்ட அளவு நீளத்துக்கு இடது மூக்கு வழி சுவாசம் எடுத்து, வலது மூக்கு வழி விட செய்யும் பொழுது, 5, 10, 15 போன்ற நிலை வரும் பொழுது, ஒரு நொடி மூச்ச்சை உள்ளேயே இழுத்து பிடித்து வைத்தால், இரவு எட்டு மணிக்கே அவர் தூங்கி விழுவார். காலை சீக்கிரமே எழுந்து அன்றைய தினத்தை தொடங்குபவர்களையும், இது தூக்கத்தை வரவழைத்து அடித்துப் போட்டுவிடும். இதன் காரணம், அந்த சின் முத்திரையும், சற்று நேரம் இழுத்துப் பிடித்த மூச்சும், உள்ளே பார்த்த வேலைதான்.
முத்திரைகள், கை விரல்களின் நுனியில் ஏற்படுத்தும் அழுத்தம், நேராக எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று உறங்கிப்போன உள்ளுறுப்பை செயல்படுத்துகிறது. இங்கும் அதிர்வுதான் வேலை செய்கிறது.
நமது கையிலுள்ள/காலிலுள்ள ஐந்து விரல்களும், பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தும். யோகாவில், கைவிரல்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவை யவன;
1. கட்டை விரல் - அக்னி தத்துவம்.
2. ஆள்காட்டி விரல் - வாயு தத்துவம்.
3. நடுவிரல் - ஆகாய தத்துவம்.
4. மோதிரவிரல் - நிலம் தத்துவம்.
5. சுண்டு விரல் - நீர் தத்துவம்.
முத்திரைகள் வழி, விரல்நுனியில் அதிர்வுகளை ஏற்படுத்தி, பிராணாயாமத்தில் தசவாயுக்களையும் தூண்டிவிட்டு, உடலின் உள்ளுறுப்புகளை செய்லபட வைப்பதே யோகாப்யாஸ பிராண சிகிர்சை எனப்படுவது.
ஒரு சில முத்திரைகளை இங்கு பார்க்கலாம். செய்முறை படமாக வேண்டியவர்கள் வலைப்பூவில் தேடி பார்த்துக்கொள்ளவும்.
மிருத சஞ்சீவினி முத்திரை:-
ஞான முத்திரை:-
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையை பூமியை நோக்கி கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை. கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும், மூளை செயல்பாடு, நினைவாற்றல் அதிகரிக்கும். அறிவையும், மன ஒருமுனை படுத்தலையும் குறிக்கும். பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.
ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் முனையை தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரை உடலில் உள்ள காற்றை சமநிலைப்படுத்துகிறது. உட்கார்ந்திருக்கும்போது, நிற்கும்போது அல்லது படுக்கும்போது என ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை நிவர்த்தி செய்ய முடியும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும். ஆர்த்தரைடிஸ் மூட்டுவலி, ரூமாடிசம், ஸ்பான்டிலைடிஸ் எனப்படும் கழுத்துவலிகளை குறைக்க உதவும்.
Sunday, 3 May 2020
சித்தன் அருள் - 862 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!
அப்படிப்பட்ட ஒரு நல்ல மாற்றத்துக்காகத்தான் அடியேனின் நண்பர் காத்திருந்தார். மூச்சின் அதிர்வலைகள், பிராணாயாமப் பயிற்சி வழி உள்ளே செலுத்தப்படும் பொழுது, அது எதிர்பார்த்த இடத்திற்கு சென்று, அந்த உடலுக்கு தேவையானபடி வேலை செய்கிறதா என்றறிய, உடலின் ஏதேனும் ஒரு திடீர் அசைவு தெரிவிக்கும். இவர் விஷயத்தில், அவர் நடந்ததை நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு, ஒரு தீர்மானத்தை எடுத்தார், யோகா ஆச்சாரியன்.
அன்றைய தினம், சற்று நேரமெடுத்து, நிதானமாக, அவரை 80வது நிலைக்கு அழைத்து வந்து, குருவை பிரார்த்தித்து, ஆதார சக்ரங்களை, உருவேற்றி, அபான வாயுவை முடிச்சு போட்டார். உள்ளுக்குள் முடிச்சு போடப்பட்ட வாயு, உதறிக்கொண்டு தலைக்கு ஏறியது. அவருக்கு ஒருவித அவஸ்தை தொடங்கி வியர்க்க தொடங்கியது.
