வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப் பெருமான் நமெக்கென தெரிவித்த அந்த புண்ணிய நாளில் கோடகநல்லூரில் பச்சை வண்ணப் பெருமானுக்கு 04/11/2014 அன்று நடந்த அபிஷேக பூசைகளையும், நிகழ்ச்சிகளையும், என் நண்பர் விவரிக்கிறார். அன்றைய தினம் அங்கு சென்று அருள் பெற்ற அடியவர்களுக்கும், அங்கு செல்ல முடியாமல் தவித்த அகத்தியர் அடியவர்களும், இந்த தொடரை வாசித்து மகிழ்வுற வேண்டுகிறேன்.
கார்த்திகேயன்!
[கோடகநல்லூரில் தாமிரபரணி நதிக்கரை]
[பாபங்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்து தன் குழந்தைகளின் வாழ்க்கையை செம்மை படுத்தும் லோபாமுத்திரா என்கிற தாமிரபரணி நதி 04/11/2014 அன்று ஆனந்தமாக பிரவாகித்த நேரம்!]
[புகைப்பட நன்றி:திரு ஸ்ரீதரன்]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்தன் அருள்" தொகுப்பில் முன்னரே கூறியிருந்தபடி இந்த வருடத்திய புண்ணிய தினமான 04/11/2014 (ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், த்ரயோதசி திதி) நேரத்தில், அங்கிருந்து பச்சை வண்ண பெருமாளின் தரிசனமும், அருளும் பெற வேண்டும் என்று தீர்மானித்தேன். தகவல் கிடைத்து போதிய அளவு நாள் இருந்ததால், நிறைய விஷயங்களை தீர்மானிக்கிற வாய்ப்பு கிடைத்தது.
புரட்டாசி மாதம் ஒரு சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் பெருமாள் கோவில் கருடசேர்வையை தரிசிக்க சென்ற பொழுது, "சித்தன் அருளில்" நவம்பர் 4ம் தியதியை பற்றி ஒருமுறை கூட எல்லோரையும் நினைவு படுத்த நண்பரிடம் வேண்டிக் கொண்டேன். அப்பொழுது, திரு கார்த்திகேயன் ஒரு வேண்டுதலை சமர்பித்தார். அதே நேரத்தில் அவர் அந்த நாளில் 4/11/2014 பங்கு பெற முடியாது எனவும், அன்றைய பூசையை சிறப்பாக நடத்தி முடிக்கிற வேலையை என்னிடம் ஒப்படைத்தார். அவ்வளவுதான் நான் மாட்டிக் கொண்டேன். சரி! எல்லாவற்றையும் பெருமாள் அனுக்கிரகம் பண்ணுவார் என்று மனதில் திடமாக நினைத்து, அவரிடமே வரிசையாக நிறைய வேண்டுதல்களை வைத்தேன். என்னால் ஆவது எதுவும் இல்லை; எல்லாம் உங்கள் அருளால் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கீழே உள்ள விஷயங்களை பிரார்த்தனையாக சொன்னேன்.
- அன்றைய தினம் உம்மை தரிசிக்க வருகின்ற அனைவருக்கும், நீங்கள் அருள் புரிந்து, வழி நடத்தி, மனதுள் திருப்தியை விதைக்க வேண்டும்.
- வந்து செல்கிறவர்கள் அனைவரும், பத்திரமாக வந்து சென்று, வீடு சேரவேண்டும்.
- எல்லோருக்கும் உங்கள் ஆசிர்வாதமும், தரிசனமும், பிரசாதமும் கிடைக்க வேண்டும்.
- உங்களுக்கு செய்ய நினைக்கிற திருமஞ்சனமும் (அபிஷேகம்), பூசைகளும் மிகச் சிறப்பாக அமையவேண்டும்.
- எல்லா தெய்வங்கள், சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், லோபாமுத்திரா சமேத அனைத்து நதிகளின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
இதற்காக என்னென்ன செய்ய வேண்டிவரும் என்று தனியாக அமர்ந்து, யோசித்த பொழுது, விரிவான ஒரு திட்டமிடல், நல்ல மனிதர்களின் ஆதரவு (உடல் உழைப்பு) கண்டிப்பாக தேவை என்று தோன்றியது. எல்லாவற்றையும் பெருமாள், அகத்தியர் பாதத்தில் சமர்பித்துவிட்டு, முதலில் பூசாரியிடம் பேசினேன். அன்றைய தினம் 9 மணிக்கு மேல் தான் மூன்றும் (திதி, நட்சத்திரம், மாதம்) இவை சேர்ந்து இருக்கிறது என்று கூறி, அபிஷேகத்தை 10 மணிக்கு வைத்துக் கொள்ள வேண்டினேன். அவரும் சம்மதித்தார். முதல் முயற்ச்சியே வெற்றி. இனி எல்லாம் இனிதே நடக்கும் என்று நினைத்து, ஊர் வந்து சேர்ந்தேன்.
பெருமாளுக்கு அன்றைய தினம் இவைகளை விமரிசையாக செய்திட யாரிடமும் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். எல்லா விஷயத்தையும் சொந்த சிலவிலேயே செய்து விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் பெருமாள் வேறுவிதமாக நினைத்திருந்தார் என்பது பின்னர் தான் புரிந்தது.
சித்தன் அருளை தொடர்ந்து வரும் ஒரு சிலர் என் நண்பரை தொடர்பு கொண்டு, அவர் கை காட்டுதலின் பேரில் என்னை தொடர்பு கொண்டு, "நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறோமே" என்றனர்.
"என்ன இது! நிகழ்ச்சியின் மொத்த உருவமும் மாறுகிறதே!" என்று நினைத்து,
"நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள், யாருக்கு என்ன வேலை பச்சை வண்ணனும், அகத்தியரும் கொடுக்கிறாரோ, அதை ஏற்று செய்யுங்கள்" என்று கூறினேன்.
04/11/2014 - செவ்வாய்கிழமை - அந்தப் புண்ணிய நாளும் வந்தது.
எனது ஊரிலிருந்து கோடகநல்லூர் குறைந்தது 6 மணி நேர பயணம். குறுக்கு வழியில் (shortcut) சென்றால் 4 மணிநேரத்தில் சென்று விடலாம். எப்படியேனும் 9 மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் காலை 5 மணிக்கு குடும்பம், உறவினர், நண்பர்கள் சூழ புறப்பட்டேன்.
போகும் வழியில், அகத்தியப் பெருமான் கோவிலில் இறங்கி அவரை தரிசனம் செய்து செல்லலாம் என்று உள்ளே நுழைந்தால், அங்கே அவருக்கு அப்பொழுதுதான் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அரை மணிநேரம் பொறுத்திருந்து, அவரின் முழு அபிஷேகமும் கண்டு பிரசாதமும் வாங்கி புறப்படும் பொழுதுதான் புரிந்தது, இன்று குருவும், முருகரும் நம் திட்டமிடலை தாமதப்படுத்தப் போகிறார்கள் என்று.
பலமுறை கோடகநல்லூர் சென்றிருக்கிறேன். தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து, உள்பாதை வழியாக சென்றால், நிறையவே தனிமை கிடைக்கும். அதை விரும்பி குறுக்கு வழியில் சேரன்மகாதேவி சென்றடைந்து, அங்கிருந்து "யூ" வடிவில் திரும்பினால் கோடகநல்லூர் சென்றடைந்துவிடலாம். செரன்மகாதேவிக்கு முன்பு, ஒரு 6 கிலோமீட்டர் தூரத்தில், கொழுந்து மலை அடிவாரத்தில், ஒரு முருகர் கோவில் உண்டு. இரண்டு முறை அந்த வழியாக போகும் பொழுது தரிசனம் செய்ய நினைத்து, கோவில் பூட்டியிருந்ததால், இந்த முறையும் மணி 10 ஆகிவிட்டதால், நடை சார்த்தியிருப்பார்கள் என்று நினைத்து, இருந்தாலும், கோவில் முன் சற்று நேரம் நின்று விட்டு செல்லலாம் என்று வண்டியை திருப்பி, பாதி தூரம் சென்றிருப்போம், முன்னாடி இருச்சகர வாகனத்தில் அந்த கோவில் பூசாரி, பூசைக்காக கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
"அட! நமக்கெல்லாம் இன்று யோகம் தான். பூசாரி இப்பொழுதுதான் வருகிறார். அதனால், ஓதியப்பரையும் (முருகரை இயல்பாகவே நான் அப்படித்தான் அழைப்பேன்) முதல் முறையாக பார்த்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்வோம்" என்றேன்.
