​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 27 November 2014

சித்தன் அருள் - 201 - விளையாட்டு சித்தர்!


"விளையாட்டு சித்தர் என்று இங்கு யாருமே இல்லை. நீங்கள் இடம் மாறி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டனர் அந்தச் சிறுவனின் பெற்றோர்.

"அய்யா, வெளியூரில் இருக்கும் தங்கள் மகனைத்தான் அந்த ஊரிலிருக்கும் எல்லோரும் "விளையாட்டு சித்தர்" என்று அழைகின்றனர். இது தங்களுக்கு தெரியாது போலும்!" என்று அவர்கள் பையனின் விவரத்தைச் சொல்லி, "எங்கள் வீட்டில், எல்லோருக்கும் ஒரு தீராத வியாதி பரம்பரை பரம்பரையாக உண்டு. எத்தனையோ வைத்தியர்களைச் சந்தித்து மருந்து வாங்கிச் சாப்பிட்டோம். முப்பது ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தோம்.  நேற்றைக்கு தங்கள் திருமகனது அருளால், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேர்களுடைய உடல் வியாதியும் நீங்கிவிட்டது. தங்கள் திருக்குமரன் ஒரு தெய்வீக சித்தன்" என்றனர்.

"எப்படி வியாதியைக் குணப்படுத்தினான். அவனுக்கு வியாதியைப் பற்றியோ, மருந்தைப் பற்றியோ ஒன்றும் தெரியாதே?" என்றார் அப்பையனின் தந்தை.

"நன்றாக சொன்னீர்கள், போங்கள்! அவன், என்ன செய்தான் தெரியுமா? ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்லி, எங்கள் குடும்பத்தினர் அனைவரின் மீதும் தண்ணீரைத் தெளித்தான், அவ்வளவுதான், எங்கள் உடலில் காணப்பட்ட "வெண்குஷ்டம்" அத்தனையும் அப்படியே விலகிவிட்டது" என்றார்கள் மிகுந்த சந்தோஷத்தோடு.

"அப்படியா? எங்களுக்கே இதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதே" என்றனர் அந்த விளையாட்டு சித்தரின் பெற்றோர்.

"இன்னொரு விஷயம் தெரியுமா? எங்களுக்கு இருந்த இந்த வெண்குஷ்டத்தைப் பற்றி, அந்த விளையாட்டுச் சித்தனிடம் நாங்கள் வாயைத் திறக்கவே இல்லை. ஆனால், அவனே இந்த வியாதியைப் பற்றி சொல்லி, அதை குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று இப்படிப்பட்ட அதிசயத்தை செய்து காட்டினான்" என்று சொல்லி, அவர்கள் அனைவரும் தங்கள் கை, கால்களைக் காட்டினர்.

அந்தப் பையனின் பெற்றோருக்கு ஒன்றுமே புரியவில்லை.

வந்திருந்தவர்களிடம் "இந்த காணிக்கை எல்லாம் எங்களுக்கு எதற்கு? அந்தப் பையனிடமே கொடுத்து விடலாமே, இவ்வளவு சிரமப்பட்டு இங்கு வந்திருக்க வேண்டாமே" என்றனர் சிறுவனின் பெற்றோர்கள்.

"இது எங்களது அன்பு காணிக்கை. பையனிடம் கொடுக்க முயன்றோம். அவன்தான் இதை எல்லாம் என் பெற்றோருக்கு காணிக்கையாகக் கொடுங்கள் என்று கட்டளை இட்டான். அந்த விளையாட்டு சித்தரின் கட்டளையை, மீறமுடியவில்லை. அதனால்தான் நாங்கள் இங்கே வந்தோம்" என்றனர்.

இரண்டு நாள் கழிந்திருக்கும்.

ஒரு பெரிய கும்பல், பக்தி பரவசத்தோடு விளையாட்டுச் சித்தரின் பெற்றோரைத் தேடி வீட்டிற்கு வந்தது.

"என்ன?" என்று கேட்டார்கள் அவனது பெற்றோர்கள்.

"எங்கள் ஊரில் காலரா வியாதி பரவியிருந்தது.  இரண்டு குழந்தைகள், ஒரு வயதான பெரியவர் உட்பட மூன்று பேர் இறந்துவிட்டனர். இதைக் கண்டு நாங்கள் அனைவரும் தங்கள் திருமைந்தனான விளையாட்டுச் சித்தரை நோக்கி ஓடி வந்தோம்.

அவர், ஒரு பானை நிறைய தண்ணீரில் ஏதேதோ மந்திரம் சொல்லி ஆசிர்வதித்துத் தந்தார். அந்தப் பானைத் தண்ணீரில் பாதியை எங்களூர் குளத்தில் கொட்டிவிட்டு, பாக்கி பானைத் தண்ணீரை வியாதியால் பீடிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு சொட்டு குடிக்கச் சொன்னார்.

அவ்வளவுதான், காலரா வியாதியால் பீடிக்கப்பட்ட அத்தனை பேர்களும் சட்டென்று எழுந்து நின்றனர். அவர்களில் பாதிபேர், இன்னும் சில மணிநேரம் கூட உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற நிலை. அவர்களும் பிழைத்துக் கொண்டனர்.

எங்கள் கிராமத்தின் உயிர் காத்த உங்கள் அருமை மகன் விளையாட்டுச் சித்தருக்காக நன்றி சொல்லவே நாங்கள் இங்கு வந்தோம்" என்று ஆனந்தமாகச் சொன்னபோது, யாருக்கும் கிடைக்காத பேற்றினை தாங்கள் பெற்றதாக எண்ணி, அந்த விளையாட்டுச் சித்தரின் பெற்றோர் பெருமைப் பட்டனர்.

அவர்கள் சென்ற பின்பு, தங்களுக்கும் தங்களது மகனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த கிராமத்திற்குப் புறப்பட்டனர். ஆனால் ஏகப்பட்ட இடையூறுகள் ஏற்பட்டது.

அவர்களால் தங்கள் மகனை காண செல்ல முடியவில்லை. மனம் நொந்து பழையபடியே வீட்டிற்க்கே திரும்பினர்.
ஊருக்கெல்லாம் நல்லது செய்யும் தங்கள் மகன், தங்களையும் எவ்வித இடையூறும் இல்லாமல் அழைத்துச் செல்லாமல் நடுவழியில், பரிதவிக்க விட்டுவிட்டானே? இதென்ன நியாயம், என்று அவன் மீது வெறுப்பு கொண்டனர்.

மறுபடியும் அவர்கள் அருகிலுள்ள சிலரின் துணையோடு மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்ற போது, நடுவழியில் மாடு இறந்து போனது.

"சகுனம் நன்றாக இல்லை என்று எண்ணுவதா, இல்லை தங்களைச் சந்திக்க தங்கள் மகன் விளையாட்டுச் சித்தன் விரும்பவில்லை என்று எண்ணுவதா? இல்லை தங்களுக்கும் தங்கள் மகனுக்கும் இனிமேல் எந்தவித பாசமும் இருக்கக்கூடாது என்பதற்காக இறைவன் நடத்துகிற நாடகமாக்?" என்று கலங்கினர்.

"எதற்காக தடங்கல் ஏற்படுகிறது? நன்றாக ஓடிக் கொண்டிருந்த மாடு சட்டென்று நடுவழியில் இறப்பானேன்" என்று நினைத்து  சிவாலயத்திற்குச் சென்று மனமுருக வேண்டினர்.

முன்பொரு சமயம் குளத்தங்கரையில் சந்தித்து, அவர்களது தற்கொலையைத் தவிர்த்த அதே பெரியவர் சட்டென்று அங்கு வந்தார்.

அவரைக் கண்டதும், அவர்களுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. அவரது காலில் விழுந்து கொட்டித் தீர்த்தனர்.

"உன் பிள்ளையைப் பார்க்க நீ எதற்குப் போகவேண்டும். இன்னும் நான்கு நாளில் சித்ரா பௌர்ணமி வருகிறது. அந்த பௌர்ணமி அன்று அவன் இங்கு மேளதாளத்தோடு பூர்ண கும்பத்தோடு மரியாதையாக அழைத்து வரப்படுவான்.

அவன் ஒரு சித்தன். இளவயதிலேயே இப்படி ஒரு சித்தத்தன்மை அடைவது கடினம். முப்பிறவியில் அவன் செய்த புண்ணியம்தான் அதற்குக் காரணம்" என்றார் புன்முறுவலோடு.

சித்தன் அருள்............... தொடரும்!

Monday, 24 November 2014

786


வணக்கம்!

அந்தநாள், இந்த வருடம் (04/11/2014) - கோடகநல்லூர் அனுபவ பதிவில் அடியவர்களுக்கு பச்சை வண்ணப் பெருமாள் அருளிய பல விஷயங்களில் ஒன்று "786" என்கிற எண் கொண்ட ரூபாய் நோட்டு. அந்த பதிவை வாசித்த அன்பர்கள், நிறைய பேர், "786" என்கிற எண்ணின் மகத்துவத்தை விளக்குமாறு கேட்டிருந்தனர். அதனால் இந்த தொகுப்பு.

ஒரு சிறு அதிசய தகவல் கிடைத்தாலும், அதை ஆராய்ச்சி செய்து அதன் மகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வது, என் பிறவிக்குணம். அப்படி ஒருநாள் ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த குழுவில் ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்த நண்பரும் இருந்தார். விவாதிக்கப் படுகிற விஷயங்கள் போகிற போக்கை பார்த்து, அதில் என் வரையில் வாதித்த தன்மையை கண்டு பின்னர், என்னை தனியே அழைத்து சென்று ஒரு விஷயத்தை விளக்கினார்.

