தாவர விதி என்கிற தொகுப்பில், இந்த வாரம், ஒற்றை மூலி என்கிற வில்வத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வில்வம் மருத்துவ ரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். கோவில் தோரும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்து நோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும் காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜை செய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு.
இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.
மருத்துவப் பயன்கள்:
- இதன் வேர் நோயை நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.
- குருதிக் கசிவை நிறுத்தும்.
- பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும்.
- பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும்.
- பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும்.
- பூ மந்தத்தைப் போக்கும்.
- வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும்.
- இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
- இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.
- பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும்.
- பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது, காசநோயை குணமாக்கும்.
- சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
- வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
- வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.
- வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.
- ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும். ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
- வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.
- வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
- வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
- பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.
- கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும்,
- இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும்.
- அல்சர் அணுகவே அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும்,
- தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும். வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
- வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
- நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
- வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.
- வில்வ இலைச் சாறை எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு மண்டலம்காலையும், மாலையும் பத்திய முறைப்படி இறைவனை வணங்கி அருந்தி வந்தால் காமாலை மற்றும் இரத்த சோகையால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
- வில்வ இலைச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சுரம், இருமல், தொண்டைக்கரகரப்பு, வாய் குளறல், மயக்கம் தீரும். தொடர்ந்து 40 நாட்கள் கற்பமுறைப்படி அருந்தி வந்தால் மேற்கண்ட பிணிகளிலிருந்து முழு விடுதலை பெறலாம்.
- வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.
- வில்வ இளம் பிஞ்சை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்துஅருந்தினால் வயிற்றுப்புண், குடல்புண், தொண்டைப் புண் ஆறும். சிறுபிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் நீங்கும்.
- வில்வ காயை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும். (அகத்தியர் குணபாடம்).
- வில்வ இலை, இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீராக்கி ஒரு மண்டலம் கற்பமுறைப்படி பத்தியம் கடைப்பிடித்து அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.
- வில்வ வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு இம்மூன்றையும் சேர்த்துக் காய்ச்சி எட்டில் ஒன்றாய் ஆன பதத்தில் வடித்து தேன் கலந்து அருந்தினால் கொடியமுப்பிணியும் தீரும்.
- வில்வத்தின் கனி, காய், இலை, வேர் முதலானவற்றை மணப் பாகு, ஊறுகாய்,குடிநீர், தைலம் இதில் எதாவது ஒன்று தயாரித்து ஒரு மண்டலம் உட்கொண்டால் உடலுக்கு அழகையும், ஆண்மையையும் கொடுக்கும். வாய் குழறிப் பேசும் தன்மை நீங்கும். (தேரையர் நளவெண்பா)
வில்வத்தின் ஒரு வகையே மகா வில்வம். இது குளுமைத் தன்மை கொண்டது. வில்வ இலைகளைவிட சற்று சிறியதாய், வட்ட வடிவில் காணப்படும். சுவையில் வில்வத்தின் இலையை ஒத்திருக்கும். கொடியைவிட சற்றுப் பெரியதாய் இதன் கிளைகள் இருக்கும். இலைகள் கூட்டிலைகளாய் காணப்பட்டு கடைசியில் மூன்று இலைகளாய் முடியும்.
அந்த மூன்று இலைகளும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மூவரும் நானே எனக் காட்டுவதாய் அமையும். அந்த மகா வில்வத்தை மருந்தாக்கும் முறையை இனி காண்போம்...
சர்க்கரை நோயுக்கு அற்புத மருந்து...
சர்க்கரை நோயுள்ளவர்கள் மகா வில்வத்தை மருந்தாக்கினால் மிகச் சிறந்த பலனைக் காணலாம். மகா வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட் டுக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் சர்க்கரையின் அளவு சராசரி நிலைக்கு வரும். சர்க்கரை வியாதியால் உண்டாகும் பிற விளைவுகளும் படிப்படியாய் மறையும்.
குடற்புண்ணை குணப்படுத்த...
குடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் மகேசன் அருளிய மகா வில்வமே மருந்தென்றால் மிகையல்ல. குடற்புண்ணால் அவதி யுறுவோர் கீழ்க்காணும் மருந்தைத் தயாரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள். மகா வில்வத்தினுள் சிவனே உறைந்து, உங்களை செவ்வனே குணப் படுத்துவதை உணர்வீர்கள். உலர்ந்த மகா வில்வ இலை 50 கிராம், நெல்லிமுள்ளி, கடுக்காய், தான்றிக்காய், ஓமம், மாம்பருப்பு, வெந்தயம், சீரகம், மஞ்சள் ஆகியவை வகைக்கு 25 கிராம்- இவையனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். பின்னர் இதனைச் சலித்துப் பத்திரப்படுத்தவும் .
இதனை காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு முதல் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வர, 48 நாட்களில் குடற்புண்கள் முழுமையாய் குணமாகும். இது சித்தர்கள் அருளிய சிறப் பான மருந்து. திட சித்தமாய் உண்டு வருபவர்கள் சீக்கிரமே குணமடைவார்கள்.
உடல் வலிவு பெற...
மகா வில்வ வேர் 50 கிராம் அளவில் எடுத்து ஒன்றிரண்டாய் சிதைத்து, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிது மஞ்சள் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, தினசரி அதிகாலை யில் தொடர்ந்து இரு மாதங்கள் சாப்பிட்டு வர, மேனி அழகு பெறும்; முகம் காந்தமாய் ஜொலிக்கும்; ஆண்மை விருத்தியாகும்; குரலில் ஓர் காந்த சக்தி, ஈர்ப்பு சக்தி உண்டாகும்.
இளைப்பு நோய் குணமாக...
மகா வில்வ வேர், தூதுவளை வேர், கண்டங்கத்தரி வேர், முசுமுசுக்கை வேர், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.
மஞ்சள் காமாலை குணமாக...
மகா வில்வ வேர், கீழாநெல்லி வேர், நெல்லிமுள்ளி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் ஏழு தினங்கள் தொடர்ந்து குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பலப்படும்; கல்லீரல் சார்ந்த பிற நோய்களும் தணியும்.
கண் நோய்கள் குணமாக...
மகா வில்வத் தளிர் இலைகளை நெருப்பில் வாட்டி, அதைத் துணியில் முடிந்து வெது வெதுப்பாய் கண்களில் ஒற்றிவர, கண்சிவப்பு, கண்ணெரிச்சல் போன்றவை மாறும்.
மகா வில்வத்தால் ரத்த சுத்தி உண்டாகும்; நன்கு செரிமானம் உண்டாகும்; பசியைத் தூண்டும்; மலத்தை நன்கு இளக்கும். மொத்தத் தில் சிவனை நாட சுத்த தேகத்தை உண்டாக்கும்
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
சித்தன் அருள்................. தொடரும்!