​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 27 November 2014

சித்தன் அருள் - 201 - விளையாட்டு சித்தர்!


"விளையாட்டு சித்தர் என்று இங்கு யாருமே இல்லை. நீங்கள் இடம் மாறி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டனர் அந்தச் சிறுவனின் பெற்றோர்.

"அய்யா, வெளியூரில் இருக்கும் தங்கள் மகனைத்தான் அந்த ஊரிலிருக்கும் எல்லோரும் "விளையாட்டு சித்தர்" என்று அழைகின்றனர். இது தங்களுக்கு தெரியாது போலும்!" என்று அவர்கள் பையனின் விவரத்தைச் சொல்லி, "எங்கள் வீட்டில், எல்லோருக்கும் ஒரு தீராத வியாதி பரம்பரை பரம்பரையாக உண்டு. எத்தனையோ வைத்தியர்களைச் சந்தித்து மருந்து வாங்கிச் சாப்பிட்டோம். முப்பது ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தோம்.  நேற்றைக்கு தங்கள் திருமகனது அருளால், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேர்களுடைய உடல் வியாதியும் நீங்கிவிட்டது. தங்கள் திருக்குமரன் ஒரு தெய்வீக சித்தன்" என்றனர்.

"எப்படி வியாதியைக் குணப்படுத்தினான். அவனுக்கு வியாதியைப் பற்றியோ, மருந்தைப் பற்றியோ ஒன்றும் தெரியாதே?" என்றார் அப்பையனின் தந்தை.

"நன்றாக சொன்னீர்கள், போங்கள்! அவன், என்ன செய்தான் தெரியுமா? ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்லி, எங்கள் குடும்பத்தினர் அனைவரின் மீதும் தண்ணீரைத் தெளித்தான், அவ்வளவுதான், எங்கள் உடலில் காணப்பட்ட "வெண்குஷ்டம்" அத்தனையும் அப்படியே விலகிவிட்டது" என்றார்கள் மிகுந்த சந்தோஷத்தோடு.

"அப்படியா? எங்களுக்கே இதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதே" என்றனர் அந்த விளையாட்டு சித்தரின் பெற்றோர்.

"இன்னொரு விஷயம் தெரியுமா? எங்களுக்கு இருந்த இந்த வெண்குஷ்டத்தைப் பற்றி, அந்த விளையாட்டுச் சித்தனிடம் நாங்கள் வாயைத் திறக்கவே இல்லை. ஆனால், அவனே இந்த வியாதியைப் பற்றி சொல்லி, அதை குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று இப்படிப்பட்ட அதிசயத்தை செய்து காட்டினான்" என்று சொல்லி, அவர்கள் அனைவரும் தங்கள் கை, கால்களைக் காட்டினர்.

அந்தப் பையனின் பெற்றோருக்கு ஒன்றுமே புரியவில்லை.

வந்திருந்தவர்களிடம் "இந்த காணிக்கை எல்லாம் எங்களுக்கு எதற்கு? அந்தப் பையனிடமே கொடுத்து விடலாமே, இவ்வளவு சிரமப்பட்டு இங்கு வந்திருக்க வேண்டாமே" என்றனர் சிறுவனின் பெற்றோர்கள்.

"இது எங்களது அன்பு காணிக்கை. பையனிடம் கொடுக்க முயன்றோம். அவன்தான் இதை எல்லாம் என் பெற்றோருக்கு காணிக்கையாகக் கொடுங்கள் என்று கட்டளை இட்டான். அந்த விளையாட்டு சித்தரின் கட்டளையை, மீறமுடியவில்லை. அதனால்தான் நாங்கள் இங்கே வந்தோம்" என்றனர்.

இரண்டு நாள் கழிந்திருக்கும்.

ஒரு பெரிய கும்பல், பக்தி பரவசத்தோடு விளையாட்டுச் சித்தரின் பெற்றோரைத் தேடி வீட்டிற்கு வந்தது.

"என்ன?" என்று கேட்டார்கள் அவனது பெற்றோர்கள்.

"எங்கள் ஊரில் காலரா வியாதி பரவியிருந்தது.  இரண்டு குழந்தைகள், ஒரு வயதான பெரியவர் உட்பட மூன்று பேர் இறந்துவிட்டனர். இதைக் கண்டு நாங்கள் அனைவரும் தங்கள் திருமைந்தனான விளையாட்டுச் சித்தரை நோக்கி ஓடி வந்தோம்.

