"சுத்தம் என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?"
"முதல் நிலையில் இரண்டும் சார்ந்தது. பிறகு, எவன் ஒருவன் மனதை சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ, இரு நிலை ஒன்றாகி, அவன் மனமே சுத்தமாகிவிடுவதினால், அதுவே பௌதீக உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும். அந்த சுத்த நிலையில், அவனுக்கு வாக்கு வன்மை வந்துவிடும். அவன் சொல்வது, வேண்டுவது அனைத்தும் உடனேயே நடக்கும், அதுவும், இறை அருளினால். இவ்வுலகில், பலதரப்பட்ட நிலையில் "சுத்தமான ஆத்மாக்கள்" உள்ளனர். வாக்கு சுத்தம், அமைதி சுத்தம், எண்ணம் சுத்தம், அருளும் சுத்தம், செயல் சுத்தம். இவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் வழியில், இறைவன் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள். அனைத்து பெருமைகளையும், இறைவன் காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அதனால்தான், இன்றும் பாரத பூமி கர்மா பூமியாயினும், தர்ம பூமியாக திகழ்கிறது." என்றார்.
"தர்ம பூமியில், இத்தனை அதர்மமும் கூட வாழ்கிறதே?" என்று கேள்வியை மாற்றிப்போட்டேன்.
"தர்மத்தின் வாழ்வு தன்னை, சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்ற இறை வாக்கியம் வழிதான், தர்மத்தின் மதிப்பு, கலியுகத்தில் மனிதருக்கு உணர்த்துவதற்காக, இறைவன் நடத்தும் நாடகம். என் முன்னே அமர்ந்திருக்கிறான், அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறான் என்பதற்காக, நந்திகேஸ்வரர், சிவபெருமானிடம், பூமியில் அவரை நினைத்து தவமிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பொழுது, உடனேயே அருளினாலும், அவருக்கு அத்தனை பிரச்சினைகளையும், தவத்திற்கு இடையூராக இருக்க, சிவபெருமான் செய்ய வில்லையா? இதன் அர்த்தம் என்ன? உயர்ந்த எதுவும் எளிதாக அடைய முடியாது. அத்தனை சோதனைகளையும் கடந்து வந்துதான் ஆகவேண்டும் என்று மனிதருக்கு உணர்த்தவே. சோதனைகள் ஒருவனை புடம் போடுகிறது. அவனுள் இருக்கும் கசடுகளை வெளியேற்றுகிறது. அந்த சுத்தமான நிலையில்தான் ஒருவன் இறையை உணர தகுதியானவனாக ஆகிறான். உலகியல் வாழ்க்கையில் இருக்கும் உன்னையும் சேர்த்து பலரும் இங்கு வந்து அமர்ந்து பேசும் பொழுது, அவர்கள் கர்மாவுடன் நாங்களும் கலந்து அசுத்தமாகிறோம். ஆனால், பிறகு, எங்களை எப்படி சுத்தம் செய்து கொள்வதென்பது, எங்களுக்கு தெரியும். உங்களை போன்றவர்களின் தவறென்று நங்கள் கருதுவதில்லை. ஒரு நதி போல நாங்களும், மனிதர்களை சுத்தம் செய்கிற வேலையை பார்க்கிறோம், அவ்வளவுதான்." என்றார்.
இந்த தகவல் சற்று அதிர்ச்சியாக இருந்ததால், சற்று நேரம் அமைதியாக இருந்தேன். என்ன கேட்பது என்று தெரியவில்லை. அதை புரிந்து கொண்ட பெரியவர் சூழ்நிலையின் இறுக்கத்தை தணிக்க,
"நான் கூறியது உண்மை. இதை உண்மையாக எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தால், எங்கேனும் ஒரு பெரியவரை காண நேரின், அவரை அருகில் சென்று தொந்தரவு செய்யாமல், விலகி நின்று, கும்பிட்டுவிட்டு போய்விடுங்கள். அது போதும். அப்படிப்பட்டவர்கள், பொதுவானவர்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலைக்கு நீங்கள் யாரும் தடங்கலாக இருக்கவேண்டாம், என்பதற்காக இதை கூறுகிறேன். அவர்கள் வேகத்தை குறைத்துவிடாதீர்கள். இந்த கர்ம பூமிக்கு நீங்கள் செய்யும் உயர்ந்த சேவை, அதுதான்." என்றார்.