மிக மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் கோவில். கோவிலுக்கு பின்னே வானுயர்ந்து நிற்கும் கொழுந்து மலை. மயில், குருவி, பறவைகளின் சப்தம் எப்பொழுதும் நிறைந்திருக்க, காற்று சன்னமாக நம்மை தழுவி செல்லும் சூழ்நிலை.
வண்டியை நிறுத்திவிட்டு வந்த பூசாரி, கோவில் வாசல் முன் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, கதவை திறந்து உள்ளே சென்றார்.
நாங்களும் பின் தொடர்ந்தோம். மிகப் பழைய கோவில், பராமரிப்பின்றி, பழகிய வாசத்துடன் இருந்தது. ஒரே சன்னதி. 3 அடி உயர பாலசுப்ரமணியரின் உருவச்சிலை. மிக அழகாக, புன்னகைத்தபடி (அதில் ஏதோ ஒரு அர்த்தம் பொதிந்திருந்தது உண்மை) நின்று கொண்டிருந்தார்.
தரிசனம் ஆகிவிட்டது, இனி கிளம்பி விடலாம் என்றால், பூசாரி ஒரே உத்தரவில் நிற்க வைத்துவிட்டார்.
"இப்ப அபிஷேகம் முடித்துவிட்டு, தீபாராதனை காட்டி பிரசாதம் தருகிறேன். சற்று பொறுமையாக இருங்கள்" என்றார்.
"சரிதான்! குரு அரை மணி நேரம் பிடித்துப் போட்டார் என்றால், ஓதியப்பருமா? ஓதியப்பா! இது உனக்கே நல்லா இருக்கா? அங்க உன் மாமனுக்கு அபிஷேகம் ஏற்ப்பாடு செய்திருக்கிறோம்! இன்னிக்கு அவருடைய புண்ணிய நாள். இன்னிக்கு பார்த்து நீயும் பிடிச்சுப் போடறியே!" என்று வேண்டிக் கொண்டேன்.
கண் மூடி நின்ற பொழுது, "குருவின் அபிஷேகம் பார்த்தாயிற்று. என்னுடைய அபிஷேகமும் பார்த்துவிட்டு, பிறகு சென்றால் போதும்" என்று வாக்கு வந்தது.
ஒரு மணிநேரம் காத்திருந்து, முருகரின் அபிஷேகம், அலங்காரம், பூசை பார்த்து பிரசாதம் வாங்கிக் கொண்டு கோடகநல்லூர் சென்றடைந்ததும் மதியம் மணி 11 ஆகிவிட்டது.
கோடகநல்லூர் பச்சை வண்ணனுக்கு (உற்சவ மூர்த்தி) அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகிவிட்டது.
வேக வேகமாக சென்று தாமிரபரணியில் மூழ்கி ஸ்நானம் செய்தோம். எப்பொழுதும் தாமிரபரணி நதியில் மூழ்கி, நீருக்கு அடியில் பூமியில் அகத்தியர், லோபாமுத்திரா தாயை நினைத்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது வழக்கம். சமீபத்தில் பெய்த மழையால், நல்ல இழுவை இருந்தது. பல முறை, எத்தனை முயற்சி செய்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவிடாமல் நீர் இழுத்து சென்றது. இங்கும் குறுக்கு வழிதான் பிரயோகிக்க வேண்டும் போலிருக்கிறது என்று தீர்மானித்து, வேகமாக செங்குத்தாக நீரினுள் நுழைந்து, நெற்றி மண்ணில் படுகிற அளவுக்கு மூன்று முறை நமஸ்காரம் செய்துவிட்டு, கரை ஏறினோம்.
கரையில் அமர்ந்து ஜபம் செய்து, நெற்றியில் திருநீர் பூசி கோவிலை சென்றடைந்து, உள்ளே நுழைய எத்தனித்தால், வாசலில் தான் நிற்க வேண்டி வந்தது. அத்தனை கூட்டம். எங்கும் பக்தர்கள். சுவாமியை அவ்வளவு எளிதாக இன்று தரிசிக்க முடியாது என்று உணர்ந்தேன்.
சித்தன் அருள்................ தொடரும்!
No comments:
Post a Comment