அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
ஒரு ஞானியின் மனோபாவத்தில் வாழ்வதால் என்ன லாபம்? மனம் மரத்துப் போகவேண்டும். நூறாண்டுகள் வாழ்வதற்கு, ஆக்கையை தயார் நிலையில் வைக்கலாம். தவறில்லை. அடுத்த கணம் மரணம் வந்தால், அதை ஏற்கும் நிலையில் மனம், பக்குவமாக இருத்தல் வேண்டும். குடியிருக்கின்ற இல்லத்தை பேணிக்காப்பது போல எண்ணி, ஆக்கையை பேணிக் காத்திடல் அவசியம். நன்றாகத் தெரியும், இது இரவல் வாசம், நமது சொந்த இல்லம் அல்ல, என்று வேண்டுமானாலும் அந்த இல்லத்திற்கு உரிமையாளன் நம்மை இந்த இல்லத்தைவிட்டு அகன்று போகுமாறு ஆணையிடுவான் என்று தெரியும். இதனைப்போலவே இந்த ஆத்மா இந்த நடப்பு காலத்தில், இந்த மனித கூட்டுக்குள் இரவல் வாசமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதை ஆழ பதிய வைத்துக்கொள்வதும், இப்படி மனதை ஞானியின் மனோநிலைக்காக மாற்றி, மாற்றி கொண்டு போவதற்கு முயற்சி செய்வதும்தான் நிரந்தரமான நிம்மதிக்கும், சந்தோசத்திற்கும் உண்டான வழியாகும்.
இறைவனின் கருணையாலே வாழ்வு நிலையிலே எடுத்த எடுப்பிலேயே எல்லா ஆத்மாக்களும் இந்த நிலைக்கு வருவது கடினம். என்றாலும் யாம் அடிக்கடி இதுபோன்ற தத்துவரீதியான விளக்கங்களைக் கூறுவதால் அதுவே பலருக்கு எரிச்சலையும், மன ஆதங்கத்தையும், சலிப்பையும் ஏற்படுத்துவதும், யாம் அறிந்ததே. ஆயினும் ஒரு குழந்தைக்கு, பொம்மைகள் நிரந்தரமான உறவோ அல்லது நிரந்தரமான தேவையோ அல்ல என்பது ஈன்றோருக்கு தெரிவதுபோல, மனிதன் வாழ்கின்ற வாழ்க்கையிலே லௌகீக விஷயங்கள் அனைத்துமே, ஒரு குழந்தைக்கு தேவைப்படும் பொம்மைகள் போல்தான் என்பதை ஞானிகள் உணர்ந்திருப்பதால்தான், மெய்யான இறையருள் பெற்ற ஞானிகள் தமைநாடும் மாந்தர்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும், சதாசர்வகாலம் சிந்தனையோடு நெடிய, உயர்ந்த, தாராளமான பெருந்தன்மையோடு கூடிய இறை ஞான விழிப்புணர்வு வரவேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர, "நீ அனேக காலம் வாழப்பா, நீ நன்றாக வாழப்பா, இந்த லௌகீக சுகங்களைப் பெற்று வாழப்பா" என்று ஆசீர்வாதம் செய்யமாட்டார்கள். அங்ஙனம் பலர் செய்கிறார்களே என்றால் என்ன பொருள்? சரி, இன்னும் இந்த குழந்தை பொம்மைகளை விட்டுவிடத் தயாராக இல்லை என்பதே பொருளாகும்.
அஹா ! அருமையான விளக்கம் அற்புதமான உதாரணம் . இந்த உலமகமே ஒரு பொம்பைதான் . இதை தான் மேல்நாட்டு கவிஞர் shakesphere உலகமே ஒரு நாடகமேடை இதில் நம்மெல்லாம் ஒரு நடிகர்கள் என்றார் ...
ReplyDeleteஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete