அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், நல்விதமான வாழ்வு நிலை இவ்வுலகினில் மாந்தர்கள் பெறவேண்டும் என்பதற்காக, இவ்வுலகம் தோன்றிய நாள் முதல், இஃதொப்ப முயற்சியினை மாந்தர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகு முயற்சியிலே தன் சக்தி தாண்டி, நிலைதாண்டி இருப்பதாக பல மாந்தர்களில், சில மாந்தர்கள் எண்ணும்பொழுதே தெய்வீகத்தின் துணையை நாடுகிறார்கள். இயம்புங்கால், இறைவனின் கடாக்ஷம் இருந்துவிட்டால், எல்லாவகையிலும் இன்பம்தான், போராட்டங்களற்ற வாழ்வுதான் என்று மனிதன் எண்ணுகிறான். ஒருவகையில் அது உண்மைதான் என்றாலும், இயம்புகின்றோம் இஃதொப்ப ஒரு நிலையில் அஃது நன்று என்றாலும் மெய்யாக, மெய்யாக, மெய்யாக, ஆணித்தரமாக உள்ளும், புறமும் எவ்வித நடிப்பும் இல்லாமல், மெய்யான ஆன்மீக வழியிலே இறைவழியிலே எந்த மனிதன் சென்றாலும் அல்லது எந்த உயிர் சென்றாலும் பல்வேறுவிதமான சோதனைகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.
வேறுவகையில் கூறப்போனால் கனகம், சோதனை, புடம் என்று வைத்துக்கொள்ளலாம். இஃது ஒருபுறமிருக்க இந்த சோதனை என்ற கட்டத்தை அடைவதற்கு முன்னால் அந்த உயிர் அல்லது ஆத்மா சுத்தி செய்யப்படவேண்டும். எங்ஙனம்? இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் அடிப்படையிலிருந்து தோன்றிய நடப்பு பிறவிகளில் நடக்கின்ற நிகழ்வுகளால், அவமானங்களால், நம்பிக்கை துரோகங்களால், கைப்பொருளை இழப்பதால், உறவு சிக்கலால், கடுமையான ஏமாற்றத்தால், உலகியல் போராட்டத்தால், மட்டுமல்லாது இன்னும் பிறவழிகளிலும் பாவங்கள் குறைகிறது. இயம்புங்கால், அங்ஙனமாயின் ஒரு மனிதன் தன் புத்தியை பயன்படுத்தி தனக்கு வரக்கூடிய துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாகாதா? தன்னுடைய சிந்தனையை திடமாக்கி, வளமாக்கி, துன்பமற்ற நிலையில் வாழ முயற்சி செய்யக்கூடாதா? என்றால் தவறல்ல. செய்யலாம். ஆயினும் மனிதன் செய்கின்ற முயற்சிகளையெல்லாம் தாண்டி, சாமர்த்தியங்களையெல்லாம் தாண்டி ஒரு மனிதனுக்கு எந்தவகையில் யாராலும், எதனாலும் மனித ரீதியாக, மனித மனப்பாங்கிலே துன்பங்கள் வருகிறதென்றால், மௌனமாக அதனை ஏற்றால் அது பாவக்கழிவிற்கு வழியாக இருக்கும். சரி, அப்படி ஏற்காவிட்டால், எதிர்த்தால் என்னவாகும்? ஒன்றும் ஆகப்போவதில்லை. துன்பத்தை ஒரு மனிதன் அதன் போக்கிலே அமைதியாக ஏற்றுக்கொண்டாலும், எதிர்த்து ஆர்பாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. விதி தன் கடமையை செய்துகொண்டேதான் இருக்கும். எதிர்த்து ஆர்பாட்டம் செய்வதால் மேலும் மன உளைச்சல்தான், மனிதனுக்கு ஏற்படுகிறது. இஃதோடு மட்டுமல்லாது இன்னும் எத்தனையோ வழிகளிலெல்லாம் விதி மனிதனின் பாவங்களற்ற நிலைக்கு ஆட்படுத்ததான் இறைவனின் அருளால் படைக்கப்பட்டு, அந்த விதியானது மனித மதியிலே அமர்ந்துகொண்டும் ஆசைகள், மாயைகள் மூலமாகவும் வாழ்க்கையை ஒரு பிடிப்புள்ளதாக ஆக்கி, வாழ்க்கையில் எதனையோ சாதிக்கப்போவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, முடிவிலே ஒரு விரக்தியைத் தந்து, ஒரு ஏமாற்றத்தை தந்து, அதன் மூலம் ஒருசில பாவங்களை அந்த ஆத்மாவின் தன்மையிலிருந்து எடுக்கப் பார்க்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்வதும், மேலும் அறிந்து கொள்வதும், அறிந்து கொள்வதையெல்லாம் நடைமுறைபடுத்துவதும் கடினம்தான். அதற்கும் விதி இடம் தரவேண்டும்.