அப்படிப்பட்ட சித்தத்தன்மை அடைகின்ற பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இந்த சித்தத் தன்மை இதுவரை சதுரகிரியில் கிடைத்ததில்லை. அதுதான் ஆச்சரியம். சதுரகிரியில் எத்தனையோ ஆச்சரியங்கள் நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நடக்கப் போகிறது. ஆனால் சித்தத்தன்மை அடையவேண்டும் என்று எல்லொருக்குமே ஆசை. எல்லோருக்குமே, உடனே சித்தனாக வேண்டும், நினைத்ததை சாதிக்கவேண்டும், தன்னை எல்லோருமே மதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது இயல்பு. தப்பில்லை. உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுவது தவறே கிடையாது. ஆசைப்பட்டால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். ஆசை படாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும். அதில் எப்படி என்றால், பாம்பு சீறவேண்டும் ஆனால் கடிக்ககூடாது. அது போல் ஆசை படவேண்டும், ஆனால் அதற்காக, மற்றவர்களை மன வருத்தப் படச் செய்யவோ, துன்புறுத்தவோ, அதையும் உடலாலோ, உள்ளத்தாலோ ஏற்படுத்தக் கூடாது. பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. பிறர் மனைவியைவஞ்சிக்ககூடாது. குழந்தைகளை திட்டக்கூடாது. யாரையும், எவரோ என்று தவறாக எண்ணிக்கொண்டு பேசக்கூடாது. அவர்கள், எல்லோருக்குமே சித்தத்தன்மை இருக்கும் என்று புரிந்து கொள்ளவேண்டும். அந்த தன்மையை உண்டாக்குகிற புனிதமான இடம், இந்த இடம் தான்., இதே நேரத்தில் தான்.
சற்று முன் சொன்னேனே, ஆங்கோர் புளியமரத்துக்கு அடியில், ஒரு 414 சித்தர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேனே, அத்தனை சித்தர்களும் இங்கு வந்து நம்பியை தொழுதுவிட்டு, நம்பிமலையை விட்டுச் செல்லாமல், ஆசையோடு, முக்கண்ணனையும் தரிசிக்கவேண்டும் என்று காத்திருப்பார்கள். ஆகவே சித்தர்கள் ஏன் தங்குகிறார்கள் தெரியுமா? அடிக்கடி முக்கண்ணன் இங்கு வந்து அளவளாவிவிட்டுச் செல்வதால், இங்கு வந்து முக்கண்ணனை தரிசித்துவிட்டுச் செல்லலாமே என்று தான், அந்த சித்தன் இட்டு, நட்ட மரம் தான் அந்த புளியமரமடா. சித்தன் அந்த மரத்துக்குள் இருக்கிறான். அந்த மரத்துக்குள் உயிராக இருக்கிறான், வேராக இருக்கிறான், ஆணிவேராக இருக்கிறான். அந்த புளிய மரமே சித்தனடா!
[நம்பிமலை - புளியமரம்]
அந்த விநாயக சித்தனுக்கும் அந்த புளிய மரத்துக்கும் சம்பந்தம் உண்டு. விநாயகன் என்பது கேது என்று ஏற்கனவே சொன்னேன். அவனிடம் படிக்க முடியாது என்பதால், அவன் சொன்னான். "ஏகுக இந்த மலையில். தங்குக இரவில்" என்று அசரீரி வாக்காக சொன்னான். அதுவரை அகத்தியன் கூட அவனை பார்த்து வியந்துகொண்டிருந்தேன். எத்தனை மலைகளை சுற்றி வந்திருக்கிறான் எத்தனை கட்டங்களை தாண்டி வந்திருக்கிறான். அத்தனையும் தாங்கும் இந்த தைரியத்தோடு அவன் அமர்ந்திருக்கிறான் என்று சொன்னால், முன் ஜென்மத்தில், மிகப் பெரிய சித்தனாக இருந்து, சிறந்த வழிகாட்டியாக இருந்து, தோளாக இருந்தவன் தான் இந்த தங்கராசு என்பவன். முன் ஜென்ம தொடர்பு இருந்ததால் தான் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுடைய பரிவு