"786" என்பது எங்கள் மதம் இறைவனுக்கு, கவனிக்கவும், இறைவனுக்கு அளித்த பட்டம் என்று சொல்லலாம். அந்த எண்ணை  இறைவனாக பாவித்து வழிபட்டால், இறை அருள் வேண்டிய அளவுக்கு, ஏன் அதற்கும் மேலேயே கிடைக்கும் என்பதை நாங்கள்  அனுபவபூர்வமாக உணர்துள்ளோம். இதை வேண்டிய விஷயத்தில், வேண்டிய படி உபயோகித்துக் கொள்ளுங்களேன். உண்மையில் இதன் ரகசியத்தை எங்களுக்கு, வெளியிட அனுமதி இல்லை. இருப்பினும், சற்று முன் உங்கள் பேச்சில் இருந்த தெளிவை கண்டு இதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். மிக புனிதமான இறை வழிபாட்டுக்கு, எங்கள் மதத்தில் ஒரு குறிப்பிட்ட ஓதும் முறை உண்டு. அதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு குறிப்பிட எண்ணை கொடுத்து கூட்டி நோக்கினால், அதன் மதிப்பு 786 வரும். இந்த எண் எங்கிருந்தாலும், உதாரணமாக, ரூபாய் நோட்டு, வண்டி எண், வீடு, பொருட்கள், வங்கி கணக்கு எண் போன்றவற்றில் இருந்தால், அது இறை அருள் என்று நினைத்து வருபவருக்கு, அதன் வழியே வளர்ச்சி அருளப்படும். மேலும் மேலும் வாழ்க்கையில் வளர முடியும். இதை எதில் வேண்டுமானாலும் கண்டு அனுபவத்தால் உணருங்கள்" என்றார்.

அடடா! இப்படி ஒரு கணக்கு இருக்கிறதா! நம்பிக்கை தானே வாழ்க்கையின் அடித்தளம். அதில் இறையை சேர்த்து மேன்மேலும் வளரலாமே! ஏன், நாம் முயற்சி செய்யக் கூடாது? பின்னர் பலருக்கும் உதவலாமே, என்றெல்லாம் எண்ணம் தோன்ற, இதை செயல் படுத்துவோம் என்று தீர்மானித்தேன்.

என் நண்பர் ஒருவர் வங்கியில் காஷியர் ஆக வேலை பார்க்கிறார். அவரிடம் எனக்கு "786"ல் முடிவு பெறுகிற ஒரு நோட்டு வேண்டும் என்று கூறினேன். 

ஏன்? எதற்கு என்று கேட்டவரிடம், நான் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறினேன்.

இரண்டே நாட்களில் "786" என்கிற எண்ணில் முடிகிற ஒரு 5 ரூபாய் நோட்டை கொண்டு தந்தார்.

யோசித்து பார்த்த பொழுது, அதை பெற்றுக் கொண்ட நேரம் மிகத் தெளிவாக இருந்தது. உண்மையாகவே அதை இறைவனுக்கு சமமாக எண்ணி என் பையில் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்தேன். பின்னர் மறந்து போனேன்.

அதை தொடர்ந்து வந்த நாட்களில், என்னிடம் நிறையவே பணம் புழங்கத் தொடங்கியது. கடன் வாங்கி சென்றவர்கள், திரும்பி வராத பணம் எல்லாம் வசூல் ஆகத் தொடங்கியது. எப்பொழுது கூட்டிப் பார்த்தாலும் மொத்தம் 500 ரூபாய் இருக்கிற என் பையில் அதுமுதல், 5000 முதல் 10000 ரூபாய் வரை இருக்கும். 

அட! இது நன்றாக இருக்கிறதே. சரி இரண்டாம் கட்ட பரிசோதனை செய்வோம் என்று காத்திருந்தேன். அதற்குள், இரண்டாவதாக "786" எண்ணுடன் ஒரு 10 ரூபாய் நோட்டை நண்பர் கொண்டு தந்தார்.

அது வந்த இரண்டாவது நாள், ஒரு நண்பர் வந்து, அவர் கட்டிக்கொண்டிருக்கிற வீட்டை முடிக்க வேண்டுமானால் இன்னும் ஒரு 50000 ரூபாய் வேண்டும், இனி எங்கும் கடன் வாங்குகிற/கிடைக்கிற வழியே இல்லை. ஏதாவது உதவி பண்ண முடியுமா? என்றார்.

"அய்யா! என்னிடம் அவ்வளவு காசு இல்லை! ஒரு விஷயம் தருகிறேன். அதை உங்கள் வீட்டில் கொண்டு வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இறைவன் அருளினால், ஒரே மாதத்திற்குள் நீங்கள் வீட்டை கட்டி முடித்து, கிரகப்ரவேசம் செய்துவிடலாம்" என்று கூறி முதலில் கிடைத்த 5 ரூபாய் நோட்டை கொடுத்து பூசை அறையில் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.

14 நாட்களுக்குள் தேவையானதைவிட மேலாக பணம் கிடைத்து, 21வது நாளில் கிரகபிரவேசம் செய்து குடி போனது, என்னை ஆச்சரியப் பட வைத்தது. 

ஹ்ம்ம்! இரண்டாவது சோதனையிலும், தெளிவான பதில் கிடைத்தாயிற்று. ஒரு முறை கூட சோதித்துப் பார்க்கிறேன் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். இறைவன் கொண்டு தந்ததோ மூன்று சூழ்நிலைகளை.


  1. முதல் பெண்ணிற்கு கல்யாணம் நடத்தி ஒரு வருடத்திற்குள் இரண்டாவது பெண்ணிற்கு கல்யாணம் உடனே நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கடைநிலை ஊழியர் ஒருவர் பணம் இன்றி தவித்தார். அன்று தான் வங்கியில் சென்று எடுத்து கொண்டு வந்த பணத்தில் இருந்த "786" எண் பதித்த ஒரு 100 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்து வீட்டில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். அவரும் என்னிடமிருந்து நம்பிக்கையுடன் வாங்கி சென்றார். ஒரு வாரத்திற்குள் எதிர் பார்த்ததை விட அதிகமான பணம் வந்து சேர்ந்து, தன் இரண்டாவது மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று முடித்துவிட்டார். இன்று அவர்கள் அமைதியாக சந்தோஷமாக வாழ்கின்றனர். அவர் அந்த நோட்டை இன்றும் பூசை அறையில் வைத்து வழிபாடு செய்து வருவதாக கூறினார்.
  2. நிறைய பணம் சொத்து இருந்தும், தன் மகளின் திருமணம் நடக்காமலே இருந்த ஒருவர், தன் மனக்குறையை கூற, "786" எண் கொண்ட ஒரு நோட்டை அவரிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னேன். இரு வாரத்தில் கல்யாணம் நிச்சயமாகி, ஒரு மாதத்திற்குள் திருமணம் நடந்தது.
  3. படித்துவிட்டு பலவருடங்கள் வேலை கிடைக்காமல் இருந்த ஒருவரின் மகனுக்கு, இதே போல் "786" எண் கொண்ட நோட்டை கொடுக்க, அவனுக்கு வேலை கிடைத்து, இன்று குடும்பம் அமைந்து, நல்லபடியாக வாழ்க்கை நடத்துகிறான்.

இது இருந்தால், இறை என்று நம்பினால், பலவித நல்ல விஷயங்களை நம்மை சுற்றி நடத்திக் கொடுக்கும் என்று தெளிவு பெற்ற நான், அன்று முதல் அப்படிப்பட்ட எண் பதித்த நோட்டை பலருக்கும் கொடுப்பதற்காக சேகரிக்க தொடங்கினேன். பலருக்கும் கொடுத்தேன். கிடைத்தவர்கள், தங்களுக்கு பல விஷயங்களிலும் நினைத்தது போல் நடந்தது என்று கூறினார்.

இந்த வருட கோடகநல்லூர் பெருமாளின் சிறந்த தினத்தை கொண்டாட தீர்மானித்த பொழுது, ஒரு வேண்டுதலை வைத்தேன். அன்று அங்கு வரும் அடியவர்களுக்கு நீங்கள் அருளுவதின் கூட, அடியேன் அனைவருக்கும் "786" பதித்த நோட்டை, உங்கள் பாதத்தில் வைத்து பூசை செய்தபின் கொடுக்க விரும்புகிறேன். அந்த எண்ணம் ஈடேற அருள வேண்டும் என்றேன்.

"நீ கொடுப்பது புதிய நோட்டாக இருக்கட்டும்" என்று "786"இல் தொடங்குகிற ஒரு பத்து ரூபாய் கட்டு கிடைக்க வழி செய்தார். அது கையில் கிடைத்தவுடன் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆம் அன்று வரை ஒரு நோட்டு இல்லை 5 நோட்டு வரை கிடைத்து கொண்டிருந்த என்னிடம், 100 நோட்டு கொண்ட ஒரு கட்டு கிடைத்தால்! அது அவர் அருள் தான், இப்பொழுதே தொடங்கிவிட்டது, அன்றைய தினம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று சொல்லாமல் சொல்கிறார் என்று உணர்ந்து, அதை அப்படியே பூசை அறையில் வைத்திருந்து, அன்றைய தினம் அங்கு கொண்டு சென்று, அவர் பாதத்தில் வைத்து, அனைவருக்கும் கொடுத்தேன், இலவசமாக. அவர் அருளுடன். இனி கிடைத்தவர்கள் யாரேனும், தனக்கு நடந்த ஒரு நல்ல விஷயத்தை சித்தன் அருளிலோ, திரு கார்த்திகேயனிடமோ தெரிவித்தால், அதை அறிந்து சந்தோஷப் படுகிற ஒரு வாய்ப்பு மட்டும் தான் எனக்கு உண்டு.