அவர், ஒரு பானை நிறைய தண்ணீரில் ஏதேதோ மந்திரம் சொல்லி ஆசிர்வதித்துத் தந்தார். அந்தப் பானைத் தண்ணீரில் பாதியை எங்களூர் குளத்தில் கொட்டிவிட்டு, பாக்கி பானைத் தண்ணீரை வியாதியால் பீடிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு சொட்டு குடிக்கச் சொன்னார்.

அவ்வளவுதான், காலரா வியாதியால் பீடிக்கப்பட்ட அத்தனை பேர்களும் சட்டென்று எழுந்து நின்றனர். அவர்களில் பாதிபேர், இன்னும் சில மணிநேரம் கூட உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற நிலை. அவர்களும் பிழைத்துக் கொண்டனர்.

எங்கள் கிராமத்தின் உயிர் காத்த உங்கள் அருமை மகன் விளையாட்டுச் சித்தருக்காக நன்றி சொல்லவே நாங்கள் இங்கு வந்தோம்" என்று ஆனந்தமாகச் சொன்னபோது, யாருக்கும் கிடைக்காத பேற்றினை தாங்கள் பெற்றதாக எண்ணி, அந்த விளையாட்டுச் சித்தரின் பெற்றோர் பெருமைப் பட்டனர்.

அவர்கள் சென்ற பின்பு, தங்களுக்கும் தங்களது மகனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த கிராமத்திற்குப் புறப்பட்டனர். ஆனால் ஏகப்பட்ட இடையூறுகள் ஏற்பட்டது.

அவர்களால் தங்கள் மகனை காண செல்ல முடியவில்லை. மனம் நொந்து பழையபடியே வீட்டிற்க்கே திரும்பினர்.
ஊருக்கெல்லாம் நல்லது செய்யும் தங்கள் மகன், தங்களையும் எவ்வித இடையூறும் இல்லாமல் அழைத்துச் செல்லாமல் நடுவழியில், பரிதவிக்க விட்டுவிட்டானே? இதென்ன நியாயம், என்று அவன் மீது வெறுப்பு கொண்டனர்.

மறுபடியும் அவர்கள் அருகிலுள்ள சிலரின் துணையோடு மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்ற போது, நடுவழியில் மாடு இறந்து போனது.

"சகுனம் நன்றாக இல்லை என்று எண்ணுவதா, இல்லை தங்களைச் சந்திக்க தங்கள் மகன் விளையாட்டுச் சித்தன் விரும்பவில்லை என்று எண்ணுவதா? இல்லை தங்களுக்கும் தங்கள் மகனுக்கும் இனிமேல் எந்தவித பாசமும் இருக்கக்கூடாது என்பதற்காக இறைவன் நடத்துகிற நாடகமாக்?" என்று கலங்கினர்.

"எதற்காக தடங்கல் ஏற்படுகிறது? நன்றாக ஓடிக் கொண்டிருந்த மாடு சட்டென்று நடுவழியில் இறப்பானேன்" என்று நினைத்து  சிவாலயத்திற்குச் சென்று மனமுருக வேண்டினர்.

முன்பொரு சமயம் குளத்தங்கரையில் சந்தித்து, அவர்களது தற்கொலையைத் தவிர்த்த அதே பெரியவர் சட்டென்று அங்கு வந்தார்.

அவரைக் கண்டதும், அவர்களுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. அவரது காலில் விழுந்து கொட்டித் தீர்த்தனர்.

"உன் பிள்ளையைப் பார்க்க நீ எதற்குப் போகவேண்டும். இன்னும் நான்கு நாளில் சித்ரா பௌர்ணமி வருகிறது. அந்த பௌர்ணமி அன்று அவன் இங்கு மேளதாளத்தோடு பூர்ண கும்பத்தோடு மரியாதையாக அழைத்து வரப்படுவான்.

அவன் ஒரு சித்தன். இளவயதிலேயே இப்படி ஒரு சித்தத்தன்மை அடைவது கடினம். முப்பிறவியில் அவன் செய்த புண்ணியம்தான் அதற்குக் காரணம்" என்றார் புன்முறுவலோடு.

சித்தன் அருள்............... தொடரும்!

3 comments:

  1. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete