வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அடியேனது இரு நண்பர்கள் இந்த வாரம் பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்து, அவர் சன்னதியில் அஷ்ட திக்கிற்கும் விளக்கு போட்டு, அருள் பெற்று வந்ததை தெரிவித்தனர். அவர்கள் பகிர்ந்து கொண்ட இரு வீடியோவையும், ஒரு சில புகை படங்களையும், இன்றைய அகத்தியப் பெருமான் தரிசனமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
இந்த தொகுப்பில் தரிசனம் கொடுத்த அகத்தியப் பெருமான் நிறையவே அடியேனுக்கு அருளினார். அந்த விஷயத்தையும் கூறலாம் என்று ஒரு எண்ணம்.
போன வருடம் இதே சமயத்தில் கேட்ட பொழுது "நீ எங்கும் செல்லவேண்டாம். அங்கேயே இரு" என்று உத்தரவு வந்து, வீட்டிலேயே இருந்த பொழுது தான் என் தகப்பனாரின் மறைவு நிகழ்ந்தது. நிறையவே சடங்குகள், கட்டுப்பாடுகள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரு வருடம் நிறைவு பெற காத்திருக்கிறேன். எல்லா வாரமும் எங்கேனும் ஒரு மலை ஏறி ஏதேனும் ஒரு கோவிலில் இறை தரிசனம் பெறுவது வழக்கம். நம்பிமலை, ஓதிமலை, திருவண்ணாமலை என உதாரணம் கூறலாம். கர்மம் செய்தவன் ஒரு வருடத்திற்கு மலை ஏறுவது, கடல் ஸ்நானம் போன்றவை செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகள். அடியேனுக்கு, சித்தர்கள் கூற்று வாழ்க்கை முறையாகி போனதால், ஆசாரா அனுஷ்டானங்களில் அத்தனை விருப்பமில்லை. இருப்பினும், செய்யக்கூடாது என்பதை செய்தால், என் தாயின் மனம் வேதனைப்படுமே என்றுணர்ந்து, என் அவாக்களை (மலைக்கோவில்) கட்டிப் போட்டேன். கட்டிப்போட்டது சும்மா இருக்குமா? குரங்கு மனம் போல், ப்ராணாவஸ்தை.
இந்தமுறை வனத்துறை அனுமதிக்கும் நேரத்தில் பொதிகைக்கு செல்ல முடியாது. ஒருவருடம் நிறைவு பெற வேண்டும்.
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நண்பர் வந்து பொதிகை செல்லலாம் என்றிருக்கிறேன், என்றார்.
அடியேன் சார்பாக அபிஷேகத்துக்கு ஒரு சில விஷயங்களை தருகிறேன். அதை எடுத்துக்கொள். அவருக்கு அபிஷேகம் செய்த எண்ணை வேண்டும். அவர் பாத விபூதி வேண்டும். இது இரண்டும் கிடைக்கும். இனி சொல்லப்போவதை கவனமாக கேள்! அடியேன் அகத்தியப் பெருமானிடம், அவருக்கு அணிவித்த "வெட்டிவேர்" மாலையை தருமாறு கேட்டிருக்கிறேன். முதலில், பூசாரியிடம் கேள். இல்லையே என்பார். காத்திரு! சற்று நேரத்தில், ஞாபகம் வரவே, நில் தருகிறேன் என்பார். வாங்கி கொண்டு, வந்து தரவும், என கூறினேன்.
அதே போல், முதலில் இல்லை என்று மறுத்தவர், அடியேனின் நண்பர் விலகாமல் இருப்பதை கண்டு ஞாபகம் வரவே, எடுத்து கொடுத்து அனுப்பினார். அனைத்து பிரசாதமும் வந்து சேர்ந்தது. கூடவே, வெட்டிவேர் மாலையும், அவருக்கு அபிஷேகம் செய்த தேனும்!
எதுவுமே கேட்காதிருப்பவன், கேட்டிருக்கிறான், கொடுத்துவிடுவோம் என்று தீர்மானித்து அத்தனை பிரசாதத்தையும் கொடுத்தனுப்பியிருக்கிறார். பெரியவருக்கு எப்படி நன்றி சொல்வது?
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!