"786" என்பது இறைவன் என்றால் "786786" என்கிற எண் கொண்ட நோட்டு "சிவசக்தி" அல்லது "சங்கரநாராயணன்" ரூபமாகிவிடும் என்கிற எண்ணம் எனக்குள் வந்தது. அப்படிப்பட்ட ஒரு நோட்டு 10 லட்சத்தில் ஒன்று, மிக அரிதாகத்தான் நம்மிடம் வர வாய்ப்பு உண்டு. ஒரு நாள் பூசையில், அது எனக்கு வேண்டும், அதை வைத்து பலருக்கும் நல்லது செய்ய வேண்டும் என 4 வருடங்களுக்கு முன் இறைவனிடம் வேண்டிக்கொண்டு, மறந்து விட்டேன். ஒரு வருடத்திற்கு முன், திடீரென அந்த வேண்டுதல் ஞாபகம் வர, "என்ன அய்யா! என்ன ஆயிற்று? வேண்டுதலை கொடுத்தேனே. இதுவரை நீங்கள் அருளவே இல்லையே" என்று மறுபடியும் ஞாபகப்படுத்தினேன்.

"பொறுத்திரு! நேரம் வந்துவிட்டது!" என்று பதில் வந்தது. சும்மா சொல்லக் கூடாது, வாங்குபவனின் நல்ல நேரத்தையும் தொடர்புபடுத்தித்தான் யாரிடம் என்ன போய் சேர வேண்டும் என்று தீர்மானிப்பார்கள் பெரியவர்கள். மூன்றாவது நாள், அதுவும் ஒரு 100 ரூபாய் நோட்டு வடிவத்தில் வந்து சேர்ந்தது. இன்றும் அதை பத்திரமாக பூசை அறையில், இறைவன் பாதத்தில் வைத்திருக்கிறேன். அதன் வழிதான் எல்லோருடைய அனைத்து பிரார்த்தனைகளையும், இன்றும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறேன். அதன் படத்தை மேலே தந்திருக்கிறேன்.

இப்பொழுது, இத்தனையும் படித்த உங்களுக்கு "786" எண்ணின் மகத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒன்றை நினைவில் கொள்ளவும். இது அகத்தியப் பெருமான் நமக்கென அருளியது.

"அருள் வேண்டுபவர்கள், அருள் பெற்றவர்கள், அவரவர் தன் கடமையையும் உணரவேண்டும், அதன் படி நடக்கவும் வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த அருள் நிலைத்து நிற்கும். அல்லாதவர்களுக்கு அருள் உடனே விலகிவிடும். பின்னர் வாழ்க்கை மொத்தமும் கானல் நீர்தான்."

எல்லோரும் சரியாக உணர்ந்து, அவர் அருளை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். நமக்கு கிடைத்த அருள், நமக்கெனே மட்டும் அல்லாமல், பிறருக்கும் (முகமறியாதவர்களுக்கும்) உதவியாக இருந்தால், அதுவே அகத்தியப் பெருமான் நம் போன்ற மனிதர்களிடம் எதிர்பார்க்கும் வாழ்க்கைப் பாதை.

இதை பற்றி எழுத அனுமதி அளித்த அகத்தியப் பெருமானுக்கும், அவரது வலைப்பூ "சித்தன் அருளுக்கும்", தொகுப்பாளர் என் நண்பர் திரு.கார்த்திகேயனுக்கும், வாசித்து உணரப்போகிற அகத்தியர் அடியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு,

நமஸ்காரம்!

Thursday, 20 November 2014

சித்தன் அருள் - 200 - விளையாட்டு சித்தர்!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தியர் சித்தருக்கு நமஸ்காரம்!

அகத்தியப் பெருமானின் அருளால், இத்தனை வருடங்களாக (நான்கு வருடங்கள்) "சித்தன் அருள்" வலைப்பூ" நம்மிடை வந்து, இன்று "சித்தன் அருள் தொகுப்பு" 200வது இலக்கத்தை தொட்டுள்ளது. இதன் பெருமை, வளர்ச்சி அனைத்தும் அகத்தியரைதான் சேரும். அவர் அருள் இன்றி இது நடந்திருக்குமா என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. இந்த இனிய தருணத்தில், இத்தனை விஷயங்களை மிக கனிவுடன், பெருந்தன்மையுடன் பகிர்ந்து கொண்ட என் இனிய நண்பருக்கும், இந்த வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, ஊக்கப்படுத்திய அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். இன்னும் சில விஷயங்களை மனம் திறந்து உண்மையை உங்கள் முன் உரைக்க வேண்டும் என்று ஓர் அவா இருக்கிறது. அதற்கான நேரம் வரவேண்டும். அது ஒரு முடிவுரையாக வரும். ஆரம்பமாகியது எதுவும், என்றேனும் ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். அதுதான் இயற்க்கை நியதி. அகத்தியர் அருளுவது வரை இந்த சித்தன் அருள் தொடரும் என்று கூறிக்கொண்டு............. இந்த வார சித்தன் அருளுக்கு செல்வோம், வாருங்கள்!


அந்த சிறுவனுக்கு எவ்வளவுதான் படிப்பினை சொல்லிக் கொடுத்தாலும் படிப்பு வரவில்லை.

பணம், தண்ணீர் போல் சிலவழிந்தது தான் மிச்சம். சகலவிதமான குருகுலங்களில் அவனைச் சேர்த்துப் பார்த்தாலும், அந்த சிறுவன் விளையாட்டுப் புத்திக் கொண்டு காணப்பட்டானே தவிர, படிப்பில் முழுகவனமும் இருக்கவில்லை.

அதோடு மட்டுமின்றி, எல்லா குருமார்களும், அந்த சிறுவனது சேஷ்டைகளைக் கண்டு, அவனது பெற்றோரை திட்டினர். இப்படி ஒரு பிள்ளையை பெற்று விட்டதற்காக நீங்கள் வெட்கப்பட்டு தலை குனியணும் என்று திட்டவும் செய்தனர்.

இதனால் மனமுடைந்து போன அந்த சிறுவனின் பெற்றோர்கள் அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டனர்.

இதை அறிந்த அந்தச் சிறுவன், "நீங்கள் ஏன் வெளியூர் போகவேண்டும்?  என்னால் தானே உங்களுக்கு இந்த கஷ்டம். நானே வெளியூர் போகிறேன். என்னால் யாரும் துன்பப்படவேண்டாம்" என்று சொன்னான்.

இதைக் கேட்டதும் அந்தச் சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து போனார்கள். பையனை சமாதானப் படுத்திப் பார்த்தார்கள்.

எதையும் விளையாட்டுத் தனமாக எடுத்துக் கொள்ளும் தங்கள் பையன், இன்றைக்கு வித்தியாசமாக பேசுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

தங்களை விட்டு பையன் எங்கேயும் சென்று விடக் கூடாதே என்பதற்காக அவனை விட்டு பிரியாமல் கண்ணிமைபோல் காத்ததோடு, அருகிலுள்ள சிவாலயத்திர்க்குச் சென்று இறைவனை மனமுருகப் பிரார்த்தனை செய்தனர்.

அன்றிரவு, படுக்கையில் படுத்திருந்த பிள்ளை காணாமல் போனவுடன், துடி துடித்துப் போனார்கள்.

எங்கு போயிருப்பானோ, என்ன ஆகியிருக்குமோ என்று பயந்து நடுங்கினர்.

பையனை காணாமல் போனதால், நள்ளிரவு முதலே தேட ஆரம்பித்தனர், எங்கு தேடியும் பையனை கிடைக்கவில்லை.

பையன் இல்லாத தாங்கள் இனி உயிர் வாழ வேண்டிய அவசியமில்லை என்று முடிவெடுத்து, சிவன் கோவிலில் உள்ள குளத்தில் குதித்து இறக்க முடிவு செய்தனர்.

சிவன் கோவில் குளத்தருகே வந்த பொழுது, அவர்களை தடுத்து நிறுத்திய ஒரு முதியவர், "ஏன் இந்த தவறான முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் பிள்ளை ஒரு தெய்வீக குழந்தை. பிற்காலத்தில் மிகப் பெரிய சித்தனாக வரப்போகிறான், அவனால் உங்களுக்கு பெயரும், புகழும் வரப் போகிறது. எனவே, தவறான முடிவை கை விட்டுவிட்டு, வீடு போய் சேருங்கள், காணாமல் போன உங்கள் மகன் விரைவில் வீடு தேடி வருவான்!" என்று அசரீரி வாக்கு போல் கொடுத்தார்.

அந்த பெரியவர் கண்ணில் காணப் பட்ட ஒளியும், உடம்பில் கண்ட தேஜஸும், மிகப் பெரிய முனிவர் போல் தோன்றிற்று.

அந்தப் பெரியவருக்கு எப்படி தங்களது தற்கொலை முயற்சி தெரிந்தது என்ற ஆச்சரியம் தாங்காமல், அந்தப் பையனின் பெற்றோர்கள், அவரை வணங்கியபடி மீண்டும் தங்கள் இல்லத்திற்கு திரும்பினர்.

பதினைந்து நாட்கள் கழிந்திருக்கும்.

வெளியூரிலிருந்து வந்த இருவர் நேராக அந்தப் பையனின் இல்லத்திற்கு வந்து, "நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்! உங்களது பிள்ளை சில அற்புதங்களைச் செய்து காட்டுகிறான். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எங்கள் மகனை, பாடியே விபூதி கொடுத்து உயிர் பிழைக்க வைத்தான். அவனிடம் விவரம் கேட்டு, தங்கள் முகவரியைப் பெற்று உங்களுக்கு நன்றி சொல்லி, எங்களது அன்புக் காணிக்கையை அளித்துப் போகவே நாங்கள் இங்கு வந்தோம்" என்று மிகவும் ஆனந்தப் பட்டு, அவர்களின் காலில் விழுந்து வணங்கி காணிக்கையை அளித்துவிட்டு போனார்கள்.

அந்தப் பையனின் பெற்றோர்களுக்கு இதை கேட்க ஆனந்தமாக இருந்தது.

ஆனாலும் ஒரு வருத்தம்.