பெற்றுவிட்டால், கேதுவினுடைய பரிபூரண ஞானம் கிடைத்துவிடுகிறது. கேது என்பது ஞானகாரகன் என்று பெயர். அந்த ஞானம் அவனுக்கு இயல்பாகவே வந்துவிட்டது. வந்திருக்கிறான். அல்ல, குருவே அவனை நாடி வந்திருக்கிறான். அதுதாண்டா ஆச்சரியம். இப்படிப்பட்ட புனிதமான சம்பவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நடக்கத்தான் போகிறது. நான் சொன்னேனே, புளிய மரத்துக்கு கீழே இருக்கிற சித்தர்கள் எல்லாம் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளியே கிளம்புகிறார்கள் என்று. எதற்காக? உன்னை பயமுறுத்துவதற்காக அல்ல, சித்த லீலைகளை காட்டுவதற்காக அல்ல. இந்த மலையை சுற்றி ஒரு முறை வந்து சுவாசித்துவிட்டு இறங்கி விடுவார்கள். அந்த புனிதமான நாள் தான் இந்த நாள். அதை அன்றைக்கே, அப்பொழுதே சொல்லியிருக்க வேண்டும். ஏதோ ஞாபகத்தில், அகத்தியன் எங்கெங்கோ சென்றோ, உலகத்தை நோக்கியோ, கரும்குளத்தை நோக்கி சென்று விட்டேன் பார். அதுதான். அப்பொழுதுதான் சித்தர்கள் ஞாபகம் சற்று குறைந்துவிட்டது. இவர்கள் எல்லோருமே, அகத்தியனை வணங்குபவர்கள் தான். அவர்களும் இப்பொழுது வலம் வந்து இந்த நம்பியை தரிசனம் செய்துவிட்டு, ஆனந்தமாக செல்வார்கள். அவர்கள் தரிசனம் செய்து மூச்சு விடுவார்கள். அந்த மூச்சு விடுகின்ற தன்மை இங்கு பன்னீர் போலவே தெளிக்கும். அதில் பன்னீர் வாசனை அடிக்கும். அந்த வாசனைகள் மிக அற்புதமானவை. அதை யார் ஒருவன் உடல் தேகத்தில் பட்டு விட்டாலோ, அவனுக்கு எந்தவித குட்ட நோயோ கடைசி வரை, அவன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ வராது. இதெல்லாம் தெய்வ ரகசியங்களடா. அகத்தியனுக்கு என்னவோ மனதில் தோன்றிற்று, இன்று தான் சொல்லவேண்டும் என்று.
வட்டப் பாறையில் அமர்ந்து கொண்டு அன்றொருநாள், இதை எல்லாம் விளக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதையே, வட்டப்பாறையாக மாற்றிக் கொண்டேன். ஏன் என்றால், இந்த வட்டப்பாறைக்கு அங்குள்ள தங்கராசு அழகான விளக்கம் அதை சொன்னான். வட்டப்பாறையில் கடா வெட்டுவதாகச சொன்னான். அகத்தியன் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சொன்னேனே, ஞாபகம் இருக்கிறதா? வட்டப்பாறை என்பது பலிகளை கொடுக்கிற இடம்தான். அந்த வட்டப்பாறையில் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, வானில் வெண்ணிலா வட்டமாக சுற்றி வரும்பொழுதுதான் தென்றல் காற்றோடு அழகாக அமர்ந்து கொண்டு நானும் 17 சித்தர்களும் அமர்ந்திருக்க, மனித சித்தர்கள் எல்லாம் நேர் எதிரில் அமர்ந்திருக்க, நிறைய கேள்விகளை எல்லாம் உங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். இந்த மாதிரி அதிசய நிகழ்ச்சி 1540 ஆண்டுகளுக்கு முன் தான் நடக்கும் என்று சொன்னேன். அதற்கு முன்னோட்டமாக ஒத்திகை பார்க்கத்தான் உங்களை எல்லாம் வரவழைத்திருக்கிறேன். இது பற்றிய விவரம் பின்னால் நான் உரைப்பேன். அந்த வட்டப்பாறையை சொன்னது உண்மை. வட்டப் பாறையில் பலி கொடுப்பதெல்லாம் உண்மை. அங்கொரு மகா பத்திரகாளி இருந்தது உண்மை. அதயெல்லாம் கண்டு ஆனந்தப்பட்ட போதுதான், இங்குள்ள முக்கண்ணனும், நம்பி நாயகனும், மற்றவர்களும் சேர்ந்து, பொது மக்களை பயமுறுத்துவதற்காக இப்படி வேஷம் போடக்கூடாது. கொடிய வேஷம் போடக்கூடாது, சாந்தி, சாந்தி, சாந்தி என்று, அங்கு அற்புதமான ஒரு சந்தனத்தை, இந்திரனால் கொடுக்கப்பட்ட சந்தனத்தை, மூன்று நாட்கள் விடாமல் அரைத்து, அந்த இடத்தில் ஒட்டி வைத்த பிறகு, அந்த பத்திரகாளி சாந்தியானாள். இன்றைக்கும் அந்த பத்திரகாளிதான், இந்த காட்டிலே, அவ்வப்போது எந்த கெடுதலும் ஏற்படாமல், உலா வந்து கொண்டிருக்கிறாள். அவள் உலா வரும் போது, யாருமே, அவள் எதிரில் இருக்ககூடாது. யார் எந்த மனித உடலும் படக்கூடாது. அந்த நாளில், நான் சத்தியம் வாங்கியிருக்கிறேன். இங்கு எந்த மனிதர்களும் அங்கு தங்க மாட்டார்கள். யாருமே இங்கு தங்கமாட்டார்கள். எந்த மனித உயிர் பலிகளும் இங்கு கிடையாது. ஆனாலும் மனிதர்கள் செய்கின்ற பலி உண்டடா. தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக, சில தேவை இல்லாத தவறுகளை எல்லாம் செய்து வருகிறார்கள். அதனால் எல்லாம் புனிதம் கெட்டுப் போகும் என்று எண்ணியிருந்தேன். எத்தனையோ முறை, பல முகமாக எச்சரிக்கை செய்தும் கூட, தன்னை புனிதமானவன் என்று எண்ணிக் கொண்டு வந்த ஒருவன், இங்கே 22 வயது பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய வில்லையா? அது யார் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் இந்த மலை சற்று விசனம் அடைந்து புனிதம் எல்லாம் கெட்டுவிட்டது. அந்த புனிதத்தை தருவிப்பதற்காக அகத்தியன் கங்கையை வேண்டினேன். கங்கை இங்கு வந்து, சற்று முன் சொன்னேனே, அக்னி தீர்த்தம் என்று, அதற்குப் பக்கத்தில் கங்கை அமர்ந்த நேரம், தாமிரபரணியும், கங்கையும் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தை தண்ணீரை தெளித்து, புனிதமாக்கிவிட்டார்கள். ஆக சில கொலைகள் நடந்திருக்கிறது, சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதயெல்லாம், தாமிரபரணியும், கங்கையும், புண்ணிய நதிகளான அவர்கள், தன் பொன்கரத்தால் புண்ணியாவாசனம் செய்து, இந்த இடத்தை புனிதப்படித்தியிருக்கிறார்கள். ஆகவே, இந்த இடம், மிக, மிக, மிக, எத்தனை "மிக" வேண்டுமானாலும் போட்டுக்கொள், அத்தனை மிகப் புண்ணியமான ஸ்தலம். இங்கு ஒருமுறை வருவதற்கே இத்தனை சௌகரியம் கிடக்கும் என்றால், இந்த கோவிலை நோக்கி வருகின்ற இவர்களுக்கெல்லாம், எத்தனை புண்ணியம் கிடைத்திருக்கும் என்று எண்ணிப்பார். ஆகவே எல்லாருமே புண்ணியசாலிகள். ஆத்மா, மிக சுத்தமான ஆத்மா. ஆகவே அவர்கள் வரலாம்.
இனி அகத்தியன், சதுரகிரியில் அமர்ந்து, சுந்தர மகாலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து, என்னப்பன், முக்கண்ணன் அழைப்பதால், அவனருகில் அமர்ந்து, அவன் பொற்பாதத்தை பிடித்து விடவேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. இல்லை என்றால் அவன் சயனம் கொள்ள மாட்டான். அந்த முக்கண்ணனின் பொற்பாதத்தை பிடித்து அமுக்குவதற்காக, அகத்தியன் உள்ளே செல்லுகிறேன். அதுவரை என் சித்தர்கள் உன்னை காப்பார்களாக என்று அருளாசி.
சித்தன் அருள் ................. தொடரும்!