உச்சியில் தொட்டு பார்த்து, வாயுவின் கட்டுப்பாட்டினால் சூடு ஏறி இருப்பதை கண்டு, சந்திரக்கலையை ப்ராணாயாமத்தினால் நெருடி உடலை குளிர்விக்க தொடங்கினார். சிறிது நேரத்துக்குப்பின் அவர் சமநிலைக்கு வந்தார்.
"இனி கொஞ்ச நாட்களுக்கு நிறயவே கடினமாகத்தான் இருக்கும். இயற்கை உபாதைகள் அத்தனை எளிதாக வெளியேறாது. நிறையவே சிரமம் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
ஒரு மனித உடலில், பிராணனும், அபானனும் கைகோர்த்து இருக்கும் வரை உயிருக்கு பிரச்சனை இல்லை. ஆனால், உடலைவிட்டு போய்விடுவோம், இத்தனை சிரமங்கள் எதற்கு என ஆத்மா தீர்மானிக்க, பிராணன் அதை உணர்ந்துவிட்டால், முதலில் பிராணன் செய்வது, அபானன் கூட கோர்த்த கையை விடுவித்துக் கொள்ளும். உடனேயே, அபானன் வெளியேறிவிடும், பின்னர் மற்ற வாயுக்கள் உடலை விட்டு செல்லத் தொடங்கும். இப்படிப்பட்ட நிலையில், விதி அனுமதிக்குமா என்று பார்த்துவிட்டு, முடிச்சுப்போட, ஆதார சக்கரங்களை தொட்டு எப்படி மெருகேற்றுவது என்று நன்கு தெரிந்த ஒருவரால் மட்டுமே, முடியும்.
இவர் விஷயத்தில் இறையருளால், விதி வழிவிட்டது.
முடிச்சுப்போட்டதின் வேதனையை பொறுத்துக்கொண்டே விரைவில் 90வது நிலையை தொட்டார், அவர்.
இந்த தினத்துக்காகத்தான் அடியேனின் நண்பர் காத்திருந்தார்.
அன்றைய தினம், அனைத்து ஆதார சக்கரங்களையும் திரட்டி கூட்டி, ப்ராணனில் புகுத்தி, கும்ப நிலையை உருவாக்கினார்.
"இனிமேல், என் உதவி உங்களுக்கு தேவை இல்லை. நீங்களே, இத்தனை நாட்கள் சொல்லித்தந்த பயிற்சியை தொடருங்கள். ஏதேனும் தேவை என்றால் கூப்பிடுங்கள், வருகிறேன். அல்லது நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன். இனி உள்ள பயிற்சியை ஒரு மாதம் தொடர்ந்த பின், உங்களுக்கு, இனி மருத்துவம் பார்க்க முடியாது என்ற மருத்துவர் முன் சென்று உங்கள் உடலை பரிசோதிக்கச் சொல்லுங்கள். உங்கள், குடலும், இருதயமும் சரியாகிவிட்டது." என்று கூறி விடை பெற்றார் அடியேனின் நண்பர்.
இன்று, அந்த நோய் வாய்ப்பட்டிருந்தவர், தனியாக கார் ஒட்டி சென்று, விளையாட்டு மைதானத்தில் குறைந்தது ஐந்து சுற்று நடக்கிறார். தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்கிறார். மெலிந்து போயிருந்த உடல், நோய் குணமானபின் சற்றே நல்ல பெருத்து, ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்.
ஒரு மாதத்துக்கு மேல் தங்க மாட்டார் என்ற மருத்துவர்களின் முடிவை மாற்றி எழுதி, இறைவன் அருளால், ஆரோக்கியமாக, தன் குடும்பத்தாருடன் அமைதியாக, கடந்த 18 மாதங்களாக இயல்பாய் வாழ்ந்து வருகிறார்.
சரி! இந்த தொகுப்பின் தலைப்புக்கும், இந்த நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். கூர்ந்து கவனியுங்கள்!
அதிர்வும், தசவாயுவும். இவை இரண்டும்தான் ஒருவரின் உடலில் உள்ள எந்த குறைவையும், வியாதியையும் குணப்படுத்தும்.
ரெய்கி என்கிற முறையில், அதிர்வுதான்.
யோகாப்யாசத்தில், சித்தர்கள் புகுத்தியதும் அதிர்வுதான்.
நாம் உச்சரிக்கும் மந்திரங்களில், அதிர்வுதான்.
ஓம் என்கிற ப்ரணவத்திலிருந்து தோன்றியதுதான் பிற மந்திரங்கள். ஆகவே, உச்சரிக்கும் மந்திரம் எதுவாயினும், மனம் ஒன்றி அதன் அதிர்வு உடலெங்கும் பரவுவதை உணர்ந்து புரிந்து கொண்டு, முடிந்த வரையில் தனிமையில் அமர்ந்து, மூல மந்திரங்களை உருப்போட்டு உங்கள் வாழ்வை மெருகேற்றுங்கள். உச்சரிப்பு சரியா, தவறா என்கிற எண்ணம் வேண்டாம்.
உங்கள் திட நம்பிக்கையை கண்டு, சரியான நேரத்துக்கு பெரியவர்கள் இறங்கி வந்து, தவறிருந்தால், திருத்தி, வழி நடத்துவார்கள்.
அவர்கள் தேடும் உன்னத ஆத்மாவாய் நீங்கள் மாறிவிடுங்கள்.
உங்கள் மனம் இறை அமருமிடமானால், சித்தர்கள் உங்களைத் தேடி வருவார்.
மேலும் சில மூல மந்திரங்கள், உங்கள் வாழ்க்கைக்காக.
அதோ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள்
1. துங்-நமசிவய - எதிரியின் நண்பர்களுக்குள் பகை உண்டாகும்.
2. ஓம்-கங்-சிவய - சக்தி அருள் உண்டாகும்.
3. ஓம்-சிங்-சிவயநம - ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
4. ஓம்-பங்-சிவயநம - பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
5. ஓம்-யங்-சிவயநம - சங்கடங்கள் தீரும்.
6. ஓம்-மாங்-சிவயநம - வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
7. ஓம்-மங்-நமசிவய - கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
8. கெங்-ஓம்-நமசிவய - யாவரும் வசியமாவர்.
9. ஓம்-மங்-யங்-சிவய - விஷங்கள் பறந்தோடும்.
10. அங்-ரங்-ஓம் சிவய - கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
11. ஓம்-அங்-சிங்-சிவயநம - சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
12. ஓம்-வங்-சிங்-சிவயநம - முக்குணத்தை வெல்லலாம்.
13. ஹிரீம் நமசிவய - விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
14. ஐ-உம்-சிவயநம - நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.
15. வங்-சிங்-ஓம்-சிவய - தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.
16. சங்-சிவயநம - விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
17. ஓம்-துங்-சிவயநம - ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
18. ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம - பெரிய நிலப்பரப்புக்கு அதிபனாவான்.
19. சிங்-நமசிவய - தென்னை மரத்தை வளைக்கலாம்.
20. வங்-சிவயநம - மழையில் நனையாமல் செல்லலாம்.
21. சிவய-ஓம்-ஸ்ரீயும் - மழையை நிறுத்தலாம்.
22. கிலி-உம்-சிவ - ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
23. ஓம்-கங்-சிவ்-உம்-சிவய - கடலின் மேல் ஓடலாம்.
24. சங்-யவ்-சிமந - ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
25. மங்-நங்-சிங்-சிவய - பிசாசுகளையும் ராட்சஸர்களையும் அடக்கலாம்.
வாம தேவத்தைச் சார்ந்த ஒன்பது மந்திரங்கள்.
1. ஓம்-புரோம்-சிவய - அமுதத்தைச் சுவைக்கலாம்.
2. ஓம்-ஐ-உம்-சிவய - மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
3. ஐ-உம்-ஸ்ரீ-சிவய - ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
4. உங்-தெங்-ஓம்-சிவய - பஞ்சதரு வந்து பலன் தரும்.
5. கங்-உங்-கிங்-நசி-ஓம் - காமதேனு வந்து பலன் தரும்.
6. சங்-சிவய-நம - தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
7. மங்-சிவ-ஓம்-நம - இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
8. ஸ்ரீ-உம்-சிவய - விஷ்ணு அபயமளிப்பார்.
9. சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம - கயிலைவளநாதர் முன் தோன்றுவார்
சித்தன் அருள்............. தொடரும்!
Subscribe to:
Posts (Atom)