இப்படிப்பட்ட திறமை கொண்ட அவன், உள்ளூரிலேயே இருந்து அதிசயங்களைச் செய்து காட்டியிருக்கலாமே என்பது தான் அது!

சரி! எது நடந்தாலும், அது இறைவன் செயல். அன்றைக்கு அந்தப் பெரியவர் சொன்னதுபோல் பையன் வீட்டிற்கு வந்தால் போதும், என்று மனதை தேற்றிக் கொண்டனர்.

மறுநாள் விடியற்காலை வேளை!

நான்குபேர் ஒரு மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலிருந்தது. கொண்டு வந்த வெள்ளித்தட்டில் புடவை, வேஷ்டி, தங்க நாணயங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அந்தப் பையனின் தந்தையிடம் வந்து, "விளையாட்டுச் சித்தர் வீடு இதுதானே?" என்று கேட்டனர்.

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 13 November 2014

சித்தன் அருள் - 199 - சித்தனாக மனிதப் பிறவி ஒன்றே போதும்!


கொல்லிமலையில் உள்ள ஒரு பங்களாவில், கோடை காலத்தில் ஓய்வெடுக்க வந்திருந்தார் ஒரு வெள்ளைக்கார அதிகாரி. இங்கிலாந்து நாட்டில் பிறந்த அவருக்கு என்னவோ லண்டன் நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. உயர்ந்த பதவி கிடைத்ததால், குடும்பம் மூட்டை முடிச்சோடு இந்தியாவுக்கு வந்தார். பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, கொல்லி மலையை தேர்ந்தெடுத்தார்.

பல்வேறு முக்கியமான பொறுப்புகள் வெளியூரில் இருந்ததால், அவர் பணியின் நிமித்தம், வெளியூரில் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. இருந்தாலும், கொல்லிமலை மீது ஒரு பங்களாவைக் கட்டி, கோடிக்கு மாத்திரம் குடும்பத்தோடு வந்து தங்கி, சில நாட்கள் உல்லாசமாக பொழுதைக் கழித்துவிட்டு, மறுபடியும் பணி நிமித்தம் காரணமாக கீழே இறங்கி விடுவார்.

பொதுவாக இரக்க குணம், நாலு பேருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நன்நோக்கும் அவருக்கு உண்டு. இந்திய மக்களை மிகக் கேவலமாக நினைத்துக் கொண்டிருந்த அவரின் மேலதிகாரிகள் சிலர், அவர் இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்தனர்.

தெய்வீக நம்பிக்கை கொண்ட அவருக்கு தனது அதிகாரிகள் செய்கின்ற மாற்றாந்தாய் போக்கு பிடிக்கவில்லை. எனவே, மன நிம்மதியை இழந்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் அவரின் மேலதிகாரி, ஒரு இந்திய மகனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். உண்மையில் அந்த நபர் குற்றவாளி அல்ல என்பது அவருக்கு தெரியும்.

அந்த நபர் சிறு சிறு குற்றங்களை செய்திருந்தது உண்மை. அதற்காக இப்படியொரு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டாம் என்று அவர் தனது குறிப்பை எழுதி மேலிடத்திற்கு அனுப்பினார்.

அது, மேலிடத்து அதிகாரிக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

"நீ வெள்ளைகாரனாக பிறந்திருந்தும், நன்றி இல்லை, உன்னை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குகிறேன்" என்று உத்தரவு போட்டார்.

இதைக் கண்டு அவர் கலங்கவில்லை. அடுத்த நிமிடம் கொல்லிமலைக்கு தன குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றார். அங்குதான் அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

கொல்லிமலையின் அழகை கண்டு இயற்கையின் செழிப்பில் தன்னை மறந்து நின்று கொண்டிருக்கும் பொழுது வடுகச் சித்தர் அவர் முன் தோன்றினார்.

அவருக்கு ஓரளவுக்கு சித்தர்களைப் பற்றித் தெரியும், ஆனால், இதுவரை அவர்களை நேரில் கண்டதில்லை. தன் முன் வந்திருப்பது வடுகச் சித்தர் என்பதும் அவருக்கு தெரியாது. இருப்பினும் அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

"யார் நீங்கள்?"

"நான் ஒரு வழிப்போக்கன். தனியாக நின்று கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று பார்க்கவே வந்தேன்" என்றார் வடுகச் சித்தர் ஆங்கிலத்தில்.

மிக அற்புதமாக வெள்ளைக்காரர்களுக்கே உரிய உச்சரிப்பு நடையோடு வடுகச் சித்தர், அவரிடம் பேசியது, அவருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

"நீ கவலைப்படாதே! உன்னை சஸ்பெண்ட் செய்த ஆர்டர் இப்போது விலக்கிக்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல, உனக்கு மிகப் பெரிய பதவிக்கும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது" என்றார் வடுகச் சித்தர்.

இதை கேட்டதும் ஆச்சரியம் அடைந்த அவர்,

"எப்படி உங்களுக்கு நான்  சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரியும்?" என்றார்.

"எல்லாம் ஒரு யூகம் தான் என்று நான் சொல்ல மாட்டேன். நீ இறை பக்தி கொண்டவன். முன் ஜென்மத்தில் இதே கொல்லிமலையில், சித்தனான எனக்கு தொண்டு செய்தவன். நியாயத்திற்கு பாடுபடும் உனக்கு, இப்படிப்பட்ட சோதனைகள் வரத்தான் செய்யும். இப்போது பார், ஆச்சரியமான தகவல் உன்னை தேடி வரும்" என்று சொன்ன வடுகச் சித்தர் அடுத்த நிமிடம் "ஜில்"லென்று காற்றில் பறந்து கீழ் நோக்கிப் போனார்.

பத்து நிமிடம் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரிவர்? இவர் பெயர் என்ன? இதென்ன உண்மையா? அல்லது பொய்யா? தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி சொன்னதோடு, தான் சஸ்பெண்ட் ஆனது பற்றியெல்லாம் புட்டு புட்டு வைக்கிறாரே. இவர் தெய்வமா, யட்சினியா அல்லது சித்தரா? எல்லாமே அருகில் இருந்து பார்த்தது போல் பேசுகிறாரே. இதென்ன ஆச்சரியம் என்று தன்னை மறந்து வியந்து கொண்டே இருந்தார்.

அவர் நின்ற இடம் மலை உச்சியில் ஒரு பாறையின் மீது.

காலையில் எதுவும் சப்பிடாததினாலும், சித்தர் தன் முன் திடீரென்று தோன்றி நிறைய விஷயங்களை சொல்லி ஆச்சரியப் பட வைத்ததாலும் அப்படியே மயங்கி விழுந்தார் அவர்.

அவர் பாறையில் இருந்து மயங்கி விழுந்ததால், நிலை தடுமாறி அருகிலுள்ள சிறு பள்ளத்தில் போய் விழுந்தார். சற்று தள்ளி உருண்டிருந்தால், ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்து, ஒன்றும் இல்லாமல் போயிருப்பார்.

அவர் மயங்கி விழுந்த பொழுது, யாரோ ஒருவர் அவரைத் தாங்கி கீழே படுக்க வைத்ததுபோல் ஓர் உணர்வு தோன்றியது.  அவர் கண் விழித்துப் பார்த்த பொழுது, ஒரு மரத்தடியில் புல் வெளியில் படுத்திருப்பது தெரிய வந்தது. அவருக்கு எதிரில் சற்று முன்பு தோன்றிய அதே வடுகச் சித்தர் கவலையோடு அமர்ந்திருப்பது தெரிந்தது.

"என்ன காரியம் செய்தீர்கள் துரை அவர்களே! நல்லவேளை நான் வந்து கைதூக்கி காப்பாற்றவிட்டால், இந்நேரம் அகண்ட பாதாளத்தில் போய் விழுந்திருப்பீர்கள்!" என்றார் வடுகச் சித்தர்.

இறைவனுக்கும், உங்களுக்கு நன்றி! என்றார் அவர்.

என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது.  ஏதோ ஒன்று நடக்கிறது. அது நன்மையா, கெடுதலா என்றும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மெதுவாக எழுந்திருக்க முயன்றார்.

"உங்களால், இப்பொழுது எழுந்திருக்க முடியாது. சிறிது நேரம் இங்கே ஓய்வெடுங்கள். பிறகு மேலே செல்லாலாம், என்றவர் அவரை தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றார். பின்பு காணவே இல்லை.

வடுகச் சித்தர் தடவிக் கொடுத்ததும், அவருக்கு ஏதோ ஒரு புது ரத்தம் பாய்ந்ததுபோல் தோன்றியது.

அடுத்த ஐந்தாவது நிமிடம், அந்த சிறு பள்ளத்திலிருந்து விறுவிறுப்பாக நடந்து மலை உச்சிக்கு ஏறினார்.

'இதற்குள், காலையில் மலை உச்சிக்கு சென்ற அவர் இன்னும் வீட்டிற்குத் திரும்பவே இல்லை என்ற கவலையால் அவர் வீட்டார் அவரைத் தேடி அங்கு வந்தனர். 

சஸ்பெண்ட் ஆனதால் மனம் நொந்து போய் அவர் ஒருவேளை தற்கொலைக்கு முயன்றிருப்பாரோ என்ற சந்தேகம் கூட அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்டிருந்தது.

அவர் அப்படிப்பட்டவர் அல்ல. தெய்வத்தை முழமையாக நம்புகிறவர் என்பதால், ஒரளவு தைரியம் கொண்டிருந்தாள் அவரது மனைவி. இருந்தாலும் ஏசுநாதர் முன்பு பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தாள்.

எப்படியோ, அவரை கண்டுபிடித்து, அவரது உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அவர்களிடம், நடந்ததை எல்லாம் சொன்னார். ஆனால் பாதி பேர் நம்பவில்லை. ஏதோ கற்பனை செய்து இப்படி எல்லாம் பேசுகிறார் என்றார்கள்.

இன்னும் சிலரோ, சஸ்பெண்ட் ஆனதால், புத்தி பேதலித்துவிட்டது என்று பைத்தியக்கார பட்டம் சூட்டினார்கள். இதையும் தாண்டி உள்ளூர் நபர் ஒருவர், காலை வேளையில் அங்கு பேய்கள் நடமாடும். அதுதான் அவரை இவ்வளவு பாடு படுத்தியிருக்கிறது, என்றார்.

ஆனால் அவரோ, இதை லட்சியம் செய்யவில்லை. அவரது கைகள் வடுகச் சித்தரை நோக்கி கும்பிட்டுக் கொண்டிருந்தது.

காலை மணி பதினொன்று இருக்கும்.

கொல்லிமலை பங்களாவான அவர் வீட்டின் முன் ஒரு அரசாங்க வாகனம் ஒன்று வந்தது.

அவரின் அலுவகத்தில் உள்ள ஒரு உயர்ந்த அதிகாரி காரிலிருந்து சந்தோஷமாக இறங்கினார்.

இவ்வளவு பெரிய அதிகாரி, தன்னை தேடி தன் வீட்டிற்கு வருவார் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆச்சரியப்பட்டு மனம் திறந்து அவரை வரவேற்றார்.

"வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. ஒரு நல்ல உயிரை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றி இருக்கிறீர்கள். தங்களது மேலதிகாரி, என்னுடைய கீழதிகாரியான அவன் அவசரப் பட்டு தவறு செய்துவிட்டான். எனவே, அவனை லண்டனுக்கே திரும்பி போகச் சொல்லிவிட்டோம்.

உங்களுக்கு உயர் பதவியை அளிக்க முன் வந்திருக்கிறோம். சஸ்பெண்ட் உத்தரவையும் ரத்து செய்துவிட்டோம். இன்றைக்கே நீங்கள் அந்தப் பதவி பொறுப்பை ஏற்க வேண்டும். நடந்துவிட்ட தவறுக்கு வருந்துகிறோம்", என்று அவரின் கையை குலுக்கி பாராட்டு தெரிவித்து, உயர் பதவிக்கான உத்தரவு, சஸ்பெண்ட் விலக்கப்பட்ட உத்தரவையும் கொடுத்தார்.

அவருக்கு ஏற்ப்பட்ட சந்தோசம் கொஞ்ச நஞ்சமல்ல. இதே செய்தியை முன்கூட்டியே வடுகச் சித்தரே நேரில் சொல்லிவிட்டாரே என்ற புளங்காகிதம் ஏற்ப்பட்டது.

முன்ஜென்மத்தில் கொல்லிமலையில் வடுகச் சித்தருக்கு தொண்டு செய்து வந்ததால் தனக்கு இப்போது அந்த வடுகச் சித்தரே நேரில் வந்து சில அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார். தனக்கு பதவி பெரியதல்ல, ஆன்மாதான் பெரியாது. அதை விடப் பெரியது வடுகச் சித்தரின் அன்பும் வாழ்த்தும் என்று முடிவெடுத்து, அவர் தன் வாழ்நாள் முழுவதையும் வடுகச் சித்தருக்காக அர்ப்பணித்தார்.

பலருடைய உதவிகளை கொண்டு தான் சந்தித்த வடுகச்சித்தரின் உருவத்தை கற்சிலையாக வடித்து, கொல்லிமலையில் உள்ள தன் பங்களா வீட்டில் வைத்து பூசைகள் நடத்தினார்.

வடுகச் சித்தரும் அடிக்கடி அவருக்கு காட்சி கொடுத்து, அருள் உரை வழங்கி, நூற்றி நாற்பது வருடம் வாழ வைக்க காய கல்பம் கொடுத்தார்.

வடுகச்சித்தர் அடிப்பொடி என்று தன்பெயரை பின்பு மாற்றிக் கொண்டு நிறைய தானம், தருமம், மருத்துவ உதவி செய்து, ஒரு வித்யாசமான மனிதராக சித்தரின் பாதங்களுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டார் அவர்.

அவரின் மறைவுக்குப் பின், கொல்லிமலையில் இருந்த பங்களா இடம் மாற்றப்பட்டது. இப்போதும் அங்கு வடுகச் சித்தர் வந்து போய் கொண்டிருக்கிறார்.

சித்தன் அருள்................. தொடரும்!

Monday, 10 November 2014

"வேல் மாறல்" தொகுப்பு!

[வள்ளிமலை திருப்புகழ் திரு சச்சிதானந்தா சுவாமிகள்]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் இயற்றிய "வேல் மாறல்" என்கிற பதிகத்தைப் பற்றி ஒரு வாரத்துக்கு முன் சித்தன் அருளில் பதிவு செய்திருந்தேன். சென்னையில் வசிக்கும் திரு ஸ்ரீதரன் என்பவர் தன்னிடம் இருந்த ஒரு புத்தகத்தை கொடுக்க, அதே ஊரில் வசிக்கும் திரு மணிகண்டன் என்பவர் அதை pdf தொகுப்பாக மாற்றி, சித்தன் அருள் அடியவர்களுக்காக அனுப்பித் தந்துள்ளார். அதை கீழே உள்ள தொடுப்பில் தொடர்ந்து சென்று எடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

தினமும் ஒருமுறை இதை பாராயணம் செய்து வருபவர்களுக்கு, என்றென்றும் முருகப் பெருமானின் அருளும், வேலின் பாதுகாப்பும் கிடைப்பது உறுதி.

எல்லோரும் நலம் பெற்று இன்பமாய் வாழ வேண்டிக் கொண்டு,

கார்த்திகேயன் 

வேல் மாறல் தொகுப்பு! பக்கம் திறந்ததும் அதன் மேல் ஒரு டவுன்லோட் என்கிற பட்டன் இருக்கும். அதில் கிளிக் பண்ணி உங்கள் கம்ப்யூட்டர்க்கு டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். 

Saturday, 8 November 2014

அடியவர்கள் ஒன்றுகூடி அருள் பெற்ற கோடகநல்லூர் - 04/11/2014 - 3

கோடகநல்லூர் அனுபவம் தொடர்கிறது!



தலைமுதல் கால்வரை பூக்களால் அலங்காரம் செய்துகொண்டு பெருமாள் நிற்பதை கண்டதும் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது என்பதே உண்மை. அடடா! நாம் அவர் பாதத்தில் இருக்கும் ஒரு சின்ன பூவாக  இருந்திருக்கலாம், என்று தோன்றியது.

பெருமாளுக்கு, நிவேதனம் செய்விக்கப்பட்டது. பின்னர், அர்ச்சகர், பெருமாளுக்கு தீபாராதனை காட்டிய பின், தேசிகர் சுவாமிக்கு அவர் சன்னதியில் தீபாராதனை காட்டினார். அதன் பின்னர் நேராக வெளியில் அமர்ந்திருக்கும், கருடாழ்வாருக்கு தீபாராதனை காண்பிக்கப் பட்டது. பெருமாளுக்கு தமிழில் சாற்றுமுறை சொல்லப்பட்டது. எல்லோர் கவனமும், பெருமாள் மீது இருக்க, மறுபடியும் தீபாராதனை காட்டி அர்ச்சகர் பக்தர்களுக்கு அளித்தார். பின்னர் துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. அபிஷேகம் ஏற்பாடு செய்திருந்ததால், பெருமாளின் சார்பாக எதிர் மரியாதை செய்வார்கள், கோவிலில். என்னை அழைத்தார்கள். நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து, அதை, அன்றைய தினம் கூட உதவியாக இருந்து நடத்திக் கொடுத்த ஒரு வயதான பெரியவருக்கு செய்யச் சொன்னேன். அவரும் வாங்கிக் கொண்டார்.

ஏதாவது மரியாதை வாங்கித்தான் ஆகவேண்டும் என்று அர்ச்சகர் நிர்பந்திக்க, சரி என்று சொன்னேன். அவர் தேசிகர் சன்னதியிலிருந்து பூ மாலை எடுத்து வந்து கழுத்தில் போடப் போனார். அதை தடுத்து நிறுத்தி, கையில் வாங்கிக் கொண்டேன். குருவின் அருளும் கிடைத்துவிட்டது என்று தோன்றியது. திரும்பி பெருமாளை பார்க்க ஜகஜோதியாக புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தார்.

இதற்கிடையில், இரண்டு வில்லையும், 10 ரூபாய் கட்டையும் பூசாரி உள்ளிருந்து துளசி பிரசாதத்துடன் கொண்டு வந்தார். பணத்தை நான் வாங்கிக் கொண்டேன். முதல் ரூபாயை எடுத்து பெருமாள் கையில் கொடுக்கச் சொன்னேன். அதன்படியே அர்ச்சகரும், பெருமாள் கையில் அதை வைத்தார். பின்னர் நரசிம்ஹர் வில்லை, திரு மணிகண்டன் என்கிற என் நண்பர், தம்பதி சமேதராக உள்வந்து நின்று வாங்கிக் கொண்டார். கிருஷ்ணர் வில்லை திரு ஸ்ரீதரன் என்பவர் அர்ச்சகரிடமிருந்து பெற்றுக் கொண்டார். அப்பாடா! ஒரு வழியாக பெருமாள் பாதத்தில் வைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டியதை பச்சைவண்ணன் நடத்திக் கொடுத்துவிட்டார் என்று திருப்தி அடைந்தேன். 