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று உணர்ந்தேன். ஆம்! நானே மிக கவனத்துடன் ஒரு வேலையை செய்யும் பொழுது, குறுக்கீடுகள் வந்தால், எரிச்சலடைவேன். நான் பார்க்கும் வேலை, ஒரு குடும்பத்தை நிலை நிறுத்துவதற்காக. அதற்கே இப்படி என்றால், இவ்வுலக மனிதர்கள் அனைவருக்காக வேலை பார்க்கும் ஒருவர் எத்தனை பாரத்தை சுமந்து திரிவார். அவருக்கு, நம் குறுக்கீடுகள், எத்தனை தடங்கல்களாகி, அவர் வேகத்தை குறைக்கும்?" என்று யோசித்தேன்.
"கர்மா, தர்மம், பெரியவர்கள் வழியாக, இவ்வுலகம் இந்த அளவுக்காவது இன்று சிறந்து விளங்குகிறது என்று உணர்கிறேன் அய்யா! ஒரு மனிதன், முதலில் தன் உடலை ஆரோக்கியமாக, சுத்தமாக வைத்துக்கொண்டு வாழ்க்கை பாதையில் நடந்து சென்றால், இந்த சித்த மார்க்கத்தின் எந்த எல்லை வரை செல்ல முடியும்? ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகளையும் கூறுங்களேன்!" என்றேன்.
"தின வாழ்க்கையில் எத்தனையோ வழிகளை, நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்து சென்றிருக்கிறார்கள். அதை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே, ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், வாழ்க்கையின் தேவைகளுக்கான தேடல்களுக்கு தன் முழு நேரத்தையும் செலவிடும் மனிதனுக்கு, தன்னை அறிய, தன் கடமைகள் என்ன என்று தேடுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். எத்தனைநாள், கட்டு சோறும், கொம்புப்புல்லும், சாப்பாடு போடும் என்று யோசிப்பதில்லை. இருந்தாலும், கேட்டதற்காக சொல்கிறேன். ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான், மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்த உடலைதானே "நான்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் தினமும் செய்யலாம் என்று கூறுகிறேன்." என்றார்.
"கண் பார்வை" ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமானது. பார்வை இழந்த ஒருவனால், இவ்வுலகில் எதையும் உணர முடியாது. கேள்வி ஞானம் மட்டும்தான் அவன் வாழ்க்கையை நடத்த உதவி புரியும். மேலும் கடைசி வரை தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முழுமையாக, அவன் பிறரை சார்ந்தே இருக்கவேண்டி வரும். "பார்வை குறைவு" என்கிற நிலை இந்த சமூகத்தில் 90 சதவிகிதம் மனிதர்களை பாதித்துள்ளது. முன் காலத்தில், 90 வயசான பெரியவர் கூட, கண்ணாடி அணியாமல் வாழ்ந்து, தினசரி கடமைகளை தானே நிறைவேற்றி வந்ததை பார்த்திருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அப்படி பார்ப்பதே மிக மிக அரிது. பிறந்து 3 வயதிற்குள்ளேயே, கண் குறைபாட்டை அடைந்து, கண்ணாடியுடன் வளரும் குழந்தைகள் ஏராளம். இது ஏன் என்று ஒருவரும் கேட்பதில்லை, கவனிப்பதில்லை. வருடம் செல்லும்தோறும், கண்ணாடியின் அளவு தடிமனாகி, ஒரு நிலையில், அது இல்லை என்றால், ஒன்றுமே தெரிவதில்லை என்கிற நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. நேற்றுவரை, நன்றாக இருந்த கண் பார்வை, இன்று ஏன் குறைந்துபோனது, என்று கூடவா யோசிக்கத் தெரியாது. நீங்கள் தினமும் வாழும் முறையில் செய்கிற தவறுகள்தான், இதற்கு காரணம் என்று கூடவா புரியவில்லை?" என்று நிறுத்தினார்.
சித்தன் அருள்....................... தொடரும்!