கோடகநல்லூர் வந்து சேர்ந்த சுவாமிநாதன் தம்பதியருக்கு, நிறைய பேரை சந்திக்கிற பாக்கியம் கிடைத்துள்ளது. அதிலும் முக்கியமாக, அபிஷேக பூசையின் போது அகத்தியப்பெருமான் பூசை செய்கிற காட்சியை "கண்டு" உணரவே, அவர் தன் மனைவியிடம், "அகத்தியப்பெருமான் அபிஷேக ஆராதனை செய்வதை பார்த்தாயா?" என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் மனைவி "அவர் மட்டுமா! லோபாமுத்திரையும் இருக்கிறாளே! உங்களுக்கு தெரியவில்லையா?" என்று எதிர் வினா எழுப்பினார். எத்தனை முறை பிரார்த்தனை செய்தும், அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைக்கவில்லையாம்.
சரி! பூசை முடிந்துவிட்டது! அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த அர்ச்சகரை பார்த்து "சுவாமி! எனக்கு, பெருமாளுக்கு பூசை செய்த சிறிதளவு பூ பிரசாதமாக கொடுங்களேன்!" என்றார். இவர் விண்ணப்பத்தை அர்ச்சகர் காதில் வாங்கின மாதிரியே தெரியவில்லை. இவரும் பல முறை கேட்டுப் பார்த்தார். அர்ச்சகர், பெருமாள் சன்னதிக்கு சென்று நிறைய மாலை, பூவை எடுத்து, இவரை சுற்றி நின்றவர்களுக்கு கொடுத்தாரே ஒழிய, இவருக்கு ஒரு பூ கூட கொடுக்கவில்லை.
சரி! நமக்கு இன்று கொடுப்பினை இல்லை போலும், என மனசை தேற்றிக்கொண்டு, பெருமாளை பார்த்தார்.
பிறகு என்னவோ தோன்ற, மனைவியிடம், "வா! நாம் போய் அகத்தியர் பூசையின் பிரசாதம் வாங்கிக்கொள்ளலாம். அனைவரும் போகத் தொடங்கிவிட்டனர். பின்னர் தீர்ந்து விடப்போகிறது. அந்த அருளேனும் நமக்கு கிடைக்கட்டும்!" என்று கூற, பெருமாளின் சன்னதி முன் நின்று கொண்டிருந்த அவர் மனைவியோ திடமாக கூறினாள்.
"எனக்கு லோபாமுத்திரை அம்மா சின்ன குழந்தையின் வடிவில், பச்சை சட்டை போட்டு காட்சி கொடுப்பேன் என்று வாக்கு தந்துள்ளார். அவர் வரவேண்டும்! பார்த்தபின்தான் இந்த பெருமாள் சன்னதியை விட்டு விலகுவேன்! அதுவரை பெருமாளை பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். அம்மாவை வரச்சொல்லுங்கள் என்று வேண்டுதலை சமர்ப்பிப்பேன்!" என்று உறுதியாக கூறி நின்றார்.
"என்னடா இது நமக்கு வந்த சோதனை! அம்மா எப்ப வந்து நாம் எப்போது செல்வது" என்ற சிந்தனை இவருக்குள் ஓடியது.
யாரோ மூலஸ்தானத்தில் அர்ச்சனை பண்ண, அது முடிந்து தீபாராதனை நடந்தது. கைகூப்பி, பெருமாளை வணங்கி நின்று கொண்டிருந்த அந்த அம்மாவின் பின் பக்கத்தில் யாரோ சுரண்டுவது போல் இருந்தது. உணர்வு வந்து திரும்பி பார்க்க, ஒரு சிறு குழந்தை பச்சை சட்டை, பச்சை பாவாடை அணிந்து அந்த அம்மாவை தட்டி கூப்பிட்டு கொண்டிருந்தது.
சற்றே அதிர்ச்சி அடைந்து, திரும்பி பார்த்து, அந்தக் குழந்தையிடம் "என்னமா வேண்டும்!" என அவர் மனைவி கேட்க,
"நீங்களெல்லாம் ஸ்வாமியை பார்க்கிறீர்கள்! எனக்கு முகமே தெரியவில்லை. என்னை தூக்கிக்கோயேன்! நானும் ஸ்வாமியை பார்ப்பேனே!" என்று கூறியது.
உடனேயே லோபாமுத்திரையின் நினைவு வர, அப்படியே அந்த குழந்தையை வாரி அணைத்து, கையில் தூக்கி கொண்டாள், அவர் மனைவி.
அவர் கையில் அமர்ந்து கொண்ட குழந்தை, பெருமாளை பார்க்காமல், அந்த அம்மாவையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
"ஸ்வாமியை பார்க்கணும்னு சொன்னயே! அங்க பாரு! என்ன பார்த்து சிரிச்சிண்டு இருக்காதே! என கூறியவரிடம்,
"ஸ்வாமியை பார்த்தாச்சு! என்னை கீழே இறக்கிவிட்டேன்!" என கேட்டது.
உடனேயே கீழே இறக்கிவிட்டவுடன், நேராக சன்னதிக்கும் முன் உள்ள இடத்தில் தாம்பாளத்தில் பூசைக்கு வைத்திருந்த பூக்களிலிருந்து, இரண்டு தாமரை பூக்களை கையில் எடுத்து வந்து அந்த அம்மாவிடம் "என்னை இனி தூக்கிக்கொள்" என்று கூறியது.