இனி நடக்க வேண்டிய விஷயங்களுக்குதான் நிறைய நண்பர்களின் உதவி தேவை என்று தோன்றியது. சென்னையிலிருந்து வந்த திரு மணிகண்டன் என்கிற அம்பாள் கோவில் பூசாரி, 500 பேப்பர் கப் கொண்டு வந்திருந்தார். வெளியே மண்டபத்தில் நான்கு வகை பிரசாதத்தையும் வைத்து, அவர்கள் நான்கு பேரை கொண்டு, அனைத்து பக்தர்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தேன். ஐந்தாவதாக, என் நண்பர் திரு மணிகண்டனை நிறுத்தி, அவர் கையில் அந்த ரூபாய் கட்டை கொடுத்து 

"ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு, பெரியவர்களுக்கு மட்டும் இதை கொடுங்கள் என்றேன். யாருக்கும் "786" என்கிற எண்ணின் மகத்துவம் புரியவில்லை. என் நண்பர்களுக்கு தெரியும். அதனால் இந்த ரூபாய் பெருமாள் கையிலிருந்து உங்களுக்கு பரிசு, பத்திரமாக வீட்டில் பூசை அறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி கொடுக்கச் சொன்னேன். அவரும் அதன் படியே செய்தார்.

உண்மையிலேயே அன்று அங்கு வந்திருந்த பக்தர்களை, அடியவர்களை ரொம்பவும் மெச்சத்தான் வேண்டும். அனைவரும் அமைதியாக நீண்ட வரிசையில் நின்று, பொறுமையாக தன் முறை வரும் பொழுது சென்று பிரசாதம் வாங்கி, பணத்தையும் பெற்றுக் கொண்டு சென்றார்கள். ஒரு சிறு துளி சத்தம், கூச்சல், குழப்பம், உந்துதல் எதுவுமே இல்லை.   எல்லோர் மனதிலும், முகத்திலும் அமைதியும், திருப்தியும் இருந்ததை உணர முடிந்தது. அகத்தியப் பெருமானும், தெய்வங்களும், முனிவர்களும், எல்லோரையும் அன்று நன்றாக ஆசிர்வதித்தார்கள் என்று ஒவ்வொருவரின் முகமும் காட்டிக் கொடுத்தது.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில், இறை அருளும், சித்தர்கள் அருளும் நிறையவே கிடைத்ததை உணர்ந்துள்ளேன். பெருமைக்காக சொல்லவில்லை. பல அறிய விஷயங்கள், பொருட்கள் நிறையவே கிடைத்துள்ளது. அப்படி கிடைக்கும் பொழுதெல்லாம், அதை மற்றவர்களுடன், அவர்கள் நலனுக்காக பங்கு போட்டு கொடுப்பது என் இயல்பு. கிடைத்ததை சேர்த்துவைத்து, சரியான தருணத்தில் முடிந்த அளவுக்கு நிறைய பேருக்கு கொடுக்க வேண்டும் என்று என் வசம் வைத்திருந்ததுதான், 
  1. க்ரௌஞ்சகிரி முருகர் கோவில் பிரசாதம். இதைப்பற்றி சற்று விளக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்பொழுது அதன் மகத்துவம்  புரியும். இந்த கோவில், கர்நாடக மாநிலத்தில், செண்டூர் என்றழைக்கப்படும் ஒரு கிராமத்துக்கு அருகிலுள்ள மலை மேல் உள்ளது. மலைமேல் சென்று அடைவது என்பது சற்று சரமம் தான். ஏன் என்றால் எங்கும் ஒரே சகதிக்காடு, முட்டுவரை இருக்கும். வண்டியில் தான் செல்ல வேண்டும். அந்த மலை மேல் முருகர் இருக்கும் பொழுது, பார்வதி தாயானவள், முருகருக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்று தீர்மானித்து பெண் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள். முருகரிடம் கேட்டபொழுது, முடியாது என்று மறுத்துவிட வாக்குவாதம் வந்துள்ளது. தாயையே வேண்டாம் என்று கூறிவிட, அப்படியானால் நான் கொடுத்த தாய்பால்தானே உன் உடலில் உள்ளது அது மட்டும் உனக்கு எதற்கு என்று அம்மா கேட்க்க, அதுவும் தேவை இல்லை என்று அத்தனை பாலையும் முருகர் கக்கி  விடுகிறார்.அது மிகப் பெரிய  குன்றாக வளர்ந்து உள்ளது. அந்த குன்றிலிருந்து சிறு சிறு கற்களாக வெட்டி எடுத்து, அம்பாள் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருப்பார்கள். யார் போய் கேட்டாலும் எடுத்துக்  கொள்ள அனுமதிப்பார்கள். நான் 4 கட்டிகளை எடுத்து கொண்டு வந்து எல்லோருக்கும் சாப்பிட கொடுத்தேன். அதில் கொஞ்சம் மிச்சம் இருந்தது.அதை, 04/11/2014 அன்று அகத்தியர் உத்தரவால் கோடகநல்லூர் வந்து செல்கிற அடியவர்களுக்கு (நான் பார்க்க முடிந்த பக்தர்கள்) அவர்கள் விருப்ப பட்டால் கொடுக்கலாம் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன். கேட்டவர்கள் எல்லோருக்கும், ஒரு சிறு துளி அளவு சாப்பிட கொடுக்க முடிந்தது. அனைவரும், சாப்பிட்டபின் முதலில் விபூதி வாசனையும் பின்னர் சற்று நேரம் கழிந்த பின் பால் வாசனையும் வருவதாக சொன்னார்கள். நான் உணர்ந்ததை உண்டவர்கள் உணர்ந்தது, அவர்களுக்கும் முருகனின் அருள் உள்ளது என்று உணர்ந்தேன்.
  2. ஓதியப்பர் பிறந்த நாள் அன்று, ஒதிமலையில் அபிஷேகம் செய்த எண்ணை என்னிடம் கொஞ்சம் இருந்தது. அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணை சேர்த்து ஒரு பாட்டில் அளவு கொண்டு போயிருந்தேன். அதையும் விதிக்கப்பட்ட அனைவரும் வாங்கி சென்றனர். இந்த எண்ணையின் மகத்துவம் பற்றி ஏற்கனவே "சித்தன் அருளில்" இந்த வருட பிறந்தநாள் தொகுப்பில் சொல்லப்பட்டுள்ளது.
  3. அதன் பிறகு, என்னிடம் இருந்த பழனிமலை தண்டாயுதபாணியின் மார்பில் சார்த்திய சந்தானம் கொஞ்சம் இருந்தது. அதையும் ஒரு 15 பேர் வந்து வாங்கி சென்றனர்.
இவை அனைத்தையும் கொடுக்க முடிகிற சூழ்நிலையை உருவாக்கி தாருங்கள் பெருமாளே, எல்லோர் மனதிலயும் அன்று திருப்தியை விதையுங்கள், எல்லோரும் ஷேமமாக வந்து உங்கள் தரிசனம், அருள் பெற்று செல்ல வேண்டும், உங்கள் பிரசாதம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோருடைய பாபத்தையும் தாமிரபரணி ஸ்நானம் அன்று துடைத்து களைந்திட வேண்டும், இனியேனும் எல்லோரும் நலமாக வாழ, சித்தர்கள் அருள், வழி நடத்தல் கிடைத்திட அருள வேண்டும், என்ற வேண்டுதல்களை எல்லாம்...................................

அன்றைய தினம் கோடகநல்லூரில் இறைவனும், சித்தர்களும் அருளியதை கண்ணாரக் கண்டுகளிக்கிற ஒரு பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. இதை அங்கேயே உணர்ந்தவர்கள் எத்தனை பேர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், உணர விட்டுப் போனவர்கள் இனி வரும் நாட்களில் அவர்கள் வாழ்க்கையில் வருகிற நல்ல திருப்பு முனைகளை அடையும் பொழுது உணருவார்கள்.

அனைத்தையும் முன் தகவலாக தந்த திரு கார்த்திகேயனுக்கும், "சித்தன் அருள்" வலைப்பூவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு,

எல்லோரும் ஷேமமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.

வணக்கம்.

பின் குறிப்பு:- தட்டச்சு பிழைகளை மன்னித்தருள வேண்டும்!

Friday, 7 November 2014

அடியவர்கள் ஒன்றுகூடி அருள் பெற்ற கோடகநல்லூர் - 04/11/2014 - 2

கோடகநல்லூர் அனுபவம் தொடர்கிறது.

எதையுமே, இறைவன், சித்தர்கள் அருள் இருந்தால்தான் வெற்றிகரமாக முடிக்க முடியும். என்னதான், நம் முயற்சி இருந்தாலும், முழுமை பெறுவது அவர்கள் அருளால்தான். இதை அன்று நான் பிரத்யட்சமாக உணர்ந்தேன்.

கோவிலின் முதல் வாசலை கடந்து உள்ளே சென்ற எனக்கு, அடியவர்களின் கூட்டம் திகைப்பை உண்டாக்கியது. கருடாழ்வார் சன்னதி வரை நின்று கொண்டிருந்தனர். முதலில் கருடாழ்வாரை வணங்கிவிட்டு, ஒரு பக்தரிடம்

"அய்யா! கொஞ்சம் விலகித்தந்தால், ஒரு நிமிடத்தில் சுவாமியை இங்கிருந்தே பார்த்துவிட்டு விலகி விடுகிறேனே" என்று கூறினேன். அவரும் அனுமதிக்க, சன்னதியை எட்டிப்பார்த்து, "பெருமாளே! இதோ வந்திருக்கு! இதனுடன் எல்லோரையும் ஆசிர்வதிக்கவேண்டும்! நிறைய கூட்டமாக உள்ளதால், நான் அப்புறம் உள்ளே வந்து தரிசிக்கிறேன்!" என்று கூறிவிட்டு ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றேன்.

அன்றைய தின தரிசனத்துக்கு வந்து சேர்ந்த நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து வணக்கம் சொன்னார்கள். கோவில் உள்ளே எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. உள்ளே போவதை பற்றி பின்னர் யோசிக்கலாம் என்று தீர்மானித்துவிட்டு, இன்று இங்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்ததெல்லாம் சரியாக எடுத்து விட்டோமா என்று மனதுள் கணக்கு போட்டேன்.

