அடியேனின் கேள்விக்கான பதில் வாங்குவதற்காக, இங்கிருந்து அவருடன் பயணமானேன்.
சொன்னதற்கும் முன்னரே, ஆறாவது நாள், பிரசாதம் வாங்க வந்திருந்தார்.
"என்ன? இவ்வளவு சீக்கிரம்?" என்றேன்.
"இன்றைய ஒன்றிரண்டு வகுப்புகளுக்கு விடுமுறை விட்டுவிட்டேன். நேரம் கிடைத்தது. அதான் பிரசாதம் வாங்கி செல்லலாம் என்று" என இழுத்தார்.
""அதற்கென்ன தருகிறேன். அதற்குள் எப்படி தீர்ந்தது?" என்றேன் புன்னகைத்தபடி.
"நீங்கள் எனக்கு மட்டும்தான் என்று கூறி தந்தீர்கள். ஆனால் நான் அதிலிருந்து அவருக்கும் சிறிது கொடுத்தேன். அதை உபயோகித்து அவர் நன்றாக தேறி வருகிறார். முன்னர் 25வது நிலை மிகுந்த சிரமத்தை பட்டுத்தான் ஏறுவார். இப்பொழுது எடுத்த எடுப்பில் 40 வரை தொடர்கிறார்" என்றார்.
"மிகவும் பசிக்கணுமே, நேரம் காலம் இல்லாமல்" என்றேன்.
"ஆம்! இரவெல்லாம் பசிக்கிறது என்கிறர். அவர் மனைவியிடம் அவருக்கு என்ன வேண்டுமோ அதை பண்ணிக்கொடுங்கள் என்றிருக்கிறேன். ஆனால் வெளியிலிருந்து யாரும் எதுவும் கொண்டு வந்து சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்" என்றார்.
"சரி! எப்ப கும்பம்? எப்ப முடிச்சு?" என்றேன்.
சற்றே ஆச்சரியப்பட்டவர், "அதெப்படி உங்களுக்கு இது தெரியும்?" என்றார் ஆச்சரியத்துடன்.
"இதெல்லாம் சித்த மார்கத்தில் உள்ளது தானே" என்றேன்.
"70இல் முடிச்சு போட்டு, 90இல் கும்பம் வைக்கலாம் என்றிருக்கிறேன்" என்றார்.
"நல்லது! அவருக்கு பசிக்கிறது என்பதே, உடல் சரியானதை காட்டுகிறது. சொல்வதை மட்டும் ஆத்மார்த்தமாக செய்துவிட்டு அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்" என்று விட்டு அவரிடம் சிறிது பிரசாதத்தை கொடுத்தேன்.
பதினைந்து நாட்களில் தானாகவே எழுந்து உட்காரத் தொடங்கினார்.
வந்து பார்த்த உறவினர்களுக்கு, சிறிது ஆச்சரியம். என்னவோ ஒரு மாற்றம் நடக்கிறது என்று புலனாகத் தொடங்கியது.
எல்லா இடங்களிலும் சில அதிகப்பிரசங்கி உறவினர் என்று ஒருவர் இருப்பார். அவரின் ஒரு உறவினர், ஒருநாள், அடியேன் நண்பர் அவரை பயிற்றுவிக்க சென்ற பொழுது, தேவை இல்லாத வார்த்தைகளை இவரை பார்த்து பேசினார்.
அடியேன் நண்பர் கோபமே படாத ஒரு மனிதர். எல்லாவற்றுக்கும் சரி என்று கூறி சென்றுவிடுவார்.
அவர் உறவினர் பேச்சில் எரிச்சலடைந்து, சற்று நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது, திடீரன்று தன் மூச்சை அடக்கினார். பின்னர்,
"சரி!" என்றுவிட்டு, தன் நண்பரை பார்க்க உள்ளே சென்று விட்டார்.
மறுநாள் பயிற்றுவிக்க சென்ற பொழுது, நோய் வாய்பட்டவரின் மனைவி என் நண்பரிடம்
"நேற்று வந்த உறவினரிடம் என்ன பேசினீர்கள், என்ன செய்தீர்கள்?" என்றார்.
"ஏன்? என்ன ஆச்சு?" என்றார்.
"நேற்று நீங்க சரின்னு ஒரு வார்த்தை பேசினீர்கள். வீட்டிற்கு சென்றதுமுதல் இன்று மதியம் வரை பயங்கர தலைவலி இருந்தது. என்ன மருந்து சாப்பிட்டும் போகவில்லை. இங்கு பயிற்சி கொடுக்க வரும் அவர் எதோ மந்திரவாதம் செய்கிறார் என தோன்றுகிறது, என்று கூறிவிட்டு இப்பொழுதுதான் நீங்கள் வரும் முன் தான் சென்றார்" என்றாள்.
"எனக்கு தெரிந்ததெல்லாம் யோகா வித்தை மட்டும்தான். மந்திரவாதம் எதுவும் தெரியாது. இனிமே என் பயிற்சிக்கு அவர் இடையூறாக இருக்கமாட்டார் என்று தோன்றுகிறது. அதுவும் நல்லதுதான்" என்று கூறி உள்ளே சென்றார்.
எலும்பும் தோலுமாக இருந்த அவர் உடல் சற்று பூசினாற்போல மாற தொடங்கியிருந்தது.
50, 55வது நிலை வரை எளிதாக வந்துவிட்டார்.
"இன்று வரை ஒரு நேரம் தான் மூச்சு பயிற்சி செய்தீர்கள். இன்று முதல், ஒரு நாளைக்கு, குறைந்தது மூன்று முறை பயிற்சி செய்ய வேண்டும். இரவு நான் வரும்பொழுது, ஏதேனும் தேவை இருந்தல் சரி பண்ணித் தருகிறேன். இன்று சற்று நேரம் கூடுதல் எடுத்து 70வது நிலை வரை முயற்சி செய்யலாம்" என்றார்.
இந்த நிலை அடைய சற்று சிரமமாக இருந்தது. அவரால் முடியவில்லை.
""கொஞ்சம் கவனமாக பாருங்கள். மாடி ஏறும் பொழுது சிரமமாக இருந்தால் வளைந்து வளைந்து ஏறி, அசதி வராமல் பார்த்துக் கொள்வது போல், மூச்சின் வேகத்தை குறைத்து, நிதானமாக கவனத்தை இருத்தி எப்படி ஏறவேண்டும் என தெளிவாக செய்யுங்கள்" எனக்கூறி, உள்வாங்கும், வெளிவிடும் மூச்சின் வேகத்தை குறைத்து, மெதுவாக 70வது நிலைக்கு அழைத்து வந்தார்.
அன்றைய தினம், 70வது நிலையில் நின்றாலும், முடிச்சு போட்டால் அவரால் தாங்க முடியாது என்பதை உணர்ந்து, 70தை 80க்கு மாற்றினார்.
"நாளை முதல் வீட்டுக்குள்ளேயே சிறிது நேரம், தேவைப்பட்டால் உங்கள் மனைவியின் உதவியோடு நடக்க வேண்டும். உடலால் பலம் பெற வேண்டியுள்ளது." என்று கூறிவிட்டு அன்றைய பயிற்சி வகுப்பை முடித்துக்கொண்டார்.
மறுநாள் பயிற்சிக்கு சென்ற பொழுது இவர் எதிர் பார்த்த செய்தி கிடைத்தது.
கடந்த ஆறு மாதமாக படுக்கையிலேயே படுத்து கிடந்தவர், யார் உதவியும் இன்றி, படுக்கையில் இருந்து எழுந்து, வீட்டின் அனைத்து பாகங்களுக்கும் நடந்தே சென்று, வீட்டில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
சித்தன் அருள்.................. தொடரும்!