​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 11 November 2020

சித்தன் அருள் - 958 - ஆலயங்களும் விநோதமும் - அக்னீஸ்வரர் திருக்கோவில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்

இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.

புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை  வணங்கினர்.  அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால்  ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான்.  இறைவன் சிவன் அக்னிதேவன்  முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை  அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த  பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார்.

உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர்  நந்தவனத்தில் இறைவனுக்குரியதாக பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப்  பணியாளன் பறித்து வந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச்  சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள்.  இதனால் இளையவள் இருந்த உறையூர் மண்  மாரியால் அழிந்தது.  மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர்.

அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி தீர்த்தம்  இன்றும் கிணறு வடிவில் உள்ளது.  மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.  சிவலிங்கம் வடிவம் உருவில்  சிறியது. சிவலிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம்.

இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி  உள்ளது. இத்தலம் பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும்.  பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி  மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.  சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க  அனுமதித்தார் என்று இத்தலத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

இத்தலத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற  திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்திலுள்ள  இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர்.  குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம்  வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம்.

நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது சிறப்பு ஆகும்.  

இத்தலத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர்.  இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி-குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்.....................தொடரும்!

5 comments:

  1. Om sri loba mudra thayar samedha agasthia peruman thiruvadigale potri

    ReplyDelete
  2. Om lobamuthra sametha agasthiyaha namaha

    ReplyDelete
  3. அகத்தீசாய நம

    ReplyDelete
  4. ஓம் நமசிவாய தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனக திரளே போற்றி கயிலைநாதனே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete