கேள்வி: இறைவன், நல்ல விஷயங்களை நடத்திக் கொடுத்து, மனிதனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லையே!
அகத்தியர்: இறைவனும், சித்தர்களும், மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், நல்ல செய்தியை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், தவறான மனிதர்கள்தான் இதை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆயிரம் சதவிகிதம் சக்தி உள்ள ஒருவனிடம் தான் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை கொடுக்க முடியும். அதுவே நூறு சதவிகிதம் உள்ளவர்களிடம் கொடுத்தால் என்ன ஆகும். அவனே அழிந்துவிடுவான். கொடுத்த எண்ணம் நிறைவேறாமல் போய்விடும். அப்படிப்பட்ட மனிதன் பிறக்கும் பொழுதே கண்டுபிடித்து அவனுள் இந்த சக்தியை புகுத்தி விடுவதே சித்தர்கள்/யாங்கள் தான். இதை கூட மனிதன் புரிந்து கொள்வதில்லை அப்பா! அதனால் தான், பக்தி என்பதை யாரும் உணரவில்லை அப்பா. அதனால் தான் நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள் அப்பா. உண்மை நிலை புரிந்துவிட்டால், ஐயோ! இறைவன் தண்டித்து விடுவான் என்று பயந்து தவறு செய்ய மாட்டார்கள் அப்பா. அனைத்தையும் புரிந்து கொள்வதற்கும் கூட புண்ணியங்கள் வேண்டும் அப்பா.
காசியில், ஈசன் கூட "அகத்தியனே! அறிவியல் வழியாக நீ என்னை இங்கு வரவை!" என்றான். வரவழைத்தேன் அப்பா. ஆனாலும் ஒன்றை மட்டும் எடுத்துரைக்கின்றேன். இறைவன் என்பவன் ஒருவன்தான். அப்பனே! சித்தனைப்பற்றி பேசுவதற்கும், சித்தனுடன் பேசுவதற்கும், சில தகுதிகள் வேண்டுமப்பா.
ஆசைகளுடன் திரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன். நீ என்ன செய்வாயப்பா?
அடியவர்: நான் உடனே தானம் செய்து விடுவேன்.
அகத்தியர்: இப்பொழுது தானம், தர்மம் என்று கூறுவாய். பணம் கையில் வந்துவிட்டால் மனது, வாக்கு மாறிவிடுமப்பா. இந்த யோசனைகள் வராதப்பா. இதனால், வாய்தான் பேசுகின்றது என்பேன் அப்பனே.
இன்னொரு அடியவர்: மருத்துவ சிகிர்ச்சைக்குப்பின், இன்றுதான் தூர யாத்திரைக்கு சொல்லப்போகிறேன். தாங்கள் அருள் புரிய வேண்டும்!
அகத்தியர்: அப்பனே! செல்லும் இடமெங்கும் யான் இருப்பேன். எங்கு வேண்டுமானாலும் சென்று வா.
அடியவர்: சிவபெருமானுக்குப்/லிங்கத்துக்குப் பின் ஏன் விளக்கேற்றி வைக்கிறார்கள்?
அகத்தியர்: மனிதன் பிறக்கின்றான். அவனுள் ஆத்மா, இந்த விளக்கு போல. இதை ஆழமாக நீ சிந்தித்துக்கொள். புரியும்.
அடியவர்: திருவண்ணாமலையில் ஏன் இறைவனுக்கு தாரை அபிஷேகம் இல்லை?
அகத்தியர்: இதை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். பஞ்ச பூதங்கள் ஐந்தும் சேர்ந்ததுதான் அண்ணாமலையார். அக்னிக்குள் அனைத்தும் அடக்கம். இதை ஏற்கனவே உனக்கு காட்டிக்கொடுத்து விட்டார். ஒவ்வொன்றையும் தனித்தனியாக செய்த பொழுதே உன்னை பிடித்து ஆட்டிவிட்டான். அன்றே இதை உணர்ந்துவிட்டாய்.
அகத்தியர்: அருணாச்சல புராணம், இதுபோல் ஒரு அருணாச்சலம் வேறு உலகத்தில் இருப்பதாக கூறுகிறதே!
அகத்தியர்: அருணாச்சலத்திலே, பூமிக்கு கீழே இதுபோல் ஒரு உலகம் இருக்கிறது. அதை பற்றி யான் பின்னொருமுறை உரைக்கிறேன். அடி முடி காணாத ஒன்று அண்ணாமலை என்றால் அர்த்தம் என்ன? கண்டுபிடிக்க முடியாது. இதனால் தான், ஈசன் பொறுத்துக்கொண்டு இருக்கின்றான், கருணை நிறைந்தவன். அதனால் தான் தன்னை நினைக்காமல், பிறர் நலனுக்காக அனைத்தையும் செய்ய சொல்கின்றேன்.
அடியவர்: அதர்வண வேத பாதிப்புகளுக்கு எதிராக ஒருவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள, முன் காலத்தில் ஒரு மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்துள்ளேன். அதை இந்த காலத்தில் தற்காப்புக்காக ஜபம் பண்ணலாமா?
அகத்தியர்: ஜபம் பண்ணலாம். சில மாதங்கள் பொறுத்திரு. யான் கற்றுக் கொடுக்கின்றேன். வெளியே செல்லும் பொழுது, இரவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒரு எலுமிச்சை பழத்தை கொண்டு செல்.
உறங்கும் பொழுது, ஒரு எலுமிச்சை எடுத்து நிறைய துளையிட்டு, கிராம்பு, பச்சை கற்பூரம், குலதெய்வத்திடமிருந்து கொண்டு வந்த பிரசாதங்கள், வசம்பு, போன்றவை அதில் இட்டிட்டு தலைக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்கினால், மறுநாள் காலை உனக்கு தெரிந்து விடுமப்பா. எலுமிச்சை வாட தொடங்கி, கெட்டுப்போனால் பாதிப்பு இருக்கின்றது என்று அர்த்தம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!