தூக்கிக் கொண்டதும், அந்த இரு பூக்களை கையில் வைத்து உருட்டி விளையாடிக்கொண்டே சுவாமிநாதனை பார்த்துவிட்டு புன் சிரிப்புடன் அந்த அம்மாவின் கையில் அமர்ந்து கொண்டது..
இவரோ, ஒரே ஆச்சரியத்தில் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்!
என்ன சொல்வது, என்ன கேட்பது என்று கூட தோன்றவில்லை.
சற்று நேரம் பூக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தையிடம், அதன் தாய் பின்னாலிருந்து "பாரும்மா! அந்த பூக்கள் எல்லாம் சுவாமி பூசைக்காக வைத்திருக்கிறார்கள். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு" என்று கூறியதும், அதை கேட்டு அந்த அம்மாவிடம் "என்னை கீழே இறக்கிவிடு! நான் போய் பூவை தட்டில் வைக்கணும்!" என்று கூறியது.
கீழே இறங்கி சென்று, சமர்த்தாக எடுத்த இடத்திலேயே திரும்பி வைத்துவிட்டு, தன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது. இதற்குள் சற்று கூட்டம் வரவே, அர்ச்சகர் மறுபடியும் தீபாராதனையை காட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் பெருமாள் தீபாராதனையை பார்த்து, மெய் மறந்து நின்றனர்.
அந்த தம்பதியரும் தான்.
தீபாராதனை முடிந்த பின் அந்த குழந்தையின் நினைவு மெதுவாக வர, திரும்பி பார்த்து தேடினால், எங்கும், அந்த தாயும் இல்லை, குழந்தையும் இல்லை.
மனதுள் "லோபாமுத்திரா" என்று அழைத்து வெளியே பிரகாரத்தில், கோவிலுக்கு வெளியே எங்கு சென்று தேடியும் இருவரையும் காணவில்லை.
மறுபடியும் சன்னதிக்குள் வந்து பார்த்த பொழுது அங்கு யாருமே இல்லை. இது என்ன திருவிளையாடல் என்று மனதுக்குள் தோன்றியது. சற்று கவனமாக இருந்து, அந்த குழந்தையை இன்னும் சற்று நேரம் பிடித்து வைத்திருக்கலாமே, என்ற எண்ணம் இருவருக்குள்ளும் தோன்றியது.
அவர் மனைவியோ "பார்த்தீங்களா! அம்மா வருவான்னு எனக்கு வாக்குரைத்தாள்! அதன் படியே, சொன்ன சொல்லை காப்பாத்திட்டாள்! வந்தது அவளே தான்! இது போதும்! பெருமாளுக்கு மிக்க நன்றி!" என கூறி காத்திருந்தனர்.
"இனி நமக்கு எங்கே பூ கிடைக்கப் போகிறது!" என்று நினைத்து விலக நினைத்த சுவாமிநாதனை, அர்ச்சகர் கூப்பிட்டு, "எங்க போறீங்க? நீங்கதானே ஒரு பூவாவது கொடுங்கள் என்று கேட்டீர்கள்! இப்போது பெருமாள் கொடுக்க சொல்லிட்டார்! சற்று பொறுங்கள், நான் உள்ளே சென்று வருகிறேன்" என்று கூறி சென்றவர்.
திரும்பி வந்து "நீங்கள் உங்கள் அங்கவஸ்திரத்தை நீட்டி பிடியுங்கள், அம்மா, நீங்க உங்கள் புடவை தலைப்பை நீட்டி பிடியுங்கள்" என்று கூறிவிட்டு, நிறைய மாலைகளை இரு வஸ்த்திரத்திலும் போட்டுவிட்டு, "இது போறுமா! இன்னும் வேணுமான்னு பெருமாள் கேட்க சொன்னார்!" என்றாரே பார்க்கலாம்.
அதை கேட்ட ஸ்வாமிநாதன் அவர்கள், "அய்யா! மன்னிக்கவும்! நான் ஒரு பூ தான் கேட்டேன். நீங்களோ அத்தனை மாலையையும் பெருமாள் உத்தரவால் கொடுத்துவிட்டீர்கள். இதுவே மிக அதிகம். இன்னும் வேண்டாம். ரொம்ப திருப்தி!" என்று கூறிவிட்டு, பெருமாளின் அருளுக்கு நன்றி கூறி, சுமக்க முடியாமல் சுமந்து வந்து, தங்கள் வாகனத்துக்குள் வைத்துவிட்டு வந்து பார்த்தால், அவர்களுக்கும், அகத்தியர் அவர் பூசையின் பிரசாதத்தை கிடைக்கும்படி செய்தார்.
பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் பொழுதும், கண்கள் அங்குமிங்கும் தேடியது, அந்த குழந்தையை ஒரு முறை கூட பார்க்க முடியுமா என்று.
அப்பனும், அம்மையும் கிளம்பி போய்விட்டிருந்தனர். தேடியதுதான் மிச்சம். ஆனால், மிகுந்த மனநிறைவுடன், அன்று அவர்கள் விடை பெற்றனர்.
"அந்தநாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர் - எப்படிப்பட்ட புண்ணிய தினம் என்பதை, அன்று, காலமும், அடியேனும் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு, அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தோம், என்பது மட்டும் உண்மை.
[அடுத்த தொகுப்புடன் கோடகநல்லூர் தொடர் நிறைவு பெறும்].
சித்தன் அருள்..................... தொடரும்!