  1. மூன்று வித பிரசாதம் (சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம்) இவை பெருமாளுக்கு நிவேதனம் செய்துவிட்டு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும் என்று தீர்மானம். இது, 1800 வருடங்களுக்கு முன் எல்லா தெய்வங்களும் தங்கள் கைகளால் பிறருக்கு உணவு கொடுத்ததை ஞாபகப் படுத்துவதற்க்காக, பெருமாள் சார்பாக வேண்டும் என்கிற எண்ணம். அதற்கு, முன்நின்று ஏற்பாடு செய்தவர் வந்து "கூட்டம் ரொம்ப அதிகம். நாம் 9 படி (12 கிலோ) பிரசாதம் சொல்லியிருந்தோம். பிரசாதம் செய்தவர், கூட்டத்தை கண்டு, இது காணாது என்று 12 படி போட்டுள்ளார். என்ன செய்ய?" என்றார். "பெருமாள் ஏற்பாடு செய்கிறார். இருக்கட்டும்" என்றேன். "பஞ்சாமிர்தமும் பெருமாளுக்கு வேண்டி போட்டிருக்கு" என்றார். "சரி!" என்றேன்.
  2. பெருமாளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தாயாருக்கு புடவை பூமாலை போன்றவை வந்து சேர்ந்து உள்ளே சேர்த்தாயிற்று என்றார். "சரி!" என்றேன்.
  3. என் வரையில், அங்கு வந்து இருக்கும் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக, க்ரௌஞ்சகிரியில் முருகன் தன் தாயிடம் குடித்து கக்கின பால், ஒதிமலயில் ஓதியப்பருக்கு அபிஷேகம் செய்த எண்ணை, "786" எண் கொண்ட ஒரு 10 ரூபாய் கட்டு, பழனி நவபாஷாண முருகர் சந்தனம் இவை தயாராக இருந்தது.
  4. இரு நண்பர்களுக்காக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் சொல்லி வைத்து வாங்கிய "நரசிம்ஹர், கிருஷ்ணர் வில்லு" - பச்சை வண்ணன் பாதத்தில் வைத்து நேரடியாக அவர்களிடம் கொடுப்பதற்காக இருந்தது.
[பத்மநாப சுவாமி கோவில் "ஒண வில்லு"]

நினைத்த விஷயங்கள் எல்லாம் தயாராக இருக்கவே, ஓரிடத்தில் அமர்ந்து உள்ளே செல்லும் நேரத்துக்காக காத்திருந்தேன். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு வைதீக குழுவினர், உள்ளே மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தனர். வேறு எந்த தேவை இல்லாத சத்தமும் அந்த கோவிலில் இல்லை. மற்றவர்கள் மிக அமைதியாக இருந்தனர்.

அமைதியாக அமர்ந்திருக்கையில், ஒருவர் வந்து செய்தி சொன்னார்.

"நான் இன்று காலையிலேயே வந்துவிட்டேன். காலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து ஒரு 50 பேர் கொண்ட ஒரு குழு வந்து சென்றது. அவர்கள் நாடியில் பதஞ்சலி முனிவர் வந்து குறிப்பிட்டபடி இன்றையதினம் இங்கு வந்து, தாமிரபரணியில் 37 முறை கிழக்கு நோக்கி நின்று மூழ்கிவிட்டு, கணபதி, பிரம்மா, பெருமாள் போன்ற தெய்வங்களின் மந்திரங்களை குறிப்பிட்ட அளவுக்கு ஜெபித்துவிட்டு, பெருமாளை தரிசனம் செய்து, விளகேற்றிவிட்டு சென்றார்கள்" என்றார்.

"அட! சித்தன் அருளில் அகத்தியர் சொன்னபடி கணக்கு பண்ணி அவர் போட்டது சரியாகத்தான் இருக்கு என்பதற்கு இது ஒரு சாட்சி!" என்று நினைத்துக் கொண்டேன்.

மௌனமாக அமர்ந்திருக்கையில், ஒருவர் வந்து "நீங்கதான் சித்தன் அருள் கார்த்திகேயனா?" என்று கேள்வி கேட்டார்.

"இல்லை அய்யா! அது வேறு ஒருவர்" என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அன்று திரு கார்த்திகேயன் வந்திருந்தால் சரியாக மாட்டிக் கொண்டிருப்பார், அவர் ரொம்ப குடுத்து வெச்சவர், தப்பிச்சுட்டார்! என்று மனதுள் நினைத்துக் கொண்டேன்.

உள்ளே கலசம் வைத்து மந்திர உச்சாடனம் தொடங்கப்பட்டது. உற்சவ மூர்த்திக்குத்தான் அபிஷேகம், அலங்காரம் நிறைவு பெற்றிருந்தது. மூலவருக்கு கலசதீர்த்தம் காத்திருந்தது. கோமுகம் வழி அபிஷேக தீர்த்தம் எங்கேனும் வெளியே வழிகிறதா என்று கோவிலை சுற்றிப் பார்த்தேன். அப்போது ஒருவர் வந்து என்ன தேடுகிறீர்கள் என்றார். சொன்னேன்.

"அதெல்லாம் இங்க கிடைக்காது. அபிஷேக தீர்த்தம், நேரடியாக குழாய் பாதிக்கப்பட்டு ஆற்றில் விடப்பட்டுள்ளது. கோவிலில் அபிஷேக தீர்த்தத்தை வேண்டுமானால் பூசாரியிடம் தான் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

"அட! அப்படியானால், நாம் குளித்த நேரம் என்பது பெருமாளின் அபிஷேக தீர்ர்த்தம் தாமிரபரணியில் கலந்த நேரமா? அதனால் தானோ அகத்தியப் பெருமானும், இன்றும் தாமிரபரணி மிக சுத்தமாக இருக்கும் ஒரே இடம் "கோடகநல்லூர்" என்றாரோ" என மனதுள் வியந்தேன்.

அமர்ந்திருக்கும் பொழுது ஒரு எண்ணம் தோன்ற, இரு வில்லையும், 10 ரூபாய் கட்டையும் ஒருவரிடம் கொடுத்து அர்ச்சகரிடம் சேர்த்து பெருமாள் பாதத்தில் வைக்கச் சொன்னேன்.

இதற்கிடையில், உள்ளிருந்து ஒரு சிலர் வெளியே வந்து நிற்க, உள்ளே செல்ல அவகாசம் கிட்டியது. உள்ளே மெதுவாக நுழைந்து, பெருமாள் முன் நிற்க அவரது அலங்காரம் ஒரு தாக்கு தாக்கியது. தலை முதல் கால் வரை பூமாலை சார்த்தி பஞ்சகச்சம் உடுத்தி, திருமண் (அட்டிகை) சார்த்தி புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தார். என்னுள் மிகுந்த திருப்தி பரவியது. இதைத்தானே கேட்டாய், கிடைத்து விட்டதா? என்று கேட்பது போல் இருந்தது. 







[உற்சவ மூர்த்தியின், தேசிகர் சுவாமியின் அபிஷேக படங்கள்]

சித்தன் அருள்................ தொடரும்!

அடியவர்கள் ஒன்றுகூடி அருள் பெற்ற கோடகநல்லூர் - 04/11/2014 - 1

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் நமெக்கென தெரிவித்த அந்த புண்ணிய நாளில் கோடகநல்லூரில் பச்சை வண்ணப் பெருமானுக்கு 04/11/2014 அன்று நடந்த அபிஷேக பூசைகளையும், நிகழ்ச்சிகளையும், என் நண்பர் விவரிக்கிறார். அன்றைய தினம் அங்கு சென்று அருள் பெற்ற அடியவர்களுக்கும், அங்கு செல்ல முடியாமல் தவித்த அகத்தியர் அடியவர்களும், இந்த தொடரை வாசித்து  மகிழ்வுற வேண்டுகிறேன்.

கார்த்திகேயன்!  

[கோடகநல்லூரில் தாமிரபரணி நதிக்கரை] 



[பாபங்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்து தன் குழந்தைகளின் வாழ்க்கையை செம்மை படுத்தும் லோபாமுத்திரா என்கிற தாமிரபரணி நதி 04/11/2014 அன்று ஆனந்தமாக பிரவாகித்த நேரம்!
[புகைப்பட நன்றி:திரு ஸ்ரீதரன்]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்தன் அருள்" தொகுப்பில் முன்னரே கூறியிருந்தபடி இந்த வருடத்திய புண்ணிய தினமான 04/11/2014 (ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், த்ரயோதசி திதி) நேரத்தில், அங்கிருந்து பச்சை வண்ண பெருமாளின் தரிசனமும், அருளும் பெற வேண்டும் என்று தீர்மானித்தேன். தகவல் கிடைத்து போதிய அளவு நாள் இருந்ததால், நிறைய விஷயங்களை தீர்மானிக்கிற வாய்ப்பு கிடைத்தது.

புரட்டாசி மாதம் ஒரு சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் பெருமாள் கோவில் கருடசேர்வையை தரிசிக்க சென்ற பொழுது, "சித்தன் அருளில்" நவம்பர் 4ம் தியதியை பற்றி ஒருமுறை கூட எல்லோரையும் நினைவு படுத்த நண்பரிடம் வேண்டிக் கொண்டேன். அப்பொழுது, திரு கார்த்திகேயன் ஒரு வேண்டுதலை சமர்பித்தார். அதே நேரத்தில் அவர் அந்த நாளில் 4/11/2014 பங்கு பெற முடியாது எனவும், அன்றைய  பூசையை சிறப்பாக நடத்தி முடிக்கிற வேலையை என்னிடம் ஒப்படைத்தார். அவ்வளவுதான் நான் மாட்டிக் கொண்டேன். சரி! எல்லாவற்றையும் பெருமாள் அனுக்கிரகம் பண்ணுவார் என்று மனதில் திடமாக நினைத்து, அவரிடமே வரிசையாக நிறைய வேண்டுதல்களை வைத்தேன். என்னால் ஆவது எதுவும் இல்லை; எல்லாம் உங்கள் அருளால் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கீழே உள்ள விஷயங்களை பிரார்த்தனையாக சொன்னேன்.

  • அன்றைய தினம் உம்மை தரிசிக்க வருகின்ற அனைவருக்கும், நீங்கள் அருள் புரிந்து, வழி நடத்தி, மனதுள் திருப்தியை விதைக்க வேண்டும்.
  • வந்து செல்கிறவர்கள் அனைவரும், பத்திரமாக வந்து சென்று, வீடு சேரவேண்டும்.
  • எல்லோருக்கும் உங்கள் ஆசிர்வாதமும், தரிசனமும், பிரசாதமும் கிடைக்க வேண்டும்.
  • உங்களுக்கு செய்ய நினைக்கிற திருமஞ்சனமும் (அபிஷேகம்), பூசைகளும் மிகச் சிறப்பாக அமையவேண்டும்.
  • எல்லா தெய்வங்கள், சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், லோபாமுத்திரா சமேத அனைத்து நதிகளின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

இதற்காக என்னென்ன செய்ய வேண்டிவரும் என்று தனியாக அமர்ந்து, யோசித்த பொழுது, விரிவான ஒரு திட்டமிடல், நல்ல மனிதர்களின் ஆதரவு (உடல் உழைப்பு) கண்டிப்பாக தேவை என்று தோன்றியது. எல்லாவற்றையும் பெருமாள், அகத்தியர் பாதத்தில் சமர்பித்துவிட்டு, முதலில் பூசாரியிடம் பேசினேன். அன்றைய தினம் 9 மணிக்கு மேல் தான் மூன்றும் (திதி, நட்சத்திரம், மாதம்) இவை சேர்ந்து இருக்கிறது என்று கூறி, அபிஷேகத்தை 10 மணிக்கு வைத்துக் கொள்ள வேண்டினேன். அவரும் சம்மதித்தார். முதல் முயற்ச்சியே வெற்றி. இனி எல்லாம் இனிதே நடக்கும் என்று நினைத்து, ஊர் வந்து சேர்ந்தேன்.

பெருமாளுக்கு அன்றைய தினம் இவைகளை விமரிசையாக செய்திட யாரிடமும் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். எல்லா விஷயத்தையும் சொந்த சிலவிலேயே செய்து விடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் பெருமாள் வேறுவிதமாக நினைத்திருந்தார் என்பது பின்னர் தான் புரிந்தது.

சித்தன் அருளை தொடர்ந்து வரும் ஒரு சிலர் என் நண்பரை தொடர்பு கொண்டு, அவர் கை காட்டுதலின் பேரில் என்னை தொடர்பு கொண்டு, "நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறோமே" என்றனர்.

"என்ன இது! நிகழ்ச்சியின் மொத்த உருவமும் மாறுகிறதே!" என்று நினைத்து,

"நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள், யாருக்கு என்ன வேலை பச்சை வண்ணனும், அகத்தியரும் கொடுக்கிறாரோ, அதை ஏற்று செய்யுங்கள்" என்று கூறினேன்.

04/11/2014 - செவ்வாய்கிழமை - அந்தப் புண்ணிய நாளும் வந்தது. 

எனது ஊரிலிருந்து கோடகநல்லூர் குறைந்தது 6 மணி நேர பயணம். குறுக்கு வழியில் (shortcut) சென்றால் 4 மணிநேரத்தில் சென்று விடலாம். எப்படியேனும் 9 மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் காலை 5 மணிக்கு குடும்பம், உறவினர், நண்பர்கள் சூழ புறப்பட்டேன்.

போகும் வழியில், அகத்தியப் பெருமான் கோவிலில் இறங்கி அவரை தரிசனம் செய்து செல்லலாம் என்று உள்ளே நுழைந்தால், அங்கே அவருக்கு அப்பொழுதுதான் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அரை மணிநேரம் பொறுத்திருந்து, அவரின் முழு அபிஷேகமும் கண்டு பிரசாதமும் வாங்கி புறப்படும் பொழுதுதான் புரிந்தது, இன்று குருவும், முருகரும் நம் திட்டமிடலை தாமதப்படுத்தப் போகிறார்கள் என்று.

பலமுறை கோடகநல்லூர் சென்றிருக்கிறேன். தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து, உள்பாதை வழியாக சென்றால், நிறையவே தனிமை கிடைக்கும். அதை விரும்பி குறுக்கு வழியில் சேரன்மகாதேவி சென்றடைந்து, அங்கிருந்து "யூ" வடிவில் திரும்பினால் கோடகநல்லூர் சென்றடைந்துவிடலாம். செரன்மகாதேவிக்கு முன்பு, ஒரு 6 கிலோமீட்டர் தூரத்தில், கொழுந்து மலை அடிவாரத்தில், ஒரு முருகர் கோவில் உண்டு. இரண்டு முறை அந்த வழியாக போகும் பொழுது தரிசனம் செய்ய நினைத்து, கோவில் பூட்டியிருந்ததால், இந்த முறையும் மணி 10 ஆகிவிட்டதால், நடை சார்த்தியிருப்பார்கள் என்று நினைத்து, இருந்தாலும், கோவில் முன் சற்று நேரம் நின்று விட்டு செல்லலாம் என்று வண்டியை திருப்பி, பாதி தூரம் சென்றிருப்போம், முன்னாடி இருச்சகர வாகனத்தில் அந்த கோவில் பூசாரி, பூசைக்காக கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

"அட! நமக்கெல்லாம் இன்று யோகம் தான். பூசாரி இப்பொழுதுதான் வருகிறார். அதனால், ஓதியப்பரையும் (முருகரை இயல்பாகவே நான் அப்படித்தான் அழைப்பேன்) முதல் முறையாக பார்த்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்வோம்" என்றேன்.

மிக மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் கோவில். கோவிலுக்கு பின்னே வானுயர்ந்து நிற்கும் கொழுந்து மலை. மயில், குருவி, பறவைகளின் சப்தம் எப்பொழுதும் நிறைந்திருக்க, காற்று சன்னமாக நம்மை தழுவி செல்லும் சூழ்நிலை.

வண்டியை நிறுத்திவிட்டு வந்த பூசாரி, கோவில் வாசல் முன் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, கதவை திறந்து உள்ளே சென்றார்.






[கொழுந்து மலை முருகர் கோவில்]

நாங்களும் பின் தொடர்ந்தோம். மிகப் பழைய கோவில், பராமரிப்பின்றி, பழகிய வாசத்துடன் இருந்தது. ஒரே சன்னதி. 3 அடி உயர பாலசுப்ரமணியரின் உருவச்சிலை. மிக அழகாக, புன்னகைத்தபடி (அதில் ஏதோ ஒரு அர்த்தம் பொதிந்திருந்தது உண்மை) நின்று கொண்டிருந்தார்.

தரிசனம் ஆகிவிட்டது, இனி கிளம்பி விடலாம் என்றால், பூசாரி ஒரே உத்தரவில் நிற்க வைத்துவிட்டார்.

"இப்ப அபிஷேகம் முடித்துவிட்டு, தீபாராதனை காட்டி பிரசாதம் தருகிறேன். சற்று பொறுமையாக இருங்கள்" என்றார்.

"சரிதான்! குரு அரை மணி நேரம் பிடித்துப் போட்டார் என்றால், ஓதியப்பருமா? ஓதியப்பா! இது உனக்கே நல்லா இருக்கா? அங்க உன் மாமனுக்கு அபிஷேகம் ஏற்ப்பாடு செய்திருக்கிறோம்! இன்னிக்கு அவருடைய புண்ணிய நாள். இன்னிக்கு பார்த்து நீயும் பிடிச்சுப் போடறியே!" என்று வேண்டிக் கொண்டேன்.

கண் மூடி நின்ற பொழுது, "குருவின் அபிஷேகம் பார்த்தாயிற்று. என்னுடைய அபிஷேகமும் பார்த்துவிட்டு, பிறகு சென்றால் போதும்" என்று வாக்கு வந்தது.

ஒரு மணிநேரம் காத்திருந்து, முருகரின் அபிஷேகம், அலங்காரம், பூசை பார்த்து பிரசாதம் வாங்கிக் கொண்டு கோடகநல்லூர் சென்றடைந்ததும் மதியம் மணி 11 ஆகிவிட்டது.

கோடகநல்லூர் பச்சை வண்ணனுக்கு (உற்சவ மூர்த்தி) அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகிவிட்டது.

வேக வேகமாக சென்று தாமிரபரணியில் மூழ்கி ஸ்நானம் செய்தோம். எப்பொழுதும் தாமிரபரணி நதியில் மூழ்கி, நீருக்கு அடியில் பூமியில் அகத்தியர், லோபாமுத்திரா தாயை நினைத்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது வழக்கம். சமீபத்தில் பெய்த மழையால், நல்ல இழுவை இருந்தது. பல முறை, எத்தனை முயற்சி செய்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவிடாமல் நீர் இழுத்து சென்றது. இங்கும் குறுக்கு வழிதான் பிரயோகிக்க வேண்டும் போலிருக்கிறது என்று தீர்மானித்து, வேகமாக செங்குத்தாக நீரினுள் நுழைந்து, நெற்றி மண்ணில் படுகிற அளவுக்கு மூன்று முறை நமஸ்காரம் செய்துவிட்டு, கரை ஏறினோம்.

கரையில் அமர்ந்து ஜபம் செய்து, நெற்றியில் திருநீர் பூசி கோவிலை சென்றடைந்து, உள்ளே நுழைய எத்தனித்தால், வாசலில் தான் நிற்க வேண்டி வந்தது. அத்தனை கூட்டம். எங்கும் பக்தர்கள். சுவாமியை அவ்வளவு எளிதாக இன்று தரிசிக்க முடியாது என்று உணர்ந்தேன்.

சித்தன் அருள்................ தொடரும்!